1550கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம்


கடந்த மாதத்தின் இறுதியில் ஒரு வாரம் திட்டமிட்டபடி ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பினேன். இடையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்தது. முதல் சுவாரஸ்யமே சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு டூவீலரில் புறப்பட்டது.. (தலைகவசம் உட்பட)

28-06-2015 மாலையில் சென்னையிலிருந்து ஈசிஆர் சாலை பிடித்து புதுச்சேரி- கடலூர்- காரைக்கால்-நாகப்பட்டினம்-திருத்துறை பூண்டி - அதிராமப்பட்டிணம்- தேவிப்பட்டிணம்- கீழக்கரை- சாயல்குடி- வேம்பார் வழியாக தூத்துக்குடி வந்து சேரும்போது மணி ஒன்பது. தூத்துக்குடியில் சேகர் ஏற்கனவே நகரத்தின் மையத்தில் அறை ஏற்பாடு செய்து தந்திருந்ததால் அங்கேயே புறப்பட்டு சந்திரசேகர் அவர்களின் இல்லத் திருமணத்தில் நேரம் பிந்தாமல் கலந்துகொண்டோம்.

இப்படி நீண்டதூரம் மோட்டார் சைக்கிளில் பயணங்கள் போவதை நிச்சயம் வீட்டில் சொன்னால் அனுமதி கிடைக்காது என்பதால் மேலிடத்தில் மட்டும் அனுமதி வாங்கிவிட்டு இந்த பயணம் துவங்கி இருந்தது. காலை ஐந்து மணி முதல் கீழக்கரை-  சாயல்குடி - வேம்பார் பகுதிகளில் கேமிராவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தாயிற்று... 

வறட்சி மிகுந்திருந்த இந்த பகுதிகளில் தேங்கின மழை நீர் குட்டைகளிலும், அதனுள்ளே அமைந்த கிணறுகளிலும் தண்ணீர் பிடிக்கும் பொது சனங்களை அதிகாலை முதலே பார்க்க முடிந்தது. திருப்புல்லாணி கோவில் தெப்பம், கோலம்போடும் வீதிப் பெண்கள்,  குட்டைகளில் தண்ணீர் எடுத்துப் போகும் சிறுவர்கள், ஊர்குளத்தின் கரையில் மரத்தடியில் முடிவெட்டிக் கொள்ளும் பெரியவர், கரிக்களத்தில் சம்மட்டி அடிக்கும் முதியவர், வற்றல் காயவைத்தபடியிருந்த விவசாயி, கால்களால் மண்ணைக் கிளறிக் கொண்டிருந்த கொண்டைச் சேவல்கள்  என்று அப்பட்டமான கிராமத்தின் ஒவ்வொரு இழைகளையும் டிஜிட்டலுக்கு மாற்றிக்கொண்டேன். 

மிக முக்கியமாக இந்த பயணத்தில் கண்ட ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கி.ராவின் கோபல்ல கிராமம் நம்மில் பலர் வாசித்திருக்கக் கூடும். அதின் மையக் கதாப்பாத்திரமாக வரும் கள்வனை இறுதியில் கழுவேற்றினதாகவும் அவனுக்கு கழுவன் என்றே பெயரிட்டதாகவும் விவரித்திருப்பார். அதுபோலான நூற்றாண்டுகள் முந்தைய கழு மரங்கள் இரண்டை புளியகுளம் குளத்தூர் சாலையில் கழுநீர்மங்கலம் என்ற ஊரின் முன்னதாக  அமைந்துள்ள கரைமடையான் கோயிலில் பார்க்க முடிந்தது.

கோயில் பூசாரியிடம் கேட்டதற்கு அதை பலிபீடம் என்று. ஒரே போல மூன்று இருந்தது என்றும் மூன்றாவதை வண்டு துளைத்து மரம் தூர்ந்து போனதால் கல்லால் அதேபோல சமீபத்தில் செய்து வைத்தோம் என்றும் குறிப்பிட்டார்.  வன்னி மரத்தில் கலை நுணுக்கங்களோடு செய்யப்பட்டிருந்த கழுமரத்தைப் பார்க்கும் போதே கோபல்ல கிராமத்து காட்சிகள் போல அதே கண்மாய், அதே நாட்டுப்புற தெய்வம் போல பெண் தெய்வ கோயில் ஒன்று. அதன் முன்னே எழுப்பின கல்மண்டபம் என்று கண்முன் விரிந்ததுபோல.. அத்தனையும் புகைப்படம் எடுத்துக்கொண்டே தூத்துக்குடி சென்று சேர்ந்தேன்.

தூத்துக்குடியிலிருந்து மாலையில் திருநெல்வேலியில் டாக்டர்.ஆசுகவி அவர்களின் ஏற்பாட்டில் தங்கிவிட்டு மறுநாள் காலை நேரே நெல்லையப்பர் கோயில் தேரோட்டம். ஊர்கூடித் தேர் இழுக்கும் காட்சிகள் மட்டும் தான் வழக்கமாய் பார்த்து வளர்ந்தது. இந்த முறை குமரேசன் அண்ணனோடு கூட்டணியாக தேரின் மீது மட்டுமில்லாமல், உள்கட்டுமானத்திலும் இறங்கி, 500 ஆண்டுகள் பழைமையான தேரின் சிற்பங்கள் அதன் கட்டமைப்பு, தேரோட்டத்தின் பின்னால் உள்ள கதைகள் என நிறைய பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்ளமுடிந்தது. குடும்ப சகிதமாக தேரோட்டத்திற்கு வந்திருந்த நெல்லைக்கார நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோ முகத்திலும் திருவிழாக்களை. தேர் ந்சாயங்காலம் ஆகும் முன்னே ஐந்து தேரும் நிலைக்கு வந்து நின்றுவிட அன்றைக்கு மாலையும் இரவும் தேரையே சுற்றிச் சுற்றி வந்து இருட்டுக்கடை அல்வாவும், வைரமாளிகை நாட்டுக்கோழி பரோட்டாவுமாக தீர்ந்தது.

மறுநாள் காலையிலே இரண்டுபேருமாக குறுக்குத்துறை கல்மண்டபங்களைக் கடந்து தாமிரபரணியில் கண்கள் சிவக்கச் சிவக்க குளித்துக் கரையேறினோம். மண்டபக் கரையிலும், முருகன் கோயிலிலுமாக படங்கள் எடுத்துக்கொண்டு, குளித்த சூட்டோடே ஆவிக்கு நல்லதென்று ஆளுக்கு நாளு இட்டிலியை விழுங்கிவிட்டு, அருணகிரி தியேட்டருக்கு சமீபமாக நுங்கும், பதனீரும் குடித்து வீடு வந்து சேர்ந்தபோது மணி பத்தடித்திருந்தது. மதிய வாக்கில் வண்டியை எடுத்டுக்கொண்டு டவுன் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது தேங்காய்கடை குமார் கையைப் பிடித்து வீட்டுக்கே அழைத்துப் போய்விட்டார். போனமுறையே அவரைச் சந்தித்தது பற்றி எழுதவில்லை என்று போனடித்துச் சண்டை போட்டிருந்தார்.ஹஹ

மூன்றாம் நாள் மாலையில் எழுத்துக்கலையகம், திருநாவுக்கரசு அண்ணன் அழைத்துச் செல்ல பாளையங்கோட்டை தெற்குபஜாரில் தொ.பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். (முனைவர். தொ.பரமசிவன்)
நிறைய பேச்சுகள் ஓடித் தீர்ந்து நாட்டார் கதைகளையும், நாட்டுப்புற தெய்வங்களையும் பற்றியும் பேச்சுத் திரும்பினபோது கழுநீர்மங்கலமருகே எடுத்த நாட்டுப்புற தெய்வத்தையும், சந்தேகத்தின் பேரில் நம்பியிருந்த கழுமரத்தின் புகைப்படத்தையும் காண்பித்தேன். “இதான் கழு, இதான் கழு” என்று பரவசமாக தொ.ப சொன்னதும் பேச்சுகள் எல்லாம் சப்ஜெக்டுகளுக்குள் திரும்பியது. 

கழுமரம்

நிறைய சந்தேகங்கள் கேட்டேன். ஒவ்வொன்னுத்துக்கும் பதில் சொன்னார். கூடவே விசயங்களையும்.  உதயசங்கர் தான் தொ.ப பற்றி எனக்கு கட்டியமெல்லம் சொல்லியிருந்தார் அதற்கு முன். ஊரிலிருந்து வந்ததும் முதல் காரியமாக உதயனிடமிருந்து  பண்பாட்டு அசைவுகள் புத்தகத்தை கெஞ்சிக்கூத்தாடி இரவல் வாங்கிவிட்டேன் ஹஹ.


அன்றைக்கு இரவு ஊரிலே கழிந்து மறுநாள் அதிகாலையில் டிஸ்கவரை முறுக்கிக்கொண்டு நெல்லை- சென்னை பைபாசில் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அதுவரைக்கும் இரவு சென்னையை அடைந்துவிடவேண்டும் என்பதுதான் திட்டமிடல். ஆனால் எப்போது கோவில்பட்டிக்கு முன்னே இடைச் செவல் கிராமத்தின் கைகாட்டிப் பலகையை கண்டேனோ அங்கிருந்து எல்லாம் தவிடுபொடியாகிப் போனது.

நேரே வலதுபக்கம் திரும்பி இடைச் செவலுக்கு வண்டியைத் திருப்பினேன். கு.அழகிரிசாமி வீடு இங்கே எங்கோதானே இருக்க வேணும். கிராவின் வீடும். அப்படியும் இப்படியுமாக ஊருக்குள் ஒரு மார்க்கமாக கேமிராவோடு திரிந்தவனை சும்மா விடுவார்களா என்ன. கூப்பிட்டுக் கேட்டதும் ஆள் யாரென்னும் விவரத்தைச் சொன்னென். (ஏம் பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு) வாயெல்லாம் புன்னகையாக ஊர் முழுக்கச் சுற்றிக்காண்பித்தார்கள். கீராவின் வீடு, அதே வளவில் இருக்கும் தபால் அலுவலகம், ஊர் திடல், தண்ணீர் இல்லாத கம்மாய் முதற்கொண்டு படமெடுத்துக்கொண்டு பைபாசுக்குத் திரும்பினேன்.



ஆனாலும் விதி என்னை விடுவதாயில்லை சற்று தொலைவிலே கழுகுமலை பதினாறு கிலோமீட்டர். விடுவண்டியை ஆனது ஆகட்டும். கழுகுமலை சமணச் சிற்பங்கள், வெட்டுவான் கோயில் எல்லாவற்றையும் ஆளே இல்லாத நேரத்தில் அங்கம் அங்கமாய் சுற்றிவிட்டு. அங்கிருந்து சிவகாசி சாலைவழியாக சாத்தூர் திரும்ப காய்ந்து வெடித்த பஞ்சுகள் நிரம்பின பருத்திக்காடு, பனை தட்டியை வரிந்து மடக்கி ஆட்டுக்கு பட்டி அமைக்கும் குடியானவர்கள், கிணற்றுப் பாசனத்தில் வெங்காயம் பயிரிட்டிருக்கும் விவசாயி, கூட்டுறவு சாலைக்கு விதைகள் சலித்துக் கொண்டிருந்த சனங்கள் என்று க்ளிக்கோ க்ளிக் தான்.

மதியம் நெருங்கவும் மதுரையைக் கடந்திருந்தேன். அடுத்த ஒரு மணிக்குள் திருச்சிக்கு ஐம்பது கிலோமீட்டர் முன்னதாக செல்லும் போது “கொடும்பாளூர்” என்ற பலகை கண்ணில் பட்டது. ஆம்னி பேரூந்துகளில் தூங்கிக்கொண்டே எத்தனையோ முறை கடந்து போயிருக்கும் ஊர் கொடும்பாளூர் (புதுக்கோட்டை மாவட்டம்). சிலப்பதிகாரம் தொட்டு பொன்னியின் செல்வன் வரைக்கும் பேர் சொல்லும்படி வாழ்ந்த ஊர்.

கோவலனும் கண்ணகியும் புகாரிலிருந்து மதுரைக்கு வந்த பயணத்தில் கொடும்பாளூரில் தங்கினதாக சிலம்பு சொல்கிறது “கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே”. பொன்னியின் செல்வனில்  வானதியை ப(பி)டித்தவர்கள் மறந்திருக்க மாட்டீர்களே! “கொடும்பாளூர் இளையராணி வானதி”  அதே ஊர் தான்.

பழமைக்கு பெரிய அடையாளங்கள் இல்லாத சாலையில் பூக்கடை வைத்திருந்த பெரியம்மாள் ஒருவரிடம் கேட்க, ஊருக்குள் போகும் சாலைக்குக் கைகாட்டினார்.  பள்ளிக்கூடமும் திடலும் இருந்த இடத்தில் சம்பந்தமே இல்லாதபடிக்கு காங்க்ரீட் தளமமைத்த கோயில் ஒன்றில் பழைய நந்தி ஒன்று பெரும்பசுவென அமர்ந்திருந்தது. கிட்டே போய் வாசித்ததில் இடங்கழி நாயனார் கோவில்.

அறுபத்துமூன்று நாயன்மாரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்த மூவரில் ஒருவர் இடங்கழியார்.  கொடும்பாளூர் பற்றி கேள்விப்பட்டதுண்டு என்றாலும் அங்குள்ள கோயில்கள் பற்றி படித்திருக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று என்னை அந்த ஊருக்கு இழுத்துப் போனது. ஆடுமேய்க்கும் சிறுவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில்.  வேட்டையாடு விளையாடு படத்தில் முதல் காட்சியில்  கமல் ஒரு கொலையை துப்பறியப் போவாரே அப்படி ஒரு முள் அடர்ந்த பாதையைக் காண்பித்தார்கள். பைக்கில் செல்வது சிரமமாக இருந்தாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் அசந்தே போனேன்.

கி.பி 921 ஆண்டில் சோழன் கட்டின முசுகுந்தேஸ்வரர் கோயில் பழமையின் நிறத்தோடு ஆயிரம் ஆண்டுகள் கடந்து தஞ்சை பெரியகோயிலின் மினியேச்சர் போல நிற்கிறது. யாருமற்ற நேரத்தில் நந்தியும் நானும் மட்டும் அக்கோயிலை ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்து புறப்பட்ட சிலநிமிட தூரத்திலெ மூவர் கோயில் என்ற பெயர்பலகை பார்த்து உள்நுழைந்தால் அடுத்து ஒரு ஆச்சர்யம். ஒருவேளை வழிகாட்டிகள் யாரும் முன்னரே எனக்கு இப்படி கோயில் கள் அமைந்திருக்கிறது இங்கே என்று சொல்லியிருந்தால் இவ்வளவு சுவாரசியமான பயணமாகி இருக்காது. நினைத்தமாத்திரத்தில் தொடங்கின முடிவென்பதால் அதிர்ச்சியான மகிழ்ச்சிதான்.

மாமல்லபுரத்தில் நிற்குமே இரண்டு கடற்கரைக் கோயில்கள் அப்படியான நேர்த்தியில் நிற்கிறது மூவர் கோயில். அதாவது மூன்று கற்றளியில் இரண்டு மட்டுமே மிச்சம் மற்ற ஒன்றையும், சில மண்டபங்களையும் இடித்துவிட்டதற்கான மிச்சங்கள் அடையாளமாக நிற்கின்றன. மூவர் கோயிலுக்கு பக்கத்திலே ஏதுமற்ற அடையாளங்களாய் ஐவர் கோயில். அதுவும் சிதைக்கப்பட்ட மிச்சங்களே. கேட்டதற்கு மாலிக் கபூர் படையெடுப்பை காரணம் சொல்கின்றார்கள்.  

மூவர்கோயிலில் அறிமுகமான சிவில்சப்ளை அதிகாரி திரு மணிமாறன் அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் என்னோடு ஒன்றிப்போக, நீங்கள் நிச்சயம் குடுமியான் மலையைப் பார்க்க வேண்டும். அங்கே இசைக்கல்வெட்டு இருக்கிறது என்றார்.  விடு வண்டியை. முப்பது சொச்சம் கிலோமீட்டர்கள் பயணித்து குடுமியான் மலை வந்தடைந்தோம். சிவலிங்கத்தின் உச்சியில் குருமி போல குமிழ் அமைப்பு இருப்பதால் குடுமியான் மலை.

என்னை விட்டுவிடுங்கள் இங்கேயே இப்படியே ஒரு ஸ்டூல் போட்டுக்கொண்டு இந்த சிற்பங்களை ரசித்துக் கொண்டே காலத்தை ஓட்டிவிடுகிறேன் என்று சொல்லத்தோன்றியது. அப்படி ஒரு கலைப் பொக்கிசம் குடுமியான் மலை கோயில். மலையடிவாரத்திலே உட்குடைந்து உருவாக்கப்பட்ட (அதே பாறையில்) சிவனைச் சூழ்ந்து கோயில் மண்டபங்களென அமைத்திருக்கிறார்கள். எதைப்பார்க்க எதைவிட என்றுதான் தெரியவில்லை. நாள் பூராவும் எழுதலாம் அந்தக் கோயிலைப் பற்றி. அங்கு தொல்லியல் துறை அலுவலகத்தில் இருந்த நண்பர் இசைக் கல்வெட்டுகளைத் திறந்துகாண்பித்தார். சுமார் 16X17 அடி உயர அகலத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மகேந்திர பல்லவன் என்ற ஜித்தாதி ஜித்தன் தான் இந்த வேலையும் பார்த்திருக்கிறான்.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் திருமணங்கள் நடக்கும் ஒரே பாறையை பலகையாய்ச் செதுக்கின மண்டபம், பால்நிறத்தில் (உண்மையாதான். குடிச்சா மினரல் வாட்டரா மாறிடும் போல. குடிச்சும் பார்த்துட்டேன். ) தண்ணீர் சுரக்கும் கிணறு. என்று கோயில் முழுக்க ஆச்சர்ய அற்புதங்கள். குடுமியான் மலை முடித்து, திருக்கோகர்ணம் அங்கிருந்து கந்தர்வக்கோட்டை வழி திருவாரூர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சாம் ஜெகன் மில்லர் முன்பே வீட்டுக்கு அழைத்திருந்தார். ஆபத்பாந்தவனாக அவரே போனடிக்க  ஜெகன் வீட்டில் அன்றிரவு ராத்தங்கல். காலையில் வயலும், வயல் சார்ந்த வாழ்வும் கொண்ட அவரது ஊரையும், தண்ணீரில்லாத கோரையாறையும் சுற்றிவிட்டு பகல் வெயில் வலுக்க ஊர்ப்புறத்திலிருந்து வெளிவந்தோம். நகர்மையத்தில் சாமும் அவரது தம்பியும் கைகாட்டிய பழைய மண்டபத்தில் நுழைந்தால் அட்டகாசமான கலைநுணுக்கத்தோடு காட்சியளித்தது யமுனாம்பாள் சத்திரம். தஞ்சை இரண்டாம் சரபோஜி மன்னரின் மனைவியருள் ஒருவர் யமுனாம்பாள்.

சத்திரத்தில் பள்ளிக்கூடம் நடத்தி வந்திருக்கிறார்கள். இப்போது நெல் கொள்முதல் மண்டியாக மாறிவிட்டது. யமுனாம்பாள் பற்றி கிராமங்களில் சொல்லப்படும் கதைகளைக் கேட்டறிந்துவிட்டு அங்கிருந்து கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், புதுவை என சென்னை வந்து சேரும் போது இரவு எட்டு மணி. பைக்கில் ஊருக்கு வரேன்னு யாரிடமும் சொல்லிடாதீங்கன்னு குமரேசன் அண்ணனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருத்தர் விடாமல் பார்ப்போர் எல்லாரிடமும்.  “இது கார்த்திக் புகழேந்தி. சொல்லி இருக்கேன்லா முன்னாடியே. அவந்தான். சென்னையில இருந்து பைக்லேயே வந்துட்டான் பாத்துக்கோங்க” என்றுதான் பேச்சையே தொடங்கினார். ஹஹ

ஆயிரத்தி ஐநூற்று ஐம்பது சொச்சம் கிலோமீட்டர்கள் நிறைய புது அனுபவங்கள். நிறைய கதைகள், நிறைய மனிதர்கள், எல்லாருக்கும் மேலே நிறைய அன்பும் அக்கறையும் செலுத்தினவர்களை இந்த பயணத்தில் எதிர்கொள்ள முடிருந்தது. எல்லோருமே ஒன்றை புரிந்துகொள்கிறார்கள் இவனுக்கு என்ன தேவை என்பதது. அதை தந்து கொண்டிருப்பதற்கு தன்னாலான மட்டும் இவர்களில் யாருமே தயங்குவதில்லை.  நான் வழக்கம் போல கற்றுக்கொண்டே இருக்கிறேன். அனுபவங்களை..

அடுத்து வட கிழக்காக ஆந்திரம், ஒரிசா, சட்டீஸ்கர் என்று ஒரு பயணத்தை செப்டம்பருக்கு மேல் தொடங்கலாமென நினைக்கிறேன்.  தேசாந்திரி பறவைகளுக்கு மொழியா வந்து தடையாகிவிடும்.
-கார்த்திக் புகழேந்தி.





Comments

  1. ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கும் அனுபவங்கள்..... அதற்காகவே பயணிக்கலாம்!

    உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. 1500 கிமீ பைக் பயணம்! உடலுக்கு என்ன ஆகும்! யோசியுங்கள்! பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் பெரிது மற்றும் புதிது என்றாலும் உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள்! விரிவாக பயண அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. மேலிடத்துல உடனே பர்மிசன் கிடைச்சிரு ச்சாக்கும்...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil