ஆடு வளர்ப்பு
வெ ள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது . எட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை. வெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத்தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது....