மூன்றெழுத்துச் சொல்!
சொல்லவேண்டி இருப்பது இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். ஆனால் அப்படியெல்லாம் உங்களைச் சுலபமாய் விட்டுவிடுவதில்லை. அப்படி நான் விடுகிறவனுமில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே வேறு வழியில்லை முழுக்க வாசிக்கத்தான் வேண்டும்.. இவ்வளவு பழகிட்டோம்.. இனி என்ன தயக்கம் தைரியமாக
தலையைக் கொடுக்கவும்..

பள்ளிக்கூட காலத்துக்குப் பிறகுதான் ஒழுங்கா புத்தகத்தைக் கையிலெடுத்து படிக்கவே கத்துக்கிட்டேன். மீன்  தூண்டிலுக்கு மண்புழுகோர்த்து  தக்கைக்கு மயில்குச்சி சீவி, வெள்ளிமலை பாறையிடுக்கில் குருவிமுட்டை சுட்டு, பாசிநரம்பில் புறாக்கண்ணி சுருக்கி, ட்ராக்டர் ட்யூப் குளியலில் படித்துறைகளையே அதகளப்படுத்தி, இடிமழையில் விழுந்த நாவல்மரம் பழக்கார ஆச்சி வீட்டு ஓட்டில் விழுந்தப்பவும் கிளிக்குஞ்சி கிடக்குதுலே ஈசு (ஈஸ்வரன்)   என்று ஓடேறிக் குதிச்சு, வண்டை வண்டையா திட்டு வாங்கி, வீட்டிலும் வகைக்கு நாலுன்னு உதை வாங்கி வளர்ந்ததென் பால்யகாலம்..

முதல்முதலா ஊருக்குள்ள கொண்டை ஆண்டனா வச்ச போனு நான் வாங்கினப்போ எனக்கு வயசு பதினாறு. எங்கப்பா முறைச்சத்தை மூணுகுயர் நோட்டில் கதையா எழுதலாம். மார்கெட்டிங், மிஷின் கட்டிங்ன்னு பார்க்காத வேலைகம்மி. பத்தாங்கிளாஸ் படிக்கும் போது, பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரத்தில் இருந்த பைசல்-ங்ற பள்ளிக்கூட நண்பன் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தாங்க. யாஹூ ஓஹோன்னு என்னென்னவோ சொல்லிகிட்டாங்க.. எட்டடி தூரமா நின்னு பார்த்துக்கிட்டேன்.

காலம் கிறுக்குபுடிச்சது.  நானும் ஒரு லேப்டாப் வாங்கி  பேஸ்புக் அக்கவுட் ஓப்பன் பண்ணி கிறுக்கனும்ன்னு அதோட திரைக்கதை இருந்திருக்கு, கொஞ்சகொஞ்சமா இங்கே தமிழ் நண்பர்களைச் சூழ்ந்து, ஈ-புத்தகம்,  இரவல் புத்தகம்ன்னு வாங்கிப்படிச்சு மனசாட்சியோட திரும்பக் கொடுத்து, கொஞ்ச நஞ்ச அறிவை வச்சு அரைப்பக்க ஸ்டேட்டஸ்ன்னு  எழுதினதெல்லாம் எழுத்துப் பிழைநீக்கி,  எழுத்து கொஞ்சங்கொஞ்சமா சீர்பட்டு, மேஷ ராசி பரணி நட்சத்திரம் கூடிய ஒரு சுமாரான ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்னை மவுண்ட்ரோட்டில் ஒருபுத்தகமும் வெளியிட்டு, அதனை உங்களையும் வாங்க வச்சு..கொஞ்சமல்ல உங்களை எல்லாம் ரொம்பவே படுத்தி இருக்கிறேன் தான். ஹஹ

ஆனா அதுக்கெல்லாம் நான் மட்டும் காரணம் இல்ல என்பதும் நினைவிருக்கட்டும். காரணம் நீங்களும்தான். இந்த புத்தக வாசிப்பு நமக்கு வெயில்காலத்து பழஜூஸ் கடை போல, சென்னை தோதுபட்ட இடமாகிப் போக, வாசிப்பும் கூடினது. எழுத்தைப் படிக்கும் போதே அட நம்ம மண்ணுன்னு நெருங்கவச்சது  கி.ராஜநாராயணனும் (கி.ரா), ஜோ டி குருஸூம்  தான். படைப்பாளிகள் இர் விகுதிகளை (அவர்,இவர்) எதிர்ப்பார்ப்பதில்லைன்னு ஒரு சமாதானம் பண்ணிக்கிறேன்.

நான் கொஞ்சம் திமிர்புடிச்சவன். ஒரு சின்ன கதை எழுத அதை குறுக்க ரெண்டுலைன் அடிக்கச் சொன்னா ஏத்துக்கமாட்டேன். பரிட்சையில் விதிவிலக்காய் இருந்தேனோ என்னவோ நினைவில்லை. அதனாலே இதுவரைக்கும் ரெண்டுவரி ஹைக்கூவோ, ரெண்டுபக்க கதையோ எந்த பத்திரிகைக்கும் அனுப்பினதில்லை. மலைகள்ல ஒரே ஒரு கதை வந்தது. ஒற்றுப்பிழையைக் கூட (வட்டாரவழக்குன்னு விட்டிருக்கலாம்) தொடாமல் பதிந்திருந்தார்கள். அதுதான் செருக்குகொண்ட ஆகப்பெரிய அங்கீகாரம்.

அப்படிப்பட்ட பட்டிக்காட்டான் வற்றாநதி வெளியீடு, புத்தக அறிமுகம், விமர்சனக்கூட்டம்ன்னு இதுவரைக்கும் மூன்று மேடைகளில் தப்பிச்சு வந்தாச்சு. அடுத்தநிலைக்குத் தாவ நினைக்கும் போது இந்த வாய்ப்பு. தொன்னூறுகளின் இடைப்பட்ட ஆண்டில் கி.ரா ஆசிரியராக வெளியிட்ட  “கதைசொல்லி”-யை மீண்டும் கொண்டுவரும் பணி. மலைக் கரும்பைக் கடிக்க கட்டெரும்புக்கு கசக்குமா! மா என்ன மா  சுவைக்கும் தான்.

தனிப்பட்டு எனக்குள் நிறைய கனவுண்டு. பதிப்பகம், படைப்புகள், புத்தகம், பயணம், எழுத்து இப்படி இயங்கனும்ன்னு. நண்பன் பிரகாஷ் ஏற்கனவே எனக்குள் பற்றவைத்திருந்த பொறிதான். இத்தனை வேகமாய் என்னைப் பற்றிக்கொள்ளுமென நினைக்கவில்லை நானும்.

கனவுப் பிரியனிடமும், உதயனிடமும், காயத்ரியிடமும், ஸ்ரீதேவி செல்வராஜனிடமும்,  யோசனை கேட்டேன்.  கூடவே உங்கள் பங்களிப்பும் வேணும்ன்னு கேட்டேன். எல்லாருக்குள்ளும் அதே பொறியுண்டு. மறுக்காமல் சம்மதித்தார்கள். இன்றைக்கு குழுமியிருக்கிறோம்.

 இதே வார்த்தையை “ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் சார்ன்னு” கதை சொல்லி இணை ஆசிரியர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சார்கிட்ட ஒரே வார்த்தையில் கேட்டேன். தாராளமா ஆரம்பிங்க கதைசொல்லியை உங்க பதிப்பிலே கொண்டுவாங்க என்று இரண்டே வரியில் ஆதரவும் கொடுத்தார். கூடவே கதைசொல்லியில் ஆலோசகர்குழுவில் எங்கள் பெயரையும் சேர்த்தெழுத வைத்தார். ஷாட் ரூட்டில் சாமிகும்பிட வழிகிடைச்சது போலத்தான்.

அம்மாவுக்கோ, வாசுதேவன் சாருக்கோ கூட இதுபற்றிச் சொல்லவில்லை. இங்கே சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு துணிவுதான். அனுபவங்களற்ற தயக்கங்கள்  முதலில் வரத்தான் செய்தது. திறன் உண்டென்னும் நம்பிக்கை கைகொடுக்கிறது. பார்க்கலாம். இதோ கதைசொல்லியின் பணிகள் விரைந்து நடந்துகொண்டிருக்கிறது.

கதைசொல்லியின் பாரம்பரியம் நாட்டுப்புற மற்றும் கரிசல் இலக்கியத்தை நேசித்தவர்களும், கி.ரா, தி.க.சி, தோப்பில் முகம்மது மீரான், கழனியூரன், மேலாண்மை பொன்னுச்சாமி, டி.கே. கலாப்ரியா  என இன்னும்பல தெக்கத்திப் படைப்பாளிகளை வாசித்தவர்களும் அறிந்திருக்கலாம். அத்தகைய இடத்தில் எறும்புகள்  வேலை ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது என்பதே கெளரவம். இன்றைக்குத்தான் கே.எஸ்.ஆர் அவர்கள் அதிகாரப்பூர்வமாய் தன் முகநூலில் அறிவித்திருக்கிறார் எங்கள் பெயர்களை (யும்)...

தூரத்தில் இருந்து பார்த்து வாசித்த படைப்பாளிகள் வரிசையில் நம் பெயருமா என்று வியந்துகொண்டே கதை சொல்லிக்கான அட்டைப்பட வடிவமைப்பு, பக்க அமைப்பென்று சுரேஷ் பக்கபலமாய் நிற்க எல்லாம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி (01-04-2015)
“கதை சொல்லி” காலாண்டிதழ் புதுவெள்ளம்போல் வெளியாகும். உங்கள் ஆதரவு எப்போதும் போல குறையின்றி  இருக்கட்டும்.


முன்னரே சொன்னது போல எனக்கு உங்களுக்குச் சொல்ல இரண்டு வார்த்தைகள் தான் இருக்கின்றன. அவை  :

- எல்லோருக்கும் நன்றி!

-கார்த்திக். புகழேந்தி.
17-03-2015.

Comments

  1. வாழ்த்துக்கள்! சந்தாவிவரம் சொல்லியிருந்தால் இதழுக்கு சந்தா செலுத்த வசதியாக இருந்திருக்கும்! இலக்கிய இதழ்கள் கடைகளில் கிடைப்பதில்லையே!

    ReplyDelete
  2. தொடர்ந்து பதிவுகள் வெளிவர வாழ்த்துக்கள். எனக்கு பயிற்சி காலத்தில் இதேபோல் கையெழுத்து ஏடு வெளியிட்ட அனுபவம் உண்டு.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்