ராம் முத்துராம் சினிமாஸ் | Ram Muthuram Cinemas | Tvl

ண்பர் வே.ராமசாமி முகநூல் பக்கத்தில் திருநெல்வேலி ராம் தியேட்டர் பத்தின பேட்டியைப் பகிர்ந்திருக்கிறார். அதைப் பார்த்ததுமே ஒருமாதிரி பரவசம்.நெல்லை சந்திப்பிலிருந்து தச்சநல்லூருக்குப் போகும் பாதையில் உடையார்பட்டி குளத்தாங்கரை முக்கில் நிற்கிறது ராம் முத்துராம் தியேட்டர்ஸ்.ஊருக்குச் செல்கிறபோது பைபாஸ் ரயில்வே பாலத்தில் பேருந்து ஏறுகிறபோதே ராம் தியேட்டரின் கூரையைப் பார்த்துவிட்டால் ஒரு திருப்தி.  “இம்ம்...” இன்னும் கொஞ்ச தூரம்தான் வண்ணாரப்பேட்டைக்கு என்று முதுகில் பையை எடுத்து மாட்டிக்கொள்ளலாம்.

சிறுசில் ஒரு பத்து இருபது சேக்காளிகளாக படத்துக்குப் போகவேண்டுமென்று முடிவெடுத்ததும் ஒவ்வொருத்தன் சைக்கிள்களாகத் திரட்டுவோம். சைக்கிள் இல்லாதவன் டபிள்ஸ் அடிக்கத் திராணி உள்ளவனோடு கூட்டு சேர்ந்துகொள்வது. முன்னாள் ஒருத்தன் பின்னால் ஒருத்தனாக மூன்று பேர், நான்கு பேராகவெல்லாம் வெக்கு வெக்கு என்று பாளையங்கோட்டையிலிருந்து படம்பார்க்கப் போவோம். டிக்கெட்டுக்கு காசு பார்க்கவே கடுகு டப்பாக்களைக் கலவரப்படுத்த வேண்டிய சூழல் எப்போதாவது ஏற்படும். இல்லை என்றால் படம் பார்க்கவும், பரோட்டாவுக்குமாக அண்ணன் சட்டையில் காசு பார்க்க வேண்டியிருக்கும்.

ராம் தியேட்டரில் தான் பெரிய நட்சத்திரங்களின் புதுப்படங்கள் வெளியாகும். மற்ற மொழிமாற்றம் செய்து தமிழுக்கு வரும் ஹாலிவுட் படங்கள் பார்க்கணுமென்றால் முத்துராம். இருட்டில் ஒளிரும் பச்சை லேசர் லைட்டை இருக்கைகள் மீதெல்லாம் பரவ விட்டு, டிஜிட்டல் டிடிஎஸ் விளம்பரச் சத்தத்தைப் போட்டு படத்தை ஆரம்பித்தால் களை கட்டும். இண்டர்வெல்லுக்கு எழுந்து வந்து கேண்டீன் பக்கத்தில் அடுக்கி இருக்கும் “”நூறாவது நாள், நூற்றைம்பதாவது நாள்’’ ஷீல்டுகளைப் பார்த்து அந்தப்படம் வந்த நேரத்தில் டிக்கெட் எடுக்க, எப்படியெல்லாம் கவுன்டரில் மல்லுக்கட்டி, அடித்துக்கொண்டோம் என்ற கதைகளைச் சொல்லி தீனித்தின்று திரும்புவது ஒரு சொகம்.

திருநெல்வேலிக்குள் இன்னும் முள் முறுக்கு வித்துக்கொண்டு, ஆரஞ்சு கலர் மைதா மாவு கோன் ஐஸை இருபது ரூபாய்க்கு விற்கும் மற்ற திரையரங்குகளில் இருந்து ராம் தியேட்டர்ஸ் மாறுபட்டுக்கொண்டே இருந்ததைக் கண்கூடாகப் பார்த்தறிகிறேன். மெறிகேறின ஒலி வசதிகளோடு முதலில் இயங்கத் தொடங்கினசர்கள் இவர்கள்தான். ஆட்டோக்களில் திரைப்படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டும் விளம்பரப் பாணியைக் கையாண்டார்கள். 

நான் சின்னவயதில் பார்த்திருக்கிறேன். முக்கோண தகரப்பலகையில் அசோக், செல்வம் தியேட்டர்களில் ஓடும் படங்களில் வால்போஸ்டர்களை ஒட்டிக்கொண்டு சக்கடை வண்டி ஒன்று மையச் சாலைகள், மார்க்கெட் பக்கம், தெற்கு பஜார் வழிகளில் உலவும். இதன்வழியாக, இன்ன படம் இந்த அரங்கில் ஓடுகிறது என்ற செய்தி பீடி சுற்றும் வீட்டுப் பெண்களிடையே காட்டுத்தீயாக பரவும். பிறகு முக்கிய இடங்களில் வால்போஸ்டர்கள் ஒட்டி மக்களைக் கவர்வது வழக்கமாக இருந்தது. இன்ன தியேட்டருக்குப் போனால் இந்தப்படம் ஓடுகிறது என்பதை அதன் மூலமும் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்தது. பாளை மார்க்கெட்டில் ஏ.டி.ஜே பஸ் ஏறினால் அமுதாங்காடி வருவதற்குள் பார்க்கப் போகும் படங்கள் பற்றிய முடிவே  குடும்பத்துக்குள் மாறிப்போகும் அளவுக்கு வால்போஸ்டர்கள் நிறைந்திருக்கும்.

ராம் தியேட்டரில் இந்த முறையை மாற்றி, தங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் படங்களின் விளம்பரம் மற்றும் காட்சிகளை சுவரில் வண்ணச் சித்திரமாகத் தீட்டினார்கள். பாளை எல்.ஐ.சி எதிரில் இருக்கும் ஏ.ஆர்.தேவர் பில்டிங் காம்பவுண்டுச் சுவற்றில் வரையப்பட்ட ஒவ்வொரு படங்களையும் கண்ணாறக் கண்டு கதையடிப்போம். அந்த ஏ.ஆர்.தேவர் பில்டிங் தான் விக்ரமின் “சாமி’’ திரைப்படத்தில் உதவி ஆணையாளர் அலுவலகமாக நடித்தது. இன்னும் நியாபகம் இருக்கிறது, “ஆளவந்தான்’’ வந்தபோது இரட்டைக் கமல்களில் நந்துவின் ஆர்ம் சைஸைப் பார்த்து  “எத்தத்தண்டி’’ என்று சேர்மதுரை வாயைப் பிளந்ததெல்லாம். இப்படி பட விளம்பரங்களை ஊரில் முக்கியமான இடங்களில் வரைந்து வரைந்து கவனம் ஈர்த்தார்கள் புதுப்படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் படங்கள் மாறும். அத்தான் ஒருத்தர் சுவர் ஓவியக்காரராக இருந்ததால் எனக்கு அவரோடு படம் வரையப் போகவும் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தது.

ராம் சினிமாஸ் இன்றைக்கு இணைய தளங்களிலும், சமூக வலைப்பக்கங்களிலும் இயக்கத்தில் இருக்கும் ஒரே தெற்கத்தித் திரையரங்கமாகக் கண்ணில்படுகிறது. சினிமாவை நேசிக்கிறவர்களும், அஜீத், விஜய், விக்ரம், அவர் இவரென்று எல்லாத்தரப்பு  ரசிகர்களும் திரையரங்கத்தோடு அணுக்கமாக நடந்துகொண்டு மாறி மாறி தங்கள் நாயகர்களின் கட் அவுட்டுகளாலும், மாநாட்டுச் சாயல் பந்தல்களினாலும் திரையரங்கை உய்வித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் ஒருமுறை பந்தல்போட்ட இடத்தில் வண்டியைவிட வழியில்லாமல் நிரம்பிப்போக வெளியே வாகனங்களை நிறுத்தி டோக்கன் போட்டு இம்சிக்கிற அளவுக்கு ...

எனக்கு நினைவுதெரிந்து திருநெல்வேலியி்ன் முதல் இரட்டைத் திரையரங்கம் ராம் முத்துராம் தான். எங்களூரின் முதல் ‘மல்டிப்ளெக்ஸ்.’ பழைய பேரெடுத்த பல திரையரங்கங்கள் இன்றைக்கு கல்யாண மண்டபங்களாகவும், ஜவுளிக் கடைகளாகவும், டிராக்டர் கம்பெனிகளாகவும், சொத்துப் பிரச்சனைகளில் சிக்கி சிதிலமடைந்த கட்டிடங்களாகவும் நிற்கையில், புதிய புதிய தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி, தன்னை மேம்படுத்திக்கொண்டே இருந்தது ராம் சினிமாஸ். திருநெல்வேலியில் உலகக்கோப்பை கிரிக்கெட்டை முதலில் தியேட்டரில் போட்டதே அவர்கள் தான்.

காலமாற்றத்திற்குப் பின் “பிழைத்து நிற்றல்’ தியரியில் தப்பித்துக் கொண்ட திரையரங்கம் என்றால் அதற்கு நல்ல சான்றாக  “பேரின்ப விலாஸை”ச் சொல்லலாம். ஆம் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். ஜங்‌ஷனில் இருந்து படம்பார்க்கக் கிளம்புகிற பேர்வாதிக் கூட்டம் பூர்ணகலாவுக்குள் நுழைந்துவிடுவதால் ஆரம்பத்தில் ரொம்ப சிரமப்பட்டவர்கள் மெல்ல திரையரங்கை நவீனப்படுத்தினார்கள். ஒலித்துல்லியம் மேம்படுத்தப்பட்டது. இன்றைக்கு “சென்ட்ரல்’ மாதிரி பழைய அரங்குகள் ஒலி, ஒளி தரத்தில் காமராஜர் காலத்திலே நின்றுவிட, பேரின்பவிலாஸ்  “”பண்டோரா’ கிரகம் மாதிரி அதிசயிக்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். ரத்னா மாதிரி திரையரங்கங்கள் காசைமட்டும் அதிகம் வாங்கிக்கொண்டு இன்னும் நிலக்கரிச் சுரங்கம் போன்ற சந்துகளுக்குள்தான் டிக்கெட் கொடுத்து ரசிகனை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. 

கடைசியாக திருநெல்வேலிக்கு வந்த திரையரங்கமான “பாம்பே” கொஞ்சம் பரவாயில்லை. ஆட்களை மதிக்கிறார்கள். ஹைகிரவுண்டுக்குப் பக்கம் பொழுதுபோக்கு அம்சத்துக்கு வழியில்லாமல் வெறிச்சோடிக்கிடந்த நிலத்தில் அது ஒரு வரம் தான். குறிப்பாகச் சொன்னால் ராம் சினிமாஸ் எப்படி கமல் ரசிகர்களுக்கு(ம்) வரப்பிரசாதமோ! அதுபோல அது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கான கோட்டையாக ‘பாம்பே’ திகழ்கிறது. தியேட்டர் தொடங்கின முதலில் “படையப்பா’ படம் போட்டு பூஜையை முடித்தவர்கள் அவர்கள். 

இன்றைக்கும் புது வருடம் பிறக்கிறது என்றால் டிசம்பர் 31ம் தேதி பாம்பே தியேட்டருக்குப் போய் “தலைவர்’ படம் பார்த்து, சரியாக 11.55க்கு இண்டர்வெல் விட்டு, ஜனவரி தொடக்கத்தின் நள்ளிரவு 12மணிக்கு “”ஹேப்பி நியூ இயர் தலைவா’’ என்று மேளதாளத்தோடு ஆடித்தீர்த்தால் அது எங்கோ போயஸ் கார்டனின் இடதுதிருப்பத்தின் கடைசியிலுள்ள ராகவேந்திரா அவென்யூவிலிருக்கும் ரஜினிகாந்துக்கே வாழ்த்துச் சொல்லியது போல இருக்கும் என்று நினைக்கும் மாவட்ட ரஜினி ரசிகர்களைக் கொண்டிருக்கும் மண் இது.

பாளையங்கோட்டையில் ஈகிள் புக்செண்டருக்குப் பக்கத்துத் தெருவாக உள்நுழையும் தெருவுக்கு புதுப்பேட்டை வடக்குத்தெரு என்று பேர். வாய்க்காலுக்கு இந்தப்பக்கம் குடியிருப்புகளும் அந்தப்பக்கம் பைபாஸ் சாலைவரைக்கும் வயல்களுமாக இருந்க்கும். அந்தத் தெருவில்தான் என்னுடைய “லார்வா’ பருவம் அமைந்தது. புதுப்பேட்டைத் தெருவின் நுழைவாயிலாக, சுப்பையா நரம்பியல் மருத்துவர் வீடும், அடுத்ததாக எழில் பரோட்டாக்கடைக்காரர் வீடும் இருக்கும். அடுத்து பிரம்மாண்டமாய் இருக்கும் காம்பவுண்டுச் சுவர் வீடு (அ) பங்களா ராம் தியேட்டர்ஸ் முதலாளியினுடையது.

(மேற்சொன்ன ஏ.ஆர்.தேவர் பில்டிங்கும் அவர்களுடையதே. அதுவே பழைய திருநெல்வேலி ஆர்.டி.ஓ அலுவலகமும் கூட. இப்போது அது வணிகவளாகம் போல வடிவமைக்கப்பட்டு, நிவேதிதா உணவகம் ஒன்று இயங்குகிறதாக அறிகிறேன். )

ராம் தியேட்டர் முதலாளியின் வீட்டில் வளரும் அயல்ஜாதி நாய்கள் அந்தப் பகுதியில் வசித்த சிறுவர்களுக்கு மிரட்டலானவை. ஏழடி ஆளின் நெஞ்சில் அசால்டாக கால்களைத் தூக்கிவைத்து முகத்தைக் கவனிக்கும் நாய்களின் உயரமும், அதன் தேஜஸும் தெருவெங்கும் பேச்சாகவே இருக்கும். “எம்மா அதமாதிரி நாய் ஒண்ணு வளக்கணும்மா’’ என்றால், “”உன்ன வளக்குறதே பெரும்பாடா இருக்கு’’ என்று பதில் வரும் அம்மைமார்களிடமிருந்து.

இன்றைக்கு ராம் தியேட்டர்ஸின் நிர்வாக இயக்குனராக இருக்கும்  ”ராமசாமி ராஜா’ அப்போது ஒரு சிகப்பு நிற ‘பல்சரில்’ சர்புர்ரென்று தெருக்களில் பறக்கும்போது கவனித்திருக்கிறேன். பல்சர் பைக்குகளின் அறிமுக காலத்தில் டயர் வண்டி ஓட்டுகிற ஒருத்தன் அவரைக் கவனித்திருக்கிறான் என்பதில் எந்த செய்தியும் இல்லைதான். என்ன செய்ய?, எழுதுகிறது என்று வந்துவிட்டால் எல்லாமும்தான் வந்து தொலைக்கிறது. தொடர்பைவிட்டுவிட்டு எங்கோ போகிறேன் பாருங்கள்.

திருநெல்வேலியில் ராம் தியேட்டர்கள் மட்டுமில்லை. பழைய பேலஸ் தியேட்டரில் தொடங்கி இன்றைய மிச்சமிருக்கும் திருநெல்வேலியின் ஒவ்வொரு திரையரங்கத்தின் பின்னாலுள்ள கதைகளை எழுதச் சொன்னாலும் பக்கம் பக்கமாய் எழுதலாம். அவ்வளவு அனுபவித்திருக்கிறேன் ஒரு திலி.காரனாக...

டவுண்“ராயல்” தியேட்டரை மூடிவிட்டு போத்தீஸைக் கட்டிவிட்டார்கள் என்றதும், ஏதோ சொந்த வீட்டை இடித்துவிட்டான்களே என்று வருத்தம் கொள்கிறானே ஒவ்வொரு திருநெல்வேலிக்காரனும் அதெல்லாம் சும்மா வந்து விழும் வார்த்தைகளா என்ன? 

ராயலில் தான் தங்கர்பச்சானின் அழகி படம் பார்க்கப் போனது. “ஒளியிலே தெரிந்த தேவதை” மாதிரி பள்ளிக்கூடத்தில் யூனிபார்மிலே பார்த்துப் பழகிப்போன கூடப் படித்த வேணியை குடும்பத்தினரோடு கலர் உடுப்பில் பார்த்து, கண்மயங்கி நிற்கிற கதையெல்லாம் அங்கே அழியாமல் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு திருநவேலிக்காரனுக்கும்  ஒவ்வொரு நினைவுக்குப்பிகள் சையனைடு மாதிரி கழுத்திலே தொங்கிக்கொண்டிக்கிறது. அந்தந்த இடங்களை பலகாலம் கழித்துக் கடக்கிறபோது சையனைடைச் சப்பிச் சுவைத்து பழசுகளால் மெல்ல மெல்லமாய் உயிர்ப்பித்துக் கொள்கிறது தன்னை.

என்வயசுக்கு முன்னே உள்ள  ‘பழசுகளையும்’, “பெருமைகளையும்’ எழுதுகிற ஆட்கள் ஏகத்துக்கு திருநெல்வேலியில் மூலைக்கு மூலை இருக்கிறார்கள். அவர்கள் பார்த்த திருநெல்வேலியின் அதே பழசை அவர்கள் இடுப்பு உயரத்தில் நின்றுகொண்டு நான் பார்த்த  பார்வையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

என் சையனைடு குப்பியை நான் ருசித்துக் கொள்வது மாதிரி.


-கார்த்திக். புகழேந்தி
13-04-2016.Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்