Skip to main content

பாப் டிலன்; கட்டுரையும் விளக்கமும்.

வணக்கம் Thiruvendra Kumar உங்களுடைய செய்தி கிடைத்தது. அதில் பாப் டிலன் பற்றி தினமலரின் வெளியான எனது கட்டுரையும், எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையும் உங்களை குழப்பியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டும் வெவ்வேறு விதமாக பாப் டிலனைத் தங்களுக்கு அடையாளப் படுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனது கட்டுரை பாப் டிலன் என்பவர் யார்? அவருடைய வாழ்க்கை, இசைப்பயணம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஸ்கெட்ச்களுக்குள் மட்டும் எழுதப்பட்டது. பாப் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா, அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் கொடுப்பது சரியா என்ற விவாதத்திற்குள் நான் நுழையவே இல்லை. எனக்கு டிலனைப் பற்றி ஓர் அறிமுகம் எழுதவேண்டும் என்று தோன்றியது. "I am Not There" படத்தைப் பார்த்ததிலிருந்து. க்ரானிகல்ஸ் வால்யூம் ஒன் பற்றித் தெரிந்துகொண்டதிலிருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக டிலனின் பாடல்களின் மொழிப்பெயர்ப்பை வாசித்ததிலிருந்து, நான் டிலனின் பாடல்களைக் கேட்கிறேன். அவை பற்றிய மேலதிக விசயங்களைத் தெரிந்துகொள்கிறேன். அமெரிக்க நாட்டுப்புற செவ்வியல் இசையைத் தன் பாடல்களுக்குப் பயன்படுத்துகிறார் பாப் என்று தெரிந்ததும் எனக்கு உற்சாகமாக இருந்தது. நான் நாட்டுப்புறத்தை நேசிக்கிறவன். ஒவ்வொரு மண்ணுக்கும் இருக்கும் பூர்வாங்க அடையாளம் அதன் கலைகள். மண்ணின் இயல் அளவுக்கு இசையும் முக்கியத்துவம் வாய்ந்ததில்லையா? அதுவே டிலன்பற்றி எழுதவைத்தது. அப்போதும் சொற்களைத் தேர்ந்தெடுத்தபர் டிலன் என்றே தலைப்பிட்டிருந்தேன். ( டிலன் போலவே எனக்கு க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த யானி (Yanni)மீதும் ஈர்ப்பு உண்டு. இருவரும் நேரெதிர் துருவங்கள் ) பிறகு நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள் வாசித்தேன். ஆசான் மாதிரி தீர்ப்பு எழுதுகிற அளவுக்கு நான் பெரிய வாசிப்பாளன் இல்லை. அவருடைய கட்டுரையில் டிலன் பற்றிக் குறிப்பிடும்போது, “ இடதுசாரிகளில் ஒருசாரார் அவரை புகழ்ந்து பேசுவர். *ஒருவகை அமெரிக்க இலட்சிய வாதமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் அவரது பாடல்கள் பார்க்கப்பட்டன. *ஆனால் அன்று ஒரு பெரும் அலையாக இருந்த பாப் மார்லியுடன் ஒப்பிட்டால் அவரது பாடல்கள் சற்றே சோகையானவை” என்று குறிப்பிட்டிருந்தார். நிறைய ஷரத்துகளை எழுதிவிட்டுப் பின்னே, பாப் டிலனின் நடனத்துக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கலாம் என்று நயமாக நக்கலும் அடித்திருந்தார். நான் அதை ரசித்தேன். இந்த ஒப்பீடு வகைமைக்கும், நோபல் குழுவின் நியாய தர்மங்கள் மீதான விமர்சனங்கள், என்றெல்லாம் போகாமல் டிலனின் வாழ்க்கையை நேர்மறையாக அறிமுகப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினத்தான் தினமலரின் வெளியான கட்டுரை. உங்களது கேள்வியால் இந்திரா பார்த்தசாரதியின், “பாப் டிலன் இசை இலக்கியமாகுமா?” கட்டுரையும் வாசிக்க நேர்ந்தது. ஒரு பாடலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் வழங்க ஒரு அடிப்படை நியாயத்தை இ.பா அதில் எடுத்து வைத்திருந்தார். அதுவும் தமிழ்நிலத்தின் பாடல் இலக்கிய முன்னோடிகளான பாணர்கள், விறலியர்கள், கூத்தர்கள் ஆகியோரை முன்வைத்து அவர்கள் படைத்ததும் இலக்கியம் தான் என்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை தான் முழுமையாக மறுப்பதாகவும் ஆசான் குறிப்பிட்டிருந்தார். சரி அது பெரியவர்கள் பஞ்சாயத்து. எழுத்தாளர் சாருநிவேதிதா ஒருகூட்டத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது எனக்கு. “இங்கே மட்டும்தான் ஒரு ஒரு எழுத்தாளனை எழுத்தாளனே இல்லை என்று சொல்கிற மனநிலை நிலவுகிறது” என்கிற ரீதியில் ஒரு கருத்தை அவ்வளவு பகடியாகக் குறிப்பிட்டார். எனக்குச் சிரிப்பு வந்தது. அது உண்மையும்தான் இல்லையா? சமீபத்தில் அகாதமி விருது வாங்கின தமிழ் நாவலைக் (கானகன்) குறிப்பிட்டு, “தம்பி அந்த நாவல் எப்படி இருக்கிறது இப்படி ஒரு நாளிதழில் அந்நாவலுக்கு விருதுவழங்கப்பட்டதற்கு எதிர்விவாதமாக ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். அதனால் உங்கள் கருத்தைக் கேட்டுவிட்டு எழுதலாம் என்று நினைப்பதாக மூத்த எழுத்தாளர் ஒருத்தர் கேட்டார். கூடவே வேறு எந்த நாவலுக்குத் தந்திருக்கலாம் என்ற பட்டியலையும் கேட்கவும், “சார் தயவு செய்து முதலில் கானகனைப் படித்துவிட்டாவது உங்கள் கட்டுரையை எழுதத் தொடங்குங்கள். தவிர இதெல்லாம் புதிதாக எழுதவருகிற எங்களுக்கு ஒரு தொடக்கம். வழக்கம்போல கல்லால் அடித்துவிட்டுப் போகாதீர்கள்” என்று பொறுமையாகச் சொல்லிமுடித்தேன். அவரும் அதைக் கேட்டுக் கொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகச் சொன்னார். இங்கே இப்படித்தான் நிலைமை. வெல்கிறவனை கல்லால் அடித்து காலால் மிதித்துவிடத்தான் துடிக்கிறார்களே ஒழிய அவன் படைப்பைப் பற்றி சின்ன விவாதத்தைக்கூட கிள்ளிப் போடமாட்டேன் என்கிறார்கள். நீங்கள் ஒன்று செய்யுங்கள் பாப் டிலனின் பாடல்களை எஸ்.சண்முகம் மொழிப்பெயர்த்திருக்கிறார். பிரமிள் என்ற தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள். நன்றி. -கார்த்திக்.புகழேந்தி 21-10-2016

Comments

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்…

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 
அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக…

அவளும் நானும் அலையும் கடலும்

மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.
முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.
*
இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய…