‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை


            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர்.

நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம்.
“காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்கோ, வண்டி இழுப்புக்கோ, கலப்பின விருத்திக்கோ,  எதுக்குமே ஈடுபடுத்தாமல்  தீவனமாய் கொடுத்து, தேய்த்து தேய்த்து வளர்த்த காளை அது. கயத்தாறு சக்கர வண்டிகள் வந்தபோதும் சரி, கோப்புக் காளைகளுக்கு பத்தாமை ஏற்பட்டபோதும் சரி, மாட்டை அதன் நிழலில் இருந்து கழத்தி நகர்த்தியவர் இல்லை அய்யமுத்து தாத்தன். பின்னே எதற்கு அந்த மாடு?
அது முழுக்க முழுக்க சல்லிக்கட்டுக்கு மட்டும் வளர்த்த சல்லிமாடு. மான்கொம்பு, சிராவயல், அரளிப்பாளை, திருமங்கலம், நத்தம், மேலூர், நெய்வாசல், சோழவந்தான், திண்டுக்கல், நார்த்தாமலை, தேனி என்று பல ஊர் சல்லிக்கட்டிலும் கூட்டிக் கொண்டுபோய் துண்டு வேட்டி வாங்கிக் கொண்டு மாடு விடுவதோடு சரி. பிறகு மாசக் கணக்கில் அதற்கு மேனா மினுக்கல் தான்.
குடும்பத்தில் ஒருதடவை தலைச்சன் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனதும், ‘இந்தப் பொங்கலுக்கு மாடு விடுகிறேன்’ என்று வேண்டிக் கொண்டார்களாம் அய்யமுத்து தாத்தனின் மூதாதைகள். அப்படி பலகாலத்துக்கு முந்தி ஆரம்பித்த பழக்கம் தான் ஒவ்வொரு வருசமும் நீண்டுகொண்டே வந்துவிட்டது. இப்படி ஊரில் மழை வறட்சிக்கு, நோய் தொத்துக்களுக்கு மாடுவிடுகிறேன் என்று  குறுஞ்சாமிக்கு வேண்டிக் கொள்வது இன்னமும் இருக்கிறது.
சங்கு, கழுத்துமணி, கருங்கச்சை, சோழிப்பட்டை, மூக்கணாங்கயிறு, முதுகுக் கயிறு, வெண்டையம், கொலுசுப்பட்டை, கொப்பி, கொம்புத் தொப்பி என்று தன் மாட்டுக்கான அலங்காரத்தில் ஒரு குறையும் வைக்காதவர் அய்யமுத்து தாத்தன். தன் மாட்டுக்கு மட்டுமில்லை,   “சந்தைக்குப் போறேன் ஒரு ‘பொடை மாடு’ வாங்கணும் கூடமாட வந்து கொஞ்சம் சுழி பாத்து வாங்கிக் குடுமையா” என்று யார் கேட்டாலும் தட்டாமல் கூடேப் போய்விடுபவர்.
‘ஆறு வயசு மாட்டுக்கு நாலு பல் இருக்கணும், நெத்தியில் சுழி கண்டா இடியோ கொடையோ ரெண்டுல ஒண்ணு தொடர்ந்து ஒண்ணு வந்துக்கிட்டே இருக்கும். கொண்டையில் சுழி கண்டா கொண்டவன் செத்தான்; வாலிலே சுழி கண்டா வீட்டையே வித்தாலும் கட்டாது, அது துடப்பக்கட்டை சுழி; காலில் சுழி இருந்தா கேடு வந்து நிக்கும், அது விலங்கு சுழி;  நடுமுதுகில் சுழி கண்டா நல்ல மாடு பாத்துக்கோ;  என்று சுழியை வைத்து நூறு விளக்கம் கொடுப்பாராம்.
இது தவிர மாட்டுக்கு நிறம், புள்ளி, கொம்பு வளைச்சம், பழு எல்லாம் பார்த்து மாடு வாங்கிக் கொடுப்பதில் கில்லாடி. மாட்டுக்கு அங்கத்தில் பழு ஒண்ணு இருக்கும். விலா எலும்போட சூட்டிகை அது.  ஒருபக்கம் மட்டும் பழு தூக்கி இருந்தாலும் கேடு என்பாராம். சப்பை, நீல நாக்கு, தொண்டை அடைப்பு, கோமாரி,  என்று எல்லா நோய்க்கும் கைவசம் மருந்து வைத்திருக்கும் ஆள்.  இதுபோக மாட்டுக்குச் சூடு போடவும் நல்ல வலுசாலியாய் இருந்திருக்கிறார். பல ஊர் சந்தை கண்ட கிழம்.
“சரி மாடு வளர்த்த, வாங்கின பெருமை எல்லாம்  கிடக்கட்டும் சல்லிக்கட்டுக்குப் போகிற கதை சொல்லுங்க” என்பேன் கோனாரிடம். அவரும் விடாமல் நீட்டி  முழக்கிக் காலை மடித்து, ஒரு வெத்தலையை அதக்கிக்கொண்டு தான் கேட்டு வளர்ந்த கதையை நான் கேட்க எனக்குச் சொல்வார்.  
“தீவனம் தீவனமாய் கொடுத்து, நீச்சம் பாய்ச்சம் எல்லாம் பார்த்து வளர்த்த மாட்டை, இங்கிருந்து பகுமானமாய் ஆறேழு நாள் முன்னே பந்தையம் நடக்கும் ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய் விடுவார் அய்யமுத்து தாத்தன். ஊர்ப்பொதுவிலிருந்து பந்தையம் நடத்துகிறவர்கள், வந்தவர்கள் எல்லாரையும் தங்குவதற்கு என்று கச்சேரிக்குப் பக்கத்திலே இடமும் தந்து, வேளா வேளைக்குச் சோறும் போட்டு, மாட்டுக்கு குடிக்க கொள்ள ஊர் பொதுக் குட்டையை கைகாட்டிவிடுவார்கள். தீவனம் மட்டும் மாட்டுக் காரர்களுடையது.
ஒன்றாம் நாள், ரெண்டாம் நாள் என்று ஆறு நாளும் ஏகப்பட்ட ஆட்டமும் பாட்டமும் நடக்கும். இளசுகள் மாடுகளின் திமிலைப் பார்த்து வியந்து, கிட்டே வந்தால் மாடு எட்டிப்போ என்று மிரட்டும். பந்தையத்தன்று பொழுது விடிந்ததும் ஊர் நாட்டாமையும், சனங்களும் ஒண்ணு திரண்டுபோய், முனியாண்டி கோயிலுக்குப் பொங்கல் சாத்தி, அங்குள்ள கோயில் மாடுகளுக்கு முதல்மரியாதை காட்டி, வெளியூர் வரிசைக்காரர்கள் இருக்கும் கச்சேரிக்கே வந்து தலைக்கு ஒரு துண்டும், வேட்டியும் கொடுப்பார்கள். வேட்டித் துண்டை வாங்கிக்கொண்ட பெருசு மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை அவிழ்த்து  கோட்டைக்குள் பாய விடும்.
கொட்டுப் பறை அடிக்கிற சத்தத்தில்  சிவந்த கண்ணோடு, சீறிப் பாய்ந்து வருகிற காளையின் கொம்பையும் திமிலையும் பிடித்து, கழுத்தில் கட்டியிருக்கும் சண்டித் துணியை அவிழ்க்க இளவட்டங்கள் துடிதுடிக்கும். வண்டியில் ஏறி நிக்கும் ஆணும் பொண்ணும் பிடிப்பாளி பேரை சொல்லி கத்திக் கத்தி உசுப்பேத்த, வீறிக்கொண்டு, வரும் காளையை பிடிக்க  கடும்போட்டி இருக்கும்.
சல்லிமாட்டைப் பிடிக்க முடியாமல் போனால் வளர்த்தவன் தான் பேரும் பரிசும் வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்து இறங்குவான். சண்டியை அவிழ்த்து, மாட்டையும் கவிழ்த்தி விட்டால் பிடிக்காரனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து கௌரவிப்பார்கள். பலநேரம் பொண்ணையே தூக்கிக் கொடுத்த கதையெல்லாம் உண்டு” என்றார் கோனார். ‘தாத்தன் மாடு எப்பயாவது பிடிபட்டுருக்கா’ என்றேன். ‘ரெண்டு வாட்டி மட்டும் நெய்வாசலில் பிடிபட்டது. மத்தபடி எங்கயும் வால் மசிரக் கூட எவனும் தொட்டது இல்ல’ என்று பதில் வந்தது.
கடந்த ஆண்டு இராமநாதபுரத்தில் மாடுபிடி வீரர்கள் சிலபேரை பத்திரிகை ஒன்றிற்காக நேர்காணல் பண்ணப் போயிருந்தேன். அப்போதுதான் முன் குறிப்புகளுக்காக இலக்கியங்களில் சல்லிக்கட்டு பற்றி காணக் கிடைக்கும் விவரங்களை எல்லாம் திரட்டிக் கொண்டிருந்தேன்.
பண்டைய தமிழ் நிலத்தில் முல்லைத்திணை மாந்தர்களாகிய ஆயர்கள் கொல்லேறு என்றும் மாக்காளை என்றும் சொல்லப்படும் வீறுகொண்ட ஏறுகளின் கொம்பைப் பிடித்து அடக்கி, ஏறு தழுவினார்கள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. (கலித்தொகை, மலைபடுகடாம், சிலம்பு)
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் (கலி.,)
 ஆயர் குலத்து ஆடவர்களின் வீர விளையாட்டை ‘ஏறுகோள்’ என்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியம் குறிப்பிடும் ஏறுகோள் தான் இன்றைக்குச் சல்லிக்கட்டு என்று அழைக்கப் பட்டிருக்கக் கூடும்.   இவ்விளையாட்டில் உயிர் நீத்த பலருக்கும் நடுகற்கள், கல்வெட்டுக் குறிப்புகள் காணக் கிடைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள, பெருமைக்குரிய காரியமாகவே சல்லிக்கட்டு காலங்காலமாக நடைபெற்று வந்திருப்பதை அறிய முடிகிறது. சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளை அடக்கும் முத்திரை ஐயாயிரம் ஆண்டுகள் பாரம்பரிடம் கொண்ட விளையாட்டு இது என்ற பெருமையைப் பறைசாற்றுகிறது.

2004ம் ஆண்டு நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர்கள்  மாடுகளைத் துரத்திக்கொண்டு  ஓடுகிற பாறைதள ஓவியமும், திண்டுகள்- மதுரை மேய்ச்சல் நிலங்களில் காணப்பட்ட குகை ஓவியக் காட்சியும் சல்லிக்கடுக்கான பாரம்பரியத்தைப் பேசும் சான்றாவணங்களாகும். இதில் திண்டுக்கல் குகை ஓவியம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டதாக ஆய்வுகள் பேசுகின்றன. இதேப்போல, சேலம் மாவட்டத்தில் பெத்த நாயக்கன் பாளையத்தில் கிடைத்த கல்வெட்டில் (நடுகல்) கருவந்துறை எருது விளையாட்டில் உயிர்நீத்த கொவுரிச் சங்கனின் நினைவாக அவன் மகன் பெரிய பயலு நடுகல் எழுப்பின செய்தியைக்  குறிப்பிடுகிறது.
“கொவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான்
சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு”
ஆயிரமாயிரம் காலங்களுக்கு முந்தைய, கொல்லேறு அடக்கும் காளை உருவம் பொறித்த அர்த்த சித்திரங்கள் பல இப்படி தொல்பொருள் ஆய்வில் தொடர்ந்து கிடைத்தபடியே யிருக்கின்றன. தமிழகத்திலிருந்த மாட்டினங்கள், அவற்றின் வீர்யம், இளைஞர்களின் வீரச் செயல்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒழுங்குபடுத்தப்பட்ட பதி வுகள் நம்மிடையே உண்டு.  
ஆக, அரசுகளுக்கு இவை எல்லாமும் தெரியும். எல்லாமும் என்றால் எல்லாமும் தான். இந்த நிலத்தின் அதிர்வுகள், இந்த மக்களின் கலாச்சாரம், இவர்களின் வாழ்வும் வீரமும், இலக்கியமும் பண்பாடும். அத்தனையும் தெரிந்தும் சட்டத்தின் பெயரால் அடக்குமுறைகளை ஏவிக் கொண்டே போகிறார்கள். ‘வெள்ளக் காரன் ஆண்டப்பக் கூட இதுக்கெல்லாம் அவன் ஒண்ணுஞ் சொல்லலியேப்பா’ என்று மாடுபிடித்துப் பெண்கட்டிக் கொண்டு வந்த கொம்பேரித் தாத்தன் முணங்கிக் கொண்டே போகிறார்.  அவருக்கென்ன தெரியும் விலங்கு நல ஆர்வலர்கள் பத்தி..
-கார்த்திக் .புகழேந்தி


ஜனவரி திங்கள்’ 2017 
காக்கைச் சிறகினிலே இதழில் வெளியான கட்டுரை. 
https://www.facebook.com/kaakkaicirakinile/

Comments

  1. கட்டுரை மிகவும் அருமை..,
    வாசித்து மகிழ்தேன்...
    தொடருங்கள்...
    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. சிறப்பான கட்டுரை.... பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil