வெள்ளிக் கிழமை
”நிஜமா தான் சொல்றியா! கோவில்பட்டிக்கு போய்ட்டா உன்னை எப்போ பார்க்க முடியும்”

“வெள்ளிக்கிழமை வரை தான் ஹாஸ்டல், வெள்ளிக்கிழமை கிளம்பி வந்துடுவேண்டா உன்னைப் பார்க்க!”

“என்னால உன்ன பார்க்காம இருக்க முடியாது ப்ரீத்தி”

“கொஞ்சம் பொறுத்துக்கோடா மூணு வருசம் தான்.ப டிச்சு முடிச்சதும் உன்கிட்டே வந்துடுவேன்.”

“ம்ம்ம்”

“கொஞ்சம் சிரிச்சாதான் என்னவாம்”

“ஏன் உனக்கு திருநெல்வேலியிலே நல்ல பாலிடெக்னிக்ல சீட்டு கிடைச்சாதான் என்னவாம்!”

“டேய் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத! நீ முதல்ல கிளம்பு!
இன்னும் கொஞ்சம் நேரமாகிடுச்சுன்னா என்னை வீட்ல தேட ஆரம்பிச்சுடுவாங்க நான் வரேன்”

“ஹே நில்லுப்பா!”

“என்ன்ன.... சொல்லு”

“.....”

“எரும மாடு! போடா "

***

ப்ரீத்தியும் நானும் மேரி ஆர்டனில் ஒன்னாப்படிச்சவங்க, 
டென்த் முடிச்சதும் நான் ஜாண்ஸில்
ப்ளஸ் ஒன்...சேர்ந்துட்டேன். ப்ரீத்தி வீட்டில் படிக்க வேண்டாம்ன்னு சொல்ல....

என் அப்பாதான் “ஒத்த பொட்ட புள்ள வச்சிருக்கீங்க என்ன நகை நட்டு போட்டு நீங்க கட்டிக் கொடுத்தாலும் அதுங்க படிப்புதான் அவங்க வாழ்க்கைக்கு சொந்தமா வரும், தயங்காம பாலிடெக்னிக்ல சேர்த்துவிடுங்க ...

இங்கன சங்கர்ல சீட் கிடைக்கலைன்னா சொல்லுங்க 
கோவில்பட்டில என் நண்பர் சங்கர ராமன்னு ஒருத்தர் இருக்கான். 
அங்க அவன் சொன்னா சீட் கிடைக்கும்.” என ஜார்ஜ் மாமாவை மூளைச் சலவை செய்தபடி இருந்தார்.

உம் மருமக படிச்சிருக்கனும்ன்னு உனக்கு இவ்ளோ ஆசையாப்பா! 
-மனசுக்குள் அப்பாவை கொண்டாடினேன்.

ஆனாலும் கோவில்பட்டிக்கு ஏன் விரட்டப்பார்க்குறார். 
ஆண்டவா! அப்பாவோட ப்ரெண்டு எங்கயாச்சும் காணாம போக
சாபமும் விட்டேன்.

இரண்டுமாத விடுமுறை!
லெவன்த் புத்தகங்களை நாலு முனையிலும் அம்மா மஞ்சள் வைத்துத் தர,
நான் ஜான்ஸுக்கு கிளம்பின தினத்தில் ப்ரீத்தி தன் வீட்டு ஜன்னலருகே நின்று கண்ணடித்து வைத்தாள்.

***
கஞ்சி போட்ட சட்டை கசங்கத்தொடங்கிய இரண்டாவது மாதத்தின் இறுதியில்.
ப்ரீத்தி ஹாஸ்டலுக்குப் புறப்படுகிறாள். அன்றைக்குத்தான் முதல் பத்தியின் சம்பாஷணை நடைபெறுகிறது! 

மாதவன் கடைக்குப் பின்னே உள்ள கூட்டுறவு பால்பண்ணைக்கருகே!

அன்றைக்கு இட்ட முதல் முத்ததின் ப்ரியத்தை கண்களில் தாரைதாரையான கண்ணீரோடு ஜங்ஷனில் இருந்து பஸ் ஏறிப்போகும் வரைக்கும் துடைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்குப் பின் வெள்ளிக்கிழமை என்பது என் பிறந்தநாளைவிட முக்கியமான தினமாகிற்று!

சனிக்கிழமை வகுப்புகளை வெறுத்தேன். ஆலமரத்து பிள்ளையார்கோவில் நிழலில் அத்தனை நாட்களும் சேர்த்து வைத்திருந்த தனிமைகளை ப்ரீத்தியிடம் கதைகதையாய் சொல்லிக்கொண்டிருந்தேன்,

காதல் பருவத்தின் ஈர்ப்புகள் என்பதைத் தாண்டி முதிர்ச்சியாய் மாறிவிட்டிருந்தது..

நிறைய பேசினோம். கடிதங்கள் எழுதினோம். ஒன்னரை மணி நேர பயணத்தின் இடைவெளியை கடித நீளத்தில் அளந்தோம்.

சில வெள்ளிக்கிழமை மாலைகள் அவள் வராமலே இருண்டுகிடந்தது.. செவ்வாய்க்கிழமை கடிதத்தில் கண்ணீரை அப்பி இருப்பாள். பிரியத்தையும்.

***
மூன்றாவது வருடத்தில் நான் கல்லூரியைத் தொடங்கி இருந்தேன். ப்ரீத்திக்கு இது இறுதியாண்டு.

இன்னும் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களை ஒரே இரவில் கிழித்துவிடும் அவசரம் இப்போது இல்லை.. இந்த தொலைவுகளை நேசிக்கத் தொடங்கினேன்.

சூரியவம்சம் படம் பார்த்துவிட்டு அவளைச் சித்தரித்து எழுதினேன். உன்னைப் பார்க்க இப்படித்தான் ஓடி வந்தேனென்று! விழுந்து சிரித்தாள்.

"மும்பை டாடா அடிப்படை ஆய்வு மையம் Tamil Language Resources on the web" - நடத்திய கணினி பட்டறை நிகழ்ச்சி கோவில்பட்டி ஐடிஐ வளாகத்தில் நடைபெற அவளுக்காகவே பயிற்சியில் கலந்துகொண்டேன்.

கணினியும் தமிழும் என்னை மெல்ல விழுங்கத் தொடங்கியது!

***
மென்பொருள் துறையைத் தேர்ந்தெடுத்தது என் தவறா! நீ இங்கே படித்தது போதும் கிளம்பு பெட்டிப் படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு மாமா ப்ளாட்டில் சென்னையில் தங்கிக்கொள்ளலாம். லோக்கல் ட்ரெயின் பாஸ் ரெடி, தரமணியில் சீட் ரெடி, கம்ப்யூட்டரைப் போய் கரைத்துக்குடி, அமேரிக்காவின் தேவைக்கு நீயும் படி.

என்ன விளையாடுகிறீர்களா? நான் போகமாட்டேன். ஒழுங்கா இங்கனயே காலேஜ் சேர்ந்தா படிப்பேன். இல்ல ஒருத்தர்கிட்டயும் சொல்லாம ராத்திரி லெட்டர் எழுதி வைச்சுட்டு எங்காவது ஓடிப்போய்டுவேன்.

ஓடுதவன் சொல்லிட்டு ஓடமாட்டாம்ல.. சொல்பேச்சு கேக்கல சொட்டை எலும்பை முறிச்சுப் போடுவேன்.

ம்ம்மா பாரும்மா அப்பாவ உன்னைய விட்டு நான் மெட்ராஸுக்கு போய் எப்படி இருப்பேன் நீயே சொல்லு

ஏங்க தலைச்சம் புள்ளைய தனியா விட்டு......

நீ வாயை மூடு..உனக்கொனும் தெரியாது...

***

விட்றா இப்ப நீ மெட்ராஸ் போகனும் அதானே
உங்க அப்பாவோட ஆசை! அவர் என்னைக்கும் உனக்கு நல்லது தான் செய்வார்.

நீயும் அவர மாதிரியே லூசாட்டம் பேசாத! எனக்கு உன்ன பார்க்காமல்லாம் இருக்க முடியாது!

இப்பமட்டும் நாம டெய்லி பார்த்துட்டுதான் இருந்தோமா? ஏன் மெட்ராஸ்ல ஒரு போஸ்ட்கார்ட் கூடவா கிடைக்காது உனக்கு!

நீ பேசிப்பேசியே எதாச்சும் சொல்லி மனச மாத்திடுவ ! நான் போமாட்டேன்னா போமாட்டேன் தான், ***

அன்றைக்கு இரவு வீட்டுக்குப் போகவில்லை. இரண்டாவது ஆட்டம் செண்ட்ரலில் விஜயகாந்த் படம் பார்த்துவிட்டு நைனார் குளம் மார்கெட் அருகே இரவு மூன்று மணி வரைக்கும் சுற்றிக் கொண்டே இருந்தேன்.

விடியும் முன் நான்கு மணிக்கு செந்தில்நாதன் சித்தப்பா ராசி டீக்கடையில் அடையாளம் கண்டுபிடித்து விட்டார்! எதுவும் பேசவில்லை ஏறு வண்டியில் என்றார்.

ராஜ்தூத் வீட்டுக்குப் போகவில்லை ஹைகிரவுண்ட் ஆசுபத்திரியின் வெளிவாசல் அருகே வந்ததும் "ஏம்ல இப்படி இருக்க நீ போனதும் இங்க எல்லாரும் எப்படி தேடினாக தெரியுமா ! உங்காத்தா நெஞ்சைப் புடிச்சுட்டு விழுந்துடுச்சு! உன்ன ஒரு பக்கம் தேடவா! இல்ல அம்மைய ஆசுபத்திரில சேர்க்கவா! "

"சித்தப்பா அம்மாவுக்கு என்னாச்சு! "

"பொறு பொறு நல்லா இருக்காக.. "

வண்டியை சைடு ஸ்டாண்டு போடும் முன்னே எகிறிக்குதித்து உள்ளே ஓடினேன் ! யாரிடம் என்ன கேட்க எதுவும் தெரியாமல் வரந்தாவில் நிலையில்லாமல் ஓடினேன். மூச்சிரைக்க ஓடினேன்.

கழுவிலேற்றப்போகும் அற்ப மனிதனைப் போல் என்னை எதிர்பட்டவரெல்லாம் பார்ப்பதாய் தோன்றியது.

அம்மா நீ பிழைத்துக் கொள்ள வேண்டும். நீ என் வாழ்வையும் சேர்த்து வைத்து வாழ வேண்டும் ! ஏனென்றால்..... என்னிடம் காரணமெல்லாம் கேட்காதே உனக்கு எதுவும் ஆகக்கூடாது அவ்வளவுதான்.

***
நீ இங்கன ஜார்ஜு மக கூட சுத்துறது எல்லாம் அப்பாவுக்கு தெரியும்டா! 
நேராச் சொன்னா கேப்பியா! உன்னைய பிரிஞ்சி நாங்க மட்டும் நிம்மதியாவா இருப்போம்.
பாரு ஒத்த ராத்திரிக்கே உங்கம்ம மயங்கி விழுந்துப்புட்டா.. 
உம்மேல உசிரையே வைச்சிருக்கோம்யா! 
அந்த புள்ளை சகவாசம் நமக்கு வேணாம்யா! 
அவங்கப்பன் என் சிநேகிதன் தான் ஆனா அவங்க வேற நாம வேற...

எதுப்பா வேற! நாலு வருஷம் அவளோட பழகி இருக்கேன். மனசும் மனசும் இணைஞ்சு போச்சு இன்னைக்கு பிச்சு எறின்னா எப்படி என்னால முடியும். சத்தமாக கேட்கத்தான் வேண்டும் போலத் தோன்றினது.

வார்த்தை எழவில்லை.. அப்பாவை வெறுப்பதற்கு எனக்குக் காரணங்கள் இல்லை.

***
மறுநாள் கூட்டுறவு பண்ணைக்கு பின்னால் காத்திருப்பதாய் செல்வியிடம் சொல்லி அனுப்பினாள்.

"நீ சென்னைக்கு போ நடப்பது நடக்கட்டும். எனக்கு நீ மட்டும் முக்கியமில்ல உன் குடும்பமும் என் குடும்பமும் தான்... உறவுகளை தூக்கிப் போட்டுட்டு ஒத்தை மரமா வாழ என்னால நிச்சயமா முடியாது பிறகு உன் இஸ்டம்..

சொல்லிவிட்டு திரும்பிக் கூடபார்க்காமல் நடந்தாள்..

இதோ நான் வந்த ரயில் அவளுக்கு எதிர் திசையில் ... திரும்பிப் பார்த்தபடியே நகர்கிறது...

-கார்த்திக் புகழேந்தி.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்