ஐஸ் ஹவுஸ் - சென்னை

2014 இறுதியில் திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் அறையெடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது போக்கு வரத்துக்கெல்லாம் பேருந்து பயணங்களைத் தான் நம்பியிருந்தேன். ஒவ்வொரு தடத்துக்கும் ஒவ்வொரு எண் கொண்ட பேருந்துகளை அடையாளம் கண்டுபிடிக்க நண்பனின் உதவியை நாட வேண்டிவரும். அறைக்குத் திரும்பும்போது மட்டும் சரியாக ஐஸ் ஹவுஸ் வழித்தடத்தில் செல்லும் பேருந்தைப் பிடித்து, பார்த்த சாரதி கோயில் ஆர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வேன்.
அப்போதுதான் இந்த ‘ஐஸ் ஹவுஸ்’ என்று ஏன் பேருக்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன். என் துருப்புச் சீட்டுகள் சிலர் வழியாகக் கேட்டறிந்தபோது, காயிதே மில்லத் சாலை முனையில் உள்ள பள்ளிவாசலைக் கைகாட்டி இதுதான் ஐஸ் ஹவுஸ் என்றார்கள். நானும்கூடக் கொஞ்ச காலத்துக்கு அதையே நம்பிக் கொண்டு திரிந்தேன்.
‘கலோனல் லவ்’ என்பவர் எழுதிய ‘வெஸ்டிஜெஸ் ஆஃப் மெட்ராஸ்’ புத்தகத்தில் ஐஸ் ஹவுஸ் பற்றி எழுதிய ஒரு குறிப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அப்போது தான் உண்மையான ஐஸ் ஹவுஸ் பற்றியும், அதன் பேருக்கான வரலாறும், சாமுவேல் ஆஸ்டின் பற்றியும், ஃப்ரெட்ரிக் தாதர் பற்றியும் தெரியவந்தது.
இன்றைக்கு, மெரினா கடற்கரைக்கு எதிரே இளஞ்சிவப்பு வண்ணத்தில் இரவெல்லாம் மின்விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் ‘விவேகானந்தர் மண்டபம்’தான் ஐஸ் ஹவுஸ் கட்டிடம். அதைக் குறிப்பிட்டே ஐஸ் ஹவுஸ் பேருந்துத் தடத்திற்கும் நிறுத்தத்திற்கும் பெயர் வந்திருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் ஐஸ் ஹவுஸ் பின்னால் உள்ள வரலாறு என்ன ?
கதையை இன்றிலிருந்து சரியாக 210 வருடங்களுக்குப் பின்னால் எடுத்துப் போனால், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஃப்ரெட்ரிக் தாதர் (Fredric Tudor) என்ற பலே கில்லாடி ஒருத்தர் மேற்கத்தியத் தீவுகளுக்கு ஐஸ்கட்டிகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தோடு களமிறங்குகிறார். அமெரிக்க பேரேரிகளின் நன்னீர் ஐஸ்கட்டிகளை வெட்டியெடுத்து அட்லாண்டிக் கடல்வழியாக கப்பலேற்றிக் கொண்டுபோய் பிறநாடுகளில் விற்றுக் காசாக்கும் வேலையைக் கச்சிதமாகத் தொடங்குகிறார். ஆண்டு 1805.
தாதர் பற்றிக் கேள்விப்பட்ட சாமுவேல் ஆஸ்டின் பாஸ்டன் வர்த்தகர் 1833ல் என்ற இந்தியாவிலும் நீங்கள் கடைவிரிக்கலாம். நானும் உங்களோடு கைகோர்த்துக் கொள்ளத் தயார் என்று கடிதம் எழுதுகிறார். சும்மா இல்லை 26000 கி.மீட்டர் தூரம். கட்டி ஏத்தி கொண்டுவந்து இறக்க இது ஒன்றும் கடலைப் பொறி அல்ல. ஐஸ்கட்டி. வழியிலே கரைந்துபோனால் மொத்த உழைப்பும் ஸ்வாஹா…
தாதர் அமெரிக்காவின் சிக்னல் புக்கை வைத்து இந்தியாவின் கொல்கட்டா கங்கைக் கரையைக் கணிக்கிறார். 1833மே 12ம் தேதி 180டன் ஐஸ்கட்டிகளோடு கடற்பயணம் தொடங்குகிறது. நான்கு மாத பயணத்திற்குப் பிறகு செப்டம்பரில் இந்தியக் கரையை அடையும்போது 100டன் பனிக்கட்டிகள் தாதர் மற்றும் ஆஸ்டின் கூட்டாளிகளின் கைவசம். தொடர்ந்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம். செலவு போக அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு லட்சம் டாலர் லாபம் சம்பாதிக்கிறார்கள் இருவரும். உருகியதுபோக மிச்சமெல்லாம் காசு.
கொல்கத்தாவை அடுத்து மும்பையிலும் பிறகு 1842ல் மதராஸிலும் ஐஸ் வியாபாரம் தொடங்குகிறார்கள். குதிரைகளிலும் காளை வண்டிகளிலும், பல்லக்குகளிலும் ஐஸ் பார்களைத் தூக்கிக் கொண்டுபோய் விற்க வேண்டியது. ஒரு பவுண்டு ஐஸ் நான்கு அணா. வெப்பமண்டல நாடுகளில் ஐஸ்கட்டிகளை தேக்கி வைத்துப் பாதுகாக்கத் தோதான இடம் வேண்டும் என்ற காரணத்தால் மெரினா கடற்கரை அருகினிலே வட்டவடிமமான சேமிப்புக் கிடங்கை உருவாக்குகிறார்கள். அப்படி உருவானதுதான் மெரினா கரையில் உள்ள ஐஸ் ஹவுஸ் கட்டடம்.
ஃப்ரெட்ரிக் தாதர் பற்றித் தேடி வாசித்தால் எண்பது வயதுவரை வாழ்ந்த இந்த மனிதன் அமெரிக்காவின் ஒரு ஏரி குளங் குட்டையையும் விட்டு வைக்கவில்லை உலக நிலப்பரப்பில் மிகப்பெரிய ஏரிக்கூட்டமான வடஅமெரிக்கப் பேரேரியின் (Great Lake) பனிப்படலத்தைப் பாளம் பாளமாக வெட்டி எடுத்து, கப்பல் கப்பலாக ஏற்றி, உலகமெங்கும் அனுப்பி விற்று, லாபம் சம்பாதித்திருக்கிறார். பாஸ்டனின் “ஐஸ் கிங்” என்று தாதரைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.
என்னதான் சம்பாத்தியத்தை அள்ளிக் குவித்தாலும் தொழில்முன்னேற்றம் என்று ஒன்று காலமாற்றத்தில் வந்து பொடனியில் அடிக்குமில்லையா. இந்தியாவிலே ஐஸ் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு ஐஸ்கட்டிகளை அதிகளவு காசுகொடுத்து வாங்கத் தேவை இல்லாமல் போகவே தாதர் தன் ஐஸ் ஏற்றுமதித் தொழில்களை நிறுத்திக் கொண்டார்.
அதன்பிறகு மதராஸ் ஐஸ் ஹவுஸ் கட்டடம் பிலிகிரி ஐயங்கார் என்கிற உச்சநீதிமன்ற வழக்கறிஞரால் விலைக்கு வாங்கப்பட்டு மதத் தலைவர்கள் தங்கும் இல்லமாகவும் கல்விக்கூடமாகவும் மாற்றப்பட்டது. 1897 பெப்ரவரியில் விவேகானந்தர் இங்கே ஒன்பது நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். பிறகு பிராமண கைம்பெண்கள் தங்கும் இல்லமாக்கப்பட்டு , இன்றைக்கு விவேகனந்தர் இல்லமாக அறியப் படுகிறது ஐஸ் ஹவுஸ் கட்டடம்.

-கார்த்திக். புகழேந்தி
12-10-2016.

பிற ஆவணங்கள் :
* Papers of John Adams, Volume 18: December 1785 - January 1787,
* The Ice Trade between America and India, from The Mechanics' Magazine (1836)
* How ice came to India, 1833


* Varnam post on The Forgotten American Ice Trade - Indian perspective on the ice trade with Calcutta.

Comments

  1. இத்தகவலை எஸ்.ரா வும் ஒரு கட்டுரையில் எழுதிவுள்ளதாய் நினைவு

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்