உப்புவேலி | ராய் மாக்ஸம்


     பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றியதாகவும், அந்த ஆலகால விஷத்தை பரமசிவன் விழுங்கியதும் பார்வதி அவர் கழுத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள, பரமனுக்கு நீலகண்டன் என்று பேர் வந்து தாண்டவம் ஆடியதும் புராணத்தில் கதையாகச் சொல்வதுண்டு,

இதற்கு இன்னொரு மாற்று விளக்கம் ஒன்று வாசித்தேன். பாற்கடலைக் கடைந்தபோது, வெளிப்பட்டது விஷம் அல்ல அது உப்பு என்று. கையிலாயத்தில் கிடைக்காத பொருளும் அதுதானே? பொதுவாகவே மலைப்பாங்கான இடங்களில் உப்பிற்கான ஆதாரங்கள் குறைவு. அங்குள்ள மக்களுக்கும் சரி, விலங்குகளுக்கும் சரி  உப்பு கிடைப்பதில் பெரிய இடர்பாடுகள் உண்டு. கடல்சாரா நிலங்களில் வசிக்கும் காட்டுவிலங்குகளில் யானைகள் தான் உப்புருசி எங்கே கிடைக்கும் என்றுத் தேடியலைந்து உப்புச்சுவையுள்ள மண்ணைக் கண்டுபிடிக்கும். மற்ற விலங்குகள் யானையைப் பின் தொடரும்.  

கயிலாய மலையில் வசித்த சிவனுக்கு உப்புச்சத்து குறைவாகவே கிடைத்திருக்கிறது. அதனாலே பாற்கடலைக் கடைந்தெடுத்த  உப்பை அவர் விழுங்க, தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிக்கு உப்பின் சத்துகள் கிடைக்கும் வண்ணமாக பார்வதி கழுத்தைப்பற்றிக் கொள்கிறார். உடல்சோர்வு நீங்கி பரமசிவன் தாண்டவம் ஆடுகிறார். இப்படியாக நான் வாசித்த வேறொரு புத்தகக் கதை சென்றது. புராணம் என்பதில் மறைபொருட்கள் ஆயிரம் உண்டு என்பதால் அதுபற்றி பெரிதாக காரணம் தேடாமலும், தவிர்க்காமலும் கடந்து விட்டேன்.

சரி இதெல்லாம் வேறு வேறு தொடர்புகள். ஆனால் மனித வாழ்க்கையின் ஆதார ஸ்ருதியாக உப்பு இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்றுவரைக்கும் உப்பில்லாத பண்டம் குப்பையிலே தான். கடல்புரங்களை அருகருகில் கொண்ட தென்னிந்திய, கிழக்கு, மேற்கு கடலோரங்களில் இருந்தே உப்பு இந்தியா முழுமைக்கும் உற்பத்தியாகிறது. மேற்படி வட இந்திய நிலத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் உப்புத்தேவைக்கு பன்னெடுங்காலமாக வங்காளம், குஜராத், தமிழகம், ஒரிசா பிரதேசங்களையே சார்ந்திருக்கிறார்ல்கள். தன் வாழ்நாளில் கடலையே பார்த்திராத வட இந்திய மக்களை நீங்கள் இங்கே மனதில் உருவகம் செய்துகொள்ளவும்.

            சரி இதனால் என்ன வந்தது? அனைத்து மக்களுக்கும் தேவையான, அத்யாவசிய ஒரு உணவுப் பொருளான உப்பின் மீதான வரியை நீக்க, தண்டி கடற்கரையில் உப்புக் காய்ச்சுவதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் காந்தி. அன்றைக்கு கடலில் குளித்துவிட்டு அவர் சிரட்டையில் அள்ளிய உப்பு வெள்ளையர் சட்டத்தை மீறிய செயல் என்று வரலாற்றுப் பாடம் நமக்கு உணர்த்துகிறது. இதன்ன் மூலம் ஆங்கிலேயர்கள் காலனி ஆட்சியில் உப்பின் மீது எக்கச்சக்க வரி விதித்திருக்கிறார்கள் என்ற மேலோட்டமான வரலாற்றை நாம் அறிந்து வைத்தும் இருக்கிறோம்! பிறகென்ன? (உண்மையில் காந்தி உப்புசத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சூழலில் உப்புக்கான வரி முன்னர் காலங்களைவிடக் குறைவுதான் ) 
    உப்பு என்ற வணிகத்தில் ஆங்கிலேயர்கள் சம்பாதித்த பணம் இங்கிலாந்து பருத்தியை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குச் செல்வத்தைக் கொட்டிக்குவித்தது. கிளைவ் இந்தியாவில் குவித்த சொத்துகளால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தையே கைக்குள் வைத்திருந்தான். அத்தனையும் இந்தியர்களிடம் சுரண்டிய பணம். இங்கேதான் ஒரு மாபெரும் வரலாறு நம்மிடையே மறைக்கப்பட்டிருக்கிறது. 1995வரைக்கும் ஒரு குறிப்புகள் கூட இல்லாத இந்திய நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரச் சுரண்டலின் வேரை அதே லண்டனில் இருந்து கிளம்பிவந்து கடைக்கோடி இந்திய கிராமங்கள் முழுக்க அலைந்து திருந்து, ஒரு பெரிய வரலாற்று அடக்குமுறையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். ஆவணக் காப்பாளர் ராய் மாக்ஸம்.

ராய் மாக்ஸம்

 “உப்புவேலி” நாவலை முதல்தடவைக் கையில் எடுக்கும் முன்னே இந்தியாவையே இரண்டாகப் பிரித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நீண்ட வேலியைப் பற்றிய சிலகுறிப்புகள் வாசிக்கக் கிடைத்திருந்தது. முழுமையான ஆய்வுகளோடு கூடிய மொழிப்பெயர்ப்புக்காகக் காத்திருந்த வேளையில்,  ராய் மாக்ஸமின்  "The Great Hedge of India" சிறில் அலெக்ஸ் மொழிப்பெயர்ப்பில் வெளியானதை அறிந்தேன். மிக எதேச்சையாக தோழியிடமிருந்த அந்த புத்தகத்தை வாசிக்கவும் பெற்றிருந்தேன்.

 இந்திய நகரங்கள், கிராமங்கள் முழுக்க ரயில்கள், அரசுப் பேருந்துகள், டோக்ளா வண்டிகள், சைக்கிள் என்று அலைந்து திரிந்திருகிறார் ராய். நூற்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட அந்த ஒரு புதர்வேலியின் மிச்சங்களை நேரில்காண்பதற்காகத் தொடங்கியது அவர் பயணம். அதன் முதல் சுழி விழுந்த இடம் லண்டன். 

இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  ஒரு ஆங்கிலேய அதிகாரியின் நினைவுக்குறிப்புகளை லண்டன் வீதியில் விலைகொடுத்து வாங்குகிறார் ராய். அந்தக் புத்தகத்தில் இந்தியாவையே இரண்டாகப் பிரித்த ஒரு பிரம்மாண்டமான வேலி பற்றிய சிறு குறிப்புகளைக் காண்கிறார். ஆரம்பத்தில், ‘இதென்ன முட்டாள்த்தனமாக இருக்கிறது’என்று, வேலி பற்றிய மேலதிகக் குறிப்புகளைத் தேடத் தொடங்குகிறவருக்கு, இது இங்கிலாந்தின் சுரண்டலின் உச்சமென்று தெரியவருகிறது. 

பழைய வரைபடங்கள், எக்கச்சக்க புத்தகங்கள், பழைய அரசு ஆவணங்கள், கணக்குவழக்கு தொகுப்புகள் என்று தொடர்ச்சியாகத் தேடித் தேடி வாசிக்கத் துவங்குகிறார் ராய். நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் வேலி பற்றியே பேசுகிறார். இந்தியப் பயணத்திற்குத் திட்டமிடுகிறார். தோழியின் சொந்த ஊர் வழியே வேலியின் தடம் செல்கிறதை வரைபடம் மூலம் அறிந்தவர் 1995-2000 ஆண்டுகளுக்குள் ஐந்து முறை இந்தியாவிற்குள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது பயண அனுபவமும், உப்புக்கு வரி விதிக்கப்பட்டதின் ஆரம்பகால காரணங்கள் முதல் யாரெல்லாம் வதைக்கப்பட்டார்கள், உப்பின் விலை உயர்வால் இறந்தவர்கள் யாரெல்லாம், யாருக்கெல்லாம் பலனளித்தது, எதன் காரணமாக வேலி அமைக்கப்பட்டது, வேலி அமைக்கப்பட்ட விதம், அதன் நீள அகல தூரங்கள், தனிமனிதனுக்குத் தேவையான உப்பின் அளவு, உலகப்போரில் செய்யப்பட்ட உப்புச் சோதனைகள் என அத்தனையையும் அலசுகிறார் ராய்.
பண்டைய காலனியாதிக்க இந்தியாவில் உப்புக்கு விதிக்கப்பட்ட வரியோடு சேர்த்து அதன் விலை என்பது இந்திய விவசாயியின் இரண்டு மாத சம்பளத் தொகையை ஒத்திருக்கிறது. உப்புத்தயாரிப்புக்குக் கட்டுப்பாடுகள் விதித்து, விற்பனையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யும் உப்பின் அளவுக்கு உள்ளூர் உப்புக்கு வரி விதிப்பது என்று எக்கச்சக்க அட்டூழியங்கள் புரிகிறது கிழக்கிந்திய கம்பெனியும், பிறகு வந்த இங்கிலாந்து நேரடி ஆட்சிமுறையும். இதனால் தரமற்ற உப்புத்தயாரிப்பும், கொள்ளையும், கடத்தல்களும் உருவாகத் தொடங்குகின்றன.

கடத்தலைத் தடுக்க சுங்க வேலிகளை அமைத்து மக்கள் எல்லையைத் தாண்டாமல் அதன் பராமரிப்புக்கு பாரா காவலர்களையும், அதிகாரிகளையும் நியமித்து, கடத்தல் குற்றங்களுக்கு தண்டனைகளும் வழங்கத் துவங்குகிறார்கள் இப்படி உருவானதுதான் சுங்கவேலி என்ற இந்தியாவின் பெர்லின் சுவர். வடமேற்கில் இமாலயத்தில் துவங்கி கிழக்கில் ஒரிசா வரைக்கும் வளைவெட்டுத் தோற்றத்தில் இந்தியாவின் மீது ஒரு குறுக்குக் கோடு இழுத்ததுபோலச் செல்கிறது அந்தச் சுங்கவேலி. நீளம் 1500சொச்சம் மைல்கள், காவலர்கள் 14000பேர்கள். 

            முன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்திய நிலப்பரப்பில் ஒருபகுதி மக்களுக்கு மட்டும் உப்பு கிடைக்காமல் செய்யவும், அதன் மீது வரி விதித்து உட்சபட்ச லாபங்கள் அடையவும் அவ்வளவு மெனக்கிட்டிருக்கும் கொ(வெ)ள்ளையர்களை நம் வரலாற்றுப் பாடங்கள் இன்னமும் ‘பிரபு பிரபு’ என்று கூழைக் கும்பிடுபோட்டே பாடஞ்சொல்லிக் கொடுக்கிறது.  அதிலும் உப்புவேலிகுறித்த எந்தத் தகவலும் வரலாற்றில் நமக்கு மிச்சமாக இல்லை. ராய் பேசத் தொடங்காத வரைக்கும்.


             “பர்மத் லயின்” என்ற கிராம மக்களில் எஞ்சிய சிலருக்கு இருக்கும் நினைவுகளும், துறவியாகிவிட்ட கொள்ளைக்காரர் ஒருவரின் நிலவியல் அறிவும்தான் மிச்சமிருக்கும் சுங்கவேலியின் சிதைவுகளை ராய்க்கு அடையாளங்காட்டிக் கொடுக்கிறது. இன்றைக்கிருக்கும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் ராயின் தேடல் நெற்றிச் சுருக்க வைப்பது. நிச்சயம் நீங்கள் வாசிக்க வேண்டிய வரலாற்றுப் பதிவு இந்தப் புத்தகம்.

            மற்றபடி சிறில் அலெக்ஸின் மொழிப்பெயர்ப்பு ரொம்ப தட்டையானது. மதன் மாதிரியானவர்களின் கையில் இந்த புத்தகம் சிக்கியிருக்கவேண்டும். வரலாற்றுப் பாடத்தில் உறங்க வைக்கிற ஆசிரியர் மாதிரி சற்றும் சுவாரசியமில்லாத மொழிப்பெயர்ப்பு கூகுள் ட்ரான்ஸ்லேட்டரின் மேம்படுத்தப் பட்ட பொறியாகத் தோன்றுகிறது. இதைச் சொல்லாமல் என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதற்காகவெல்லாம் அவர் உழைப்பை சாதாரணமாக விட்டுவிட முடியாது. உப்புவேலி என்ற நூலின் வழியாக அவர் செய்திருப்பது ஒரு வரலாற்றுப் பதிவு.  

      ராய் மாதிரியானவர்களுக்கு இந்திய நில அமைப்பு தெரியாது; மக்களையோ அவர்கள் வாழ்க்கை முறையோ முக்கியமாக மொழியோ அரசியலோ தெரியவே தெரியாது. எல்லாவற்றையும் முதல் புள்ளியிலிருந்து தொடங்கிக் கற்றுக்கொண்டு தேடிக் கண்டடைந்து எழுதுகிறார்கள். அதனால் அவரால் போகிற போக்கில் வேடிக்கையாகத் தான் கண்ட உண்மைகளைச் சொல்லிவிட முடிகிறது. அதை அப்படியே பதிய சிறில் முனைந்திருக்கிறார்.

நம் ஊரின் புகழ்பெற்ற (Copy & Paste) வரலாற்று, ரஷ்ய, ஜென், சூஃபி, மொழிப்பெயர்ப்பு எழுத்தாளர்கள் இந்த வரலாறுகளைக் கையில் எடுக்கும்போது அரசியல் உள்ளீடுகளோடு சேர்த்தே பல உண்மைகளை அம்பலப் படுத்தமுடியும். உப்புவேலிக்கும் டாடாவுக்கும் உள்ள உறவு என்ன? மஸ்லின் நெசவாளர்களின் அழிப்பில் இன்றைய இந்திய தொழில் ஜாம்வான்களின் முன்னோர்கள் செய்த துரோகம் என்னென்ன? அபினி யுத்தத்தில் சீனாவுக்கு போதைப் பொருள் கடத்திய இந்திய பெருமுதலாளி யார் யார் என்பதெல்லாம் அவர்களால் ஆதாரத்தோடு எழுதமுடியும். அதற்கான தரவுகளும் அவர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் உண்டு. 

ஆனால் பாவம் கார்ப்பரேட்டுகளின் கைவாட்களுக்கு உண்மையை அடியாழம் வரைக்கும் சேர்த்து எழுத முதுகெலும்புத் திசுவுக்குக் கொஞ்சம் குறைச்சல் இருப்பதால் மேலோட்டமாக மேய்ந்துவிட்டுச் செல்வதில் காசு பார்க்கவே நேரம் பத்தமாட்டேன் என்கிறது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

-கார்த்திக். புகழேந்தி

06-04-2016

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்