Monday, 13 June 2016

இந்தவாரம் கலாரசிகன்

இந்தவாரம் கலாரசிகன்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தினமணி அறக்கட்டளை சார்பில் முதலாவது ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பத்திரிகை உலகின் ஜாம்பவானான அவர் மறைந்து பதினான்கு ஆண்டுகளாகியும், அவரது நினைவைப் போற்றும் வகையில் எதுவும் செய்யப்படவில்லையே என்கிற ஆதங்கத்துக்கு வடிகால் கிடைத்தது மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தினமணி அறக்கட்டளை சார்பில் முதலாவது ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பத்திரிகை உலகின் ஜாம்பவானான அவர் மறைந்து பதினான்கு ஆண்டுகளாகியும், அவரது நினைவைப் போற்றும் வகையில் எதுவும் செய்யப்படவில்லையே என்கிற ஆதங்கத்துக்கு வடிகால் கிடைத்தது மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல்.

நீதியரசர் இராமசுப்பிரமணியத்தின் "இதழியல் அறம்' என்கிற தலைப்பிலான அன்றைய முதலாவது நினைவுச் சொற்பொழிவு அற்புதமான பதிவு. அதையே சற்று விரிவுபடுத்தி, வரவிருக்கும் நீதிமன்ற விடுமுறை நாள்களில் ஒரு முழுமையான புத்தகமாக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அப்படி அது புத்தகமாகுமானால், இதழியல் மாணவர்களுக்கு அது பாடப்புத்தகமாக வைக்கப்படும்.

அன்றைய நினைவுச் சொற்பொழிவு தொடர்பாக ஏ.என்.சிவராமனின் உறவினரும், "கலைமகள்' மாத இதழின் ஆசிரியரும் எனது கெழுதகை நண்பருமான கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் ஏ.என்.சிவராமன் குறித்த இரண்டு பதிவுகளை நமது வாசகர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்றைய நிகழ்ச்சியில் நான் குறிப்பிட்டுப் பேசிய "மாகாண சுயாட்சி' குறித்த பெரியவர் ஏ.என்.சிவராமன் எழுதிய நூலின் இரண்டு பிரதிகள் மட்டுமே அவரிடம் இருந்ததாம். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை அவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டவர் யார் தெரியுமா? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஆண்டன் பாலசிங்கம். 

""ஏ.என்.சிவராமனைச் சந்திக்க ஆண்டன் பாலசிங்கம் மூன்று, நான்கு முறை வந்ததுண்டு. ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஏ.என்.எஸ். எழுதிய "மாகாண சுயாட்சி' நூலின் பிரதி ஒன்றை தனக்குத் தரும்படி கேட்டுக்கொண்டார். அது தனக்கும் தனது இயக்கத்துக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் சொன்னார். ஏ.என்.எஸ். அந்தப் பிரதியை வழங்கும்போது, ஏ.என். சிவராமனிடம் அதில் கையொப்பமிட்டு தரும்படி கேட்டுக்கொண்டார்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கிழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்.

அவர் தெரிவித்திருக்கும் மற்றுமொரு தகவல் இது. இந்திய விவசாயம் குறித்து ஏ.என். சிவராமன் எழுதிய நூல், மதுரை பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டது. துணை வேந்தர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், கல்லூரிப் பட்டம் பெறாத ஒருவருடைய புத்தகம், பல்கலைக்கழகம் ஒன்றில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டது என்பதுதான்!


எங்களது தில்லிப் பதிப்பில் உதவி ஆசிரியராக இருப்பவர் எம்.வெங்கடேசன். நவீன இலக்கியத்தில் பற்றுக்கொண்டவர். சீர்திருத்தக் கருத்துகளிலும் இடதுசாரி சிந்தனைகள் குறித்தும் ஆழ்ந்த புரிதல் உள்ளவர். கடந்த வாரம் நான் தில்லி சென்றிருந்தபோது, ""படித்துப் பாருங்களேன்'' என்ற பீடிகையுடன், "புது எழுத்து நூல் வரிசை' என்று வகைப்படுத்தி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கும் "புது எழுத்து தமிழ்ச் சிறுகதைகள்' என்கிற புத்தகத்தைத் தந்தார்.

சிறுகதைகளை யாரோ ஒருவர் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதற்கும், ஒரு நாவலாசிரியர் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு படைப்பாளியின் பார்வையில் படைப்பாளியும் படைப்புகளும் புதியதொரு கோணத்தில் அணுகப்படும். புது எழுத்து தமிழ்ச் சிறுகதைகள் என்கிற தொகுப்பில் காணப்படும் 24 சிறுகதைகளைத் தொகுத்துத் தந்திருப்பவர் நாவலாசிரியர் ஜோ டி. குருஸ்.

சு. வேணுகோபால் எழுதியிருக்கும் "புற்று' சிறுகதையில் தொடங்கி ஒவ்வொரு கதையும் உலுக்கி எடுத்துவிடுகிறது. சிறுகதை இலக்கியத்தின் காலம் முடிந்துவிட்டது என்று யாராவது நினைத்தால், இந்தத் தொகுப்பைப் படித்துப் பாருங்கள், அப்போது தெரியும் சிறுகதை இலக்கியம் எத்தனை உயிர்ப்புடன் உலவுகிறது என்பது. கண்மணி குணசேகரன், கார்த்திக் புகழேந்தி, குரும்பனை சி. பெர்லின், அழகிய பெரியவன், பாஸ்கர் சக்தி ஆகிய பிரபலங்களின் கதைகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இந்தச் சிறுகதைத் தொகுப்பின் சிறப்பு அதன் நடையழகும், உள்ளார்ந்த உணர்வுகளும். இதயத்தின் ஏதோ ஒரு மூலையை ஒவ்வொரு சிறுகதையும் தொட்டுச் செல்கிறது. அப்பப்பா, அசதா எழுதிய "வார்த்தைப்பாடு' சிறுகதை இருக்கிறதே, அதன் கடைசி பத்தியைப் படித்து முடிக்கும்போது, விழிகளின் ஓரத்தில் யாருக்காவது நீர் கோக்கவில்லை என்றால், அவருக்கு இதயமே இல்லை என்று பொருள்.

 "வரலாற்றையும் கலாசாரத்தையும் புவியியல் தான் முடிவு செய்கிறது என்கிற கூற்று உண்டு. இந்தக் கருத்தில் நான் முரண்படுகிறேன். காரணம், நாகரிகங்கள் மாறலாம். மண் சார்ந்து, சூழல் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளும் மாறலாம். ஆனால், மனித இயல்புகளும் அவர்தம் குணாதிசயங்களும் எப்போதும் உன்னதமாகவே இருக்கிறது' என்கிற ஜோ டி. குருஸின் தொகுப்பாளர் உரை கருத்தை நான் முழுமையாக வழிமொழிகிறேன்.
"ஒரு வாசகன் சரியான தளத்தில் இந்தக் கதைகளுள் ஊடாடும் அறத்தை, வாழ்தலின் உணர்தலை தரிசிப்பானேயானால், அதுவே என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி' என்கிறார் அவர். உங்கள் முயற்சி வெற்றியடைந்துவிட்டது ஜோ டி. குருஸ்!
நண்பர் ஜோ டி குருஸýக்கு மீண்டும் எனது அன்பு வேண்டுகோள். கடந்த முறை நாம் சந்தித்தபோது சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். சிறுகதையின் மூலம்தான் ஒரு படைப்பாளி முழுமையடைகிறான். நான் உங்களது சிறுகதைத் தொகுப்பை எதிர்பார்த்து, ஒரு ரசிகனாகக் காத்துக்கொண்டிக்கிறேன்.


பின்னலூர் விவேகானந்தன் வழக்குரைஞர். தமிழ்நாடு நிர்வாகத் தீர்ப்பாயத்தில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்று இப்போது வழக்குரைஞராகப் பணியாற்றுபவர். ஆன்மிகத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என்பதை இவரது புத்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதுவரை 43 நூல்களை எழுதியுள்ள பின்னலூர் விவேகானந்தனின் "வழக்கறிஞர்கள் வளர்த்த தமிழ்' என்கிற நூல், நமது சொல்வேட்டை, சொல் புதிது, சொல் தேடல் உள்ளிட்ட முயற்சிகளின் முன்னோடி என்றுகூடச் சொல்லலாம். சட்டத்துறை தமிழுக்குப் பல அறிஞர்களை மட்டுமல்ல, புதிய பல சொற்களையும் தந்திருக்கிறது என்பதை அந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. சமீபத்தில் வெளிவந்திருக்கும் இவரது புத்தகம் "சைவத் தமிழ் நூல்கள்'.
சைவம் எனும் பெருங்கடலில் மூழ்கி, தேர்ந்த முத்துக்குளிப்பவர்போல, அற்புதமான பல செய்திகளைக் கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் பின்னலூர் விவேகானந்தன். இந்தப் புத்தகத்தில் உள்ள சைவத் தமிழ்ச் சான்றோர் இயற்றிய நூல்கள், சித்தர் நெறி இரண்டு கட்டுரைகளும் வியப்பான புதிய பல தகவல்களை எடுத்தியம்புகின்றன.
சாமானியர்களுக்கும் சைவம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் இந்தப் புத்தகத்தின் மூலம் பின்னலூர் விவேகானந்தன் செய்ய முற்பட்டிருப்பது சைவத் தொண்டு மட்டுமல்ல, தமிழ்த் தொண்டும்கூட. பின்னலூர் விவேகானந்தன் ஒரு புரியாப் புதிர்(Paradox) . ஏனென்றால், சைவத்தில் மூழ்கித் திளைத்த இவர் பெரியாரிடமும், அண்ணாவிடமும் பற்றுடையவர் என்று சொன்னால், அதை வேறு எப்படி வர்ணிப்பது?

"நச்' சென்று மூன்று வரியில் கவிதை எழுதியவர் கவிஞர் வாலிதாசன். படித்தது ஆனந்தவிகடன் சொல் வனம் பகுதியில். தலைப்பு "கேள்வி'. இதுதான் வரிகள்:

யாதும் ஊரே
யாவரும் கேளிர்
எப்படி வந்தது சேரி?


No comments:

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

There was an error in this gadget