சுரேந்திரனின் கதை

சு ரேந்திரனின் கதை எங்கே தொடங்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவன் அந்தக் கதையை எங்கே முடித்திருப்பான் என்பது பற்றியும் எனக்குத் தனியாக எந்த புரிதலுமிருக்க வில்லை. ஆனால் அவன் எப்படியாவது தன் கதையை எழுதிவிடச் சொல்லி என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். எனக்கு அவன் அப்படிக் கேட்பது வேடிக்கையாக இருந்தது. கதைகளை எழுதச் சொல்கிற நிறைய பேரை நான் அப்படியாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தேன் என்ன இப்போதுவரை அப்படித்தான். காது வலிக்க வைக்க தன் கதைகளைச் சொல்வார்கள். அதை எழுத்தில் பார்க்க அவர்களுக்குப் பிடிக்கும் போல. இத்தனைக்கும் நான் கதை எழுதுகிறவனில்லை. ஆனாலும் என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று நானும் யோசிக்கவே இல்லை. சொல்கிறவர்களுக்கு அத்தனை ரசனையாக இருக்கும் கதை, கேட்கிற எனக்கு சலிப்பாகவே இருந்திருக்கிறது. நான் ஒருபோதும் யாருடைய கதையையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுரேந்திரனுக்கு இந்த உண்மை தெரியாததால் அவன் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் அதி தீவிரமாய் என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பான். பிள்ளையார்கோவில் வேப்பமரத்...