தமிழ் மாதங்களும் சொலவடைகளும்


மாதத்திற்கொரு சொலவடை வைத்தான்

Image may contain: one or more people, sunglasses and closeup


கிரா தாத்தனிடம் கதைகேட்க உட்கார்ந்தா பல செய்திகள் அவர்கிட்டே இருந்து வந்துகுதிக்கும். பல சேதிகளை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் நேரே பார்க்கிறபோது ஒரு சந்தேகம் மாதிரி அதைப் பற்றி ஆரம்பிப்பேன். அவர் கேட்டதும் சொல்லி, அது தொடர்புடைய இன்னும் பல சங்கதிகளோடு பெரும்பேச்சை ஆரம்பிப்பார். 

அப்படி அவர் பேசும்போது குறிப்புகள் எடுக்கிறதுக்கு பதிலாக ரெக்கார்டரை ஆன் செய்துகொள்வது என் வழக்கம். பிறகு கிடைக்கிற நாளில்  உட்கார்ந்து அதை அப்படியே எழுத்தாக்கிக் கொள்வேன். அப்படித்தான் ஒருதடவை ஏதோ ஒரு சிற்றிதழில் படித்த ஒன்னரைப் பக்கக் கதையை மனத்தில் வைத்துக்கொண்டு மாசங்களைச் சொல்லி ஆரம்பிக்கும் பழம்மொழிகளைப் பற்றிக் கேட்டேன். 

கதைப்படி, கரிசல் பொட்டலில் மாடு மேய்க்கும் சிறுமிக்கும் சிறுவனாக வரும்  கிராவுக்கும் இடையே நிகழும் வெளாட்டுப் பேச்சு வளர்ந்து ஒவ்வொரு மாசத்தையும் சொல்லி ஒரு சொலவடையைச் சொல்லி முடிப்பதாக கதை முடியும். நான் அந்தச் சொலவடைகளில் சிலதைச் சொல்லி பேச்சை ஆரம்பித்திருந்தேன். 

அப்போது பட்டியல் போட்டதில் தான் இந்த சித்திரை தொடங்கி பங்குனி வரைக்குமான பழம்மொழிகள். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் போது, சம்சாரிகளின் சொலவடைகள் எல்லாம் வேளாண்மையையும், மழையையும், இயற்கை சூழல் மாற்றங்களையும், கல்யாணம் காட்சி, நல்லதுகெட்டதுகளைக் குறிவைத்து உருவானவையாகவே தோன்றும். அது உண்மைதான் என்றார் கிரா. 

நான் கொஞ்சம்  பழமொழிகளை என் கதைகளுக்கிடையில் பயன்படுத்துகிறவன் என்பதால் எனக்குள் இதுபற்றின தேடல் இருந்தது. இதனாலே, நான் பிறக்கிற ஆண்டுக்கு முன்னே கி.வா.ஜ  தொகுத்த 25000 தமிழ் பழமொழிகளின் மூன்று தொகுப்பையும் தேடி எடுத்து வைத்திருக்கிறேன். பத்தாததுக்கு கழனியூரான் சேகரிப்புகளும் கைக்குள் உண்டு. இதெல்லாம் சேர்ந்து கொஞ்சம் வேண்டியமட்டும் மாதங்கள் வாரியாகத் தொகுத்ததில் கீழே உள்ள பழமொழிகள் அல்லது முதுமொழிகள் அதுவுமில்லையென்றால் சொலவடைகளை முக்கியமானதாகப் பார்க்கிறேன். 

நம் ஆட்கள் ஒரே மாதத்துக்கு என்று மட்டும் சொலவடைகளைச் சுருக்கிவிடாமல் அடுத்துவரும் மாதத்தைச் சேர்த்துவைத்தோ அல்லது ஒரே போல/ வெவ்வேறு தன்மைகளையுடைய தமிழ் மாதங்களின் பண்புநலன்களை வைத்தோ இந்தச் சொலவடைகளைப் புனைந்திருக்கிறார்கள். அதிலும் ஆடி மாசத்தின் மிதமிஞ்சிய வேலைவெட்டி இல்லாத பொழுதில் ஏகப்பட்ட சொலவடைகளை உருவாக்கி உலாத்த விட்டிருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப வெறுத்தது பங்குனியைத்தான். அதாவது வெள்ளைக்காரன் கொண்டாடும் டிசம்பர் குளிரை... 

இனி மாதம்வாரியான சொலவடைகளைக் கீழே காணலாம். 


சித்திரை 

”சித்திரை ஐப்பசி சீர் ஒக்கும்” 
”சித்திரை எள்ளை சிதறி விதைக்கணும்”
 “சித்திரை புழுதி பத்தரை மாத்துத் தங்கம்”
 “விட்ட பாம்பும் செத்துப் போகும் சித்திரை வெயில்”
 “சித்திரையில் பிறந்து சீர் கேடானவனும்  இல்லை. ஐப்பசியில் பிறந்து அதிர்ஷ்டகாரனும் இல்லை”
 “சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம் 
வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம் ஆனிமாசம் அரைப் பொறுக்கி கல்யாணம்” 

வைகாசி

 “வைகாசி மாசம் ஆத்துல தண்ணி”
 “வைகாசி மாசம் வறுத்துக் குத்தணும்”
 “வைகாசி மாசம் வாய் திறந்த கோடை”

ஆனி

 “ஆனியில் அடிவைத்தாலும் கூனியில் குடிபுகாதே” 
 “ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை”
 “ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை”

ஆடி

 “ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி”
 “ஆடி பிறந்தால் ஆசாரியார்: தை பிறந்தால் தச்சப்பயல்”
 “ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற”
 “ஆடியில் ஆனையொத்த கடா, புரட்டாசியில் பூனைபோல ஆகும்”
 “ஆடிக் காத்துல ஆலே அசையும்போது மேயும் கழுதைக்கு என்ன கதி?”

ஆவணி

 “ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது”
 “ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு”
 “ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு”


புரட்டாசி

 “புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும் ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்”
 “புரட்டாசியில் பொன் உருகக் காயும் ஐப்பசியில் மண் உருகப் பெய்யும்”

ஐப்பசி 

 “ஐப்பசி மாதம் அடைமழை கார்த்திகைமாதம் கனமழை”
 “ஐப்பசி நெல்விதைத்தால் அவலுக்கும் ஆகாது”
 “ஐப்பசி மருதாணி அரக்கா புடிக்குமாம்” 

கார்த்திகை

 “கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை 
கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை”
 “கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்” 
 “கார்த்திகை மாசம் கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு முதலாகாது”
 “கார்த்திகை பனி பாக்காம கட்டி ஓட்டு ஏர் மாட்டை”

மார்கழி

 “மார்கழி பிறந்தால் மழையும் இல்லை; பாரதம் முடிந்தால் படையும் இல்லை”
 “மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது”
 “மார்கழியில் மழை பெய்தால் மலைமேலே நெல் விளையும்” 
 “மார்கழி வெற்றிலையை மாடு கூடத் தின்னாது”

தை

 “தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை”
 “தையிலே நெல்விதைத்தால் தவிட்டுக்கும் ஆகாது”
 “தை பிறை தடவிப்பிடி ஆடிப்பிறை தேடிப்பிடி”
 “தை பனி தரையைத் துளைக்கும் 
மாசி பனி மச்சைத் துளைக்கும்”

மாசி

 “மாசி மின்னலில் மரம் தழைக்கும்”
 “மாசி நிலவும் மதியாதார் முற்றமும் வேசி உறவும் வியாபாரி நேசமும் நில்லாது”
 “மாசிப் பிறையை மறக்காமல் பாரு”

பங்குனி

 “பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம்”  
 “பங்குனி மாதம் பந்தலைத் தேடு”
 “பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை”


-கார்த்திக்.புகழேந்தி
01-03-2017


Comments

  1. இந்த சொலவடைகளுக்கு பொருள் வேண்டும்

    ReplyDelete
  2. Karthik .. கருத்தும் சேர்ந்தால் இன்னும் கூடுதல் இனிமை

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil