நள விருந்து ஆசாமி
நெல்லை வீரராகவபுரத்தில் பிள்ளையார் கோவிலுக்கு எதிர் தெருவில் முதல்கடை நம்ம ஆஸ்தான டிபன் கடை!

குடிக்க கொடுக்கும் தாமிரபரணி தண்ணீருக்காகவே அங்கே தினம் தினம் சாப்பிடப்போவேன்.

சாப்பாட்டு விசயத்தில் "நள விருந்து ஆசாமி " நான்.

மார்கெட்டிங்க் நண்பர்கள் யாராவது உங்களுக்கு இருந்தால் அவர்களைக் கேளுங்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரசித்தியான ஹோட்டல் சொல்வார்கள்.

சைவம்/அசைவம் தனித்தனியாக பெரிய லிஸ்ட் கிடைக்கும்.

2005-06-களில் நானும் தான் குடுமி வச்ச பூசாரி என்பது போல, மார்கெட்டிங் ரெப் ஆக ஊர் சுற்றினேன்.

மார்கெட்டிங்காக தமிழகத்தின் எல்லா மாவட்டத்திற்கும் சுற்றினதில் எனக்கும்
சாப்பாட்டு ருசியறிந்து கடை தேர்ந்தெடுக்கும் பாக்கியம் இருந்தது,

திசையன்விளை தாயம்மா ஹோட்டல்/ களக்காடு நம்பி/விருதுநகர் பத்ரகாளி கோவில் பின்புறம் ஒரு பழைய ஹோட்டல்/கோவை அன்பு மெஸ்/மதுரை மதுரம் ஹோட்டல்/வாணியம் பாடி உசேன் / களியக்காவிளை தங்கம்/
இப்படி குறிப்பிட்டுச் சொல்ல அம்மாபேட்டையிலிருந்து ஓட்டபிடாரம் வரை (அ-ஓ) எல்லா ஊரிலும் எனக்கென்று ஒரு
பிரத்யோக கடை உண்டு!

கூடவரும் புதிய ரெப்-பை வாங்க நம்ம கடைன்னு கூட்டுப்போய் துண்டு மீன் என்னென்ன வெரைட்டி உண்டுன்னு பாடம் எடுத்து ,
எக்ஸ்ட்ரா அப்பளம்/எக்ஸ்ட்ரா கப் பாயாசம் / வாங்கிக் கொடுக்கும் வள்ளல் தனமெல்லாம் அங்கேதான் வாய்க்கும்.

ரெகுலர் கஸ்டமர். இந்தவார்த்தையின் மரியாதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். *ஹோட்டல்காரர்கள் மிகவும் நல்லவர்கள் நம்மை அடையாளமே தெரியாவிட்டாலும் ஒரு வணக்கத்தைப் போட்டால் விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.

%

இப்போ அப்படியே மேலே சொன்ன வீர்ராகவபுரம்.பிள்ளையார்கோவில்
தெருவுக்கு போகலாம்.

அய்யங்கார் ஹோட்டலுக்கே உரிய சுக்குகாபி/காரவடை/குட்டி தோசை/தேங்காய் சட்னிக்கு பெயர் சேர்த்தகடை. (அதென்ன பெயர் போன கடை?)

நெல்லையப்பர் வெள்ளித்தேர் 91-ல் தீப்பிடித்ததிலிருந்து / 80-களின் கடைசியில் முன்னீர்ப்பள்ளத்தில்
பாரதியார் வழித்தோன்றல் சங்கர்ராமன் வாழ்ந்த கதை வரைக்கும் பல அரிய சம்பவங்களை எட்டு குட்டிதோசையை கெட்டிச்சட்னி சாம்பார் தொட்டு சாப்பிட்டுக்கொண்டே பேசக் கேட்கலாம்

விருத்தமாய் ஒரு வட்டக்கப்பில் சுக்கு காபி! காரவடை! ராமு அண்ணார் ஒரு நல்ல கதை சொல்லி துண்டு துண்டாய் விழும் வார்த்தைகளுக்கு இடையே திருநெல்வேலியை அங்குலம் அங்குலமாய் விவரிப்பார்.

பழைய தின்னவேலி ராவ்பகதூர்கள் கதையெல்லாம் கூட அங்கே பேசப்படும். நான் கொஞ்சம் கதை விரும்பியும் கூட 

டாக்டர்.ஆசுகவி ( Asukavi ) தான் இந்தக்கடையை அறிமுகம் செய்து வைத்தார்.

எனக்கும் அய்யங்கார் கடைக்கும் இடையே இருக்கும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியை சாப்பாட்டு ருசிக்காக கடப்பது வாடிக்கையாகிவிட்டது!

திரும்பும் வழியில் சந்திராவில் இளஞ்சூடாய் அல்வா! ஒரு குத்துக்கை ஓசி மிச்சர்.

வாழ்க்கையில் கொஞ்சம் சாப்பாட்டுக்காகவும் வாழ்ந்தால் தப்பில்லை என்பதை உணர்ந்தவனாதலால் 

%
வழக்கம் போல நேற்று இரவு சுக்குகாபி அரட்டை முடித்து அறைக்கு வந்தபின் தான் கவனித்தேன். அம்முக்குட்டியை காணவில்லை (ஆண்ட்ராய்டுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்) .

*

இலங்கையில் அனுமனைச் இராவணவதத்தின் பின் சந்தித்த சீதாபிராட்டி

"இங்குள்ள அரண்மனை
அம்மியில் மசாலா அரைத்தால் அப்படி ஒரு ருசி! வரும் போது இந்த அம்மியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடென்று" கட்டளையிட்டதாக ஒரு சுவா(ருசி)ரசியக் கதை நேற்றிரவு
கேட்ட மயக்கத்தில் அய்யங்கார் ஓட்டலிலே போனை மறந்துவிட்டு வந்துவிட்டேன்.

எதற்கும் இருக்கட்டுமென இரவு மட்டும்
முகநூலை
டீ-ஆக்டிவ் செய்துவிட்டேன்.

காலை முதல் வேலையாக, ராமண்ணாவுக்கு போன் செய்து/அம்முக்குட்டியின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் செய்து/ ஓட்டலுக்குச் செல்ல போனைக் கொடுத்துவிட்டார்!

அப்படியே
நாலு தோசை ரெண்டு காரவடை பார்சல் வாங்கிக் கொண்டேன்.

" குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்க அண்ணாச்சி!"

-கார்த்திக் .புகழேந்தி

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்