ரெண்டு ரூவாத்துட்டு

கருப்பண்ண சாமி கோயிலுக்குப் பின்பக்கம் பாளையங் கால்வாய் வழிந்தோடுகிறது. ஊருக்குள் நுழைய உடைந்த பாலம் ஒன்று மிச்சமாய் இருக்க பாலத்தின் முனையில் அந்த ஆலமரம் விழுதுகளை கால்வாய்க்குள் ஊறப்போட்டபடி நிமிர்ந்து நிற்கும். கோவில் பூடங்களுக்கும் ஆலமரத்துக்கும் உள்ள இடைவெளியில் தான் பாரதி அக்காவுக்கும் சிவபாண்டி அண்ணனுக்குமிடையே காதல் பிறந்திருக்கக் கூடும். அவர்களை அங்கேதான் இரண்டொருமுறை பார்த்திருக்கிறேன். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சைக்கிள் கேரியரில் பெப்ஸி ஐஸ் என்றெழுதிய மரப்பெட்டிக்குள் சாக்ரீம் ஐஸை ஐம்பது பைசாவுக்கு விற்கும் பெரியவரை பின் தொடர்ந்து ஓடிய நாளில், மஞ்சள் தாவாணியில் இருந்த பாரதி அக்காளை சிவபாண்டியண்ணன் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். கட்டிப் பிடிப்பதென்பது எத்தனை சுகானுபவம் என்பதெல்லாம் எனக்கு அறிமுகப்பட்டிருக்காத வயது அது. மறுநாள் பள்ளிக்கூடம் விட்டதும் மேல்சட்டை இல்லாமல் டவுசரை மட்டும் இழுத்து முறுக்கிக் கொண்டு நேரே ஆலமரத்தடி கோவிலுக்கு விளையாட ஓடினேன். கோவில் என்பது கொடை எடுக்கும் காலங்களில் மட்டுமே பெரியவர்களுக்கானது. மற்ற பொழுதிலெல்லாம் அது எங்களைப்போன்ற...