Sunday, 26 July 2015

சுரேந்திரனின் கதை     சுரேந்திரனின் கதை எங்கே தொடங்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவன் அந்தக் கதையை எங்கே முடித்திருப்பான் என்பது பற்றியும் எனக்குத் தனியாக எந்த புரிதலுமிருக்க வில்லை.  ஆனால் அவன் எப்படியாவது தன் கதையை எழுதிவிடச் சொல்லி என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். எனக்கு அவன் அப்படிக் கேட்பது வேடிக்கையாக இருந்தது. கதைகளை எழுதச் சொல்கிற நிறைய பேரை நான் அப்படியாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தேன் என்ன இப்போதுவரை அப்படித்தான்.

காது வலிக்க வைக்க தன் கதைகளைச் சொல்வார்கள். அதை எழுத்தில் பார்க்க அவர்களுக்குப் பிடிக்கும் போல. இத்தனைக்கும் நான் கதை எழுதுகிறவனில்லை. ஆனாலும் என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று நானும் யோசிக்கவே இல்லை. சொல்கிறவர்களுக்கு அத்தனை ரசனையாக இருக்கும் கதை, கேட்கிற எனக்கு சலிப்பாகவே இருந்திருக்கிறது.

நான் ஒருபோதும் யாருடைய கதையையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுரேந்திரனுக்கு இந்த உண்மை தெரியாததால் அவன் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் அதி தீவிரமாய் என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பான்.

பிள்ளையார்கோவில் வேப்பமரத்தடிதான் அவன் கதைசொல்லுமிடம். காவிப் பட்டையும் வெள்ளைச் சுண்ணாம்பும் உதிர்ந்து போன சுவரில் சாயம் போன லுங்கியை அயர்ன் செய்ததுபோல மடிப்புகலையாமல் கால்களைத் தொங்கவிட்டபடி அவன் உட்கார்ந்திருப்பான். எங்கள் ஏரியாச் சிறுவர்கள் அங்கேதான் கிரிக்கெட் ஆடுவார்கள். சிக்ஸ் அடிக்கக்கூடாது. மூணுபந்தை தொடர்ந்து பேட்டில் வாங்காமல் விட்டால் அவுட்.
ஒன் பிச் கேட்ச் என்று ஆயிரத்து எண்ணூறு நிபந்தனைகளுடன் நடக்கும் மேட்ச் அது.

முளையாமட்டை மாதிரி இருந்துகொண்டு இந்த வினித் பயல் வீசும் பந்தை தொட்டாலும் கெட்டேன். தொடாவிட்டாலும் மூன்றாவது பந்தில் அவுட் என்று கத்துவான். நான் கிரிக்கெட் ஆடிக்கொண்டே சுரேந்திரனை பரிகாசம் பண்ணிக் கொண்டிருப்பேன். அவன் பாட்டுக்கு எதையாவது என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பான். அவனை எனக்கு நான்கைந்து வருடமாய்த் தெரியும். 

திருப்பணிகரிசல் குளம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊரின் பெயரைச் சொல்வான். மிலிட்ரிக்காரர் மகன் என்றால் ஊரில் எல்லாருக்கும் தெரியும் என்பார். பார்த்தால் அப்படித் தெரியலையே என்று கேலிசெய்து வைப்பேன்.  அவனுக்கு உடன்பிறந்தது ஒரு தம்பியும் தங்கையும். இங்கே அவனுடைய மாமன் வீட்டில் தங்கியிருந்து  ஸ்பேர் பார்ட்ஸ் கடை ஒன்றில் வேலைக்குப் போய் வந்துகொண்டிருக்கிறான்.

அவனுக்கு மெக்கானிக் வேலைகள் அனைத்தும் அத்துபடி. மனிமூர்த்தீஸ்வரம் பைபாஸில் ஒருதடவை நடந்து வந்துகொண்டிருந்தபோது அங்கே ப்ரேக் டவுனாகி நின்ற அம்பாஸிடர் காரை அங்கே இங்கே என்று என்னன்னவோ திறந்து, திருகி, மூடி ஸ்டார்ட் செய்துகொடுத்தபோதுதான் எனக்கு அந்த உண்மைகள் தெரிந்தது. 

காலர்பட்டன் வைத்த சட்டைகள் தான் அணியுவான். இடதுகை கட்டைப்பெருவிரலில் நிளமாய் நகம் வளர்த்திருப்பான்.  எம்.ஆர்.ராதா படங்களின் பழைய வி.சி.ஆர் கேசட்டுகள் ரெண்டு அவன் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.  அவனுடைய ஊதா நிறச் சட்டையொன்றில் எஸ்.பி என்று ஒரு எம்ப்ராய்ட்ரரி இருந்ததை கவனித்திருக்கிறேன். பேசும்போது தன் கீழுதட்டை கடித்துத் துப்பிவிடுகிறவன் போல உதட்டை என்னம்மோ செய்வான். ஏண்டா என்றால் எதுவுமே செய்யாதமாதிரி புன்னகைப்பான்.

எப்போதாவது இரண்டு நாள் காணாமல் போய்விட்டுவந்து  ஊருக்குப் போனேன் என்று சொல்லுவான். அப்படி அவன் காணாமல் போன நாட்களில் நான் அவனைத் தேடியிருக்காவிட்டால்கூட அவனாகவே காரணமாகச் சொல்லுவான்.

இப்படித்தான் ஒரு கார்த்திகை தீபத்தன்று சுரேந்திரன்  தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக எதிர்வீட்டு சுதா அக்கா எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிச் சொல்லிவிட்டுப் போனாள். உறக்கத்திலிருந்த எனக்கு எதுவுமே புரியவில்லை.  குமார் மாமாவின் பைக்கை எடுத்துக் கொண்டு ஹைகிரவுண்டுக்குப் போனபோது மெயின் வாசலை அடைத்திருந்தார்கள். ஏ.ஆர்.லைன் ரோட்டைச் சுற்றிவந்து எமெர்ஜென்சி கேட் வழியே உள்ளே நுழைந்தை போது ஒரு பையனும், பொண்ணும் ஒரு வயதான பாட்டியும் அழுது கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மெதுவாக உடம்பு சிலிர்த்துக் கொண்டது. கூடப் பழகியவன் ஒருவன் நெருப்பில் வெந்து செத்துப் போனான் என்பதை அப்போதுதான் ஓரளவாக புத்தி கிரகித்திருந்தது.  பெண்பிள்ளைகளை உள்ளே விடமாட்டேன் என்றதால் சுரேந்திரனின் பாட்டியும் தங்கையும் என்னை யாரோ எவரோ என்று தெரியாமல், “எங்கண்ணனைப் பார்க்கனும் உள்ள கூட்டுப் போங்கண்ணே” என்று கதறித் தீர்த்தார்கள்.

பாக்கெட்டில் முன்னூறு ரூபாய்க்கு மேல் எதையும் எடுத்துவரவில்லை. வார்டில் நின்றுகொண்டிருந்த ஆஸ்பத்திரி ஆளிடம் விஷயத்தைச் சொல்லி கேட்டதும் இருநூறு ரூபாயை வாங்கிக்கொண்டு கதவைத் திறந்துவிட்டான். மணி இரவு 12.59.

சாளைமீனை கல்லில் சுட்டு வறுத்தது போல் வெந்துகிடந்தது சடலம். ச்சே இது யாரோ ஒருவனுக்கு வேண்டுமானால் சடலமாக இருக்கும். இந்த சின்னப்பிள்ளைக்கும் இந்த கிளவுக்கும் அது தங்கள் உயிருக்குயிரான உறவல்லவா? இப்படி அழுகிறார்களே, இந்தப் பயல் பேசாமல் எழுந்துவந்து தொலைந்தால் தான் என்னவாம். அவன் தம்பி வாயோடு வாய் திறக்காமல் ஏங்கி ஏங்கி தவிக்கிறான். மூச்சு முட்டி அழுகிறான். நான் கடைசியாக எப்போது மூச்சு முட்டி அழுதேன்.

நினைவில்லை. கடைசியாக நான் பார்த்த மரணம் செல்லையா தாத்தா சாவு. அன்றைக்கு ஊரெல்லாம் வால்போஸ்டர் ஒட்ட, உறவுக்காரங்களை அழைக்க என்று அலைந்து திரிந்துவிட்டு ஆத்துக்கு வந்து சேர்ந்தபோது நீர்மாலை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆமா சுரேந்திரனுக்கு யார் நீர்மாலை எடுப்பா?  புத்தி பேதலித்தது போல என்னென்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

 “யார்கிட்டயும் மனசுவிட்டு பேசமாட்டான் தம்பி. ஆமை வீட்டைக்கெடுக்கும் ஊமை ஊரைக்கெடுக்கும்ன்னு சொல்லுவாங்க. இந்தப்புள்ள ஒரு இனுக்கு யாருக்கும் தீங்கு செஞ்சதில்ல. எதா இருந்தாலும் மனசுக்குள்ளே  போட்டு போட்டு அரக்கி அரக்கி எம்புள்ள இப்படி கட்டையா வெந்துகிடக்கு பாரு தம்பி”   காலையில் நாலு மணிக்கு பாட்டி அணத்திய வார்த்தைகள் உசுருக்குள் புகுந்து என்னைக் குடையத் தொடங்கியது..

என் கதையை நீதான் எழுதவேண்டும் என்று சுற்றிச் சுற்றி வந்தான்.  ஒருதரமும் காதுகொடுத்துக் கேட்காமல் போய்விட்டேன். யாரிடமும் மனசைத் திறக்காதவன் ஏன் இளவு என்னிடம் சொல்வதற்கு அத்தனை துடித்தான்.

சுரேந்திரனுக்குப் பின்னால் என்ன கதை இருந்திருக்கக் கூடும் என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தவனிடம்...

“எதாச்சும் சொன்னானாய்யா...  நல்லா இருந்தானே, நேத்தைக்கு ஊருக்கு வந்தப்பவும், யாச்சி அல்வா வாங்கியாந்தேன் தம்பித் தங்கச்சிக்கு கொடுன்னு நீட்டுனானே...

ம்புள்ள மனசுமாறி நல்லதா வந்துடுச்சேன்னு அந்த ஆத்தா முப்புடாதிய வேண்டிக்கிட்டேனே. இப்ப அவன் அப்பன் வந்து எம்புள்ளைய எங்கன்னு கேட்டா நான் என்னான்னு பதில் சொல்லுவேன்ன்ன்ன்ன்...”
என்று கிளவியின் அழுகுரல் ஊரையே இரண்டு துண்டாக்கிப் போட்டது. 

 சாவுக்கோழியின்று  மொக் மொக்கென்று தவிப்பதுபோல தொண்டைக்குழியில் எதுவோ அழுத்துகிறது. ஆம் அது அழுகையே தான். காரணம் தெரியாமல் வழியும் அழுகை.

-கார்த்திக் புகழேந்தி.

00:00 21-07-2015.

சாயிபு நண்பன்.
   சுப்பிரமணியபுரத்திலே பெரிய வீடு பைசலுடையது. சாயிபுமார் வீடு என்றாலும் அவர்களைத் தவிர்த்து வாய்க்கால் கரைக்கு அந்தப் பக்கம் வேறு சாயிபு ஆட்கள் இல்லை. பெரிய வீட்டுப் பையனான பைசல் பத்தாவது வரைக்கும் எங்கள் பள்ளிக்கூடத்தில் தான் படித்தான்..  ஊரிலேயே முதல் முதலில் கம்ப்யூட்டர் வாங்கின வீடு அவர்களுடையது. பைசலின் அத்தா ஊரறிந்த கால்நடை மருத்துவராக இருந்தார். ரயில்வே பீடர் ரோட்டுக்கு முன்னால் இருக்கும் பள்ளிவாசல் நிலம் இவர்களுடையது தான்.  

பள்ளிக்கூடத்திலே எனக்கென்று ஒரு கேங்க் இருந்ததால் 
எத்தனைத் தப்புத்தண்டாக்கள் நிகழ்ந்தாலும்  “கூப்பிடு குணசேகரனை” என்பார்கள். காலப்போக்கில் அது ஒரு சொல் வழக்காகவே மாறியிருந்தது. ஒன்று தப்பை விசாரிக்க அழைப்பார்கள். அல்லது “நீ பண்ணலைன்னா வேற யாரு பண்ணிருப்பா சொல்லு” என்பார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தில் 
வம்புதும்புகள் செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட  காதாப்பாத்திரத்தை நான் ஏற்றிருந்தேன்.

பைசலுக்கும் எனக்கும் நெருக்கம் தொடங்கியது எட்டாவது துவக்கத்தில். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்... காலாண்டு கொஸ்டீன் பேப்பரை கைமாற்றிக் கொண்டதிலிருந்து... 

முத்துக்குமார் என்ற மணப்படை வீடு  ஊர்க்காரன் ஒருத்தன் எங்கள் கேங்கில் இருந்தான். கூட்டத்துக்கு ஒருத்தன் சம்பந்தமே இல்லாமல் ஆள் வளர்த்தியாக மீசையும் தாடியுமாக எட்டாவது படித்துக் கொண்டிருந்தாலே புரிந்துகொள்ளலாம் ஆள் படிப்பில் மட்டும் மக்கு என்று.  

அவனுக்காகத் தான் முதலில் டயோசீசன் பிரஸ்ஸில் கொஸ்டீன் பேப்பரை கை வைத்தது. வாய்க்காலுக்கு இந்தப்புறம் இருந்த புதுப்பேட்டைத் தெரு உலகம்மன் கோயில் வீதியில் ஒரு பழைய கட்டிடத்தை விலைக்கு வாங்கி அந்த அச்சகத்தைக் கட்டியிருந்தார்கள். 

ஸ்டேட் போர்டு பள்ளிகளுக்கான கேள்வித்தாளெல்லாம் இங்கேதான் அடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட நல்ல நாளில் மாரிமுத்துவை கிரிக்கெட் பாலை எடுக்க அனுப்புவது போல உள்ளே அனுப்பி எட்டாம் வகுப்பு பரிட்சைக்கான கேள்வித்தாளை உருவி எடுத்துவரச் செய்தோம்.

கொஞ்சம் சுமாராகப் படிப்பவன் என்றாலும் தமிழ் முதல் தாளுக்கு எந்தெந்த கேள்வியெல்லாம் வருமென்று எங்கள் கேங்குக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தேன். அத்தனையும் அப்படியே வர நாளாவட்டத்தில் இவனுங்களுக்கு மட்டும் எப்படி எல்லா கேள்வியும் தெரிந்திருக்கிறது என்று ஒரு கூட்டம் என்னை மோப்பம் பிடித்துக்கொண்டது.

அப்படி வந்தவரில் ஒருத்தன் தான் எட்டாம் வகுப்பு ஏ செக்சன் பைசல். இங்லீஷ் மீடியத்தில் படித்தாலும் தமிழில் உள்ள கேள்விகளை அப்படியே ஆங்கிலத்தில் பிட் வைத்துக்கொள்ளச் சொல்லிக்கொடுத்தேன். அதே கேள்விகள் அப்படியே வரிசைக்கிரமாமாக வரஆச்சர்யத்தில் வாய்பிளந்து போனான். 

“டேய் குணா எல்லா கேள்வியும் அப்படியே வந்திருந்துச்சு, எப்டிடா” என்றவனிடம் உண்மையைச் சொல்லவில்லை."எல்லா எக்ஸாமுக்கும் எனக்கு கொஸ்டீன் சொல்லித் தருவியா” என்று அப்பாவியாகக் கேட்டு என்னோடு நண்பனாகிக் கொண்டான்.

அதுமுதல் எப்போது பார்த்தாலும் எங்கள் கூடவே சுற்றத் தொடங்கினான். எனக்கும் சேர்த்து மூன்று கேரியரில் சாப்பாடு எடுத்து வந்தான். அசைவ ருசியை அனுபவித்துத் தின்னுவதற்காகவே அவனைச் சுற்றி வளைத்தது என்கூட்டம். பைசலிடம் கிரிக்கெட் பேட் புதுசு இருந்தது. நாங்கள் தென்னமட்டையை தூரப் போட்டோம். ஜாதிக்காய் பலகையில் செதுக்கின கட்டையை பைரன்னருக்கு பயன்படுத்த துவங்கினோம். ரப்பர் பந்துகள் தொலையத் தொலைய வாங்கித் தந்தான். 

ராஜேந்திரன் ஸ்போர்ட்ஸ்&கோ வே கதியெனக் கிடந்த காலம் அது. இப்போது கடையை விற்றுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் போல அந்த வழுக்கைத் தலை முதலாளி. 
ஒனிடா ஷோரூமில் வேர்ல்ட் கப் பார்த்துக் கொண்டிருந்தவனை உங்கள் வீட்டில் டீ.வி இல்லையா என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்தான் பைசல்.

 “இங்க பார்த்தாதான்டா சிக்ஸு போருக்கு விசிலு பறக்கும்” என்பேன். உண்மையில் நம் வீட்டில் டீவி இல்லை என்பதை இவனிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கினேன்.

தினமும் சாயந்திரமானால் குயின்ஸ் பேக்கரியில் ரஸ்னாவும் பப்ஸும் வாங்கிக் கொடுப்பான். முருகன்குறிச்சி பெட்ரோல் பல்க்கில் அப்போது ஐஸ் வாட்டருக்கு தனி மெஷின் மாட்டி இருந்தார்கள். கதீட்ரலில் படிக்கும் கூட்டம் குளிர்ந்த தண்ணீருக்கு அப்படி ஒரு அடி போடும்.  நீ வா நம்ம வீட்டுக்கு என்று பைசல் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். அவர்கள் வீட்டில் ஒன்னரை ஆள் உயரத்தில் ரெஃப்ரிஜிரேட்டர் இருந்தது. 

தரையை சுத்தம் பண்ணும் வேக்குவம் மெஷினை ஆச்சர்யமாகப் பார்த்தேன். வீட்டில் எல்லாரும் வெளியில் போயிருக்காங்க இன்னொரு நாளைக்கு எல்லாரையும் பார்க்கலாம் என்றான். பைசலுக்கு ஒரு அண்ணன் ஒரு அக்காள்.  வீட்டில் இளைய பிள்ளை என்பதால் கேட்டதெல்லாம் வாரி இறைப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டது மனசு.

இது எப்படி வேலை செய்யும் என்று கேட்டதும் கம்ப்யூட்டரை போட்டுக் காட்டினான். யாஹூ என்றால் என்ன என்று அவன் தான் ஏதேதோ சொல்லிக்கொடுத்தான். ப்ரௌசிங் என்பதை ஏதோ ‘தப்பான படங்கள்’ பார்க்கும்  வார்த்தையாக பயந்து பயந்து சமீர் அண்ணன் கம்ப்யூட்டர் கடையில் சொல்லி, கடைசியில் பைக் ரேஸ் மட்டும் விளையாடிவிட்டு வந்தேன்.  பைசலோடு சேர்ந்தபிறகு தப்புத் தண்டாக்களில் ஈடுபடுவது குறைந்துபோனது.  என்ன ஒன்று இந்த மினி ஜெராக்ஸ் எடுத்து பிட்டடிப்பது மட்டும் தனியே தொடர்ந்து கொண்டிருந்தது. 

பைசலிடம் டிவிஎஸ் ஸ்கூட்டர் ஒன்று  இருந்தது. அதை அவன் பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வந்ததில்லை. கியர் சைக்கிள் வைத்திருந்த ஒரே பணக்கார வீட்டுப் பையன் அவன்தான். 
இரண்டுபேருமாய் வ.ஊ.சி மைதானத்தில் கையை விட்டு கியர் சைக்கிளில் பறந்தோம். ஊர் சுற்றுவதற்கு பழக்கம் கற்றுக் கொடுத்தேன்.

பொங்கல் தினங்களில் மணப்படைவீடு- கீழநத்தம்
இடையே உள்ள வெள்ளிமலை ஏறிச் செல்லும் சைக்கிள் பந்தயம் பிரசித்தம். கட்டையன் என்கிற ரமேஷுக்கு கீழநத்தம் தான் என்பதாலும், தேனெடுக்க அவன் ஊருக்குச் சென்று வந்த பரிச்சயத்தாலும் நானும் பந்தயத்தில் கலந்துகொண்டதுண்டு.  

ரேசுக்கு முதல்நாளே சைக்கிள் மக்கார்டு, செயின் கவர் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு எடையை குறைத்துவிடுவது. போக்கஸ் கம்பிகளை முறுக்கேற்றி பிரேக்குகளை தூர எடுத்துவிடுவது.

நாலைந்துமுறை கலந்துகொண்ட சைக்கிள் பந்தயத்தில் பச்சேரிக்காரப் பசங்களே  எப்போதும்  ஜெயிப்பார்கள். உழைத்து உழைத்து இறுகிய உடல்வாகு அப்படி. கோப்பை வழங்கும் போது நிலத்துக் காரர்கள் வன்மமாகத் திட்டுவார்கள். அடிதடி தொடங்கும். எவன் காதாவது அறுந்து விழும். தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று அண்டன் சவுண்ட் சர்வீஸ் ஊரைக்கூட்டி பாடிக்கொண்டிருக்கும்.

நானும் வரட்டா என்று கேட்ட பைசலை ஒருதரம் சைக்கிள் ரேஸுக்கு அழைத்துப் போயிருந்தேன். கியர் சைக்கிளுக்கெல்லாம் அனுமதி இல்லையென்றுவிட்டார்கள்.  “உன் சைக்கிள் கொடேன் குணா” என்றான். உனக்கில்லாததா என்று கொடுத்ததும் போட்டியில் கலந்து கொண்டான். 

யார் எவரென்று தெரியாத ஊர் பந்தயத்தில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் முதல்தடவையாக அசலூர்க்காரன் பந்தயக் கோப்பையைத் தட்டிச் சென்றது எல்லாருக்கும் ஆச்சர்யம். 
எனக்கே கூட ஆச்சர்யம் தான். பைசல் முதலாவதாக வந்து மூன்று நிமிடம் கழித்துத்தான் அடுத்தவனே வந்திருந்தான். நம்ம சைக்கிள்லயா இவன் ஜெயிச்சான் என்பதை நம்பவே முடியவில்லை. தவிர அந்தவருடம் எந்த பிரச்சனையும் செய்ய வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.

கோப்பையை வாங்கிவிட்டு திரும்பும் வழியெங்கும் சந்தோச புளகாங்கிதம். சுப்பிரமணியபுரம் வந்ததும் இதை நீயே வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடு என்றான். எனக்கு ஒண்ணும் புரியலை.  உன் சைக்கிள் தானே ஜெயிச்சுது என்று கோப்பையைக் கையில் திணித்தான். இவன் என்ன மாதிரி மனுசன்.

அந்த வருடம் ரம்ஜானுக்கு பைசல்  வீட்டுக்கு போயிருந்தேன். பைசலின் உம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, பின்கட்டுக்குப் போய், சந்தையிலிருந்து ஆள் வந்து வரிசையாக ஆடுகளைக் கட்டித் தொங்கவிட்டு உரித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். 

கோயில் கொடைகளில் கறி தனியாய் தோல் தனியாய் முடி ஒட்டாமல் ஆடு உரித்து அனுபவம் இருந்ததால் நானும் கைவேலையைக் காட்ட ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள். மணமணக்கும் பிரியாணி தயாரானதும் அந்த வாடையிலே சொக்கி விழுந்துவிட்டேன்.

நெஞ்சு முட்ட தின்று முடித்து... தூக்கு வாளி தூக்குவாளியாக எல்லார் வீட்டுக்கும் நானும் பைசலுமே ஸ்கூட்டரில் போய் பிரியாணி கொடுத்துவிட்டு வந்தோம்.  “இது சின்ன பெருநாள். பக்ரீத் தான் பெரிய பெருநாள்” என்றான். மாமாவீடு என்று சுலைமான் இல்லத்திற்கு அழைத்துப் போனான். 

தாடி மெல்ல நரைத்த பெரியவருக்கு வணக்கம் வைத்தேன். நண்பன் என்று அறிமுகப்படுத்திவைத்தான்.  அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். வீடு நிறைய புத்தகங்கள் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்த என்னை தன் வீட்டு நூலகத்தை சுற்றிப் பார்க்க அனுமதித்தார் திவான் பாய். பிறை பற்றியும் ரமலான் நோன்பு பற்றியும் கேட்டதற்கு பொறுமையாய் விளக்கம் சொல்லிக் கொடுத்தார். ஒரு பெரிய வரலாற்று ஆசிரியர் வீட்டில் நின்று கொண்டிருக்கிறோமென அப்போது தெரியாது. அங்கிருந்து சாந்திநகர், கே.டி.சி நகர் என்று இன்னும் பலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றான். 

பைசலோடு வெகு நெருங்கிய சினேகம் துவங்கி மூன்றாண்டுகள் முடிந்தபோது, நாங்கள் சொந்தவீடுகட்டி  செந்தில் நகருக்குக் குடிபுகுந்தோம். எப்போதாவது மேட்ச் ஆட மட்டும் வ.ஊ.சி மைதானத்துக்கும், பைசல் வீட்டுக்கும் வந்து போய்க் கொண்டிருந்த ஒட்டு சிலநாட்களில் நின்றும் போனது.

ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் மட்டும் கட்டாயம் பைசல் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிடும். தண்ணீர் வாளி நிறைய பிரியாணியும், வெங்காயச் சம்பல் ஒரு செம்பும் கொடுத்து விடுவது வாடிக்கையாகவே இருந்தது. பிறகு சென்னையில் வேலைகளுக்காக இடம்பெயர்ந்து இந்த தொடர்புகள் துண்டித்துப் போனது.

அப்பல்லோவில் ஒரு க்ளையண்டைச் சந்திக்கச் சென்றபோது பைசலைச் சந்தித்தேன். ஆள் இரண்டு தேகமாக இருந்தான்.  முகத்தில் மூப்பு தெரிந்தது. நிக்காஹ் முடிந்திருந்தது. இரண்டு பிள்ளைகளாம். உம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று இங்கு சேர்த்திருப்பதாகச் சொன்னான். 

மருத்துவமனை லாபியிலே நின்றுகொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க குணா” என்றான்.   ‘சோத்துக்கு ஒரு வேலையும் சுயத்துக்கு இந்த எழுத்தும்’ என்றேன்.

 “அடப் பார்டா நம்ம ஃப்ரெண்டு ஒருத்தன் எழுத்தாளராயிட்டான்” என்று கட்டிக்கொண்டு சிரித்தான். பழைய தொகுப்பு ஒன்றைக் கையில் கொடுத்தேன். வாங்கிப் புரட்டியவன் மகிழ்ச்சியான முகத்துடன் “இதுக்கு எவ்ளோ” என்று பணத்தை விரித்தான். உள்ள வைங்க சார்வாள் என்று கையமர்த்திவிட்டு போன் நம்பரை வாங்கிக் கொண்டேன். 

இங்கே தான் தேனாம்பேட்டையில் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இப்போதைக்கு தங்கியிருக்கிறோம். உம்மா குணமானதும் ஊருக்குக் கிளம்ப வேண்டுமென்றான். 

 “நல்லது சென்னைக்குள்  என்னதும் உதவின்னா என் நம்பருக்குக் கூப்பிடு” என்று சொல்லிவிட்டுத் திரும்ப நடந்தேன். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்த நண்பர்களில் பைசல் பெயரையும் குறிப்பிட்டிருந்தது பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது.

-கார்த்திக். புகழேந்தி 
17-07-2015


தூரக்கிழக்கு கரையோரம் தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்!கிருபா மோசஸ் வாத்தியார் வீட்டில் தான் அப்போது கிராமபோன் இருக்கும். பித்தளையில் வாய் விரிந்து நிற்கும் கூம்பு பாத்திரத்திற்குள் எப்போது தலையை விடலாம் என்று பார்க்கும் நாயின் படம் போட்ட, வட்டமான ஹெச்.எம்.வி இசைத்தட்டுகளை சதுர அட்டையில் பேக் செய்து வைத்திருப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு வந்ததும், மத்தியானத்து கோலா உருண்டையும், கோழிக்கறியும் பொறித்து வேகும் வரைக்கும் வெஸ்டர்ன் இசையில் சிம்பொனிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். கிர்ர்ர்ர் என்று எப்போதாவது இரைந்ததும் மோசஸ் வாத்தியாரின் மகன் சாம் வந்து, முள்கட்டையை விலக்கி, இசைத்தட்டை திருப்பி, துடைத்து... இப்படி  என்னென்னவோ செய்வார். கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பேன்.

விக்டர் வீட்டில் ரேடியோகிராமுடன் கூட கிராமபோன் இருந்தது.
அதன் அளவைச் சரியாகச் சொன்னால் இரண்டு கம்ப்யூட்டர் டேபிள்களை நீளவாக்கில் வைத்தால் எப்படியிருக்கும். அப்படியொரு இசை மேசைக்குள் இடதுபக்கம் கிராமபோன், வலதுபக்கம் ஏதோ பழைய ரஷ்யப் படங்களில் வரும் ரகசியகுறியீடுகளை அனுப்பும் கருவி போல நிறைய திருகல் உருண்டைகளுடன்  ரேடியோகிராம் இருக்கும்.

முன்னாள் மிலிட்டரிக்காரரான சங்கரலிங்கம் தாத்தா வீட்டில் “மர்பி முஸாபிர் 400” மாடல் டிரான்சிஸ்டர் இருந்தது. எக்ஸைல் தீர்வை, விற்பனை வரி எல்லாம் கட்டி 293/- ரூபார் ரேடியோவை முன்னூறு சொச்சத்திற்கு வாங்கியிருந்தார். நான் சொல்லுவது 1950களில்.

டிரை பேட்டரி கட்டைகள் போட்டு, சுவிட்ச்சைத் தட்டி உருளையைத் அங்குமிங்குமாகத்  திருக்கினால்   முள் எப்போதாவது இறக்கப்பட்டு ஆகாசவானி, சிலோன் ரேடியோ, சிற்றலை ரேடியோ ஏதாவது எடுக்கும். புத்தம் புதிய பாடல்கள் எல்லாம் ரேடியோவில் கேட்க ஒலியும் ஒளியும் தான் அப்போதெல்லாம். எண்பதுகள் வரைக்கும் கூட ரேடியோவில் கேட்க வேண்டுமென்றால் மூன்று வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

கிர்ர்ர்...ஒய்ய்ய்ய்யுங்....க்யூங்ங்ங்ங் கிர்ர்ர்..... என்ற ஒலிகளுக்கு நடுவே ஆகாசவானியின் இரவு நேரச் செய்தி அறிக்கை  எட்டிப் பார்க்கும். செய்தி கேட்கும் தாத்தன்கள் தான் அப்போது ஆலமரத்தடி இண்டலெக்சுவல் பேர்வழிகள். ஒன்னுமண்ணாகக் கூடி உட்கார்ந்து
சிலோனில் விழும் குண்டுகளின் எண்ணிக்கையை மறுநாள் கணக்குத் தப்புதப்பாமல் விளக்கிக் கொண்டிருப்பார்கள்.  தியேட்டர்களில்  மழை பெய்யும் கோடுகள் விழுந்து பார்த்திருப்பீர்கள். ரேடியோவிலே மழை பெய்யும் பாடல்களை அப்போது கேட்க முடியும்.

தாத்தாக்களின் காலம் முடிந்து அம்மாவின் காலம் தொடங்கிய போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அது டேப் ரிக்கார்டர்.  பம்பாய்க்கு பருத்தி விற்பனைக்குப் போய்விட்டு வந்தபோது பெரியமாமா கரோக்கி கம்பெனியில் இரட்டை ஸ்பீக்கர் வைத்த  டேப் ரிக்கார்டர் வாங்கி வந்திருந்தார். கூடவே பங்கஜ் உதாஸின் கஜல் பாடகள் அடங்கிய கேசட் ஒன்றிரண்டை வாங்கி வந்திருந்தார். அர்த்தமே புரியாத இந்திப் பாடல்கள் ஊரைக் கூட்டி ஒலித்துக் கொண்டிருந்தன.

தமிழ்ப் பாடல்கள் எல்லாம் கேசட்டுகளில் வெளிவந்த காலம் தான் பொற்காலம். ள் கருப்பு, மஞ்சள், ரோஸ் என விதவித வண்ணங்களில் பாடல்கேசட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருந்தது. பாளையங்கோட்டை அன்னபூர்ணா சந்திப்புக்கு எதிரே இன்றைக்கும் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் கேசட் கடை அப்போது ஊருக்கே இசைச் சுரங்கம்.

வீட்டுக்குப் பின்பக்கம் கலைவாணித் தியேட்டர் சுவர் இருந்தது.  படம் போடுவதற்கு முன், இடைவேளையின் போது என நேரங்காலமில்லாமல் புதிய பறவை படத்தில் வரும் பார்த்த நியாபகம் இல்லையோ பாடலை ஒலிக்க விடுவார்கள். அந்த இசை அப்படியே மனப்பாடம். வீட்டில் இரண்டு தங்கச்சிகள். ஒன்று பெரிய மாமன் போலவே இசைப் பையித்தியம். பாட்டுக் கேட்பதற்காகவே பக்கத்துவீட்டுக்குப் போய்வந்து கொண்டிருந்த பழக்கத்தை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டதும், “அப்போ எனக்கு பாட்டு கேசட் வாங்கி வந்து தா” என்று அதிகாரம் பண்ண அன்றைக்கு முதல் பாட்டுக் கேசட்டுகள் வீட்டை நிறைக்கத் துவங்கியது.

அந்த மூத்த தங்கை வேறு யாருமில்லை அம்மாதான்.
சின்ன தாயி படத்தில் வரும்,
 “நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல” பாடலை எத்தனை முறை கேட்டிருக்கும் என்று தெரியாது.. பீடி சுற்றும் போது, மாட்டுக்கு தண்ணிகாட்டும் போது என்று எப்போது பார்த்தாலும் இந்த பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.


 “தூரக்கிழக்கு கரையோரம் தான்
தாழப்பறந்து வரும் மேகம் தான்
உன்கிட்ட சேராதோ என்பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாறதோ” என்று ஆண்குரலில் வரும் வரிகளை ஏற்ற இரக்கங்களோடு பாடுகிற யாரோ ஒருத்தன் அவளை நேசித்திருக்கக் கூடும். பருவங்களில் வரும் இந்த இசைக்காதல் கதைகள் மிகச் சுவாரஸ்யமானது. ஆனால் அதை பெரிய திரைபோட்டு மூடி மறைக்கப்பட்டு விடப்படும். நான் பிறகொருநாள் தோண்டித் துருவி கேட்டுக் கொண்டேன்.

கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் போது அந்த கரோக்கி டேப் ரிக்கார்டரை தங்கைக்கே சீதனமாகக் கொடுத்து வழியணுப்பிவிட்டார் பெரிய மாமா. போன இடத்தில் கேசட்டை மாற்றாதவள் பாடலை மாற்றிக் கொண்டுவிட்டாள் போல..

“கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலமாட சாமி
சுடல மாட சாமியும் நாந்தான்  பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி….”  

தனக்குப் பிடித்த பாடல்களை எல்லாம் பேப்பரில் எழுதிக் குடுத்துவிட, தன் பொண்டாட்டி மனம் கோணாமல் நடக்கும் கணவன் அதை அப்படியே கேசட்டுக் கடைக்காரனிடம் கேட்டுப் பதிந்து வாங்கி வரும் கதையெல்லாம் சிலாகித்து எழுதலாம்.

திரைப்படங்களின் கதை-வசனங்கள் அப்போது ஏகத்துக்கும் பிரபலம். கேசட்டுகளில் கமல், ரஜினி படங்கள் மட்டுமில்லாமல் கரகாட்டக்காரன் போன்ற செந்தில் கவுண்டமணி ஜோடிபோட்ட படங்களும் டேப்ரிக்கார்டரில் தன் பங்குக்கு ஊரை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது.  ரேடியோவிலும் திரைச் சித்திரங்கள் அப்போது பிரபலம்.  திரைப்பட கதாசிரியர், இயக்குனர்களை எல்லாம் மிஞ்சிவிடும் அளவுக்கு வசனங்களை ஞாபகார்த்தம் கொண்ட இளசுகள் பல வீடுகளில் இருந்தார்கள். 

அக்காள் தலையெடுத்த போது வீட்டிற்குள் டிவி பெட்டி நுழைந்திருந்தது. ஒலியும் ஒளியும் எல்லாம் பழையதாகிவிட்டதென்றே சொல்லலாம். சனிக்கிழமை மட்டும் சக்திமானுக்காக நாங்கள் ஒரு கூட்டம் பயல்களாகத் திரள்வோம் டிவிப்பெட்டி முன்னால், உட்கார ஒருவனுக்கும் இடமில்லாமல் நெல்லு மூட்டை, பரணுக்குச் செல்லும் ஏணி, முக்காலி, கட்டில் முனை என்று பத்து இருபது பேர் அந்த சின்ன அறைக்குள் விசிறிக்குச் சண்டை பிடித்துக் கிடப்போம்.

ராஜு அண்ணன் ப்ளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தான் டெக், படக்கேசட் வாடகைக்கு விடும் கடைக்காரனில் இருந்து ஆண்டனா காரன் வரைக்கும் அத்தனைபேரையும் தெரியும்.  “ஜமீன் கோட்டை” படத்தை ஊரே இரவுப் பொழுதில் விழித்துக் கிடந்து பார்த்தது. மறுநாளைக்கெல்லாம் எனக்கு தங்கையா தாத்தா விபூதி அடித்துக் கொண்டிருந்தார். கிழத்துக்குத் தன் பேரில் ஒரு பெருமை.  “கும்பக்கரை தங்கையா” படத்தின் பேப்பர் கட்டிங்கை த  வீட்டுக் கதவில் ஒட்டியிருக்கும்.

வாடகைக் கேசட்டு காலம் முடிந்து கேபிள் வயர் வீட்டுக்குள் எட்டிப் பார்த்த போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், குதிரை றெக்கை முக்கோணத் துடன் விஜய் டிவி எல்லாம் பொழுதன்னைக்கும் ஓடிக் கொண்டிருந்தது.
அக்காளைக் கட்டிக் கொடுக்கும் வரைக்கு சுமங்கலி கேபிள் விசனில் ஓடும் ஒரு பாட்டையும் விடமாட்டாள்.  டி.வி மீது அவள் தம்பிக்கு பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது அவளுக்கு அப்படி ஒரு வசதி.

எண்ணேய் தேய்த்து இரட்டைச் சடை பின்னிக்கொண்டிருக்கும் போதே ஹஸ்கியாகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள். உஷா டெய்லர் மெஷின் சத்தத்தையும், கத்திரிக்கோலின்  “கீரிச்சிக்” என வெட்டும் சத்தத்தையும் மீறி பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சீலை.

பெப்சி உமாவுக்கு போன் போட்டு பிடித்த பாடலைக் கேட்ட அன்றைக்கு தெருவுக்கே ஆசை சாக்லேட் வாங்கிக் கொடுத்து அதை பெரிய இமாலய சாதனையாக  ஜெரோமி வீட்டில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டில் ரொம்பகாலமாகவே டெலிபோன் இருந்தது. தெருவில் எல்லோருக்கும் அவர்கள் வீடுதான் செய்திப் பெட்டி.

சன் மியூசிக் வந்தபிறகு கேபிள் டிவிக்காரர்களுக்கெல்லாம் கொம்பு முளைத்துவிட்டது. அதற்கு முன்பு வரை ஒனிடா டி.விக்கு மட்டும் தான் கொம்பு இருந்தது. காசு தரலையின்னா கேபிள் வராது என்று மிரட்டவே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது தான் தெற்குபஜார் லூர்து நாதன் சிலைக்கு பக்கவாட்டில் உள்ளச் சுவரில் இப்படி ஒரு விளம்பரம் இருந்தது “கேளுங்க கேளுங்க”

என்ன எளவு இது என்று எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது உதயமானது  “சூரியன் எஃப்.எம்”. இரண்டாம், மூன்றாம் தலைமுறை  ஆட்களைப் பைத்தியமாக அடித்தது.

பெப்சி உமாவுக்குப் போனடிக்க முடியாத வருத்தத்தில் இருந்தவனெல்லாம், வண்ணாரப்பேட்டை சூரியன் எஃப். எம்முக்கு போன் செய்து தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொண்டார்கள். ஏர்செல் மாதிர்யான நிறுவனங்கள் அப்போதுதான் 300 நகரங்கள், 555 , 700 என்று தங்கள் சேவையை தெற்குப் பகுதிகளில் பரப்பிக் கொண்டிருந்தது. செல் போன் வாங்காதவன் கூட நூறு ரூபாய்க்கு பெப்ஸி ஐஸ் பேட்டரி சைசிலிருந்த எஃப்.எம்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடந்தார்கள்.

பூதக்கண்ணாடி தவிர்த்து பாக்கெட் கண்ணாடி வைத்திருக்கும் அகஸ்டின் வாத்தியாரின் கண்ணாடி டப்பா போல கோல்டு, சில்வர் கலர்களில் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள் பாக்கெட் எஃப்.எம்மை. கொக்கிரகுளம் தனலட்சுமி ரேடியோக் கடைக்காரர்கள் கூட தங்கள் அனுபவத்தில் அத்தனை ரேடியோக்கள் விற்றிருக்க முடியாது.  என் பங்குக்கு நானும் ஒன்று வாங்கி பேட்டரி தீரும் வரை பாட்டு கேட்டு பிறகு பேட்டரி வாங்க காசில்லாத ஓர்நாள் அதை உடைத்து உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தேன். உள்ளே இளையராஜாவுமில்லை.. எம்.எஸ்.வியுமில்லை...

பிறகுதான் செல்போனிலே ரேடியோ வந்தது. எம்.பி.த்ரி ப்ளேயர்,  வீடியோ, ஐபாட் என்று இன்றைக்குத் தொழில்நுட்பம் வரை எத்தனையோ மாற்றங்கள் தொடர்ந்தாலும் அம்மா மட்டும் ஏனோ, தனக்குப் பிடித்த சின்ன தாயி படப் பாடலை எப்போதும்  முணுமுணுப்பதே இல்லை...


  "என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
திண்டாடி நிக்குறனே இக்கரையிலே...”

-கார்த்திக். புகழேந்தி.
26-07-2015.Saturday, 11 July 2015

எங் கதெ - இமையம்எதேச்சையாக எழுத்தாளர் இமைய(ம்)த்தைச் சந்தித்தேன். முரளிகிருஷ்ணன் தான் அறிமுகப் படுத்தி வைத்தார். சாவுச் சோறும், கோவேறு கழுதைகளும் இமையம் என்ற படைப்பாளனோடு என்னை ஏற்கனவே வாசிப்பினால் நெருக்கி விட்டிருந்தது.

சமீபத்தில் வந்த “என் கதெ” வாங்கிப் படிக்க நினைத்துக் கொண்டேயிருந்தேன். வாசிக்கிறவன் பிரச்சனை இந்த “நினைத்துக் கொண்டே இருப்பது மட்டும் தான்”. இறுக்கக் கையைப் பற்றிக்கொண்டு என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான். நிகழ்காலத்து இறப்புகளின் மீதான கதையாளர்களின் பார்வை படாதது குறித்து அவருக்குள்ளிருந்த  உக்கிரமான வார்த்தைகள் சில மிதந்து விழுந்தன.

நெருக்கடிகாலத்தில் இல்லாமலாக்கப்பட்ட ராஜனின் தந்தை தன் ,அகனை எழுதுகிறார். மலையாளத்தில் பாலியல் தொழிலாளியான பெண்ணொருத்தி தன் கதைகளை எழுதுகிறாள். இங்கே எழுதுகிறவர்கள் தன் பழங்கதைகளை இன்னும் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்களென சில நிமிடங்களுக்குள் அவர் பார்வையை தீட்டிக் காண்பித்தார்.

 “எங்கதெ” குறுநாவலை கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டேன். பேரன்புடன் தம்பிக்கு என்று எழுதியிருந்தார். சில மணிநேரங்களுக்குள் பாதிப் பக்கங்களை வாசித்து நகர்ந்திருந்தேன்.  கோடை நாளில் பொட்டு பொட்டென ஓட்டுக்கு மேலே தடித்த மழையடிக்குமே அப்படியான எழுத்து இமையத்துடையது...

- கார்த்திக் புகழேந்தி
11-07-2015  

Friday, 10 July 2015

1550கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம்


கடந்த மாதத்தின் இறுதியில் ஒரு வாரம் திட்டமிட்டபடி ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பினேன். இடையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்தது. முதல் சுவாரஸ்யமே சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு டூவீலரில் புறப்பட்டது.. (தலைகவசம் உட்பட)

28-06-2015 மாலையில் சென்னையிலிருந்து ஈசிஆர் சாலை பிடித்து புதுச்சேரி- கடலூர்- காரைக்கால்-நாகப்பட்டினம்-திருத்துறை பூண்டி - அதிராமப்பட்டிணம்- தேவிப்பட்டிணம்- கீழக்கரை- சாயல்குடி- வேம்பார் வழியாக தூத்துக்குடி வந்து சேரும்போது மணி ஒன்பது. தூத்துக்குடியில் சேகர் ஏற்கனவே நகரத்தின் மையத்தில் அறை ஏற்பாடு செய்து தந்திருந்ததால் அங்கேயே புறப்பட்டு சந்திரசேகர் அவர்களின் இல்லத் திருமணத்தில் நேரம் பிந்தாமல் கலந்துகொண்டோம்.

இப்படி நீண்டதூரம் மோட்டார் சைக்கிளில் பயணங்கள் போவதை நிச்சயம் வீட்டில் சொன்னால் அனுமதி கிடைக்காது என்பதால் மேலிடத்தில் மட்டும் அனுமதி வாங்கிவிட்டு இந்த பயணம் துவங்கி இருந்தது. காலை ஐந்து மணி முதல் கீழக்கரை-  சாயல்குடி - வேம்பார் பகுதிகளில் கேமிராவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தாயிற்று... 

வறட்சி மிகுந்திருந்த இந்த பகுதிகளில் தேங்கின மழை நீர் குட்டைகளிலும், அதனுள்ளே அமைந்த கிணறுகளிலும் தண்ணீர் பிடிக்கும் பொது சனங்களை அதிகாலை முதலே பார்க்க முடிந்தது. திருப்புல்லாணி கோவில் தெப்பம், கோலம்போடும் வீதிப் பெண்கள்,  குட்டைகளில் தண்ணீர் எடுத்துப் போகும் சிறுவர்கள், ஊர்குளத்தின் கரையில் மரத்தடியில் முடிவெட்டிக் கொள்ளும் பெரியவர், கரிக்களத்தில் சம்மட்டி அடிக்கும் முதியவர், வற்றல் காயவைத்தபடியிருந்த விவசாயி, கால்களால் மண்ணைக் கிளறிக் கொண்டிருந்த கொண்டைச் சேவல்கள்  என்று அப்பட்டமான கிராமத்தின் ஒவ்வொரு இழைகளையும் டிஜிட்டலுக்கு மாற்றிக்கொண்டேன். 

மிக முக்கியமாக இந்த பயணத்தில் கண்ட ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கி.ராவின் கோபல்ல கிராமம் நம்மில் பலர் வாசித்திருக்கக் கூடும். அதின் மையக் கதாப்பாத்திரமாக வரும் கள்வனை இறுதியில் கழுவேற்றினதாகவும் அவனுக்கு கழுவன் என்றே பெயரிட்டதாகவும் விவரித்திருப்பார். அதுபோலான நூற்றாண்டுகள் முந்தைய கழு மரங்கள் இரண்டை புளியகுளம் குளத்தூர் சாலையில் கழுநீர்மங்கலம் என்ற ஊரின் முன்னதாக  அமைந்துள்ள கரைமடையான் கோயிலில் பார்க்க முடிந்தது.

கோயில் பூசாரியிடம் கேட்டதற்கு அதை பலிபீடம் என்று. ஒரே போல மூன்று இருந்தது என்றும் மூன்றாவதை வண்டு துளைத்து மரம் தூர்ந்து போனதால் கல்லால் அதேபோல சமீபத்தில் செய்து வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.  வன்னி மரத்தில் கலை நுணுக்கங்களோடு செய்யப்பட்டிருந்த கழுமரத்தைப் பார்க்கும் போதே கோபல்ல கிராமத்து காட்சிகள் போல அதே கண்மாய், அதே நாட்டுப்புற தெய்வம் போல பெண் தெய்வ கோயில் ஒன்று. அதன் முன்னே எழுப்பின கல்மண்டபம் என்று கண்முன் விரிந்ததுபோல.. அத்தனையும் புகைப்படம் எடுத்துக்கொண்டே தூத்துக்குடி சென்று சேர்ந்தேன்.

தூத்துக்குடியிலிருந்து மாலையில் திருநெல்வேலியில் டாக்டர்.ஆசுகவி அவர்களின் ஏற்பாட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலை நேரே நெல்லையப்பர் கோயில் தேரோட்டம். ஊர்கூடித் தேர் இழுக்கும் காட்சிகள் மட்டும் தான் வழக்கமாய் பார்த்து வளர்ந்தது. இந்த முறை குமரேசன் அண்ணனோடு கூட்டணியாக தேரின் மீது மட்டுமில்லாமல், உள்கட்டுமானத்திலும் இறங்கி, 500 ஆண்டுகள் பழைமையான தேரின் சிற்பங்கள் அதன் கட்டமைப்பு, தேரோட்டத்தின் பின்னால் உள்ள கதைகள் என நிறைய பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்ளமுடிந்தது. குடும்ப சகிதமாக தேரோட்டத்திற்கு வந்திருந்த நெல்லைக்கார நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோ முகத்திலும் திருவிழாக்களை. தேர் ந்சாயங்காலம் ஆகும் முன்னே ஐந்து தேரும் நிலைக்கு வந்து நின்றுவிட அன்றைக்கு மாலையும் இரவும் தேரையே சுற்றிச் சுற்றி வந்து இருட்டுக்கடை அல்வாவும், வைரமாளிகை நாட்டுக்கோழி பரோட்டாவுமாக தீர்ந்தது.

மறுநாள் காலையிலே இரண்டுபேருமாக குறுக்குத்துறை கல்மண்டபங்களைக் கடந்து தாமிரபரணியில் கண்கள் சிவக்கச் சிவக்க குளித்துக் கரையேறினோம். மண்டபக் கரையிலும், முருகன் கோயிலிலுமாக படங்கள் எடுத்துக்கொண்டு, குளித்த சூட்டோடே ஆவிக்கு நல்லதென்று ஆளுக்கு நாளு இட்டிலியை விழுங்கிவிட்டு, அருணகிரி தியேட்டருக்கு சமீபமாக நுங்கும், பதனீரும் குடித்து வீடு வந்து சேர்ந்தபோது மணி பத்தடித்திருந்தது. மதிய வாக்கில் வண்டியை எடுத்டுக்கொண்டு டவுன் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது தேங்காய்கடை குமார் கையைப் பிடித்து வீட்டுக்கே அழைத்துப் போய்விட்டார். போனமுறையே அவரைச் சந்தித்தது பற்றி எழுதவில்லை என்று போனடித்துச் சண்டை போட்டிருந்தார்.ஹஹ

மூன்றாம் நாள் மாலையில் எழுத்துக்கலையகம், திருநாவுக்கரசு அண்ணன் அழைத்துச் செல்ல பாளையங்கோட்டை தெற்குபஜாரில் தொ.பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். (முனைவர். தொ.பரமசிவன்)
நிறைய பேச்சுகள் ஓடித் தீர்ந்து நாட்டார் கதைகளையும், நாட்டுப்புற தெய்வங்களையும் பற்றியும் பேச்சுத் திரும்பினபோது கழுநீர்மங்கலமருகே எடுத்த நாட்டுப்புற தெய்வத்தையும், சந்தேகத்தின் பேரில் நம்பியிருந்த கழுமரத்தின் புகைப்படத்தையும் காண்பித்தேன். “இதான் கழு, இதான் கழு” என்று பரவசமாக தொ.ப சொன்னதும் பேச்சுகள் எல்லாம் சப்ஜெக்டுகளுக்குள் திரும்பியது. 

கழுமரம்

நிறைய சந்தேகங்கள் கேட்டேன். ஒவ்வொன்னுத்துக்கும் பதில் சொன்னார். கூடவே விசயங்களையும்.  உதயசங்கர் தான் தொ.ப பற்றி எனக்கு கட்டியமெல்லம் சொல்லியிருந்தார் அதற்கு முன். ஊரிலிருந்து வந்ததும் முதல் காரியமாக உதயனிடமிருந்து  பண்பாட்டு அசைவுகள் புத்தகத்தை கெஞ்சிக்கூத்தாடி இரவல் வாங்கிவிட்டேன் ஹஹ.


அன்றைக்கு இரவு ஊரிலே கழிந்து மறுநாள் அதிகாலையில் டிஸ்கவரை முறுக்கிக்கொண்டு நெல்லை- சென்னை பைபாசில் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அதுவரைக்கும் இரவு சென்னையை அடைந்துவிடவேண்டும் என்பதுதான் திட்டமிடல். ஆனால் எப்போது கோவில்பட்டிக்கு முன்னே இடைச் செவல் கிராமத்தின் கைகாட்டிப் பலகையை கண்டேனோ அங்கிருந்து எல்லாம் தவிடுபொடியாகிப் போனது.

நேரே வலதுபக்கம் திரும்பி இடைச் செவலுக்கு வண்டியைத் திருப்பினேன். கு.அழகிரிசாமி வீடு இங்கே எங்கோதானே இருக்க வேணும். கிராவின் வீடும். அப்படியும் இப்படியுமாக ஊருக்குள் ஒரு மார்க்கமாக கேமிராவோடு திரிந்தவனை சும்மா விடுவார்களா என்ன. கூப்பிட்டுக் கேட்டதும் ஆள் யாரென்னும் விவரத்தைச் சொன்னென். (ஏம் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு) வாயெல்லாம் புன்னகையாக ஊர் முழுக்கச் சுற்றிக்காண்பித்தார்கள். கீராவின் வீடு, அதே வளவில் இருக்கும் தபால் அலுவலகம், ஊர் திடல், தண்ணீர் இல்லாத கம்மாய் முதற்கொண்டு படமெடுத்துக்கொண்டு பைபாசுக்குத் திரும்பினேன்.ஆனாலும் விதி என்னை விடுவதாயில்லை சற்று தொலைவிலே கழுகுமலை பதினாறு கிலோமீட்டர். விடுவண்டியை ஆனது ஆகட்டும். கழுகுமலை சமணச் சிற்பங்கள், வெட்டுவான் கோயில் எல்லாவற்றையும் ஆளே இல்லாத நேரத்தில் அங்கம் அங்கமாய் சுற்றிவிட்டு. அங்கிருந்து சிவகாசி சாலைவழியாக சாத்தூர் திரும்ப காய்ந்து வெடித்த பஞ்சுகள் நிரம்பின பருத்திக்காடு, பனை தட்டியை வரிந்து மடக்கி ஆட்டுக்கு பட்டி அமைக்கும் குடியானவர்கள், கிணற்றுப் பாசனத்தில் வெங்காயம் பயிரிட்டிருக்கும் விவசாயி, கூட்டுறவு சாலைக்கு விதைகள் சலித்துக் கொண்டிருந்த சனங்கள் என்று க்ளிக்கோ க்ளிக் தான்.

மதியம் நெருங்கவும் மதுரையைக் கடந்திருந்தேன். அடுத்த ஒரு மணிக்குள் திருச்சிக்கு ஐம்பது கிலோமீட்டர் முன்னதாக செல்லும் போது “கொடும்பாளூர்” என்ற பலகை கண்ணில் பட்டது. ஆம்னி பேரூந்துகளில் தூங்கிக்கொண்டே எத்தனையோ முறை கடந்து போயிருக்கும் ஊர் கொடும்பாளூர் (புதுக்கோட்டை மாவட்டம்). சிலப்பதிகாரம் தொட்டு பொன்னியின் செல்வன் வரைக்கும் பேர் சொல்லும்படி வாழ்ந்த ஊர்.

கோவலனும் கண்ணகியும் புகாரிலிருந்து மதுரைக்கு வந்த பயணத்தில் கொடும்பாளூரில் தங்கினதாக சிலம்பு சொல்கிறது “கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே”. பொன்னியின் செல்வனில்  வானதியை ப(பி)டித்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்களே! “கொடும்பாளூர் இளையராணி வானதி”  அதே ஊர் தான்.

பழமைக்கு பெரிய அடையாளங்கள் இல்லாத சாலையில் பூக்கடை வைத்திருந்த பெரியம்மாள் ஒருவரிடம் கேட்க, ஊருக்குள் போகும் சாலைக்குக் கைகாட்டினார்.  பள்ளிக்கூடமும் திடலும் இருந்த இடத்தில் சம்பந்தமே இல்லாதபடிக்கு காங்க்ரீட் தளமமைத்த கோயில் ஒன்றில் பழைய நந்தி ஒன்று பெரும்பசுவென அமர்ந்திருந்தது. கிட்டே போய் வாசித்ததில் இடங்கழி நாயனார் கோவில்.

அறுபத்துமூன்று நாயன்மாரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்த மூவரில் ஒருவர் இடங்கழியார்.  கொடும்பாளூர் பற்றி கேள்விப்பட்டதுண்டு என்றாலும் அங்குள்ள கோயில்கள் பற்றி படித்திருக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று என்னை அந்த ஊருக்கு இழுத்துப் போனது. ஆடுமேய்க்கும் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில்.  வேட்டையாடு விளையாடு படத்தில் முதல் காட்சியில்  கமல் ஒரு கொலையை துப்பறியப் போவாரே அப்படி ஒரு முள் அடர்ந்த பாதையைக் காண்பித்தார்கள். பைக்கில் செல்வது சிரமமாக இருந்தாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் அசந்தே போனேன்.

கி.பி 921 ஆண்டில் சோழன் கட்டின முசுகுந்தேஸ்வரர் கோயில் பழமையின் நிறத்தோடு ஆயிரம் ஆண்டுகள் கடந்து தஞ்சை பெரியகோயிலின் மினியேச்சர் போல நிற்கிறது. யாருமற்ற நேரத்தில் நந்தியும் நானும் மட்டும் அக்கோயிலை ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்து புறப்பட்ட சிலநிமிட தூரத்திலெ மூவர் கோயில் என்ற பெயர்பலகை பார்த்து உள்நுழைந்தால் அடுத்து ஒரு ஆச்சர்யம். ஒருவேளை வழிகாட்டிகள் யாரும் முன்னரே எனக்கு இப்படி கோயில் கள் அமைந்திருக்கிறது இங்கே என்று சொல்லியிருந்தால் இவ்வளவு சுவாரசியமான பயணமாகி இருக்காது. நினைத்தமாத்திரத்தில் தொடங்கின முடிவென்பதால் அதிர்ச்சியான மகிழ்ச்சிதான்.

மாமல்லபுரத்தில் நிற்குமே இரண்டு கடற்கரைக் கோயில்கள் அப்படியான நேர்த்தியில் நிற்கிறது மூவர் கோயில். அதாவது மூன்று கற்றளியில் இரண்டு மட்டுமே மிச்சம் மற்ற ஒன்றையும், சில மண்டபங்களையும் இடித்துவிட்டதற்கான மிச்சங்கள் அடையாளமாக நிற்கின்றன. மூவர் கோயிலுக்கு பக்கத்திலே ஏதுமற்ற அடையாளங்களாய் ஐவர் கோயில். அதுவும் சிதைக்கப்பட்ட மிச்சங்களே. கேட்டதற்கு மாலிக் கபூர் படையெடுப்பை காரணம் சொல்கின்றார்கள்.  

மூவர்கோயிலில் அறிமுகமான சிவில்சப்ளை அதிகாரி திரு மணிமாறன் அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் என்னோடு ஒன்றிப்போக, நீங்கள் நிச்சயம் குடுமியான் மலையைப் பார்க்க வேண்டும். அங்கே இசைக்கல்வெட்டு இருக்கிறது என்றார்.  விடு வண்டியை. முப்பது சொச்சம் கிலோமீட்டர்கள் பயணித்து குடுமியான் மலை வந்தடைந்தோம். சிவலிங்கத்தின் உச்சியில் குருமி போல குமிழ் அமைப்பு இருப்பதால் குடுமியான் மலை.

என்னை விட்டுவிடுங்கள் இங்கேயே இப்படியே ஒரு ஸ்டூல் போட்டுக்கொண்டு இந்த சிற்பங்களை ரசித்துக் கொண்டே காலத்தை ஓட்டிவிடுகிறேன் என்று சொல்லத்தோன்றியது. அப்படி ஒரு கலைப் பொக்கிசம் குடுமியான் மலை கோயில். மலையடிவாரத்திலே உட்குடைந்து உருவாக்கப்பட்ட (அதே பாறையில்) சிவனைச் சூழ்ந்து கோயில் மண்டபங்களென அமைத்திருக்கிறார்கள். எதைப்பார்க்க எதைவிட என்றுதான் தெரியவில்லை. நாள் பூராவும் எழுதலாம் அந்தக் கோயிலைப் பற்றி. அங்கு தொல்லியல் துறை அலுவலகத்தில் இருந்த நண்பர் இசைக் கல்வெட்டுகளைத் திறந்துகாண்பித்தார். சுமார் 16X17 அடி உயர அகலத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மகேந்திர பல்லவன் என்ற ஜித்தாதி ஜித்தன் தான் இந்த வேலையும் பார்த்திருக்கிறான்.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் திருமணங்கள் நடக்கும் ஒரே பாறையை பலகையாய்ச் செதுக்கின மண்டபம், பால்நிறத்தில் (உண்மையாதான். குடிச்சா மினரல் வாட்டரா மாறிடும் போல. குடிச்சும் பார்த்துட்டேன். ) தண்ணீர் சுரக்கும் கிணறு. என்று கோயில் முழுக்க ஆச்சர்ய அற்புதங்கள். குடுமியான் மலை முடித்து, திருக்கோகர்ணம் அங்கிருந்து கந்தர்வக்கோட்டை வழி திருவாரூர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சாம் ஜெகன் மில்லர் முன்பே வீட்டுக்கு அழைத்திருந்தார். ஆபத்பாந்தவனாக அவரே போனடிக்க  ஜெகன் வீட்டில் அன்றிரவு ராத்தங்கல். காலையில் வயலும், வயல் சார்ந்த வாழ்வும் கொண்ட அவரது ஊரையும், தண்ணீரில்லாத கோரையாறையும் சுற்றிவிட்டு பகல் வெயில் வலுக்க ஊர்ப்புறத்திலிருந்து வெளிவந்தோம். நகர்மையத்தில் சாமும் அவரது தம்பியும் கைகாட்டிய பழைய மண்டபத்தில் நுழைந்தால் அட்டகாசமான கலைநுணுக்கத்தோடு காட்சியளித்தது யமுனாம்பாள் சத்திரம். தஞ்சை இரண்டாம் சரபோஜி மன்னரின் மனைவியருள் ஒருவர் யமுனாம்பாள்.

சத்திரத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வந்திருக்கிறார்கள். இப்போது நெல் கொள்முதல் மண்டியாக மாறிவிட்டது. யமுனாம்பாள் பற்றி கிராமங்களில் சொல்லப்படும் கதைகளைக் கேட்டறிந்துவிட்டு அங்கிருந்து கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுவை என சென்னை வந்து சேரும் போது இரவு எட்டு மணி. பைக்கில் ஊருக்கு வரேன்னு யாரிடமும் சொல்லிடாதீங்கன்னு குமரேசன் அண்ணனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருத்தர் விடாமல் பார்ப்போர் எல்லாரிடமும்.  “இது கார்த்திக் புகழேந்தி. சொல்லி இருக்கேன்லா முன்னாடியே. அவந்தான். சென்னையில இருந்து பைக்லேயே வந்துட்டான் பாத்துக்கோங்க” என்றுதான் பேச்சையே தொடங்கினார். ஹஹ

ஆயிரத்தி ஐநூற்று ஐம்பது சொச்சம் கிலோமீட்டர்கள் நிறைய புது அனுபவங்கள். நிறைய கதைகள், நிறைய மனிதர்கள், எல்லாருக்கும் மேலே நிறைய அன்பும் அக்கறையும் செலுத்தினவர்களை இந்த பயணத்தில் எதிர்கொள்ள முடிருந்தது. எல்லோருமே ஒன்றை புரிந்துகொள்கிறார்கள் இவனுக்கு என்ன தேவை என்பதது. அதை தந்து கொண்டிருப்பதற்கு தன்னாலான மட்டும் இவர்களில் யாருமே தயங்குவதில்லை.  நான் வழக்கம் போல கற்றுக்கொண்டே இருக்கிறேன். அனுபவங்களை..

அடுத்து வட கிழக்காக ஆந்திரம், ஒரிசா, சட்டீஸ்கர் என்று ஒரு பயணத்தை செப்டம்பருக்கு மேல் தொடங்கலாமென நினைக்கிறேன்.  தேசாந்திரி பறவைகளுக்கு மொழியா வந்து தடையாகிவிடும்.
-கார்த்திக் புகழேந்தி.

நெருப்பு ருசி குடித்த மனிதர்கள்

வாடைக் காத்தும் கடல் காத்தும் தங்களுக்குள்ள வினோதமா ஒரு கூட்டணி வச்சுகிட்டு தென்னை மரங்க கூட சத்தமாய் ஏதோ பேசிக் கிட்டிருக்கும் போல.

இசக்கியம்மன் கோயில் கொடையன்னைக்கு இப்படித்தான் தூறலும் காத்தும் கலந்து அடிச்சு கீத்துப் பந்தலை வாய்க்கா கரை வரைக்கும் கொண்டு போயிடுச்சு.

காத்து இப்படி பொரட்டி எடுக்கும் போது பன மட்டைகளை கொழுத்துறத நீங்க பாக்கணும். கருக்கு மட்டை இங்க இருக்க நெருப்பு ஏழடிக்குத் தள்ளி சாய்ஞ்சி மேலமேல ஏறி , கீழ விழுந்து திரும்ப எழும்பும்.மெட்ராஸுக்கு வந்த புதுச சோளக் குருத்தை கரியடுப்பில் வாட்டினதை உத்து உத்து பாத்துகிட்டிருந்தாங்க சனமெல்லாம். வெங்கல பானை அடிக்கும் ஆசாரியண்ணன் வீட்டு நடூ கூடத்துல மாட்டுவண்டி பைதாவைச் சுத்துனா கங்கு பறக்க தீ புடிக்கும்.அப்போல்லாம் அது பெரிய நெருப்பு வித்தை.
பாளையங்கோட்டை வீட்டுக்குப் பின்னாடி அப்படியே குளம் தான். வேலிக்காத்தான் தாண்டி எந்த ஜந்தும் தோட்டத்துக்குள்ளாற நுழைச்சுடாம  தட்டி மறிக்குதது தான் ஆச்சிக்கி முக்கியமான வேலை. கிணத்தில் தண்ணி இறைக்கிறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.

அந்த குளந்தான் எங்க பயலுவளுக்கு ஆடுகளம். குளத்து வரப்பில நிக்கும் பனைங்க ஒசரத்துக்கு கிட்டிப்புல் எழுப்புவான் சக்திவேலு. பொங்கலுக்கு முந்தி கிழங்குக்கு பொதைக்குறதும் அங்கேதான். மார்கழிக்கு பிந்துற நாளில் ஈரப்புல்லில் வெறுங்கால் நனைய உலாத்துறதும் அங்கே தான்.

ஒருதரம் குளத்து வெட்டையில் காத்து நேரம் குளிர்காய மட்டை, கம்பு தும்பெல்லாம் போட்டு எரிச்சுகிட்டிருக்கும் போது இப்படித்தான் தடித் தடியா பேய் மழையடிச்சது.நெருப்பும் மழையும் சோடி போட்டு ஆடும் ஆட்டத்தை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதே ஒரு சுகவாசம் தான். 

தெருவில் ஒருமாதிரிப் பட்ட பெண்டு பிள்ளைகள் படிப்புக்கு வரும் போது ஈயம் பூசின மண்ணெண்ணெய் விளக்கில் ஆடி அசையும் நெருப்பை அப்படியே மூக்கில் வாங்கி ரசிக்கும்ங்கள். நமக்கு என்னவோ போல இருக்கும். வீரம் காட்டுதேன் பேர்வழின்னு காட்டுற விரலால் எரியுத திரியை தொட்டு சுட்டுக்கிடுதது.


கார்த்திகை தீபத்துக்கு சொக்கப் பனை எரிக்கவும், வாடிப்பட்டி கொட்டுக் காரர்கள் தோலை சூடு பரத்தி அடிக்கவும் நெருப்போடு உலத்தின மழை நாளைல்லாம் அத்தனை லேசில் மறந்துற முடியாது.

ஆச்சி இறந்தப்போ சின்னவன் நீன்னு கங்குச் சட்டியை அண்ணம்மார்கிட்ட கொடுத்தப்போ அடம்பிடிச்சி அழுது வாங்கினவனாச்சே.. கூத்தைப் பாருங்கள் அன்னைக்கும் மழையடிச்சது. கிளவி தனலில் வெந்தகதை பெருங்கதை தாம்.

நெருப்புக்கும் மழைக்கும் ஒரே நேரத்தில் ஏங்குத மனுசனுக்கு கோட்டி கீட்டி ஏதும் பிடிச்சிருக்குமோ... சமயத்துல மழநேரம் கரண்டு போனுச்சின்னா மெழுகுவர்த்தி ஏத்துதாக அதுமட்டும் தான் இப்பத்திக்கி ஆறுதல்.

மத்தபடி சிகரெட்டு பத்தவைச்சிக்கிடுவத தவுத்து நெருப்பை யெல்லாம் யார் ரசிக்கா...
- கார்த்திக் புகழேந்தி.
10-07-2015. 


There was an error in this gadget