பெருசுகள் - 2



தெருமுக்கில் இருந்த வீடு பண்டாரம் ஆசாரியுடையது. பம்பரத்துக்கு ஆணி வைத்துத்தர 'வெட்டுரும்பு' கேட்டு சிறுசுகள் எல்லாம்  அவரைத்தான் நச்சரிப்பாங்களாம். நல்ல மதமதப்பில் இருந்தாரென்றால் அவரே கட்டைக்கு பதமாக ஆணி அடித்துக் கொடுப்பார். மத்தமாதிரியான நேரமென்றால் 'சீ போ சனியனே' என்பது மாதிரி மூஞ்சி தூக்கிக்கொண்டிருக்கும் அவருக்கு. அப்பத்திய நேரத்தில் மனுசர் கிட்டேபோனால் நாய்கடிதான்.  

ஒருதடவை கோயில் காரியமாக ஒரு தச்சு வேலை ஒண்ணை அவருக்கு கொடுத்திருந்தார்கள். வேற ஒண்ணுமில்லை பழைய சப்பரத்தில் வைக்கும் சிங்க வாகனத்துக்கு தலை எல்லாம் உலுத்துவிட்டது. புதூசாக தலையை மட்டும் செஞ்சு மாத்துகிற வேலை. 

வண்டிச் சட்டலெல்லாம் நூல் பிடித்தமாதிரி செஞ்சு கொடுக்கிறவருக்கு இந்த தலையை கடைவது கழுதைக்குட்டியை பால்குடியிலிருந்து பிரிக்கிறமாதிரி ரொம்பவும் படுத்திவிட்டது. ஒரு சீனித்தாளில் வரைந்த சிங்கத்னதோட மூஞ்சியை ரொம்பநாளைக்கு சட்டப்பையிலே  வைத்துக்கொண்டு திரிந்தார்.

 என்னென்னவோ இழைத்துப் பார்த்தும் மனுசமண்டை மாதிரி சிங்கத்தலை சிறுத்துக்கொண்டே போனதே தவிர அந்த அமைப்பு அவருக்கு பிடிபடாமலே இருந்திருக்கிறது. கமிட்டிக்காரர் கேட்கிறப்பல்லாம் ‘இந்தா முடிஞ்சது அந்தா முடிஞ்சது’ என்று இழுத்தடித்துக்கொண்டே வந்திருக்கிறார். 

கடேசியில் ஒருநாள் கோயில் மடத்திலே போய் உட்கார்ந்துகொண்டு கண்ணீர் விசும்ப 'என்னைய ஏன் இப்படிச் சோதிக்க; நான் கமிட்டிக்காரம் முன்னாடி அவமானப்படணும்னு இப்படி வதைக்கியான்னு' நின்னுட்டார். எண்ணி எட்டாவது நாள்ளே தலை செஞ்சு கொண்டாந்து பொருத்திப் பார்க்க அப்படி அம்சமா பொருந்தியிருக்கு. ஊர்சனம் எல்லாம் ஆசாரிய கொண்டாடித் தள்ளிட்டாங்க. கூட்டத்துல ஒருத்தர் மட்டும் இந்த தலைய எங்கோ பார்த்தா மாதிரியே இருக்குன்னு ஒரு பேச்சுக்குச் சொல்லி வச்சிருக்கார். 

திருவிழாக் காரியங்கள்ளாம் முடிஞ்சு சாமி நல்லபடியா ஊர் வந்து சேர்ந்தபிறகு முனைஞ்சிப் பட்டியிலிருந்து ஆட்கள் வந்து ஆசாரி வீடு எங்க? ஆசாரி வீடு எங்கன்னு ஒரே விசாரிப்பு. என்ன சேதின்னு கேட்டா, அவங்க ஊர் கோயில்ல சாமி சப்பர வாகனத்தோட தலை காணாம போயிடுச்சாம் அதான் உங்க ஊர் ஆசாரி நல்ல ரூபமா புதுத்தலை செஞ்சிக் கொடுத்யாருன்னு கேள்விப்பட்டு வந்தோம். எங்களுக்கும் மாத்து தலை செய்வாரான்னு கேட்டுப்போக வந்தோம்ன்னு சொல்லியிருக்காங்க. 

ஊருக்குள்ளபப்போ சிமெண்டுத் தொட்டிகள் வந்த நேரம். தலைப்பாரமாவே தூக்கிக்கிட்டு தொட்டி விக்கிற ஆள்கள் காலப்பொழுதுக்கே கூவிக்கிட்டு அலையவும் பெரிய வீடுகள்ள விலைமாத்தி விலை கேக்க ஆரம்பிச்சிருவாங்க. 

நல்ல நேரம்னா மொத வீட்டு நடைப்புறத்திலே எறக்கி என்ன ரேட்டுக்குப் படிஞ்சாலும் வித்துட்டுப் போயிடுவான். ஒருமாரி சமயங்கள்ள வாங்குற ஆளாவே இருந்தாலும் விலைப்பேச்சு பேசாம செவிடன் மாதிரி போய்ட்டே இருப்பான். அப்போ அவன் வாயிலே ஒரு ஆலாபனை இருக்கும்....  லா.....ஆஅ....சிமண்டுத்தொட்டேய்..'. என்பான்.

அன்னைக்கு அப்படித்தான் முதலியார் பெஞ்சாதி நிறுத்தி விலைகேட்டிருக்கு இவுரு நிக்காம போயிட்டாராம். என்ன இருந்தாலும் கடகண்ணி வச்சி யாவாரம் பாக்குற குடும்பத்துக்கார மருமக. எம்பேச்ச மதிக்காமயா போறன்னு ஆள்விட்டு மறிச்சிருக்காங்க.  ‘தொட்டி வெல முன்னப்பின்ன பாத்துக்கலாம் மொத கீழ எறக்கு’ன்னு கேட்க, முடியாது இது ஏற்கனவே வெல பேசின தொட்டி,
கொண்டு கொடுக்க வந்தேன்னு மறுத்திருக்கான். 

அப்படி யாரு இந்தூர்ல சொல்லி வச்சி தொட்டி வாங்குறதுன்னு கூட்டத்தக் கூட்டிட்டாங்க போல அந்த அம்மையாரும். தொட்டிக்காரன் வெலவெலத்துப் போயிட்டான். இடுப்பே புடிச்சாலும் தொட்டிய எறக்கமாட்டேன்னு அடம்புடிச்சவனை இளவட்டங்க ஒரு அரட்டு அரட்டி தொட்டிய கீழ எறக்குனா... தொட்டிக்குள்ள முழுசும் நல்ல நல்ல பிஞ்சு முருங்கக்காய்ங்க. 

 ‘நீ தொட்டி வித்த லச்சணம் இதானா’ன்னு அடிச்சு பத்திவிட்டுட்டு காய் ஆளுக்கொன்னுன்னு  ஊர்க்காரங்க பிரிச்சிக்கிட்டாங்களாம். மரத்துல காய்களைக் களவு கொடுத்தவன் எல்லா வூட்டு சாம்பாரையும் மோந்துக்கிட்டு அழுதானாம். 


ஏட்டையான்னு சொன்னா தெரியாது. பொதக்குழி போலீஸ்காரர் வீடு எதுன்னா எல்லாருக்கும் தெரியும். பாளையங்கோட்டை ஜெயில்ல வேலப்பார்த்துட்டு இருந்திருக்காரு. ஜெயிலுக்கு வாரவன்ல கொலை கொள்ளைக்காரன்லாம் ஒரு மாதிரி முறுக்கிட்டுத் திரிவானுங்களாம். இந்த கள்ளனுங்க மட்டும் எங்க என்ன கெடைக்கும்னே அலையுவானுங்க போல. ஏட்டையா அசந்த நேரமா அவரு பட்டணம் பொடியக் கூட விட்டு வைக்காம கணவாண்டிருக்கான் ஒருத்தன். யார்ரா இவன் ஜெயிலுக்குள்ளயே அதும் நம்மகிட்டயே திருடுதானன்னு பதுங்கிப் பார்த்துருக்கார். ஆம்ப்ட்டுகிட்டான். அடி அடின்னு அடிக்கப் போக ஏட்டையா விட்ருங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்தேன்னு ஒத்துக்கிட்டிருக்கான். 

இவருக்கும் அப்படி இப்படின்னு அவங்கிட்ட பழக்கமும் நெருக்கமும் கூடிட்டே இருந்திருக்கு. ஒருநாள் அவம்பாட்டுக்கு இன்ன இடத்துலதான் நாங்களவாண்ட பித்தள குடங்கள பொதைச்சு வச்சிருக்கேன்னு அளந்து விட்ருக்கான். இவரும் சரின்னு ஒருநாள் அந்த பாலாஸ்பத்திரிக்கி பின்னால இருந்த அந்த எடத்தக் கண்டுபிடிச்சி நல்ல ராத்திரி மழைல கொடைய புடிச்சுக்கிட்டு எறங்கிப் பார்த்திருக்கார். மழையும் சகதியுமா கன்னிப்போன குழி. ஓங்குதாங்கான இவர் வெயிட்டுக்கு வச்சி உள்ள இழுத்துருச்சி. என்ன இழுப்பிப் பார்த்தாலும் கால் வெளில வரமாட்டேன்னுருக்கு. ஜான் இழுத்தா மொழம் உள்ள போகுதாம். வேற வழி! விடியுற வரைக்கும் குழிக்குள்ளே கிடந்து, காலங்காத்தால வெளிய போற ஆள்க பார்த்து தூக்கி விட்ருக்காங்க. அன்னையிலிருந்து பொதக்குழி போலீஸ்காரர் ஆகிட்டார். 


இந்த பூவா தலையாவுக்கு காசு சுண்டுற சமாச்சாரம் பத்தி ஒருதடவை பாலத்துக்கடியில சீட்டு விளையாடுற பூசாரி சொன்னார். அப்பல்லாம் வெள்ளித்துட்டு இருந்துருக்கு. அத கல்லுல போட்டா 'கிணுங்'ன்னு சத்தம் வரணுமாம். இல்லன்னா விரல்ல  சுண்டி விட்டா காத்துல சுத்தி பறக்குறதுக்கு முன்னாடி ஒரு 'வங்' சத்தம் எழும்புமாம். அப்பத்தான் நல்ல துட்டும்பார். 

இப்படி அவர் பேசிமுடிச்சிட்டு ஆத்துல ஒரு குளியலப் போட்டுட்டு நேரா பிள்ளையார் கோயிலுக்குப் போவார். நல்லதா ஒரு தீவாராதனை எல்லாம் காமிச்சுட்டு  சாமி முன்னால இருக்குற குழி உண்டியல ஒரு தூக்கு தூக்கி உள்ள இருக்குற காசை எடுத்துட்டு திரும்ப அப்படியே மாட்டி வச்சிட்டுப் போயிடுவார். இப்படியே ஆத்தங்கரை முழுக்க வசூல் வேட்டைய முடிச்சிட்டுப் போயிருவார். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரியும் அந்தாளு சொடலை கோயில் பூசாரின்னு... ஒரிஜினல் பிள்ளையார் கோயில் பூசாரிதான் பாவம். தட்ல அந்தந்த நேரத்துல விழுற காசை மட்டும் எண்ணி எடுத்துட்டுப் போயிட்டு இருப்பார். 
*

-கார்த்திக் புகழேந்தி
20-06-2016



Comments

  1. ஹ ஹ ஹ...\\கேட்டா, அவங்க ஊர் கோயில்ல சாமி சப்பர வாகனத்தோட தலை காணாம போயிடுச்சாம் அதான் உங்க ஊர் ஆசாரி நல்ல ரூபமா புதுத்தலை செஞ்சிக் கொடுத்யாருன்னு கேள்விப்பட்டு வந்தோம். //அப்போ.சுட்டே போட்டாரா?

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil