வெள்ளிக்கிழமை - கோடம்பாக்கம் | பாம்புச்சட்டை


கோடம்பாக்கத்துக் காரனுக்குத் தான் தம்பி தெரியும் வெள்ளிக்கிழமையின் வேல்யூ” என்பார் கணேசன் அண்ணன். அக்மார்க் ராஜபாளையத்துக்காரர். 2014ல் வற்றாநதியில் எழுதின ‘லைட்ஸ் ஆஃப்’ கதையைப் படித்துவிட்டு, “என் வாழ்க்கைடா தம்பி இது. உனக்கு என்னம்மோ செய்யணும்ன்னு தோணுது” என்று ஐநூறு ரூபாய் தாளை என் சட்டைப் பையில் திணித்துவிட்டுப் போனவர்.

கணேசன் அண்ணனுக்கு சினிமாதான் வாழ்க்கை. அதில் பெரிதாகச் சம்பாதித்துக் கொண்டதில்லை. ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வீடுகிடைத்த சாலிகிராமத்தில் 90களின் இறுதியில் வந்து செட்டில் ஆகி, முந்நூற்றுச் சொச்சம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். ஏழோ எட்டிலோ டைட்டில்கார்டில் பேர் வந்திருக்கலாம்.


கனவுத் தொழிற்சாலையின் வாசலை ஏக இறைவனாக நினைத்துக்கொண்டு, சாஸ்ட்ராங்கமாக நான் விழ நினைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சினிமா எனும் கரையற்ற வெள்ளத்துக்குள் விழுந்துவிடாமல், என் சட்டையைப் பிடித்து இழுத்து வேறு கிளைக்குள் திருப்பி விட்ட வகைக்கு கணேசன் அண்ணன் என் வாழ்க்கைத் தடத்தில் முக்கியமான மனிதர். அவருக்கு கணேசன் என்கிற பெயரே ஒரு அடையாளச் சொல் அவ்வளவுதான்.

“சொல்லுவதைக் கேட்டுக்கோ நதிமூலம் ரிஷிமூலம் தேடாதே” என்பார். இங்கே பணம் விளையாடிக் கொப்பளிக்கிற இடம் ஒன்றாகவும். ‘அடுத்தென்னெ ப்ராஜக்ட் போய்கிட்டு இருக்கு’ என்று பார்க்கிறவர்களை எல்லாம் கேட்டுக்கேட்டே, தன்னைத் தேற்றிக் கொள்கிற பிரஜைகளின் வாழ்வு வேறாகவும், எடுத்த படத்தை திரையில் ஓட்டிப் பார்க்கிற வாய்ப்பே கிடைக்காமல் தலை நரைத்துப் போன இயக்குநர்களின் மன அழுத்தங்கள் மிகுந்த உலகம் இன்னொரு அவஸ்தையாகவும் இருக்குமென்கிற நிதர்சனங்களை எல்லாம் என் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியவர் கணேசன் அண்ணன்.



உருப்படியாகச் சொல்வதற்கு அவர்கிட்டே நிறைய விஷயம் இருந்தது. எனக்கு கேட்பதற்கு காதுகளும் நிறைய நேரமும் இருந்தன. இந்த நேர்கோடுகள் தான் எங்களை ஒரே திண்ணையில் உட்கார வைத்துக்கொண்டது. பிறகு நான் வேலை, வருமான காரியங்கள் என்று திசைதிரும்பியதும் அண்ணனுடைய தொடர்புகள் குன்றிப்போயின. இலக்கிய உபன்யாச நிகழ்ச்சிகளிலும், கலை, தொல்பொருள் ஆகிய தடங்களிலும் ஈடுபட்டுக்கொண்டுருந்த நாட்களில் அண்ணன் அழைப்பார்.

“தம்பி வெள்ளிக்கிழமை காலையில உதயத்துக்கு வந்துடேன். நம்ம படம் ரிலீஸ் ஆகுது’ என்பார். அப்படி அவர் நம்ம படம் என்று சொல்கிற படத்தில் ஏதாவது ஒரு சின்ன வேலை அவர் செய்துகொடுத்ததாக இருக்கும். ஆயிரம் கைகளில் அவருடைய கையும் ஒரு அணில் கை. ஆனாலும் அவருக்கு அது தன்னுடைய படம்.

வெள்ளிக்கிழமை காலங்காத்தால தியேட்டர் வாசல்ல போய் நிக்கவா என்ற நினைப்புடன்‘ வேலை இருக்கேண்ணே’ என்றால் போதும், “சரி கவனி் அது முக்கியம்லா, சின்னதா ஒரு கேப் இருந்தா சொல்லு. சனிக்கிழமை சாயங்காலத்துக்கும் டிக்கெட் இருக்கு” என்று போனை வைப்பார்.


இங்கே நான் பேச வந்தது கணேசன் அண்ணன் பற்றியல்ல. பல கணேசன் அண்ணன்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்த கோடம்பாக்கத்தின் வெள்ளிக்கிழமைகளைப் பற்றி. அந்த வெள்ளிக்கிழமைகளுக்காக காத்திருக்கிற பல கணேசன் அண்ணன்கள் பற்றி, அந்த கணேசன் அண்ணன்களை இன்னும் சினிமாவை நேசிக்க வைக்கக் காரணமாக இருக்கிறதே ஏதோ ஒன்று. அந்த ஏதோ ஒன்றைப் பற்றி.


மனத்துக்குள் கதை உருவாக்கி, உருவாக்கின கதையைத் தயாரிப்பாளரிடம் சொல்லி, அட்வான்ஸ் வாங்கி, அலுவலகம் போட்டு, ஆர்ட்டிஸ்டுகள் தொடங்கி திரைப்படத்துக்கான மொத்த குழுவையும் ஒருங்கமைத்து, பட்ஜெட் கணித்து, பூஜையைப் போட்டு, ஷெட்யூல் வாரியாக படப்பிடிப்பு நடத்தி, சூரையை உடைத்து, போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்து, இடையிடையே சினிமா வாராந்திரிகளுக்குத் தீனியாக செய்திகளும், விளம்பரங்களும் கொடுத்து, இசைவெளியீடு, சென்சார் போர்டு, டீஸர், ட்ரெய்லர், என்று கண்டங்களைக் கடந்துவந்து வெள்ளிக்கிழமை திரையை எட்டுகிறவரைக்கும் ஒரு சினிமாவுக்குப் பின்னாலான பல அடுக்கு உழைப்பு இருக்கிறதை மறுக்க முடியாது.

அத்தனை உழைப்புக்கும், உழைப்பாளர்களுக்கும் மத்தியில் தயாரிப்பாளர் என்கிற முதலீட்டாளர்களின் குதிரை சேனத்தில் உட்கார்ந்துகொண்டு, கூடே இருந்து அரசியல் பண்ணுகிற வர்களையும், சுருட்டல்காரர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும், கையாலாகாதவர்களையும், பணந் தின்னிகளையும், முன் ஒன்று சொல்லி புறம் ஒன்று செய்கிற அக்கிரமனையும், அவமானம் செய்கிறவனையும், நம்பிக்கையைக் கொல்கிறவனையும், பொய்யனையும், என்று அத்தனை கெட்டதுகளையும், கொஞ்சமே கொஞ்சம் நல்லதுகளையும் அனுசரித்துச் சகித்து, வேண்டியமட்டும் எதிர்த்தும், அரவணைத்தும் ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியாக நிற்கிற இயக்குநர்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை நாட்கள்தான் தீபாவளி.

தேவி கருமாரி தியேட்டர் வாசலில் நின்றுகொண்டு, இதே தியேட்டரில் நம்முடைய படத்துக்குக் முதல் காட்சிக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று கனவு காணுகிற இயக்குனர்களை அணுகி நின்று, அவர்கள் வாழ்க்கையை கண்டுணர்கிறபோதுதான், ஒரு கருவைச் சுமக்கிற தாயின் அவஸ்தைகள் பற்றின பெரும்புரிதல் எனக்குள் ஏற்பட்டது. அந்த வகையில் இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை எனக்குக் கொண்டாட்டமானது.


‘பாம்புச் சட்டை’ படத்திற்காக நான் கணேசன் அண்ணனாக மாறி நிற்கிறேன். அவர் அதை விரும்புவாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. “திரும்ப இங்கேயேதான் வந்து நிக்கியா” என்பார். ஆனால், எனக்கு நிற்பதற்கான தளம் என்று இன்றைக்கு ஒன்று இருக்கிறது. நான் சினிமாக்காரனாக இல்லையென்ற போதிலும் எனக்கு சினிமா அந்நியமில்லாமலாகிவிட்டது. எங்கள் இயக்குநருடைய கனவை முதல்தடவையாகத் திரையரங்கத்தில் காணுகிறோம். 

“சத்துள்ள படமா இருந்தா அது அடுத்தவாரம் வரைக்கும் தாங்கும்” என்கிற கோடம்பாக்கத்து நிதர்சனத்தை எதிர்நோக்கி, இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கிற கனம் ஒருமாதிரி தகிப்பாகத்தான் இருக்கிறது. அதேநேரம் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. நேற்றைக்கு ஆடம்தாசன் சாரைச் சந்தித்தபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொன்னார்.


பெரிய ப்ரமோஷன்கள் இல்லை. டி.வி.ஷோக்களில் கதாநாயகன் நாயகிகளைக் கூப்பிட்டு வைத்து நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. தேவையான அத்தனை வெளிச்சங்களிலிருந்தும் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் இந்த வெள்ளிக்கிழமையின் பெரிய பேனர் படங்களில் பாம்புச்சட்டை தன் சத்துக்களோடு முன்னேறி வந்து நிற்கிறது.


திரைக்கதை எழுதும்போது ஒரு வசனம் வைத்திருந்தார் இயக்குநர். “உடம்போ வாழ்க்கையோ எவ்வளவு அடிவாங்கினாலும் எவன் மனசு தளராம இருக்கானோ அவனாலதான் திரும்ப எழமுடியும். எவனால திரும்ப எழுந்திருக்க முடியுமோ அவனால தான் ஜெயிக்கவும் முடியும்” என்று அதை அவர் எழுதும்போதும் எப்படி எழுதினாரோ, ஆனால் படம் அப்படித்தான் எழுந்து நிற்கிறது.


தேவி கருமாரியோ ஜாஸ் சினிமாஸோ நண்பர்களை போனடித்துத் திரட்டி வைத்திருக்கிறேன். “பிரதர் வெள்ளிக்கிழமை காலையில நம்ம படம் ரிலீஸ் ஆகுது. வந்துடுங்க” என்று, வாழ்த்துகள் Adam Dasan Sir. 




-கார்த்திக் புகழேந்தி
22-03-2017


Comments

  1. எழுத்து அனுபவத்தையும்
    திற்மையையும் ஒருங்கிணைத்துக் காட்டுது
    படத்தின் மீது நம்பிக்கையையும்..
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil