”கடல்நீர் நடுவே”இந்த ஜல்லிக்கட்டு பரபரப்புக்கெல்லாம் மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலிக்கும் நாகர்கோயிலுக்கும் போய்வந்திருந்தேன். குமரியில் திரிவேணி இலக்கியச் சங்கமம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பொன்னீலன், மலர்வதி, முத்தாலங்குறிச்சி காமராசு, மற்றும் பலரோடு கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. 

நாகர்கோயிலில் கலந்துக்கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு என்பதால் ரொம்பவும் உற்சாகமாகவும் அதேநேரம் பழைய நண்பர்களைச் சந்திக்கும் சூழலாகவும் அமைந்தது. நூல் வெளியீட்டுக்குப் பிறகு, நன்றியுரை பேசிவிட்டு மலர்வதியின் காட்டுக்குட்டி, ஜீவா எழுதிய தற்கொலைக் கடிதம், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சுடலை சாஸ்தா, கடிகை அருள்ராஜ் எழுதின ‘கடல்நீர் நடுவே’ ஆகிய புத்தகங்களையும் வாசிப்பதற்கு என்று வாங்கியிருந்தேன். 

கடல்புரத்தில் உலவும் நாவல்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் என் வாசிப்பில் வெகு சிறந்ததாக ஒரு பத்துப் புத்தகங்கள் பேரைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றும். ஜோ சாரின் படைப்புகளைக் கொண்டாடுவதுகூட அவை முழுதும் கடல்காற்று வீசுகிற நிலத்தில் எழுதப் பட்டவை என்பதாலே. எர்னெஸ்ட் ஹெம்மிங்வே எழுதின கிழவனும் கடலும் வாசித்துமுடித்து அவர் எழுத்துக்கு ரசிகனாகிப் போனவன் நான். 

(இப்போதுகூட ஹெம்மிங்வேயின் ‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது கூடுதல் தகவல்) ஆக, கடிகை அருள்ராஜ் அண்ணனின் கடல்நீர் நடுவே நாவலை ஊருக்குத் திரும்பும் பயண இடைவேளைக்குள்ளே வாசிக்கத் தொடங்கி, சென்னை வந்திறங்கும்போது ஈரத்தலையோடு நாவலை முடித்து கரையிரங்கியிருந்தேன். 

மேற்கு குமரிக்கடல் பரப்பில் ஆழ்கடல் தொழில்முறை மீனவரான தன்னுடைய அனுபவங்களைக் கொண்டு, அருள்ராஜ் அண்ணன் எழுதியிருக்கும் இந்த ‘கடல்நீர் நடுவே’ நாவல் நிச்சயம் மிகத் தரமான கடல்பிரதேசத்து நாவல் என்பதை உறுதியாய்ச் சொல்லமுடியும். 2011 காலக்கட்டங்களில் ஆறாம் கூட்டத்து நட்சத்திரங்கள் வானத்தில் ஒளிர்விடுகிற நாளில் படகுகளின் மீன்பிடிப்புக்குச் செல்லும் பத்து மீனவர்களுக்கிடையே நிகழும் கதைப் பேச்சுக்கிடையே, பல மீன்பிடி அனுபவச் சம்பவங்களைச் சொல்லி, தூண்டில் மீன்பிடிப்பு முறைகள் சுறாவேட்டை, அதற்கான ஆரம்பகால காரணங்கள், அந்நிய நாட்டு மீன்பிடிக் கப்பல்களால் தொழில்முறை கரையோர மீனவர்கள் எவ்வாறு பாதிப்படைவார்கள், 80களின் தொடக்கத்தில் கட்டுமரங்களில் மீன்பிடிக்கப் போனவர்களின் சுறாவேட்டை அனுபவங்கள், வெம்புலியன், வரிச்சுறா வேட்டைகளில் நிகழும் சாகசங்கள் என முழு நாவலையும் கடல் நடுவே நிகழ்த்தியிருக்கிறார். 

எனக்கு ஆழ்கடல் பயண அனுபவம் ஒரு மூன்று முறை வாய்த்திருந்தது. என்னுடைய மணப்பாடு மீனவ நண்பர்கள் மூலமாக முதல் அனுபவம் சாத்தியமானது. முழு இரவு முழுக்க கடலுக்குள் இருந்து வந்திருந்தேன். சென்னையில் பாலவாக்கம் துறையைச் சேர்ந்த நண்பனின் உதவியால் பைபர் போட்டில் மீன்பிடிக் குழுவோடு இரண்டாம், மூன்றாம் முறை சென்று வந்திருக்கிறேன். அவர்கள் எல்லாருக்குமே காவிரிக்கரைக்கு அந்தப் பக்கம் உள்ள மீனவர்கள் மீது ஒரு பெரும் மரியாதை இருந்தது. கேட்டால் அங்க இருப்பதுதான் காத்துக்கடல் என்று சொல்வார்கள்.

ரெண்டு கையையும் அகலம் விரிச்சுக்கோ இது ஒரு பாகை. நாம நிக்கும் இந்த இடத்துக்குக் கீழே இதுபோல நூறு நூத்தம்பது பாகை ஆழம் இருக்கும். முதல் நூறு பாகை ஆழத்துக்கு கசம்ன்னு பேர். இது அணியம் இது நடுமரம் இது கடமரம், இதான் மண்டூக்கி, இது தூண்டி என்று சின்னப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல எனக்குச் சொல்லிக்கொடுத்த நந்தகுமாரின் குரலாகவே இந்நாவலையும் என்னால் வாசிக்க முடிந்தது.

நாவலில் வரும் பெரியாள் குறிப்பிட்டதுபோல ‘தருவார் யாருமில்லாத’ கடல் தான் இது. கடலுக்குள் சென்று பாடு பார்த்துத் திரும்புகிற மீனவர்களின் தொழில்முறைகளையும், கடலுக்குள் இருக்கும் நாட்களின் நீள அகலத்தையும், மீன்வேட்டையை அனுபவங்களையும், மட்டுமே களமாகக் கொண்டு எழுதியிருக்கும் நாவலை என்னால் காட்சிகளாகவும் உணர்ந்து படிக்க முடிந்தது.

கடமரத்தில் நின்றுகொண்டு தண்ணீருக்குள் கால்விட்டுப் பார்க்கத் துணிந்த என்னை, “பத்திரம்யா நீச்சல் தெரியும் தான, ஆத்து நீச்சல் மாதிரி இல்ல இது கடல் என்று உசார்படுத்தின நண்பனின் குரல் மாதிரி நாவலின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நிறைய அக்கறையோடு ஆழ்கடலின் கதைபேசுகிறது. கடிகை அருள்ராஜ் அண்ணன் எழுதின இந்த ‘கடல்நீர் நடுவே’ டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. (விலை 120/-) 

நேரில் சந்திக்கும்போது அருள்ராஜ் அண்ணன் வெகு சாதாரணமான மனிதராக என் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ஆனால் எழுத்தில் மனிதர் கில்லாடி என்பதில் அப்போது எனக்கு உணர்வில்லை. கவித்துவமாய் கடலையும், அதன் வெளிச்சத்தையும் வானையும் காற்றையும் லயித்து உங்களை மயங்கடிக்கும் வேலையெல்லாம் செய்யாமல் தூண்டிலில் சிக்கின சுறா தெரத்தை வெலங்கே இழுத்துக்கொண்டு போவதுபோல வாசிப்பவனை கடலடி கசத்துக்குள்ளாக மூழ்கடித்து கடல்பற்றிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் தான் என்ன எழுதியிருக்கிறோம். அது எப்படியான பிரதி என்பதிலும் தெள்ளத் தெளிவாக இருக்கிறார் Kadikai Arul Raj. இந்நாவலுக்குக் கிடைக்கவேண்டிய பெரிய அங்கீகாரங்களை அவர் வெகு சீக்கிரத்தில் கைக்கொள்வாரென நம்புகிறேன். நிச்சயம் வாங்கி வாசியுங்கள். 

(புத்தகம் இரவல் கேட்பது சட்டப்படி குற்றம்) 

-கார்த்திக் புகழேந்தி.
24-01-2017

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

வேட்டையன்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா