Skip to main content

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான் (2015)ஜெய்குட்டிக்கும் அவன் அப்பாவுக்குமான இரண்டு கடிதங்கள்.

அன்பு ஜெய்குட்டிக்கு,

     அப்பாக்களின் கரங்களால் கவிதையாக எழுதப்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய் வாழ்த்துகள் கண்ணா. உனக்குத் தெரியாது அப்பாவுக்குள் அந்த கவிதைகளை உன் சிறு சிறு அசைவுகள் தான் வரைந்துகொண்டிருக்கின்றன என்பது.  இந்த வினாடிகளில் நீ எப்போதும் இறகுகளோடு அசைகின்றவனாக எனக்குள் உருவகம் கொள்கிறாய்.
உன் கையில் கிடைத்த தோட்டத்துக் கல், தம்ளர் மழை, காகிதக்கப்பல் காற்றிலசையும் இறகு எல்லாவற்றிற்கும் உயிர் இருக்கின்றதென்பதும் அவர்களுக்கும் (கவனி”: அவைகளுக்கும் அல்ல அவர்களுக்கும் உயர்திணை) உனக்கும் நிகழும் உரையாடல்களின் கவிதைகளை இன்றிரவு வாசித்தேன். தனித்திருக்கும் என் அறைக்குள் நீ காற்றைக்கிழிக்கும் ஓசையுடன் ஓடியாடி அலைகிறாய். ஜெய்குட்டி
ஜெனிவீட்டு ஜன்னல் திறந்திருக்கிறதாய் மகிழ்ந்துகொண்டாயாமே ஜெனி உனக்கு எத்தனை பிடிக்கும் என்பதை ஜெனிக்கு யாரேனும் மழையை அனுப்பிச் சொல்லட்டும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் முதலையை விமானமாக மாற்றும் மேஜிக்கை எனக்கும் சொல்லித்தருகிறாயா. நான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் முயற்சித்துப் பார்க்கிறேன்.
உன் வீட்டில் மீன்குட்டிகள் வளர்க்கிறாயா. அழகுதான் போ!! கிளிக்கூண்டை திறந்துவிட்டவன் மீன்குட்டிகளுக்கென்று அப்பாவிடம் கடல்கேட்டிருக்கலாம் அல்லவா. கேட்கவேண்டுமென நினைத்தேன் அதென்ன உறங்கும் போது கைகளை இறுக்க மூடிக்கொள்கிறாயாம். உன் கனவுகளின் சாவியைக் கொஞ்சம் அப்பாவுக்குக் கொடுத்தால் தான் என்ன. அதுசரி நீ கொடுத்திருந்தால் குட்டிக்குட்டித் தீவுகளாய் இந்த கவிதைகளை எழுதாமல் அப்பாவும் உன்னோடு கனாக்களில் பட்டாம்பூச்சி பிடிக்க அலைந்திருப்பாரோ.
நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் ஜெய்குட்டி எனக்கெல்லாம் இப்படி அப்பா இல்லை. இருந்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் காலம் கூட ஜெய்குட்டியாகவே வாழ்ந்துகிடப்பேன். அன்பு முத்தங்கள் கண்ணா.அன்பு வைகறை அண்ணனுக்கு,
     உங்கள் மூன்றாவது தொகுப்பைத் தான் முதலில் வாசிக்க வாய்த்திருந்தது எனக்கு. குழந்தைகளுக்கான உலகை அழகியலோடு குழந்தைத்தனங்கள் சிதையாமல் வார்த்தைகள்கட்டி இழுத்துவந்து காகித பக்கத்தில் பறக்க / நீந்த  / நனைய / அசைய / விளையாட ( மேற்கண்ட ஒன்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ) விட்டிருக்கின்றீர்கள். ரசித்துவாசித்தேன்.
குழந்தைகளை கவிதைகளோடு அணுகும் உங்களை ரசிக்கமுடிந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியராய் இருக்கவேண்டியவர்தான் நீங்கள். மெழுகுவர்த்தியை ஊதி இரவை இரவாகவே மாற்றிவிடும் குழந்தையைக் கொண்டாடிய அந்த ஒரு கவிதைக்கே புத்தகத்திற்கான விலை அடக்கமாகிவிட்டது. மிச்சமெல்லாம் ஜெய்குட்டியின் அறிமுகம் போல இலவச இணைப்புதான். குழந்தைகளின் உலகில் பறத்தலுக்கான இறகுகளை புத்தகமெங்கும் கையாண்டிருக்கின்றீர்கள்.
ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகள் போல இறகுகள் சுமந்த / மழையில் நனைந்த / கப்பல்விடுகின்ற / வானம் ரசிக்கின்ற கவிதைகள் திரும்பத் த்ரிஉம்ப வருகின்றது கொஞ்சமும் அலுப்பில்லையே எப்படி. ஆச்சர்யமாக இருந்தது. நல்ல தொகுப்பு இது என கடந்துவிட முடிகிறதில்லை. ஏதாவது சொல்லவேண்டும் அதை இந்த இரவே சொல்லவேண்டுமென்று எழுதத் துவங்கினேன். ஜெய்குட்டிகளுக்கான அன்பைச் சொல்லி.
 “ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான்” –தொகுப்பிற்கு நீங்கள் “ஜெய்குட்டி” என்றே பெயர் வைத்திருக்கலாம். வீடுமுழுதும் மிதந்தலையும் ஜெய்குட்டியின் பாத்திரங்களிலிருந்து சிதறும் இசைத்திவலை போல இந்த கனம் அழகாகிவிட்டது. பென்சிலையும் காகிதத்தையும் கொடுத்த ஜெய்குட்டியை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதாக ஒரு கவிதையும் தென்படாததைக் கண்டேன்  முதல் எட்டுவரைக்கும் ஜெய்குட்டி ஜெய்குட்டியாகவே இருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறான் என்ற எண்ணத்தில் உங்கள் மீதான அன்பு பிரகாசமாகியிருக்கிறது.
மனநிறைவளித்தமைக்காக அடுத்த வாரங்களில் சென்னையில் பொழியும் ஒரு மழைக்கு ஜெய்குட்டியும் நீங்களும் கூட காரணமாய் இருக்கலாம். 

இங்கு யாரேனும் ஒரு தந்தை தன் மகனுக்கு காகிதக் கப்பல் மடித்தால் உங்களுக்குச் சொல்லி அனுப்புகின்றேன்.

-கார்த்திக் புகழேந்தி. 
11-01-2015

Comments

  1. ஹைய்யோ, எனக்கு அப்படியே என்னையே பாக்குற மாதிரி இருக்கே... எப்படியாவது படிச்சிடணும்... அப்புறம் அப்பா கிட்ட காட்டி நீங்க இப்படி என்னை பத்தி எழுதியிருக்கீங்களான்னு சண்டைக்கு போகணும்... போர்.... ஆமா போர்....

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்…

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 
அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக…

அவளும் நானும் அலையும் கடலும்

மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.
முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.
*
இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய…