க்றிஸ்டி - ஒரு டைரிக்குறிப்பு






1999
***
அது ஏன் க்றிஸ்டி மட்டும் அப்படி ஈர்த்துவிடுகிறாள். எல்லோரைக்காட்டிலும். அழகாய் இருப்பதினாலா.. அப்படிச் சொல்வதென்றால் ப்யூலாவும் தான் அழகினள். பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்துவிட க்றிஸ்டி ஒன்றும் அப்சரஸும் இல்லை.
க்றிஸ்டி உள்ளத்திலிருந்து அழகானவள்அப்படித் தான்  நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தாராளமாக நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்

ஈகிள் புக்செண்டரில் ப்ரில் இங்க் பாட்டில் வாங்க வரும்போதெல்லாம் க்றிஸ்டியை அவள் தங்கை ஜேஸ்ப்ரினோடு பார்த்திருக்கிறேன். முச்சூடாக வெள்ளை நிறம். கொஞ்சம் தாங்கிப் பிடிக்காவிட்டால் உருகி விழுந்துவிடுவாள் போல ஐஸ்க்ரீம் தேகம். மிரட்சியான கண்கள்.

இங்க் பாட்டிலைத் தவிர உலகில் எதுவுமே முக்கியமற்றதைப் போல இறுகப் பிடித்துக் கொண்டு ஜேஸ்ப்ரினோடு நடந்து சொல்லும் போது ரசித்திருக்கிறேன். ஜேஸ்ப்ரின் அவள் தங்கை.

க்றிஸ்டி கலகல பெண் எல்லாம் இல்லை.. பிரகாசமான ஒளிபோல அவள் பார்வை இருக்கும்தான், ஆனாலும் அதன் பொருட்டு அவளிடம் சின்ன சப்தம்கூட எழாது, புவியின் முனையில் வாழும் ஆலாப் பறவை போலேஎங்கள் அடுத்த வீதியின் ஒருமுனையில்க்றிஸ்டி வாழ்ந்து வந்தாள்.

எனக்கு மைக்கேலைத் தெரியும். மைக்கேல் வீட்டில் எல்லோருக்கும் என்னைத் தெரியும். அதிமுக்கியமாக மைக்கேலுக்கு க்றிஸ்டியைத் தெரியும். டேனியல் தாமஸ் தெருவிற்கு எங்கள் மூன்று பேரையும் தெரியும்.

மைக்கேல் தான் முதன்முதலில் டேனியல் தாமஸ் தெருவை.. அறிமுகப்படுத்தி வைத்தான் அதன் பின் ஒரு புனிதவெள்ளி நாளில் க்றிஸ்டியை,.. துதித்துப் பாடிட பாத்திரமே தூயவன் ஏசுவின் நாமமதேபாடலை மெழுகுவர்த்தி வெளிச்சங்களுக்கு மத்தியில் ரம்யமாய் பாடிக்கொண்டிருந்தார்கள். மைக்கேல் வீட்டார்கள்.

***
ஜூலை- 2000

சொர்ண பாண்டியன் சார், வீடு அதே தெருவில் தான் இருந்தது. எப்போது வேண்டுமாலும் அவரிடம் நான் மாட்டிக் கொள்ளலாம். “என்னலா இங்கிட்டே சுத்திட்டு கெடக்க? வோம் வொர்க்கு ஒன்னுஞ் செய்றாப்டி இல்லியோ?” . மனிதர் பள்ளிக்கூடத்தில் தான் துரத்து துரத்தென்று துரத்துகிறாரென்றால் இங்கேயுமா.. ஆனாலும் அவர் ஒன்றும் பெரிய வில்லனாய்  இருக்கவில்லை..

எனக்கு க்றிஸ்டியை பார்த்தால் போதுமென்று தோன்றியது. குறைந்த பட்சம் அவள் வீட்டை. அவள் வளர்க்கும் குரோட்டன்ஸ் செடிகளை….

கசங்கிய துணி போல படுத்துக்கிடந்து என்னைக் கண்டதும் வள் வள் என குலைக்கும் அவள் பொமரேனியனிட,ம் இரண்டு அர்ச்சனைகள் வாங்கவாவது அந்த வீதியை வெறுமனே கடந்து போயிருப்பேன்.

***

மே-2001 

ஜெபா மிஸ் மகள் ஹேனா . ஹேனாக்கா வீடு தெற்குத் தெருவில் இருந்தது   சண்டே க்ளாஸ்களில் கலந்து கொள்ள க்றிஸ்டி அங்கே வருவாள்

அதிகபட்சம் யூனிபார்ம் இல்லாத க்றிஸ்டியை அங்கேதான் பார்க்க முடியும்., அதற்காகவேணும் செல்ஃபில் அடுக்கிவைத்திருந்த புதிய ஏற்பாட்டோடு நானும் ஜெபஸ்டினும் ஜெபா மிஸ் வீட்டுக்குச் செல்வோம்.

 “கிரிக்கெட் விளையாடப் போகல.?”. என ஏற இறங்கப்பார்த்துவிட்டு கதவை திறந்துவிடுவார், ரிட்டையர்ட் மிலிட்ரி.  . ஜெபா மிஸ்ஸின் அப்பா!. அவர் கேள்வியெல்லாம் யார் மதித்தார்.

எந்த வரிசையில் க்றிஸ்டி உட்கார்ந்திருக்கிறாள் அதோ!.
அவளுக்குப் பின்னால் இடம் பிடி.
 “
சமாதானம்.”
 “
சமாதானம். ”

***
எதற்காக பைபிள் படித்தேன். பெத்தலகேம் பிறந்தவரை போற்றித்துதி மனமே! பாடலை ஏன் கத்திக் கத்திப் பாடினேன் என்பதெல்லாம் எனக்கே தெரியாது.

மே மாதம் ..சி மைதானம் பின்னால் நடக்கும் வி.பி.எஸ் க்ளாஸுக்கெல்லாம் அக்கறையாய் போய் கலந்துகொண்டேன்வன இலாகாவில் வேலைபார்த்த அப்பாவிற்கு என் மாற்றங்கள் மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம். அவருக்கு நான் செய்யும் சேஷ்டைகள் தெரியாதமையால் பிதாவே என்னை மன்னியும். என் பெயர் ராபர்ட் குறித்துக்கொள்ளும்.

***
க்றிஸ்டி புராணம் பாடுவதன் காரணம் எனக்கு அவளைப் பிடிக்கும்.  “இவன்  க்றிஸ்டி பின்னாடி சுத்துறாண்டா!” என சரவணா கபே கார்னரில் பசங்களோடு ஸ்டீபன் சீட்டியடிக்கும் போது வெட்கமாய் இருக்கும்நேரு ஸ்டேடியம் சுவரில் ராபர்ட் க்றிஸ்டி என எழுதிவைத்துவிட்டு அழிக்க முயற்சிப்பேன்.

”J “ - என குறிக்கும் கீ-செயின் எதற்கு வைத்திருக்கிறேன் என்பது நான்சிக்குத் தெரியாது. அழகா இருக்கு அண்ணா எனக்கு இதேமாதிரி ஒன்று ”N” –ல் வாங்கித் தருகிறாயா! நான்சி என் தங்கை.
போ போ இது இருபது ரூபாய் நானே கஸ்டப்பட்டு தெற்கு பஜார் போய் வாங்கினேன்.

***
பிப்ரவரி-2002

க்றிஸ்டிக்கு இவை எதுவும் தெரியாது. ஏன் மைக்கேலுக்கே பல நாள் தெரியாமல்  பார்த்துக் கொண்டேன்.

பாளை பஸ் ஸ்டாண்டில் லாங் சைஸ் நோட் ஒன்றை ஆள்காட்டிவிரல் நுனியில் சுழற்றிக்கொண்டே சேவாக்ன்னு ஒரு ஓப்பனர் அடிபின்றான்டாமச்சான்என பேசிக்கொண்டிருக்கும் போது மைக்கேல் வந்து தனியாகக் கூப்பிட்டான்.  வெய்ட் மெஷின் பக்கத்தில் வைத்து.  “நீ க்றிஸ்டி பின்னாடி சுத்தாதடா ப்ளீஸ். அவங்க வீட்ல தெரிஞ்சா பாவம்என்றான்.

அவனுக்கு எல்லாம் எப்படித்தெரியும் என்பது புரியாமல் ஸ்டீபனை முறைத்தேன். மைக்கேல் வெறொன்றும் சொல்லாமல் ரோட்டைக்கடந்து போய்விட்டான்விரல் நுனியிலிருந்து நோட்டு நழுவியது..

***
மூன்று வருடங்களாய் க்றிஸ்டியை நேசித்துக் கொண்டிருக்கின்றேன். இரண்டு வருடமாய் யாருக்கும் தெரியாது. ஏன் எனக்கே தெரியாது. இன்றைக்கு மைக்கேல் இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறேன்.

உண்மையில் மைக்கேல் என்னிடம் சொல்லியிருக்காவிட்டால் கூட நான் க்றிஸ்டியை நெருங்கி இருப்பேனா தெரியாது. அதற்குப் பிறகு மைக்கேல் என்னிடம் பேச்வே இல்லை. அவன் வீட்டுக்குப் போகமுடியாமல் நான் டேனியல் தாமஸ் வீதியை வலம் வந்துகொண்டிருந்தேன்என் வீட்டிற்கு தெரிய வர அடி பின்னி எடுத்துவிட்டார்கள். அதன்பின் ஞானதாஸ் காலனிக்கு குடிபெயர்ந்துவிட்டோம்.

***
அக்டோபர்- 2005

கிருஷ்ணமூர்த்தி தான் ஒருநாள் சித்தா காலேஜ் எதிரில் காளிமார்க் வாசலில் வைத்துச் சொன்னான்.  “மைக்கேலை சி.எஸ்.-ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க மாப்ள…”

 “என்னடா சொல்ற.. எப்போ.. நீ போய் பார்த்தியா..”.  

இல்லமச்சான்,. கார்த்தி  ஸ்டேடியம் வரும் போது சொன்னான். அவனும் மைக்கேலும்தான் க்ளோஸ்லமைக்கேல் அவங்க ஏரியா பொண்ணு யாரையோ லவ் பண்ணி இருக்கான் போலபிரச்சனையாகி சூசைட் அட்டம்ட் பண்ணிட்டானான். கூடவே பழகியிருக்கான். நம்மகிட்டல்லாம் ஒருவார்த்தை சொன்னதில்ல பாரேன்.” கிருஷ்ணா கடந்து போய்ட்டான்.

எனக்கு மைக்கேலை தவிர்க்க முடியவில்லைமுன்னாடியே சொல்லி இருக்கலாமேடா! யாராக இருக்கும்?. முட்டாள் மனம் துடித்தது.
சி.எஸ். இங்கிருந்து கால்மணி நேரம் தான், மைக்கேலைப் போய் பார்க்க தெம்பில்லை. ஒரு வேளை க்றிஸ்டிக்காகக்கூட இருக்குமோ? மைக்கேல் க்றிஸ்டியடித்தான் விரும்பி இருப்பானா?

அவன் என்றைக்கு பஸ் ஸ்டாண்டில் க்றிஸ்டி பின்னால் சுத்தாதடான்னு சொன்னானோ அப்போதிலிருந்தே மெல்ல மெல்ல க்றிஸ்டியை மறந்து போய்விட்டேன் .

இல்லை நான் பொய் சொல்கிறேன். க்றிஸ்டி அதன் பிறகு எங்குமே என் கண்ணுக்கு தட்டுப் படவில்லை என்பதுதான் உண்மை. அவளை நான் தேடிக் கொண்டே தான் இருந்தேன்.

சபை கூட்டத்தில் கலந்துகொண்டபோது கூட  ஒரு முறை ஜேஸ்ப்ரினை பார்த்தேன். அவளுடன் எப்படியும் க்றிஸ்டி வந்திருப்பாள். மனம் தேடிய போதும் கண்களால் கவனமாக தவிர்த்துவிட்டேன்.

க்றிஸ்டி மெல்ல மெல்ல யாரோ என்று மாறத் தொடங்கிய புள்ளி அது.   அன்றைக்கு மைக்கேலுக்காகவும் ஜெபித்துக் கொண்டேன்,

***
2013
சமாதான புரம் சர்ச் எதிரில்  இன்று புனிதவெள்ளி பிரார்த்தனை முடித்து    சாண்ட்ராவை கையில் தூக்கிக் கொண்டு  அகஸ்டினுடைய அக்வேரியத்தில் அவளுக்குப் பிடித்த GOLD FISH வாங்கிக் கொண்டிருந்தேன்,

சாம்பல் நிற மாருதி எயிட் ஹண்ட்ரடில் மைக்கேல் இறங்கிவந்தான். மீன் வாங்கத்தான் வந்திருக்கிறான். காருக்குள் பிங்க் நிற பெண்குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.  க்றிஸ்டி அந்தக் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள்கார்  டேஸ்போர்டில் ப்ரில் இங்க் பாட்டில் ஒன்று கிடந்தது.. நான் அதைமட்டும் கவனித்துக் கொண்டே கவனமா இடம்பெயர்ந்து விட்டேன்.

 “சாண்ட்ரா! டேடி உனக்கு நாளைக்கு ஃபிஷ் வாங்கித்தரேண்டா!” 

Comments

  1. படம் பார்த்த மாதிரி இருக்கு..கதையில் ஆழ்ந்து விட்டேன்.

    ReplyDelete
  2. வாசிக்க வாசிக்க காட்சிகள் மனதில் தானாகவே விரிகின்றன. கிறிஸ்டி என்று வரும் இடங்களில் ராபர்ட்டின் உணர்வை உணர முடிகிறது.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil