ஆடு வளர்ப்பு

     வெள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது .


Related image
எட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை.
வெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத்தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது. ‘கருங்கிடாய் பிறந்தால் கையிலே காசு’ என்பாள் எங்களூர் கோமு ஆச்சி.
சந்தைக்குப் போய் நல்ல உரமுள்ள ஆட்டை, குணம், கழுத்து மெலிவு, உடம்பு நீளம், வயித்துப் பெருக்கம், ஆறுமாசத்து கணம் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கவும், விற்கவும் தெரிந்தவள் கோமு ஆச்சி.மாடுகளைப்போல ஆடுகளையும் பல்லைப் பிடித்துப் பார்த்து வாங்குவாள். கேட்டால், ‘முத்தின ஆட்டுக்கு பல்லு பெலம் இருக்காது. பல்லு பெலம் இல்லன்னா எங்கனக்கூடி எர திங்கும். தண்ணியத் தண்ணியக் குடிச்சி மெலிஞ்சித்தான் போகும். அதவச்சி காலந்தள்ளவா முடியும் என்பாள்.
அதுமட்டுமில்லை எத்தனை குட்டிகள் ஈனின ஆடு இது, தாய் வனப்பு எப்படி என்று மடிபார்த்தே கணக்குச் சொல்லுவாள். அதுக்குப் பிறக்கும் குட்டிகளை முடிந்த மட்டும் வெளியாள்களுக்குக் கொடுக்காமல் பேணிப் பேணி வளர்ப்பாள். ஆச்சிவீட்டு முத்தம் ஒரு மைதானம் அளவுக்குப் பெரியது. விளக்குத்தூண் மாதிரி முத்தத்தின் நடுவில் ஒரு கல் நட்டிருக்கும். ரொம்பக் காலங்களுக்கு முன்னால் அந்தக் கல் மீதுதான் ராத்திரி வெளிச்சத்துக்கு சிம்ளி வைத்து விளக்கு ஏரியவிடுவார்கள்.
ஊறல் எடுக்கிற பெட்டையும், கிடாய்களும், குட்டிகளும் அந்தக் கல்தூணைச் சுற்றிச் சுற்றி வந்து உடம்பு சொரிந்துக்கொண்டு புழுக்கை போட்டுத் தள்ளும். ஆச்சி சொந்தமாக ஆடுவைத்திருந்தது மட்டுமில்லாமல், வாரத்துக்கும் ஆடுகள் வளர்த்துக் கொடுத்து, கைக்காசு சேர்த்து வட்டிவாசிக்கும் விட்டுக் கொண்டிருந்தது.
எங்களூர் உய்க்காட்டு சுடலை கோயிலுக்குக் கொடை எடுக்கிற காலங்களில் ஆச்சிவீட்டுக் கிடாய்களுக்கு ரொம்பப் பெரிய கிராக்கி இருக்கும். உள்ளூர் ஆட்கள் ஒன்று சிவந்திப்பட்டி மலையாடுகளைத் தேடிப் போவார்கள் அல்லது நேரே ஆச்சிவீட்டுக்கே வந்து, கருங்கிடாய் ஒன்றை கழுத்துத் துண்டைப் போட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டுவந்து போவார்கள். கொடை நடக்கும் ராத்திரியில் நாலு காலையும் இழுந்து நெஞ்சாங்குழி அறுத்து ஈரக்குலை உருவி, சாமியாடுகிற சாமக்கொடைகளையும், மறுநாள் அடுப்பில் வெந்து தணிகிற கறிச்சோற்றையும் தின்று வளர்ந்த ஊர்க்காரப் பயகள் தானே நாங்கள்.
ஆடுகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறது மாதிரி காலம்பார்த்து கழிக்கிறதுக்கும் தனி அறிவு வேணும். அதுவும் கிடாய்களை இந்தமாதிரி சாமி காரியங்களில் குறை நிறை இல்லாமல் சமயம் பார்த்துக் கழிக்கவேண்டும். கழிப்பு ஆடுகளைக் கவனித்து, இளங்குட்டிகளை மேய்த்து பராமரித்து வளர்க்கிறவேலை எல்லாம் லேசுப்பட்டதில்லை.
கிடாய்களுக்கு வெடிப்பு பருவத்தில் முடை அடிக்கவேண்டும். மேய்ச்சலில் என்னத்தையாவது விசக்காய் தின்று நெரித்துக்கொண்டால் நாக்குக்கடியில் கீறி விடவேணும், பாம்பு கொத்தின ஆடுகளுக்கும், பின்னுறுப்பில் ஈ புகுந்து காயம்பண்ணின ஆடுகளுக்கும் மருந்து மாயம் பார்த்துக் காப்பாற்றவேண்டும். காரணம் புரியும் முன்பே, ஊளைமூக்கு வடித்து கொத்துக் கொத்தாய் ஆடுகளை இழந்த குடும்பங்கள் கரிசக்காட்டில் உண்டு.
செலை கடித்தது, முடையடிப்பது பற்றிச் சொன்னேனில்லையா! அதைப் பற்றி நண்பன் அரசன் ‘இண்டமுள்ளு’ அற்புதமாய் ஒரு கதை எழுதியிருப்பார். விசயத்தை கையில் உருட்டிக் கொடுக்கிறமாதிரி கதைகள். இப்போதெல்லாம் அம்பது ரூபாய் கொடுத்தால் கால்நடை ஆஸ்பத்திரிகளிலே முடையடித்து விடுகிறார்கள். அன்றைக்கெல்லாம் தாதனூத்து கிழவர் வீட்டுக்குத்தான் பொலியும் கிடாய்களை பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு சைக்கிளில் போவோம்.
பொழுதன்னைக்கும் பெட்டைகள் பின்னாலே இப்படித் திரிந்து தொந்தரவு பண்ணுகிற இந்தமாதிரி ஆடுகளின் ஊண் நாளாக நாளாக மதமதப்பாகிவிடும். தின்ன முடியாமல் நாற்றமெடுத்துவிடும். அதற்காக இப்படி ஒரு வழக்கம். தாதனூத்து ஆச்சாரி நல்ல கருக்கில்லாத பனமட்டைக்கு நடுவிலே ’அதை’வைத்து ஒரு இறுக்கு இறுக்கி விடுவார். ஒருவாரத்தில் வலி தீர்ந்தபிறகு கிடாய் சுத்த சாமியார் ஆகிவிடும்.
இந்த கிடாய்கள் மாதிரியே வெள்ளாட்டு பெட்டைகளும் பிறந்த ஒரு வருசத்துக்குள் எல்லாம் இனவிருத்திக்குத் தயாராகிவிடும். செம்மறிகள் கொஞ்சம் பின்தங்கி நாலஞ்சு மாசம் கழித்துத்தான் ஒதுங்கி நிற்கும். வயசுவந்த பிறகு ஆறு வருசம் வரைக்கும் குட்டி ஈனுகிற காலம். அதனாலே ஒண்ணு முதல் ஒண்ணரை வயசுக்குள் எல்லாம் ஆடுகளை மாற்றி வாங்கிக் கொள்ளவேண்டும்.
பண்ணை வளர்ப்புக்கும் பாச வளர்ப்புக்கும் இதுதான் வித்யாசம். பிள்ளைக்குப் பிள்ளையாய் ஆடு வளர்த்து அவசரத்துக்குக் கைமாற்றிவிட்டு கலங்குகிற சனங்களைக் கரிசல் காடு முழுக்கக் காணலாம். இப்போது பண்ணைகள் வளர்ப்புகள் பெருகிவிட்டது. வயது மூத்த ஆடுகள் இனவிருத்திக்கு தேறாது என்பதால் பண்ணைக்காரர்கள் அவற்றை மட்டும் கழித்து, குட்டிகளை மாய்ந்து மாய்ந்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அதுதவிர சிவப்பு கருப்பில் நிறம் மாறிப் பிறக்கும் குட்டிகள், தாடை ஒட்டாமல் பிறந்த குட்டிகள், கால் உரசும் குட்டிகள், விலா குறுகி, மடி அமைப்பு இல்லாத பெட்டைகள், வெட்டும் பல் இல்லாத, உடம்பு நெழிவுகளோடு பிறக்கும் குட்டிகளை எல்லாம் மட்ட விலையில் கழித்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அண்ணன் ஒருத்தர் வல்லநாட்டில் ஆட்டுப் பண்ணை வைத்திருக்கிறார்.கறிச்சந்தைக்கு விற்கும்போது வெள்ளாடுகளின் எடையைக் கூட்டிக்காட்ட, மரத்தீவனம் கொடுப்பது, புண்ணாக்கை கட்டியாகக் கரைத்து வாய்வழியாக ஊட்டம் கொடுப்பது, போன்ற வியாபாரிகள் செய்கிற தில்லாலங்கடிகலை அங்குள்ள வேளையாட்கள் வாய் ஓயாமல் சொல்வார்.
ஆட்டு கறிக்கு மட்டும் இல்லை தோலுக்கும் கிராக்கி உண்டு தான். பாளையங்கோட்டை செந்தில்நகருக்கு கிழக்கே, செந்தில்வேல் தியேட்டருக்குப் பக்கத்தில் ஆட்டுத் தோல் ஏலச்சந்தை இருக்கிறது. செம்மறி, வெள்ளாட்டுத் தோல்களை உப்புத்தடவி ஏலம் விட்டுக் கொண்டிருப்பார்கள். காலையில் வெள்ளனே ஆரம்பித்து பதினோரு மணிக்கெல்லாம் அடங்கிப் போகும் அந்த வியாபாரத்தை தெருக்காரப் பயல்களாக வேடிக்கைப் பார்க்கப் போவோம். தோல் சந்தையில் பேட்டை, மேலப்பாளையம் சாயிபுமார்கள் கையே எப்போதும் ஓங்கியிருக்கும்.
ஆத்தூரில் ஒரு நிறைமாத ஆட்டுக்கு பிரசவம் பார்த்த விஷயத்தைச் சொன்னேனில்லையா. இதே மாதிரி எழுத்தாளர் கழனியூரன் ஒரு சம்பவம் சொன்னார். நிறைமாதம் முடிந்து குட்டி ஈனப் போகிற நேரத்தில், நஞ்சுக்கொடி வாய்க்குள் சிக்கினதோ, இல்லை ஆடு எதையோ கடித்துத் தின்றதோ தெரியவில்லை. வயிற்றுக்குள்ளாகவே குட்டி இறந்துபோய்விட்டது. தாயையாவது காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடையாக இறந்த குட்டியை வெளியே கொண்டு வரவேண்டும். உள்ளூர் கால்நடை மருத்துவரை வரச் செய்து, வயிற்றுக்குள்ளிருந்து பிறக்காத குட்டியை துண்டம் பண்ணி வெளியே எடுத்து தாயைக் காப்பாற்றினதை அப்படியே விவரித்தார்.
சென்னையில் உள்ள அக்காள் ஒருத்தர் சிறுதொழிலாக ‘வாரத்துக்கு ஆடு வாங்கி வளர்க்கட்டுமா?’ என்றார். வாரம் என்பது நீங்கள் முதலீட்டாளர். வளர்ப்பு வேறு ஒருத்தர் பொறுப்பில் இருக்கும். முதல் ஈற்றுக் குட்டியில் அவருக்கு பங்கு அல்லது விற்பனை பணம் கொடுக்கணும். பிறகு போட்ட காசுக்கு வஞ்சனை இல்லாமல் ஆடுவளர்ப்பில் காசெடுக்கலாம். வளர்ப்பவர் நம்பிக்கையான ஆளாக இருக்கணும்.
இங்கே சென்னையில் இருந்துகொண்டு ஊரில் ஆள் வைத்து வளர்க்கும் ரிஸ்க்கை எல்லாம் எடுக்காதீங்க என்று அவர் ராசி நட்சத்திரம் கேட்டு, வேறு ஒரு உபாயத்தை அவருக்குச் சொன்னேன். அது அவருக்குப் பொறுத்தமான தேர்வாகவும் இருப்பதாகச் சொன்னார்.கூடவே, உனக்கு ராசி நட்சத்திரத்தில் எல்லாம் நம்பிக்கை உண்டா என்று கேட்டுவிட்டார். வெளியே சொல்லிவிடாதீர்கள். அத்தனையும் அடிச்சுவிட்டது. சும்மா அது ஒரு வாய்ஜாலம். ஆனால் விஷயங்கள் வேறு. நான் கேட்டது உங்கள் மனநிலையைத் தெரிந்து கொள்வதற்கு என்றேன்.
“உன்னையெல்லாம் நம்பி...” என்று இழுத்தார். நான் சிரித்துக் கொண்டேன், அக்காள் அநேகமாக இந்நேரம் இயற்கை வேளாண்மை வழியில் விவசாயம் பண்ண ஆரம்பித்திருப்பார் என்று நினைக்கிறேன். 

-கார்த்திக்.புகழேந்தி
26-04-2017

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்