Monday, 18 August 2014

தாய் மாமன்

அட்சயாவுக்கும் /அஸ்வதாவுக்குமான ஒரே தாய்மாமனென்ற முறையில் அவர்களை ஒரு போதும் கண்டிக்கிறவனாக நடந்துகொண்டதில்லை., 

அட்சயாவின் சேட்டைகளுக்கு முன்னால் இரண்டுபட்டுக் கிடக்கும் வீட்டை ஒன்றாக மாற்றி அடுக்குவதற்கே அக்காளின் வாழ்நாள் தீர்ந்து போகும். 

தண்ணீரில்
கெட்ட ஆட்டம் போட்டு
மணல்வீடுகட்டி
மருதாணி வைத்து,
காயும் முன்னே கைதட்டி,
முருங்கைப்
பூக்களை உதிர்த்து
தரச்சொல்லி,
மாடாக்குழி பிள்ளையாருக்கு
அர்ச்சனை செய்து, வீட்டில் எல்லாருக்கும் விபூதி பூசி,
அப்பா படத்திற்கு முன் கைகூப்பி,
எதிர்பாரா முத்தம் தந்து
அதே வினாடியில் கன்னம் கடித்து!

தன்னுடைய தலையணையை எடுத்ததற்காய் என்னோடு சண்டையிட்டு,

டீ.வி ரிமோட் பேட்டரியை தலைகீழாய் மாற்றிவைத்து, அது இயங்காமல் போக நான் விழிபிதுங்கிக் கொண்டிருப்பேன்.

ஊஃபர் துளைக்குள்ளே தான் தொலைந்துப்போன சாவிகள்/பேனாக்கள் கிடைக்கும்.

பைக் டேங்க் மீது அவள் சிம்மாசனம்
ஹேன்டில்பரை இறுகப்பிடித்து காற்றில் ஹாரணடிப்பாள்.

என்ன வர்ண மடித்தாலும் வீட்டுச் சுவரில் அவள் கிறுக்கல் நிறத்தில் தான் இருக்கும்.

முடியை பிடித்திழுக்கும் விளையாட்டைக் கண்டுபிடித்தது அவள்தான்.

ஹெல்மெட்டை
கோழிக்குஞ்சுக்கு வீடாக்கி
ரசப்பவளும் அவள்தான்.

ஆட்டுக்குட்டி இறந்ததற்காய்
அரைநாள் கண்ணீர் வற்ற அழுதாள்.

நாய்க்குட்டிகளின் உலகத்தில் அவள் தேவதை. அவள் பிஞ்சு முத்தத்திற்காகவே அவை கண்கள்
திறக்காமல் பிறந்தன என் வீட்டில்.

பாட்டிக்கு ப்ரியத்தில் கொண்டைகள் போடுவாள். வேடிக்கையாக பொட்டு வைத்து அலங்கரிப்பாள்.

உங்க பையன் கிள்ளிட்டான்"-என இவள் கொடுக்கும் பிராது மட்டும் உடனுக்குடன் விசாரிக்கப்படும்

காம்பவுண்ட் கேட்டில் ஏறி பலிப்புக்காட்டுபவளை என்னதான் கடிந்து கொள்ள?

ஓயாத ஆட்டம். கட்டில் மெத்தையில் ஏறி குதித்து குதித்து தன் உலகத்தின் உயரங்களை எட்டப்பார்ப்பாள்.

தூங்கும் போது கிட்டே
நெருங்கிப் படுத்துக் கொண்டு குதிகாலை அழுத்திவிடுவேன் மிருதுவாய்.

என்ன ஆட்டம் ஆடுற பக்கி வலிக்காதா உனக்கெல்லாம்ன்னு நான் அதட்டுவது அவளுக்கே கேட்காது!

சிலநேரம் அவள் விரல் எடுத்து
கன்னத்தில் வருடிக்கொள்வேன்.

மாமன் என்பவன்.
எப்போதும் தின்பண்டங்களைப் பிடுங்கித் தின்பவன் என அட்சயா/அஸ்வதா இருவரின் ஜீன்களில் எழுதப்பட்டிருக்கும் போல !

கையில் Lays பாக்கெட்
கிடைத்ததும் சிட்டாய் பறந்துடும் குட்டிப்பிசாசு!

இவர்களால் நான் பகைத்துக் கொண்ட ஒரே எதிரி சோட்டா பீம் என்ற பொடியன். போயும் போயும் ஒரு பொடியனுக்காய் நான் போராடவேண்டி இருந்தது

என்ன
ஆனாலும் இவர்களிடம்
பிடுங்கித்தின்னல் தரும்
சுகத்திற்கு ஈடில்லை... 


No comments:

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

There was an error in this gadget