வாடி ராசாத்தி - 36வயதினிலே

 




ஜோ-வுக்கு  நீண்ட இடைவெளிக்குப் பின் அட்டகாச ஒப்பனிங் 36 வயதினிலே.  “சினேகிதியே”வில் காட்சிக்குக் காட்சி பரபரவென்றோடும் வாசு*வாகட்டும்  “மொழி”யில் கட்டைவிரலை கம்பீரமாய் அசைத்து தன் இயல்பைச் சொல்லும் அர்ச்சனா*வாகட்டும் ஜோ மீதான ஈர்ப்பு இத்தனை ஆண்டுகள் பின்னும் ரசிக,ரசிகைகளிடம் அப்படியேதான் இருக்கின்றது.

 “36வயதினிலே” - இந்த ஸ்க்ரிப்ட்டை ஜோ பண்ணா நல்லா இருக்கும் என முடிவெடுத்த சூர்யாவுக்கு நிச்சயமாய் ஒரு பூச்செண்டு வழங்கலாம். இந்த கதாப்பாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு படமாகக் கரை ஒதுங்கியிருக்கும்.

அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவேன், “நம்ம ஊரில் எதெல்லாம் பெண்கள் செய்யக்கூடாதுன்னு ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருக்கோ அதெல்லாம் உலகத்திலே எங்காவது ஒரு மூலையில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டே தான் இருக்கு” என்று.  49 வயசெல்லாம் ஒரு வயசே இல்லை என்பதை அம்மா உணர்வதற்கு நாற்பத்து எட்டு வருடங்கள் செலவாகி இருக்கிறது.

மட்டம் தட்டி மட்டம் தட்டி அவளுக்குள்ளான திறமைகள் எல்லாவற்றையும் அவள் மனதுக்குள்ளே முதுமக்கள் தாழிபோல மூடிப்புதைத்து, மறுபடியும் அவள் எழுந்துவிடவேக்கூடாதென்று சுற்றி வட்டமாய் கல்லும் அடுக்கிவைத்து விட்டார்கள். அம்மாவுக்கு கைவினைப் பொருட்கள் பண்ணத் தெரியும். டி.வியில் ஒரு களிமண் பொம்மையைக் காண்பித்தால் போதும் அதைவிடச் சுலபமாய் இன்னும் அழகாய்ச் செய்துவிடுவாள். கோலங்கள், சமையல், திரைச்சீலைகள், வர்ணங்கள், மெத்தைவிரிப்புகள், பாசிகள், மாலைகள், இன்னும் இன்னும் ..

கடற்கரைக்கு ஒருநாள் அந்திநேரத்தில் சென்றிருந்து பேசிக்கொண்டிருந்தோம். அனிச்சை செயலாய் கடல் மணலை அலசி அலசி கிடைத்த சிப்பி உறைகளை கைக்குட்டையில் குவித்து எடுத்து வந்த மறுநாள் அது வீட்டு வாசலில் தோரணமாய்த் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பா இறந்தபோது, அவர் படத்தை அம்மாவே தன் கையால் ப்ரேம் வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி வைத்திருந்தாள்.   இப்படி வீடு முழுக்க அம்மாவின் கைவண்ணங்கள் தான் நிரம்பி இருந்தது.  அம்மாவுக்கு ஏன் பீடி சுற்றுவது பிடிக்காது என்பதை பின்னாட்களில் தெரிந்துகொண்டேன்.

வீட்டுக்குப் பின்னே கொஞ்சம் இடம்விட்டுக் கட்டினோம். நிலத்தடி நீருக்குத் தோண்டின ஆழ்துளைக்கு அருகிலே, வயல்புரங்களில் இருப்பதுபோல் ஒரு சதுரத் தொட்டி அமைத்திருந்தாள்.  அதைச் சுற்றியே துணிதுவைக்கும் கல்லை அம்மாவே கட்டினாள்.  வீட்டின் பின்வாசல் படிகள் கூட அம்மா கட்டியதுதான்.

பயன்பாட்டுக்கு மீந்த தண்ணீர் ஓடைவழியாக செல்லும் இடத்தில் தென்னை வாழை, மா, பலா, கருவேப்பிலை, தக்காளி, கத்தரி, பூசணி, கீரைகள், வெங்காயம், முருங்கை, அவரை, கத்திரி, வெண்டை, பூச்செடிகள் என்று ஒரு தோட்டமே அம்மாவுக்கென இருந்தது. என் பெயரிட்ட தென்னை ஒன்றிற்கு மட்டும் அடிக்கடி தண்ணீர் ஊற்றுவேன். வாளி நிறைய தண்ணீர் கோரிக்கொண்டு போய் அந்தத் தென்னை வரப்பில் வைத்துதான் குளிப்பேன். அம்மாவுக்கு இந்த ஏற்றத்தாழ்வெல்லாம் கிடையாது லேசாக வெண்டை வாடிவிட்டாலே அம்மாவுக்கு கைகால் பரத்தம் கொண்டு தோட்டமே பழியாய் கிடப்பாள்.

வீட்டில் ஒரு முட்டை ஓடு, உரித்த வெங்காயத்தாள், ஆட்டாம் புழுக்கை, என்று எல்லாமே அம்மாவின் தோட்டத்திற்கான உரமாகிக் கொண்டிருந்தது. கார்ஷெட்டுக்கு ஒதுக்கிய இடத்தில் கடை நடத்தினாள். கடை என்ற பெயரில் கஷ்ட்டப்பட்டோருக்கு தன்னாலான உதவிகளைச் செய்தாள். அந்த சின்னக் கடையின் வரவு செலவு கணக்கு நோட்டை எடுத்துப் பார்த்தால் ஆயிரம் ரெண்டாயிரம் கடன் வாங்கியவர்களெல்லாம் இருப்பார்கள். பலரது குடும்ப கஷ்டங்களுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.

அத்தை அத்தையென்று பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் எங்கள் வீட்டில் வளைய வந்துகொண்டிருந்தார்கள்.  எல்லார் வீட்டின் சாவியும் எங்கள் வீட்டு உள்திண்ணைக்கு மேலே ஆணிகளில் தொங்கிக்கொண்டிருக்கும். கூடவே அவர்களது குடும்பச் சண்டைகளும்... பலர் வீட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லி அந்த சிற்றூருக்குள் ஒரு சீர்திருத்தமே தொடங்கி நடத்திக் கொண்டிருந்தாள் அவள்.  எவ்வளவோ காரியங்கள்  முன்னெடுத்துச் செய்யதாலும் அவை அத்தனையும் தன் வீட்டுக் கதவுகளுக்குள்ளிருந்தபடி தான்.

வருடங்கள் சில ஓடியதும் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் செய்துகொண்டதும் அவர்கள் போக்குகள் மாறத்தொடங்கிவிடும் என்பது பாவம் அவளுக்குத் தெரியவில்லை.  தேசாந்திரியாய்த் திரிந்துகொண்டிருந்த எனக்குச் சொல்லத் தெரிந்ததெல்லாம். “அம்மா உன் கதவுகளுக்கு வெளியே ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதையும் கொஞ்சம் கைப்பற்று” என்ற வார்த்தை மட்டுமே.

அவள் காலத்தில் படித்த மருத்துவம் அம்மாவுக்குக் கைகொடுத்தது. நிரம்பிய மன வருத்தங்களோடு வீட்டைவிட்டு வெளிவந்தவளுக்கு இயலாத மனிதர்களைக் கவனித்துக் கொள்வதிலிருக்கும் ஆத்ம திருப்தி பூரண மருந்தைக் கொடுத்தது. செவிலியாக தன்னை மாற்றிக் கொண்டாள். இவளுக்கென்றேயான பிரத்யோகமான அன்பு எல்லா மனிதர்களையும் நெகிழ்ச்சியுறச் செய்கிறது. அதுசரி ஆட்டுக்குட்டியை அத்தனை நேசிப்பவள் மனிதர்களிடம் கருணைகாட்டுவைதென்பது புதிதா என்ன.

கொஞ்சக்காலம் தைரியத்துக்காக என் கரங்களைப் பற்றிக் கொண்டு நடந்தவள் இப்போது தன்னந்தனியாக மாநிலங்கள், நகரங்கள்,சிற்றூர்கள், கிராமங்கள் என்று தன் எல்லைகள் விரித்துப் பறக்கிறாள். அம்மா ஒரு தன்னம்பிக்கை மனுஷி என்பதைச் சொல்லிக் கொள்ளும் பிள்ளையாக இருப்பதில் தான் எத்தனைச் செருக்கு.

இன்றைக்கு ஃபேஸ்புக்கில் எந்த அடையாளங்களும் இல்லாமல் பூங்கோதையாகவே நுழைந்து, எழுதிக் கொண்டிருக்கும் அம்மாவின் சிறகுகளுக்கு வானமே எல்லை. பெண்ணிற் சுதந்திரம் போற்றுக என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்ததும் இதே பெண் தானே!.

36 வயதில் மட்டுமல்ல 46லும் நினைத்ததைச் சாதிக்கலாம்.  படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை இங்கே நினைவு கொள்கிறேன்.



தங்கமுனு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும்...
திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும்...
விட்டு வாடி ராசாத்தி... உன்ன நீயே காப்பாத்தி...
ராசாத்தி.. ராசாத்தி... ராசாத்தி...
நீ வாடி ராசாத்தி... அட வாடி ராசாத்தி... 


பொட்டப்புள்ள போக உலகம் பாதை போட்டு வைக்கும்...
முட்டுச்சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும்...
படங்காட்டும் ஏமாத்தி... கலங்காத ராசாத்தி... 

ஊரே யாருனு கேட்டா...
உம்பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு...
காட்டு... காட்டு... காட்டு... காட்டு...”


- முதல் நாள் இரவே ஜோவுக்காக படத்துக்குச் சென்றிருந்தேன். ப்ரேமுக்கு ப்ரேம் ஜோ ஜோ ஜோதான்.  முற்பாதியில் இருந்த காட்சி இணைப்பு கதைக்கு பக்காவாக வழு சேர்க்க டைமிங் வசனங்கள். நிறைய நடிகர்கள், காட்சிகள் என்று அழுத்தமாகச் சென்றுகொண்டிருந்த கதை மாரத்தானுக்குப் பின் தள்ளாடுகிறது. வலுவான காட்சி அமைப்பென்று பார்த்தால் ஜோ எடுக்கும் செமினார் மட்டுமே. இளவரசுவும் ஜோவும் இடம்பெறும் அந்த கெமிக்கல் காய்கறி பேக்டரி காட்சிகள் எல்லாம் மக்கள் மண்டையில் உரைக்கும்படி இன்னும் ஆழமாய் எடுத்திருக்கலாம்.

பிற்பாதி கதையில் ஜோ (அஜீத்தை விட) அதிகமாய் நடக்கிறார். பறக்கிறார். சிரிக்கிறார். அபிராமிக்கு வேறு அத்தனைக் க்ளோசப்புகள் வைத்து தமிழ் சினிமா ரசிகனைப் பயங்காட்டுகிறார்கள். சமையல்காரப் பாட்டியின் துடுக்குத் தனமும், கண்ணீரும் மெட்ராசின் நிறைய இட்லிக்காரப் பெரியம்மாக்களின் அடையாளம். படத்தில் அத்தனை கதாப்பாத்திரங்கள் இருந்தும் யாரையும் சரியாய்ப் பயன்படுத்தாதது போல ஒரு ஏமாற்றம். பாலச்சந்தர் படங்களில் வரும் அலுவலக நண்பன் கதாப்பாத்திரம் மட்டும் ஓகே. ஆனால் அவரையும் கடைசியில் தமிழ் புத்தகங்கள் பரிசாய்க் கொடுப்பவன் என்று வாருகிறார்கள்.  

ஜோ நடத்தும் மொட்டைமாடி காய்கறிப் புரட்சி என்னதான் சாதனைகள் செய்திருந்தாலும் மனதில் பதியாத காட்சிகளாய் நகர்கிறது. ஜோவை ரசிப்பவர்களுக்குக் கூட இந்தக் குறை தெரியவந்துவிடுவதுதான் இயக்குனரின் ஏமாற்றம். ஏழாம் அறிவு படத்தில் முருகதாஸ் கேமிராவின் பின் அமர்ந்திருக்க சூர்யா, “மஞ்சள் பற்றியும், கறவைகள், உணவுப்பழக்கம் பற்றியும்” பேசும் நான்குவரி வசனம் அளவுக்குக்கூட உரைக்கவில்லை. மற்றபடி கதைக்கருவுக்காக பெரிய அப்ளாஸ். தவிர மீண்டும் ஜோ அதற்காக ஒரு ஹார்ட்டின். (சுஜாதாவின் “மீண்டும்ஜீனோ” மாதிரி).


வேறென்ன சொல்ல படத்தைப் பாருங்கள். எல்லா ஆண்கள் கையிலும் ஒரு திண்டுக்கல் பூட்டு இருப்பதை உணரலாம். அது தாய், காதலி, மனைவி, மகள் என்று யாரையேனும் ஒரு பெண்ணை பூட்டி இருக்கும் அல்லது பூட்டத்துடிக்கும் என்பதை உணர்ந்துகொண்டு கொஞ்சம் சாவியைத் தேடலாம். 


- கார்த்திக். புகழேந்தி.
 18-05-2015.
























Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil