வேட்டையன்கள்
சிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன். சமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம். ஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட...