வேட்டையன்கள்     சிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.

சமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.

ஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் இந்த வேட்டைக்காரன்களுக்கு மானின் வாசனை முன்பாகவே காட்டப் பட்டுவிடும். பாலைவன மணலில் ட்ரக் புறப்பட்டு, வேகமெடுத்ததும் வேட்டை தொடங்குகிறது. இப்போது இரையை நோக்கித் துள்ளிச்சாடி ஒவ்வொரு வேட்டையன்களும் ட்ரக்கை விரட்டிக்கொண்டு பாய்வான்கள்.

அயல்நாட்டு வேட்டை இனங்களான ஹவுண்ட், மோதல், விப்பெட், இவற்றின் கலப்புகள் ஆகியவற்றோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னியும் பந்தயக் களத்தில் இருந்தது. சும்மா இல்லை… மைல் கணக்கில் வண்டி வேகமெடுத்துப் போய்க்கொண்டே இருக்க, கலப்புகள் பலவும் மானை கிட்டத்தில் கூட நெருங்கவில்லை. நம்ம தமிழ் கன்னி கிட்டத்தட்ட இருபது நிமிட சளைக்காத துரத்தலில் மானைக் கைப்பற்றி வெற்றியைப் பறித்தேவிட்டான்.

ஜீவ காருண்யம் பற்றிப் பேசுகிறவர்கள் தயவு செய்து மன்னித்துவிடுங்கள். இது வேட்டைச் சமூகத்தின் நெடுங்கால வாழ்வின் வெற்றி. வேட்டை இரையைக் கைப்பற்றி தன் வலிமையை நிரூபிக்கிற பேராண்மை. எங்கள் ஊரில் கன்னிவேட்டை என்ற கொடை நிகழ்வே இருக்கிறது. அய்யனார், சுடலை, முனியன் கோயில் சிற்பங்களில் குதிரைக்குப் பக்கத்தில் பாருங்கள். ஓர் ஊசிமூக்கன் வயிறு ஒட்டி, வில்லாய் வளைந்த உடம்பாக நின்றுகொண்டிருப்பான். அவன் தான் கன்னி.

இந்தக் கன்னி வகை நாய்க்குட்டிகளின் வளர்ப்பே ரொம்ப ஆக்ரோஷமானது. ராதாபுரத்தில் தாய்மாமன் ஒருத்தர் இருக்கிறார். அவர் வீட்டில் வேட்டை, காவல் என்று வகைக்குத் தனித்தனியாக எட்டுக்கும் மேல் சின்னது பெரியதென்று நாய்கள் வளர்க்கிறார். ஆடு வளர்ப்பு, வியாபாரம் தான் அவருக்குத் தொழில். காவலுக்காக ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களையும், தேரியில் முயல், உடும்பு, காடை, கௌதாரிகளை அடிக்க இந்த வேட்டைக் காரன்களையும் வளர்க்கிறார். அவர்கிட்டே இருந்துதான் நான் “முயல்வேட்டை” நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது.

ராதாபுரத்து தேரிகளில், குளங்களில், நாகர்கோயில் திட்டுவிளை பொத்தை, புலிக்குகை, பாறையடிக் கெல்லாம் இந்த வேட்டையன்கள் புடைசூழ வேட்டைக்குப் போகிற, விளையாடவிடச் செல்கிற அனுபவங்களையும், நான் வளர்த்த கதிர் என்கிற பொடிப்பயலைப் பற்றியும் சுருங்கச்சொல்லி நாலுகால் ஜீவன்கள் என்கிற பேரில் ‘ஊருக்குச் செல்லும் வழி’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

ஒருநேரத்தில் ‘நாய்கள் வாங்க அணுகவும்’ என்று பார்க்கிற இடமெல்லாம் போர்டுகள் அடித்துத் தொங்கவிட்டிருக்கும் ராஜபாளையத்தில் முக்கு முக்காக அலைந்து திரிந்திருக்கிறேன். கன்னி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை வகையறாக்களை பார்த்த உடனேயே தரம் பிரித்துச் சொல்கிற அண்ணன்கள் சிலபேரின் அறிமுகம் எனக்கு அங்கே உண்டு.

கன்னியின் தனித்துவங்கள் பற்றி அவர்களிடம் உட்கார்ந்து பாடம் கற்றுக் கொண்டேன். அதன் குணாதிசயம். வளர்ப்பு விதங்கள், உணவு முறை, நோய், செருமல், வயிற்றுக் கழிப்பு இந்தமாதிரி விஷயங்களில் நிறைய சொல்வார்கள். கன்னி காவலுக்கு ஆகாது. அது அடிக்கிற இனம் அதே நேரம் விசுவாசி என்பார்கள். அகரமுதல்வன் தன்னுடைய கதையில் வரும் அப்படி ஒரு நாய்க்கு ‘நன்றி’ என்றே பேர் வைத்திருப்பார்.

கோம்பையை எங்கள் ஊரில் கோழிக்கள்ளன் என்று தான் கூப்பிடுவோம். எங்கேயாவது களவாண்டு வந்துவிடுவான். நாசூக்காக அடித்து வந்தாலாவது பரவாயில்லை. நான் தான் திருடினேன் என்று சாட்சியெல்லாம் வைத்துவிட்டு வந்துசேருவான். சொல்லி வைத்தார்போல களவு குடுத்தவர்கள் கோம்பையன் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். பிறகு பஞ்சாயத்து தீர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சில நேரம் பொடி ஆட்டுக்குட்டியையே தூக்கிட்டு வந்துவிடுவான் எமப்பயல்.

கோவில்பட்டியிலிருந்து திருவேங்கடம் போகிற பாதையில் இருக்கிறது சிப்பிப்பாறை. ராஜபாளையம் வகையறாக்களின் ஆகிருதிகளோடு கொஞ்சம் மாற்றங்களோடு இருப்பவை சிப்பிப் பாறை வம்சம். மேட்டு நிலங்களில் ஏறிக்கொண்டு, தூரத்தில் ஒரு பொட்டு அசைந்தாலும் தான் இங்கே காவல் நிற்கிறேன் என்று எச்சரிக்கிறவன். காட்டுப் பன்றிகளை விரட்டி, நரிகளை மிரட்டி கண்துஞ்சாமல் காவல்புரிகிற அம்சம் சிப்பிப்பாறை நாய்களுடையது. அவற்றில் கலப்புகள் பல செய்து தூய இனத்தை கண்காணாமல் ஆக்கிவிட்டார்கள்.

எனக்குத் தெரிந்து நெல்லை ஜமீன்களில் பலப்பேர் கன்னி வேட்டை நாய் பிரியர்கள். கொத்துக் கொத்தாக இந்த வேட்டையாடிகளை வளர்த்திருக்கிறார்கள். எந்த எஜமானனுக்குத்தான் தான் சொன்னதைக் கேட்டு, விரல் சுண்டினால் காரியத்தை கனகச்சிதமாக முடிக்கிற வேலையாளை தீனிபோட்டு வளர்க்கப் பிடிக்காது. செவலை செம்பரை, நாலுகால் சிலம்பு, கழுத்து வெள்ளை, நெற்றி ராமம் என்று ஒவ்வொரு கன்னிக்கும் சிப்பிக்கும் தனி அடையாளம் வைத்திருப்பார்களாம்.

இவைகளுக்கு கோபக்குறியும் காவல் குறியும் சிறுசிலே சோதிக்கப்பட்டுவிடும். மடி, ராஜமடி, விரி காது, குத்துக்காது, குதிரை காது, குரங்கு காது, பறவை காது, வலக்குத்து மடி, இடக்குத்து மடி, நெரி மடி, வலக்குத்து நெரி, இடக்குத்து நெரி என்று காதுகளை வைத்தே கன்னிகளின் வேட்டையும், கோபமும் எப்படி இருக்கும் என்று கணித்து விடுவார்கள். ரெட்டை குறுக்கும், அகல நெஞ்சும், சாட்டை வாலும், நல்ல முழித் தெறிப்பும் இருந்தால் போதும் அந்த வேட்டையனைக் கொண்டாடிவிடுவார்கள்.

வால், தலை உடம்பு, கண்தெறிப்பு போலவே கால் வளைவையும் வைத்து ஓடும் வேகத்தையும் சொல்லிவிடலாம். நேர்நிமிர்த்தியாக வளரும் நெட்டுக்காலை விட கொஞ்சம் உள்வளைந்து சதைப்பற்றாய் இருக்கும் கூனிக்கால் கன்னிக்கு வேகம் அதிகம். கன்னியையும் சிப்பிப்பாறையையும் நிறத்தை வைத்து குழப்பியடிக்கிற வழக்கம் இன்னும் ஜனங்களிடம் நீடிக்கிறது. செவலையும் கருப்புமாக இருந்தால் கன்னி என்றும், வெள்ளையும் சாம்பலுமாக இருந்தால் சிப்பிப்பாறை என்றும் நம்புகிறவர்களும் உண்டு. அதெல்லாம் சும்மா.

சாலிகிராமம் பாஸ்கர் காலனி பூங்கா அருகே தெருநாய் ஒன்று கண்ணில் பட்டது. அப்படியே அசலான கன்னியின் ஜாடை ஆனால் கலப்பினம். எங்கெங்கோ தப்பி வந்த ஜீன்கள். ஆனாலும் மற்ற நாட்டு இனங்கள் போலல்லாமல் கர்ஜனையான குரைப்பொலி அதற்கு. சத்தங்காட்டாமல் சோம்பித் திரிகிறது தெருக்களில். இதற்கு வளர்ப்பும் ஒரு காரணம்.

கன்னியை 40 நாள் குட்டியாக இருக்கும்போதே மண்ணில் ஒரு குழி தோண்டி உள்ளே இறக்கிவிட்டுவிடுவார்கள். அது காலை உயர்த்தி மேலே ஏற முயற்சித்து முயற்சித்து உடம்பு வலுப்பெறும். வயிறு உள்வாங்கி, உயரமும் தலைதட்டும். குழியைத் தாவி மேலே வந்த பிறகு இன்னும் ஆழமாகத் தோண்டி திரும்பவும் இறக்கிவிட்டு விடுவார்கள்.

கட்டிப் போட்டு வளர்க்கிற கதையெல்லாம் வேட்டையினங்களில் ஆகவே ஆகாது. முடிந்தமட்டும் அலைச்சல் இருக்கவேண்டும். “நெட்டையனைக் கூட்டிட்டு விளையாடப் போனோம்” என்பான் மாமன் மகன். ஆனாலும் சிறுசாக இருக்கிற காலத்தில் வேண்டுமென்றே கட்டி வைத்தால் தான் அதற்கு அத்துக்கொண்டு ஓடுகிற வீர்யமும் வரும்.

அலெக்ஸாண்டர் குதிரை வைத்திருந்ததும் அதற்கு புசிபாலஸ்என்றும் பேரிருந்ததை ‘அபியும் நானும்’ படத்தின் வழியாக நம்மில் பலரும் தெரிந்துகொண்டாலும், அவர்கிட்டே ஒரு நாய் இருந்ததைப் பற்றி பிரகாஷ்ராஜ் நமக்குச் சொல்லாமல் விட்டுவிட்டார். அதற்கு பெரிடாஸ் என்று பேர் விட்டிருக்கிறார் அலெக்ஸாண்டர்.

பெரிடாஸ் என்றால் சிங்கத் தலையன் என்று பொருள்படுகிறது. இந்திய அரசன் ஒருத்தர் அந்த நாயை அவருக்குப் பரிசளித்ததாகவும், ஒரு யானையையும், சிங்கத்தையும் பெரிடாஸ் வேட்டையில் மிரட்டியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

அலெக்ஸாண்டர் நாய் பேர் இருக்கட்டும் நண்பரின் நாய்களுக்கு வைக்கப் பரிந்துரைத்த சரமை, கோவிவன் பற்றிச் சொல்லிவிடுகிறேன். மகேந்திர பல்லவன் ஆட்சிகாலத்தில் ரிஷிவந்தியம் பக்கமுள்ள ஓர் நடுகல்லில் கோவிவன் என்ற ஓர் நாயின் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ரிக் வேதத்தில் ரோமாபுரியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போன நாய்க்கு சரமை என்று பேரிட்டிருக்கிறார்கள். நாய்களுக்கெல்லாம் தாய் ஆதித்தாய் என்று பொருளாம்.

“எங்க இருந்தைய்யா இதெல்லாம் புடிச்சீர்” என்றார் நண்பர். ‘வாசிக்கிறோ மில்லையா என்னத்தையாவது, எல்லாம் அது கற்றுக்கொடுத்தது தான்’ என்றேன். இப்போது கன்னிகளான சரமையும், கோவிவனும் தீவிரப் பயிற்சியில் இருப்பார்களாய் இருக்கும். அவர்களுக்குப் பேர் உருவான கதையை கேட்கிறவர்களுக்கெல்லாம் விநோதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் நண்பர்.

கன்னிவேட்டை பற்றியும், அப்படி வேட்டையில் வழிதப்பின தன் தங்கை தெய்வமாக மாறின நாயக்கர்களின் ‘தொட்டியச்சி’ கதை ஒன்று இருக்கிறது. அது இப்போது வேண்டாம் ரொம்ப நீளமாகப் போகும். பிறகு அதை எழுதுவோம்.-கார்த்திக். புகழேந்தி

06-04-2017

Comments

  1. செவலையும் கருப்புமாக இருந்தால் கன்னி என்றும், வெள்ளையும் சாம்பலுமாக இருந்தால் சிப்பிப்பாறை

    இப்படித்தான் கேள்விப்பட்டுள்ளேன். கன்னி, சிப்பிப்பாறை என்ன வேறுபாடு.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா