அஜ்வா - ஏழு பேரீச்சம் பழங்கள்
ஒரு குரல் நாவல் முழுக்கக் கதை சொல்கிறது. ஒரு ராட்சதக் கை அந்தக்குரலை கண்காணித்துக் கொண்டே பின்தொடர்கிறது. அந்தக் கை ஒருசமயம் வானம் அளவுக்கு விரிந்து வரவேற்கிறது. அந்தக் கை பாவங்களை மன்னிக்கிறது, அந்தக் கை வழிநடத்துகிறது. அந்தக் கை தைரியத்தைக் கொடுக்கிறது. அந்தக் கை ஏழு பேரிச்சம் பழங்களை வழங்குகிறது. இறுதியில் ஒரு குடையாக மாறி கதைசொல்லும் குரலுக்குச் சொந்தக் காரனைத் தாங்குகிறது.

அஜ்வா. போதை உலகத்தில் தன்னைத் தொலைத்துவிட்ட ஒருவனது மீட்சியின் கதைதான் அஜ்வா. மீட்சியென்தோடு மட்டும் அல்லாமல் தான் வாழ்ந்த உலகத்தின் சந்துபொந்துகளுக்கெல்லாம் நம்மை அழைத்துச் சென்று அதன் கட்டமைப்புகளையும், கசடுகளையும் அவ்வுலகிலிருந்து மீண்டவர்களையும், மாண்டவர்களையும் பற்றிய கதைகளை முன்பின்னென்று எந்த ஒழுங்கமைவுகளும் எதுவுமில்லாமல் ஒரு மிதபோதைக் காரனின் மனநிலையிலேயே சொல்லிச் செல்கிறார் சரவணன் சந்திரன்.

மூன்றாவது நாவலைப் புரட்டும்போதும் அதே வேகம். இடையில் கீழே வைத்துவிட முடியாத விறுவிறுப்பு. செய்தித் தாள்களின் ஆறாம்பக்கத்து பத்திகளின் தலைப்பில் புதைந்துகிடக்கும் ஆதாரச் சம்பவங்களின் மையப்புள்ளிக்குள் நுழைந்து அதன் அடியாழம் வரைக்கும் உள்ள தகவல்களைச் சீட்டுக்கட்டுமாதிரி விசிறிச் செல்கிற  “கான்” மூவி தன்மை. என்று அஜ்வா நமக்கு நெருக்கமாக அறியப்படும் சம்பவங்களின் பின்னணியிலே உருவாக்கப் பட்டிருக்கிறது.

சரவணன் சந்திரன் அண்ணனின் முதல் நாவலான, ‘ஐந்து முதலைகளின் கதை’யின் பலமாக நான் கருதுவது அதன் புதிய களமும் எளிய விறுவிறுப்பான வேகமும் கூடவே கதைசொல்லும் உத்தியும் தான். இரண்டாவது நாவலான ‘ரோலக்ஸ் வாட்சு’ம் கூட மேல்த்தட்டு அதிகார வர்க்கத்தின் எல்லைக்கோட்டுக்கு அப்பால் நுழைந்து அங்கே தன்னை நிரூபிக்கத் துடிக்கும் ஒரு சாகசக்காரனின் கதையாகத் தான் பார்த்தேன். இவ்விரண்டு நாவல்களுமே எவ்வளவுதூரம் அதன் கதையாடல் யுக்திக்காக வரவேற்கப்பட்டதோ அதேயளவு நாவலில் வரும் பல கதாப்பாத்திரங்கள் கனம்சேர்க்காமல் கடந்துபோய்விடுகிறது என்ற விமர்சனத்துக்கும் உள்ளானதைக் கவனித்தேன்.


அஜ்வாவில் அந்த தன்மை மேம்பட்டிருக்கிறது.. மற்றபடி ‘கிரே’ உலகத்து மனிதர்களின் கதையை நம் கண்களுக்குப் புலனாகிற அளவுக்குக் கிட்டே அழைத்துச் சென்று சொல்லுகிற ‘ஸ்ட்ரெய்ட் நரேஷன்’ தன்மையை ஒருவாசகனாக நான் கருதுகிறேன். கதைநாயகனுக்கு மிகப் பக்கத்தில் நிற்கிற இன்னொருவனின் கண்ணாக நான் ஒவ்வொரு சம்பவங்களையும் அணுகுகிறேன்.

அஜ்வாவில் வரும் கதைநாயகனின் மிகப்பெரிய பிரச்சனை அவனுடைய பயம். இருட்டு, மரணம், உயரம், தனிமை என்று மரபணுவிலே பயம் ஆட்டிப் படைக்கும் ஒருவனுக்கு அமையப் பெறும் நாடோடித்தனமான வாழ்க்கையும், அதன் மற்றொரு வாயில் திறப்பாக கிடைக்கும் போதைப்பழக்கமும் அதிலிருந்து மீள முடியாத காலத்தின் நினைவுகளுமாகச் செல்கிறது கதை. இடையே, தான் சந்தித்த மனிதர்கள், தன் சகாக்கள், தன் நாடோடி வாழ்க்கைக்குக் காரணமானவர்கள், தன் எல்லைக்குள் எவரையும் அனுமதிக்காத நாயகி, பாவமன்னிப்புகள் வழங்குவதற்காகவே பால்யத்திலிருந்து பழகின நண்பன்,  ‘உனக்கு விதிக்கப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் நீ விலகி நல்லவழிக்குத் திரும்புவாய்’ என்று நம்பும் தாய், தனக்காக தற்கொலைப் படையாகவே மாறிவிடக்கூடும் என்றெண்ணும் அத்தை என்று தன்னைச் சுற்றியுள மனிதர்களுக்குள்ளிருந்தே கதையை நிகழ்த்தி இருக்கிறார் சரவணன் சந்திரன் அண்ணன்.

போகிறபோக்கில் சொல்லிச் செல்லும் கிளைக்கதைகளின் மூலம் வேறு ஒரு உலகத்திற்குள் செல்லும் பயணம் தான் நாவலின் உணர்வு மையம். தனக்கிருக்கும் சின்னச் சின்னத் திருட்டுப் பழக்கம், பய உணர்வு, இந்தச் சுபாவங்கள் தரும் உளைச்சலிலிருந்து விடுபட முடியாத/ முயலாத  ஒருவனின் மன உலகம் தான் கதைக்களம். இடையே சராசரி மனிதர்களின் வார்த்தைகளில் வெளிப்படும்  தத்துவங்களையும், கரிசல் மக்களின் வாழ்கையையும் கூட்டுச் சேர்த்து  கதையைக் கடத்தும் லாவகத்தை படித்துமுடித்ததும் சரவணன் அண்ணனிடம் குறிப்பிட்டே சொன்னேன்.

ஏழு பேரிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு உன்மத்த உலகத்தில் வாழ்கிற ஒருவனது வாழ்வை நூற்று இருபது பக்கங்களுக்குள் ஒரு நீரோடையின் சலசலப்பு போல அந்தத்திலிருந்து தொடங்கி ஆதியில் கொண்டுபோய் இருத்தி வைத்திருக்கிறார்.

-கார்த்திக்.புகழேந்தி.
03-10-2016

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நன்றாக விமர்சித்துள்ளீர்கள் புகழேந்தி! உங்கள் எழுத்தும் உத்வேகம் பெற்று மெருகு அபாரமாகக் கூடியுள்ளது. உங்களின் வாசிப்பும் ஆழம் மிக்கதாக இருக்கிறது. வாழ்த்துகள் புகழ்!

    கீதா

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்