காக்காய்ச் சோறு (2008) - விமலன்

அன்பு தோழருக்கு,
     என்னை உங்களுக்குத் தெரியாது, உங்கலை எனக்குத் தெரியாது. நம் இருவரையும் பிணைத்தது ஒருகைப்பிடி சோறுதான். காக்கைச் சோறென்று பெயரிட்டிருக்கின்றீர்கள் அதற்கு. மரியாதைக்குரியவரின் பரிந்துரைத்தலான அன்பின் பேரில் உங்கள் காக்கைச் சோற்றை சுவைபார்த்தேன். என்ன ஒரு அட்டகாசமான எழுத்து நடை உங்களுடையது. மனம்போன போக்கில் தடதடவென்று எழுதி இருந்தீர்கள். கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிப்போய் முதல் இரண்டு கதைகளை முடித்ததும் உங்கள் எண்ணுக்கு அழைத்துப் பேசினேன் நினைவிருக்கிறதா! என் பெயர் புகழேந்தி. நீங்கள் விமலன் தானே. காக்கைச் சோறு உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்புதானே. நலம் நலம். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டேன். 
    கதைகளின் ஊடுதிரள் வழியாக நுழைந்து கடக்கும் புலங்கள் / மனிதர்கள் / பாடுகள் என்று பெருவாரான கதைகள் கவனிக்கத் தகுந்தவை. இந்தக் கதைகள் இத்துடன் முடிகின்றன என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாதது போல சில முடிந்துவிட்டும் மனதிலிருந்து மறைய மறுக்கின்றன. சில கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நகரமறுக்கும் தேர் போல சலிப்பேற்றுகின்றன. அநேக கதைகளும் நான் எனும் ஒற்றைப் பார்வையோடே எழுதப்பட்டிருப்பதால் அந்த ”நான்” என்பவரைவிட்டு வெளியில் வரமுடியாத சுழல் வதைக்கிறது. நல்ல தொகுப்பில் இத்தகைய வதைகளை அனுபவிப்பது. புத்தகத்தை முடிக்காமல் மூடிவைக்க வாய்ப்பேற்படுத்துகின்றன.

     உப்பாங்காத்து போலான ஒரு கதையை அரசியல்ச்சூழலை மீறி வேறொன்றான கோணத்தில் எண்ணிப்பார்த்த / எழுதின உங்களுக்கு ஒரு சபாஷ். 

காக்கைகள் விழுங்கும் நகரத்தை பிரமிப்போடு வாசிக்கின்றேன். உயிரூட்டிப்போகும் பயத்தை விதைக்கும் அஸ்திவாரத்தைத் தோண்டும் காக்கைகள் மிரட்டுகின்றன. இரண்டு ரூபாய் டீக்கு இத்தனை விவரங்களைச் சொல்லியே ஆகவேண்டுமா என்ற சிந்தனையைச் சிறுகதையாக்க இத்தனை மெனக்கிட்டிருக்கவேண்டாம். மீறிப்போய்க்கொண்டே இருக்கும் பக்கங்களைக் கடக்க சிரமம் கூடுகின்றது.
     அடுத்ததாகச் சொல்லவேண்டியது. பிழைகள். பிழைகள் பக்கத்தில் நூற்றுக்கணக்கான கள்  சேர்த்துக்கொண்டே போகலாம். எனக்கொரு பழக்கம் உண்டு எந்தப் புத்தகத்திலாவது எழுத்துப்பிழைகள் கண்டால் அந்த இடத்தை திருத்துவது/வட்டமிடுவது என் மேஜைப்பழக்கம். காக்கைச் சோறு முழுக்க ஏகபட்ட வட்டங்கள் அடித்து வைத்திருக்கிறேன். அத்தனை பதிப்பு/எழுத்து/ சந்திப்பிழைகள். பழைய தொகுப்பு அப்படித்தான் இருக்கும் என்ற போலிச் சமாதானங்களை மனம் ஏற்கவில்லை. புத்தகங்கள் காலாகாலத்திற்குமானவை என நம்பிக்கொண்டிருப்பவன் நான்.

      ப்ரூஃப் ரிடிங் பார்த்தவரை தயவுசெய்து மன்னிக்கவே செய்யாதீர்கள். கதைகளைக் கொலைசெய்கிறவர்களை மன்னித்தல் என்பது ஒருபோதும் சரியான நியாயமில்லை. ஒரு பிரயாணத்தில் உறங்கும் போது / ஏதேனும் இக்கட்டில் இருக்கும் போது / வாசிக்காமல் வைத்துவிடுவது நலம். மற்றபடிக்கு ”காக்கைச் சோறு ” சிறுகதைத் தொகுப்பு பாதிவெட்டிய கிணற்றில் ஊறின தண்ணீரைப்போல கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும் தாகம் தணிக்கவில்லை.

அன்பும் ப்ரியங்களும்.
-கார்த்திக்.புகழேந்தி
11-01-2015 
writterpugal@gmail.com

Comments

  1. நன்றி விமர்சனத்திற்கு/

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு