சாயிபு நண்பன்.




   சுப்பிரமணியபுரத்திலே பெரிய வீடு பைசலுடையது. சாயிபுமார் வீடு என்றாலும் அவர்களைத் தவிர்த்து வாய்க்கால் கரைக்கு அந்தப் பக்கம் வேறு சாயிபு ஆட்கள் இல்லை. பெரிய வீட்டுப் பையனான பைசல் பத்தாவது வரைக்கும் எங்கள் பள்ளிக்கூடத்தில் தான் படித்தான்..  ஊரிலேயே முதல் முதலில் கம்ப்யூட்டர் வாங்கின வீடு அவர்களுடையது. பைசலின் அத்தா ஊரறிந்த கால்நடை மருத்துவராக இருந்தார். ரயில்வே பீடர் ரோட்டுக்கு முன்னால் இருக்கும் பள்ளிவாசல் நிலம் இவர்களுடையது தான்.  

பள்ளிக்கூடத்திலே எனக்கென்று ஒரு கேங்க் இருந்ததால் 
எத்தனைத் தப்புத்தண்டாக்கள் நிகழ்ந்தாலும்  “கூப்பிடு குணசேகரனை” என்பார்கள். காலப்போக்கில் அது ஒரு சொல் வழக்காகவே மாறியிருந்தது. ஒன்று தப்பை விசாரிக்க அழைப்பார்கள். அல்லது “நீ பண்ணலைன்னா வேற யாரு பண்ணிருப்பா சொல்லு” என்பார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தில் 
வம்புதும்புகள் செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட  காதாப்பாத்திரத்தை நான் ஏற்றிருந்தேன்.

பைசலுக்கும் எனக்கும் நெருக்கம் தொடங்கியது எட்டாவது துவக்கத்தில். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்... காலாண்டு கொஸ்டீன் பேப்பரை கைமாற்றிக் கொண்டதிலிருந்து... 

முத்துக்குமார் என்ற மணப்படை வீடு  ஊர்க்காரன் ஒருத்தன் எங்கள் கேங்கில் இருந்தான். கூட்டத்துக்கு ஒருத்தன் சம்பந்தமே இல்லாமல் ஆள் வளர்த்தியாக மீசையும் தாடியுமாக எட்டாவது படித்துக் கொண்டிருந்தாலே புரிந்துகொள்ளலாம் ஆள் படிப்பில் மட்டும் மக்கு என்று.  

அவனுக்காகத் தான் முதலில் டயோசீசன் பிரஸ்ஸில் கொஸ்டீன் பேப்பரை கை வைத்தது. வாய்க்காலுக்கு இந்தப்புறம் இருந்த புதுப்பேட்டைத் தெரு உலகம்மன் கோயில் வீதியில் ஒரு பழைய கட்டிடத்தை விலைக்கு வாங்கி அந்த அச்சகத்தைக் கட்டியிருந்தார்கள். 

ஸ்டேட் போர்டு பள்ளிகளுக்கான கேள்வித்தாளெல்லாம் இங்கேதான் அடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட நல்ல நாளில் மாரிமுத்துவை கிரிக்கெட் பாலை எடுக்க அனுப்புவது போல உள்ளே அனுப்பி எட்டாம் வகுப்பு பரிட்சைக்கான கேள்வித்தாளை உருவி எடுத்துவரச் செய்தோம்.

கொஞ்சம் சுமாராகப் படிப்பவன் என்றாலும் தமிழ் முதல் தாளுக்கு எந்தெந்த கேள்வியெல்லாம் வருமென்று எங்கள் கேங்குக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தேன். அத்தனையும் அப்படியே வர நாளாவட்டத்தில் இவனுங்களுக்கு மட்டும் எப்படி எல்லா கேள்வியும் தெரிந்திருக்கிறது என்று ஒரு கூட்டம் என்னை மோப்பம் பிடித்துக்கொண்டது.

அப்படி வந்தவரில் ஒருத்தன் தான் எட்டாம் வகுப்பு ஏ செக்சன் பைசல். இங்லீஷ் மீடியத்தில் படித்தாலும் தமிழில் உள்ள கேள்விகளை அப்படியே ஆங்கிலத்தில் பிட் வைத்துக்கொள்ளச் சொல்லிக்கொடுத்தேன். அதே கேள்விகள் அப்படியே வரிசைக்கிரமாமாக வரஆச்சர்யத்தில் வாய்பிளந்து போனான். 

“டேய் குணா எல்லா கேள்வியும் அப்படியே வந்திருந்துச்சு, எப்டிடா” என்றவனிடம் உண்மையைச் சொல்லவில்லை."எல்லா எக்ஸாமுக்கும் எனக்கு கொஸ்டீன் சொல்லித் தருவியா” என்று அப்பாவியாகக் கேட்டு என்னோடு நண்பனாகிக் கொண்டான்.

அதுமுதல் எப்போது பார்த்தாலும் எங்கள் கூடவே சுற்றத் தொடங்கினான். எனக்கும் சேர்த்து மூன்று கேரியரில் சாப்பாடு எடுத்து வந்தான். அசைவ ருசியை அனுபவித்துத் தின்னுவதற்காகவே அவனைச் சுற்றி வளைத்தது என்கூட்டம். பைசலிடம் கிரிக்கெட் பேட் புதுசு இருந்தது. நாங்கள் தென்னமட்டையை தூரப் போட்டோம். ஜாதிக்காய் பலகையில் செதுக்கின கட்டையை பைரன்னருக்கு பயன்படுத்த துவங்கினோம். ரப்பர் பந்துகள் தொலையத் தொலைய வாங்கித் தந்தான். 

ராஜேந்திரன் ஸ்போர்ட்ஸ்&கோ வே கதியெனக் கிடந்த காலம் அது. இப்போது கடையை விற்றுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் போல அந்த வழுக்கைத் தலை முதலாளி. 
ஒனிடா ஷோரூமில் வேர்ல்ட் கப் பார்த்துக் கொண்டிருந்தவனை உங்கள் வீட்டில் டீ.வி இல்லையா என்பது போல் ஆச்சர்யமாகப் பார்த்தான் பைசல்.

 “இங்க பார்த்தாதான்டா சிக்ஸு போருக்கு விசிலு பறக்கும்” என்பேன். உண்மையில் நம் வீட்டில் டீவி இல்லை என்பதை இவனிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கினேன்.

தினமும் சாயந்திரமானால் குயின்ஸ் பேக்கரியில் ரஸ்னாவும் பப்ஸும் வாங்கிக் கொடுப்பான். முருகன்குறிச்சி பெட்ரோல் பல்க்கில் அப்போது ஐஸ் வாட்டருக்கு தனி மெஷின் மாட்டி இருந்தார்கள். கதீட்ரலில் படிக்கும் கூட்டம் குளிர்ந்த தண்ணீருக்கு அப்படி ஒரு அடி போடும்.  நீ வா நம்ம வீட்டுக்கு என்று பைசல் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். அவர்கள் வீட்டில் ஒன்னரை ஆள் உயரத்தில் ரெஃப்ரிஜிரேட்டர் இருந்தது. 

தரையை சுத்தம் பண்ணும் வேக்குவம் மெஷினை ஆச்சர்யமாகப் பார்த்தேன். வீட்டில் எல்லாரும் வெளியில் போயிருக்காங்க இன்னொரு நாளைக்கு எல்லாரையும் பார்க்கலாம் என்றான். பைசலுக்கு ஒரு அண்ணன் ஒரு அக்காள்.  வீட்டில் இளைய பிள்ளை என்பதால் கேட்டதெல்லாம் வாரி இறைப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டது மனசு.

இது எப்படி வேலை செய்யும் என்று கேட்டதும் கம்ப்யூட்டரை போட்டுக் காட்டினான். யாஹூ என்றால் என்ன என்று அவன் தான் ஏதேதோ சொல்லிக்கொடுத்தான். ப்ரௌசிங் என்பதை ஏதோ ‘தப்பான படங்கள்’ பார்க்கும்  வார்த்தையாக பயந்து பயந்து சமீர் அண்ணன் கம்ப்யூட்டர் கடையில் சொல்லி, கடைசியில் பைக் ரேஸ் மட்டும் விளையாடிவிட்டு வந்தேன்.  பைசலோடு சேர்ந்தபிறகு தப்புத் தண்டாக்களில் ஈடுபடுவது குறைந்துபோனது.  என்ன ஒன்று இந்த மினி ஜெராக்ஸ் எடுத்து பிட்டடிப்பது மட்டும் தனியே தொடர்ந்து கொண்டிருந்தது. 

பைசலிடம் டிவிஎஸ் ஸ்கூட்டர் ஒன்று  இருந்தது. அதை அவன் பள்ளிக்கூடத்திற்கு எடுத்து வந்ததில்லை. கியர் சைக்கிள் வைத்திருந்த ஒரே பணக்கார வீட்டுப் பையன் அவன்தான். 
இரண்டுபேருமாய் வ.ஊ.சி மைதானத்தில் கையை விட்டு கியர் சைக்கிளில் பறந்தோம். ஊர் சுற்றுவதற்கு பழக்கம் கற்றுக் கொடுத்தேன்.

பொங்கல் தினங்களில் மணப்படைவீடு- கீழநத்தம்
இடையே உள்ள வெள்ளிமலை ஏறிச் செல்லும் சைக்கிள் பந்தயம் பிரசித்தம். கட்டையன் என்கிற ரமேஷுக்கு கீழநத்தம் தான் என்பதாலும், தேனெடுக்க அவன் ஊருக்குச் சென்று வந்த பரிச்சயத்தாலும் நானும் பந்தயத்தில் கலந்துகொண்டதுண்டு.  

ரேசுக்கு முதல்நாளே சைக்கிள் மக்கார்டு, செயின் கவர் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு எடையை குறைத்துவிடுவது. போக்கஸ் கம்பிகளை முறுக்கேற்றி பிரேக்குகளை தூர எடுத்துவிடுவது.

நாலைந்துமுறை கலந்துகொண்ட சைக்கிள் பந்தயத்தில் பச்சேரிக்காரப் பசங்களே  எப்போதும்  ஜெயிப்பார்கள். உழைத்து உழைத்து இறுகிய உடல்வாகு அப்படி. கோப்பை வழங்கும் போது நிலத்துக் காரர்கள் வன்மமாகத் திட்டுவார்கள். அடிதடி தொடங்கும். எவன் காதாவது அறுந்து விழும். தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று அண்டன் சவுண்ட் சர்வீஸ் ஊரைக்கூட்டி பாடிக்கொண்டிருக்கும்.

நானும் வரட்டா என்று கேட்ட பைசலை ஒருதரம் சைக்கிள் ரேஸுக்கு அழைத்துப் போயிருந்தேன். கியர் சைக்கிளுக்கெல்லாம் அனுமதி இல்லையென்றுவிட்டார்கள்.  “உன் சைக்கிள் கொடேன் குணா” என்றான். உனக்கில்லாததா என்று கொடுத்ததும் போட்டியில் கலந்து கொண்டான். 

யார் எவரென்று தெரியாத ஊர் பந்தயத்தில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் முதல்தடவையாக அசலூர்க்காரன் பந்தயக் கோப்பையைத் தட்டிச் சென்றது எல்லாருக்கும் ஆச்சர்யம். 
எனக்கே கூட ஆச்சர்யம் தான். பைசல் முதலாவதாக வந்து மூன்று நிமிடம் கழித்துத்தான் அடுத்தவனே வந்திருந்தான். நம்ம சைக்கிள்லயா இவன் ஜெயிச்சான் என்பதை நம்பவே முடியவில்லை. தவிர அந்தவருடம் எந்த பிரச்சனையும் செய்ய வாய்ப்பு அமையாமல் போய்விட்டது.

கோப்பையை வாங்கிவிட்டு திரும்பும் வழியெங்கும் சந்தோச புளகாங்கிதம். சுப்பிரமணியபுரம் வந்ததும் இதை நீயே வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடு என்றான். எனக்கு ஒண்ணும் புரியலை.  உன் சைக்கிள் தானே ஜெயிச்சுது என்று கோப்பையைக் கையில் திணித்தான். இவன் என்ன மாதிரி மனுசன்.

அந்த வருடம் ரம்ஜானுக்கு பைசல்  வீட்டுக்கு போயிருந்தேன். பைசலின் உம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, பின்கட்டுக்குப் போய், சந்தையிலிருந்து ஆள் வந்து வரிசையாக ஆடுகளைக் கட்டித் தொங்கவிட்டு உரித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். 

கோயில் கொடைகளில் கறி தனியாய் தோல் தனியாய் முடி ஒட்டாமல் ஆடு உரித்து அனுபவம் இருந்ததால் நானும் கைவேலையைக் காட்ட ஆச்சர்யமாய்ப் பார்த்தார்கள். மணமணக்கும் பிரியாணி தயாரானதும் அந்த வாடையிலே சொக்கி விழுந்துவிட்டேன்.

நெஞ்சு முட்ட தின்று முடித்து... தூக்கு வாளி தூக்குவாளியாக எல்லார் வீட்டுக்கும் நானும் பைசலுமே ஸ்கூட்டரில் போய் பிரியாணி கொடுத்துவிட்டு வந்தோம்.  “இது சின்ன பெருநாள். பக்ரீத் தான் பெரிய பெருநாள்” என்றான். மாமாவீடு என்று சுலைமான் இல்லத்திற்கு அழைத்துப் போனான். 

தாடி மெல்ல நரைத்த பெரியவருக்கு வணக்கம் வைத்தேன். நண்பன் என்று அறிமுகப்படுத்திவைத்தான்.  அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். வீடு நிறைய புத்தகங்கள் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்த என்னை தன் வீட்டு நூலகத்தை சுற்றிப் பார்க்க அனுமதித்தார் திவான் பாய். பிறை பற்றியும் ரமலான் நோன்பு பற்றியும் கேட்டதற்கு பொறுமையாய் விளக்கம் சொல்லிக் கொடுத்தார். ஒரு பெரிய வரலாற்று ஆசிரியர் வீட்டில் நின்று கொண்டிருக்கிறோமென அப்போது தெரியாது. அங்கிருந்து சாந்திநகர், கே.டி.சி நகர் என்று இன்னும் பலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றான். 

பைசலோடு வெகு நெருங்கிய சினேகம் துவங்கி மூன்றாண்டுகள் முடிந்தபோது, நாங்கள் சொந்தவீடுகட்டி  செந்தில் நகருக்குக் குடிபுகுந்தோம். எப்போதாவது மேட்ச் ஆட மட்டும் வ.ஊ.சி மைதானத்துக்கும், பைசல் வீட்டுக்கும் வந்து போய்க் கொண்டிருந்த ஒட்டு சிலநாட்களில் நின்றும் போனது.

ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் மட்டும் கட்டாயம் பைசல் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிடும். தண்ணீர் வாளி நிறைய பிரியாணியும், வெங்காயச் சம்பல் ஒரு செம்பும் கொடுத்து விடுவது வாடிக்கையாகவே இருந்தது. பிறகு சென்னையில் வேலைகளுக்காக இடம்பெயர்ந்து இந்த தொடர்புகள் துண்டித்துப் போனது.

அப்பல்லோவில் ஒரு க்ளையண்டைச் சந்திக்கச் சென்றபோது பைசலைச் சந்தித்தேன். ஆள் இரண்டு தேகமாக இருந்தான்.  முகத்தில் மூப்பு தெரிந்தது. நிக்காஹ் முடிந்திருந்தது. இரண்டு பிள்ளைகளாம். உம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று இங்கு சேர்த்திருப்பதாகச் சொன்னான். 

மருத்துவமனை லாபியிலே நின்றுகொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க குணா” என்றான்.   ‘சோத்துக்கு ஒரு வேலையும் சுயத்துக்கு இந்த எழுத்தும்’ என்றேன்.

 “அடப் பார்டா நம்ம ஃப்ரெண்டு ஒருத்தன் எழுத்தாளராயிட்டான்” என்று கட்டிக்கொண்டு சிரித்தான். பழைய தொகுப்பு ஒன்றைக் கையில் கொடுத்தேன். வாங்கிப் புரட்டியவன் மகிழ்ச்சியான முகத்துடன் “இதுக்கு எவ்ளோ” என்று பணத்தை விரித்தான். உள்ள வைங்க சார்வாள் என்று கையமர்த்திவிட்டு போன் நம்பரை வாங்கிக் கொண்டேன். 

இங்கே தான் தேனாம்பேட்டையில் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இப்போதைக்கு தங்கியிருக்கிறோம். உம்மா குணமானதும் ஊருக்குக் கிளம்ப வேண்டுமென்றான். 

 “நல்லது சென்னைக்குள்  என்னதும் உதவின்னா என் நம்பருக்குக் கூப்பிடு” என்று சொல்லிவிட்டுத் திரும்ப நடந்தேன். புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருந்த நண்பர்களில் பைசல் பெயரையும் குறிப்பிட்டிருந்தது பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது.

-கார்த்திக். புகழேந்தி 
17-07-2015


Comments

  1. நல்ல நடையில் அனுபவ விவரணம்...

    ReplyDelete
  2. பைசல் பாயை கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil