பெருசுகள் - 2

தெருமுக்கில் இருந்த வீடு பண்டாரம் ஆசாரியுடையது. பம்பரத்துக்கு ஆணி வைத்துத்தர 'வெட்டுரும்பு' கேட்டு சிறுசுகள் எல்லாம் அவரைத்தான் நச்சரிப்பாங்களாம். நல்ல மதமதப்பில் இருந்தாரென்றால் அவரே கட்டைக்கு பதமாக ஆணி அடித்துக் கொடுப்பார். மத்தமாதிரியான நேரமென்றால் 'சீ போ சனியனே' என்பது மாதிரி மூஞ்சி தூக்கிக்கொண்டிருக்கும் அவருக்கு. அப்பத்திய நேரத்தில் மனுசர் கிட்டேபோனால் நாய்கடிதான். ஒருதடவை கோயில் காரியமாக ஒரு தச்சு வேலை ஒண்ணை அவருக்கு கொடுத்திருந்தார்கள். வேற ஒண்ணுமில்லை பழைய சப்பரத்தில் வைக்கும் சிங்க வாகனத்துக்கு தலை எல்லாம் உலுத்துவிட்டது. புதூசாக தலையை மட்டும் செஞ்சு மாத்துகிற வேலை. வண்டிச் சட்டலெல்லாம் நூல் பிடித்தமாதிரி செஞ்சு கொடுக்கிறவருக்கு இந்த தலையை கடைவது கழுதைக்குட்டியை பால்குடியிலிருந்து பிரிக்கிறமாதிரி ரொம்பவும் படுத்திவிட்டது. ஒரு சீனித்தாளில் வரைந்த சிங்கத்னதோட மூஞ்சியை ரொம்பநாளைக்கு சட்டப்பையிலே வைத்துக்கொண்டு திரிந்தார். என்னென்னவோ இழைத்துப் பார்த்தும் மனுசமண்டை மாதிரி சிங்கத்தலை சிறுத்துக்கொண்டே போனதே தவிர அந்த அமைப்பு அவருக்க...