Tuesday, 15 April 2014

கெட்டிமேளம் கெட்டி மேளம்

இதுவரைக்கும் ஒரு போட்டோவையும் பார்க்காமலே புடிக்கலைன்னு சொல்லிகிட்டு இருந்தவன் இன்னைக்கு சரின்னு ஒத்துகிட்டான்னா பாரேன்.

இதோட பத்துவாட்டி கேட்டுட்டாங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டியாம்மா! புடிச்சிருக்குன்னு அதுவே சொன்னிச்சான்னு ஆமாடா ஆமாடான்னு சொல்லி எனக்கு வாய்தான் வலிக்கலை.. சீக்கிரம் அந்த பொண்ணுவீட்டுக்காரங்கட்ட பேசுங்களேன்.. நல்ல நாள் பார்த்து போய் பூ வைச்சுட்டு வந்துடலாம்
***
என்ன மச்சான் இந்நேரத்தில் போன் .

என்னடா பண்ணிட்டு இருக்கே.. உனக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கும் பாரு
எதுல ! இரு பார்க்கிறேன் “பூவே பூச்சூடவா “ என்னடா அது பூவே பூச்சூடவா! 

நீயே கண்டுபிடி டொக்.

இவன் யார்ர்ரா இவன் இன்னேரத்தில் தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பி மெஸேஜ் பார்க்கச் சொல்லிட்டு போனை வைச்சுட்டான். ட்விஸ்ட்  வைக்குறான்.
***
சரவணா !
ஜகதீஷ் எதோ மெஸேஜ் அனுப்பி இருக்காண்டா.,.. என்னவாம் கேட்டா சொல்ல மாட்றான்.

எனக்கும் வந்திருக்கு மாமா! “பூவே பூச்சூடவா தானே”

உனக்குமா! என்னவோ மேட்டர் போல

இரு புடிப்போம் சங்கதியை
***
சரவணா ஜகதீஷ் அண்ணா எதோ மெஸேஜ் பண்ணி இருக்காரு

உனக்குமா!

ஐ திங் அவருக்கு பொண்ணுபார்த்துட்டாங்கன்னு நினைக்குறேன்

அட ஆமா! பேச்சுவார்த்தை போய்ட்டு இருந்தது! ஓ…அதான் ஊருக்குப் போறேன்னு சொன்னானா! பாவி இதை ஸ்ட்ரெய்ட்டா சொல்லமாட்டாராமா இரு அவன….

***
ஜகதீசுக்கு பொண்ணு பார்த்துட்டாங்கைய்யா மாம்ஸ்.

நினைச்சேன்.. அதான் பயபுள்ள முறுக்குசுத்துதா விசயத்தைக் கேட்டா

ம்ம்ம் ..இப்போதான் பேசினேன். குனியுறான் நிமுறுறான்.. குத்தவைக்குறான் ஒரு பொஷிசன்லயே இல்ல.. பையன் செம லவ் மூட்ல இருக்கான்.. கான்ஃப்ரன்ஸ் போட்டு கலாய்ப்போமா

டேய் பாவம்டா… அவனாச்சும் சந்தோசமா டூயட் பாடட்டும்..

எங்க....இப்போதைக்கு சோலோ சாங் மட்டும் தான்
***
ட்ரெய்ன் டிக்கெட்லாம் போட்டாச்சு ! நீங்க கிளம்பி வாங்க முதல்ல வீட்டுக்கு வாங்க…அண்ணி! எல்லாரும் எக்மோர்ல இருந்தது போய்டலாம்

சரிங்க தம்பி!  இந்தாங்க உங்க அண்ணன் கிட்ட குடுக்குறேன்,

யாரு..

உங்க தம்பிதான். 
ஞாயிற்றுக்கிழமை பொண்ணுபார்க்க திருநெல்வேலி போகனும்ல அதான் சனிக்கிழமை டிக்கெட் போட்டாராம். வீட்டுக்கு வந்திட்டா எல்லாரும் ஒன்னா போய்டலாம்ன்னு சொல்றாரு.. 

போனைக்குடு

இந்தாங்க 
***
என்னடா! உனக்கு பிடிச்சுருக்கா?.

அதான் போறோம்ல போய் பார்ப்போம்.

சரி மத்தவங்க என்ன சொன்னாலும் கண்டுக்காத உன் மனசு சரின்னு சொன்னா உன் வழில போ!

ஹே! என்னப்பா அட்வைஸெல்லாம் பலமா இருக்கு!

அண்ணன்னா அப்படித்தான் இருக்கனும்., கூட ஃப்ரெண்ட்ஸ் யாரும் வராங்களா!

தெரிலயே! வந்தா ஓவரா கலாய்ப்பானுங்க! நல்லாதான் இருக்கும் கேட்டுப் பார்க்குறேன்.

***
எந்த ஸ்டேஷன் இது! திருநெல்வேலி இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்.

விருது நகர். எட்டேமுக்கால் ஷார்ப்பா.. திருநெல்வேலி போய்டும்

எங்க பங்குனி உத்திரத்துக்கு போய்ட்டு இருக்கீங்களா!

என் ரெண்டாவது பையனுக்கு பொண்ணு பார்க்கப் போய்ட்டு இருக்கோம்
அப்படியா ! நல்லது நல்லது.. நல்லபடியா அமையட்டும். பொண்ணு எந்த ஊரு ?
சேரன்மாதேவி பக்கம்ங்க!
நமக்கு பத்தமடைதான் ஊரு.. 
அங்கிருந்து பக்கம் தானே பொண்ணு ஊரு.. 

***
நீ தூங்கலையா…

நீங்க தூங்குங்க..தலைவரே! எங்களுக்குத் தெரியும்.

என்னம்மோ சரியில்லடா! ரெண்டுநாளா ஒரு மப்பாதான் திரியுற..

 ஹே போப்பா! போன் பேசிட்டு இருக்கோமுல்ல.. 

ஆடாதீங்கடா.. நாங்களும் இந்த ஆட்டம்லாம் போட்டவங்கதான். 

உம்பையன் அழுறான் பாரு! ஓவரா ஓட்டக்கூடாது

***
(”ஒத்த பார்வை பார்த்தா மனசுல சக்தி ஏறுதாத்தா”…காலர் ட்யூன்.)

என்ன மச்சான் மிட்நைட் ரெண்டு மணிக்கு பர்ஸ்ட் ரிங்லயே அட்டண்ட் பண்ற…

தூங்கிட்டு இருந்தேன். போனடிச்சதும் எடுத்தேன்.

குரலைக்கேட்டா அப்படி தெரியலையே… சரி ஊருக்கு போறேன்னியே.. கிளம்பிட்டியே..

ம்ம்ம் ..இந்தா போய்ட்டு இருக்கேன்.

சரி மச்சான் ..அதான் கேட்க தான் போன் பண்ணேன்.

ம்ம் வேறென்ன…

பார்யா! போன் எடுக்கமாட்டேன்னு நினைச்சா எடுத்ததும் இல்லாம வேறென்னன்ன்றான் என்ன மச்சான்… ரொமாண்டிக் மூடா..

நீ போனை வைச்சுட்றா சாமி..

ஹஹ சரி சரி கலாய்க்கலை.. எல்லாம் நல்லபடியா அமையும்டா ! சந்தோசமா இரு.. உன் லைஃப்ல நீ இனி எடுக்கப்போற எல்லா டெஷிசனும் வெற்றிதான் பாறேன்,

என்னம்மோ சொல்ற.. என்ன சொல்றன்னுதான் புரியல ஹஹ..

ஹஹ...அதுசரி புது மாப்பிள்ளை ஆகிட்ட! இனி உனக்கு எங்க பேச்செல்லாம் புரியவாப்போகுது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் போ மச்சான், உன் நல்ல மனசுக்கு எல்லாமே ஜெயம் தான். முதல் பால்லயே சிக்ஸர் தான் பாரேன். 
***
(அறை எண் 111*)
***
என்னப்பா கிளம்பலையா யாரும்.

காலையில் ஆறுமணில இருந்தது இவன் இம்சைத் தாங்கல..டேய் மணி எட்டுதாண்டா ஆகுது… பதினோரு மணிக்குமேலதான் பொண்ணுபார்க்க வரோம்ன்னு சொல்லிருக்கோம்.

கொழுந்தனாரே ரொம்ப அவசரமோ..பொண்ணை யாரும் தூக்கிட்டுப் போகமாட்டாங்க கொஞ்சம் பொறுங்க.

யே! அதுக்கு சொல்லலப்பா.. பங்குனி உத்திரம் அவசரத்துக்கு வண்டி கிடைக்காது

அதெல்லாம் காலையிலே உங்கண்ணன் போய் வண்டி புக் பண்ணிட்டு வந்துட்டாண்டா.. நீ போய் குளிச்சு ரெடியாகு..

அத்த இத்தோட நாலாவது தடவை குளிச்சுட்டாரு உங்க சின்ன மகன்.

ஆளாளுக்கு என் தம்பியை கிண்டல் பண்ணாதீங்கப்பா… அதான் நான் இருக்கேன்ல

போங்கைய்யா
***
ஜெகதீசு..
என்னப்பா!
இங்க வாய்யா…
சொல்லுப்பா..
இந்தா பேராச்சிசெல்வியம்மன் கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன் . விபூதி எடுத்துக்க..
பூசிவிடுங்க..

அப்பாமேல கோவமாடா..

அதெல்லாம் இல்லையே யார் சொன்னா.,,

எங்கப்போனாலும் சின்னவனுக்கு எப்போ கல்யாணம்ன்னு கேட்குறவங்ககிட்ட பதில் சொல்லி முடியலடா…அதான் தீவிரமா பொண்ணுபார்க்க ஆரம்பிச்சுட்டேன். உன் பேச்சையும் மீறி…

இப்போ எதுக்கு இதெல்லாம் பேசிகிட்டு,,

ஆனா! உன் மனசுக்கு விரும்பாத எதையும் அப்பா செய்யமாட்டேன்னு நீ நம்பனும். நம்ம வீட்டில் ஒரு நல்லகாரியத்தை நடத்தி எல்லார் முகத்திலும் சந்தோஷத்தை நீதான் மீட்டுக் கொண்டுவரப்போற! அம்மா சொன்னா… பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டே இருந்தேன்னு.. அவங்க வீட்டில் எல்லோருக்கும் பரிபூரண சம்மதம். பொண்ணுக்கும் தான். பொண்ணு நல்ல குணம். பெரிய குடும்பம். உனக்கு ஒன்னுன்னா சொந்த பந்தங்க சூழ்ந்து வந்து நிப்பாங்க. அப்பா நல்லதுதான் செய்வேன் என் புள்ளைக்கு..

சரி வாங்க வண்டி வந்துட்டு கிளம்புங்க மணி ஆகிடுச்சு.
***
அப்பாவும் புள்ளையும் கொஞ்சிகிறாங்க டோய்!

ஏங்க சும்மா இருங்க… என் கொழுந்தனார் வாய் மலர்ந்து பேசுறதே எப்பவாச்சும் தான் .

உன் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் சொன்னியாடா.. ஒருத்தரையும் கூட்டி வரலையா கூட.. பொண்ணுக்கு காலேஜ் ப்ரெண்ட்ஸ்லாம் இருக்காங்கன்னு சொல்லி இருக்க மாட்ட அதான் வரலை போல.. ஹஹ

ஏப்பா! சாமி கிளம்பி நேரமாச்சு.. மணி பத்தரை ஆகுது.

எனக்கு பொண்ணு பார்க்கும் போது கூட இவன் இவ்ளோ பஞ்சுவாலிட்டியா இல்லையே!

உனக்கு பொண்ணு பார்க்கும் போது நீ எப்படி குதிச்சேன்னு எங்களுக்குத் தானே தெரியும் பெருமாளு... 

ஏங்க... ஏன்,,ஏன்,..தேவையா இதெல்லாம் உங்களுக்கு..

சரி சரி நான் கீழ நிக்கேன். எல்லாரும் தட்டுமுட்டுசாமானோட வண்டிக்கு வாங்க,.,, மாப்ளே! போலாமா! ;)
***
நம்ம நேரத்துக்குத்தான் இந்த ட்ரெய்னும் வரணுமாப்பா! என்ன வண்டிண்ணே இது.. 

டவேரா செவர்லட்... 

அட எங்க போற ட்ரெய்ன்னு கேட்டேன். 

அதுவா அது திருச்சந்தூர்போற ட்ரெய்னா இருக்கும் தம்பி.

எப்பத்தான் திறப்பாங்க கேட்ட?!ஹ்ம்ம் 

ரெண்டு நிமிஷம் பொறுக்க மாட்றானே என் தம்பியா இது! இவ்ளோ நாள் கேட்டதுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிக்கிட்டுருந்த அப்பாவியா இது!

எப்பா சாமி! ஆளைவிடு
***
இந்த வண்டி ஹைவேலயும் இதே ஸ்பீட்ல தான் போகுமா..

சேரன்மாதேவிக்கு ஏன் சார் ஹைவேல போனும்..நாம மேலப்பாளையம் வழியா போய்டலாம்.

ம்க்கும்… சரி கொஞ்சம் சீக்கிரம் போங்க

அவரை ஏண்டா தொணத் தொணன்னுகிட்டு நீங்க பார்த்து ஓட்டுங்க ட்ரைவரண்ணே.. வழில கோவில் இருந்தா நிப்பாட்டுங்க தேங்காபழம் உடைச்சுட்டு போலாம்.
***
இங்க இருந்தது பொண்ணுவீட்டுக்கு எப்படிபோனும்

போனடிச்சு கேக்குறியா வேணும்ன்னா பொண்ணுகிட்டே..

எப்பா சாமி இனி எதாச்சும் பேசினா என்னை என்னான்னு கேளு

ரெண்டுபேரும் சும்மா இருங்க முதல்ல… “ஹலோ..
”ஆங்க் நாங்க பஸ் ஸ்டாண்ட் கிட்ட வந்துட்டோம்”
“ஆமா லெப்ட்ல ஒரு ரோடு போகுது”
“சரி சரி அங்கிருந்து”
“ஓ… மூணாவது கட்டா …சரி..சரிங்க வந்துட்றோம்…நல்லது நல்லது”
அந்த ஆலமரத்துக்கு பக்கத்துல லெப்ட்ல போங்க தம்பி
***
வாங்க ..வாங்க

நான் இல்லீங்க இவர்தான் மாப்பிள்ளை..

கேட்டாங்களா அவங்க.. (கிசுகிசுகுரலில்…. )

எங்களுக்குத் தெரியும் நாங்கதான் போட்டோல பார்த்துட்டோம்ல..
ஆரத்தில காசு போடனும்.. மோதிரம் …செயினுல்லாம் கூட போடலாம்..
ஆஹா..வந்ததுமே வசூல் பண்றீங்களே..
***
நல்ல காரியமெல்லாம் பேசி முடிச்சாச்சு பொண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் பூ வைக்கச் சொல்லிடலாம்.

இப்படி பூஜை ரூம் பார்த்து உட்காருங்க. நீ
யும் இப்படி உட்காரம்மா..

சாமியை நல்லா கும்டிச்சுக்கோங்க .. 
மாப்பிள்ளைக்கு தங்கச்சி இங்க வாம்மா.. பொண்ணுக்கு இந்த மாலையை போட்டு சந்தனம் வைச்சு விடும்மா.. நீ
ங்க அண்ணன் வீட்டம்மாவா வாங்க நீங்களும் பூவைங்க..

பொண்ணோட தம்பி மாப்பிள்ளைக்கு இந்த மாலையைப் போடுங்க.எங்க ரெண்டுபேரும். அப்படியே பெரியவங்க எல்லாம் வந்து திருநீர் வைச்சு வாழ்த்துங்க.

மாப்பிள்ளைக்கு தங்கச்சி பொண்ணு கழுத்தில் இந்த மாலையைப் போட்டு ஜெகதீசு பொண்டாட்டி..ஜெகதீசு பொண்டாட்டின்னு மூனுதரம் சொல்லும்மா,,, 

ஜெகதீசு பொண்டாட்டி..ஜெகதீசு பொண்டாட்டி..ஜெகதீசு பொண்டாட்டி..
***
காபி எடுத்துக்கங்க..
இவங்கதான் பொண்ணா!
ஏன் போட்டோல பார்க்கலையா
கொஞ்சம் மங்கலா தான் இருந்தது… போட்டோ நேர்ல அழகா இருக்காங்க..

மாப்பிள்ளை ஏன் பேசவே மாட்றார்..
கூச்ச சுபாவம் என்னை மாதிரியே இல்லடா!

நீ வீட்டுக்கு வாய்யா! அதெல்லாம் இல்லைங்க பொண்ணுகூடதான் பேசமாட்றாங்க நான் ஏதும் சொன்னனா!

எங்கக்கா! இன்னைக்கு மௌன விரதம் யார்கிட்டேயும் பேசமாட்டாங்க

 “ஹாஹாஹா”

***
என்ன தம்பி தனியா பொண்ணுகூடல்லாம் பேசலையா! இந்த அண்ணனை மாதிரி அவசரப்பட்றாதடா
இருய்யா! போட்டுகுடுக்குறேன்.
அடப்பாவி!  உனக்குப்போய் நல்லது பண்ணனும்ன்னு நினைச்சேன் பாரு என்ன சொல்லனும்., சரி போ போய் பேசிட்டு வா! நான் வேணும்ன்னா சத்தமா எல்லார்க்கும் கேட்குறமாதிரி சொல்லிடவா!

ஏன்யா இப்படி! உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன். வேணும்ன்னா யாருக்கும் கேட்காத மாதிரி சொல்லு..

பார்ரா! (சத்தமாக..) ங்க இந்த பொண்ணு மாப்பிள்ளைலாம் தனியா பேச எப்போ விடுவீங்க.. :p
***
போட்டோ பார்த்ததும் புடிச்சிருந்ததா?
ம்ம்
அதெப்படி பார்த்ததும் புடிச்சுட்டா
ம்ம்
ம்ம்..லாம் சொல்லாதீங்க.. வாயைத்திறந்து சொல்லுங்க?

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு புடிச்சிருக்கு.
***
ஹாஹா! உங்க கையலே செஞ்ச சிப்ஸாமே.. அது நல்லா இருந்தது.
தேங்ஸ்.
அதென்ன தீக்குச்சியிலே வீடு... நீங்க செஞ்சதா! 
ம்ம்
நல்லா இருக்கு
தேங்க்ஸ்
மணிரத்னம் படம் ரொம்ப புடிக்குமோ
புரியல.. 
இல்ல ஒவ்வொரு வார்த்தையா பேசுறீங்களேன்னு கேட்டேன்.

சிரிச்சுட்டேன்,

ஹஹா..சரி சரி நிறைய பேசினா.. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கதையா எழுதி கொன்னுடுவான்.. நாம அப்புறம் போன்ல பேசிக்கலாம். :உங்ககிட்ட போன்  இருக்கா.. 

***
மாம்ஸ் இன்னைக்கு ஜகதீஷ் பொண்ணு பார்க்கப் போயிருக்கான் போனைப் போட்டு கலாய்ப்போமா..

அவன் போனை அட்டண்ட் பண்ணிட்டான்னா நான் மொட்டை அடிச்சுக்குறேன்டா! 

ஏன் வெயில் ஜாஸ்தியா! அட அவன் எடுக்க மாட்டான்னு தெரியும். அதுக்காகல்லாம் அப்படியே விடமுடியாது எல்லா திசையிலிருந்தும் அட்டாக் பண்ணுவோம். 

அவன் யார்ரா நம்ம பைய்யன் .. 

போனா போட்டு பிசியா இருக்கும் தொழிலதிபர்ன்னு இந்த உலகத்துக்கு காட்டுவோம்.
அப்போ எல்லாருக்கும் மெஸேஜ் தட்டிவிடு.. 

Guys...keep calling..to Jagath Phone Number.
He is in a very Important Meeting. LolZ

***
என்னடா இது ரிங் ஆகும் முன்னே கட் பண்றான்.

நம்ம அட்டாக் அப்படி ஹஹ.. 

பொண்ணு பார்த்த அன்னைக்கே போனைப் பார்க்காமல் நண்பனோட கால் கட் பண்ணும் ஃப்ரெண்டு ஒருத்தன் நமக்கு இருக்கான்னு
வரலாறு சொல்லும் ...  ஃப்ரீயாவிடு மாம்ஸ்

சென்னை பக்கம் வரட்டும் பேசிக்குவோம்.,.
***
ஜெகதீஸ் சென்னை வந்துட்டானாம்டா!
அப்படியா அப்போ இரு கான்ஃப்ரன்ஸ் போடுறேன்..
ஹே அட்டன் பண்ணிட்டான்.. கேர்புல்.. 

“ஹலோ”

புது மாப்பிள்ளைக்கு...
ரப்பப்பரே.. 
நல்ல யோகமடா
ரிப்பப்பரி
நல்ல மணமகள் தான் வந்த நேரமடா..

ஆரம்பிச்சுட்டீங்களாய்யா... 

“வாங்க புதுமாப்பிள்ளை.. எப்படி இருக்கீங்க! பொண்ணு என்னா சொல்லுது”

“யோவ்! வந்ததுமே ஓட்டாதீங்கைய்யா! யார்லாம் இருக்கா லைன்ல..”

சரத், தேவி, சரவணா, தரன் நாலு பேரும் லைன்ல இருக்காங்க நீ முதல்ல மேட்டர் சொல்லுடி,..

ஆஹா… ஒன்னு கூடிட்டீங்களாய்யா?!?!?
இனி கல்யாணம் ஆகுறவரைக்கும் உன்னை விட்டு வைப்போம்னா நினைச்சே…
***
கெட்டிமேளம் கெட்டிமேளம் 

-   
- - கார்த்திக், புகழேந்தி.
Saturday, 12 April 2014

ரயிலும்... சமூகமும்.கோவையிலிருந்து சென்னை செல்லும் ரயில்...
D11-ல் 60-வது இருக்கையை முன்பதிவு செய்திருந்ததால் அவசரமில்லாமல் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.

டிக்கெட் செக்கரிடம் பி.என் ஆர். மெஸேஜ் காண்பித்துச் சோதனை முடிந்தது..

கையிலிருந்த 'வறீதையா கான்ஸ்தந்தின் - அந்நியப்படும் கடல்" வாசிக்கத் தொடங்கினேன். மீண்டும்...

(எட்டாயிரம் கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்ட ஒரு தீபகற்ப நாட்டில் வாழும் மக்களில் பாதிப்பேர் கடலைப் பார்த்தே இராதவர்கள்.

ஆனால்,
இக்கடற்கரையில் வளங்கள் சார்ந்து வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத அதிகாரிகள் மேல்தட்டில் அமர்ந்து கொண்டு கடல் குறித்த கொள்கைகளை வகுக்கின்றார்கள்.
 - அ.கடல் )

ஆச்சர்யம் மிக்கதாய் நான் இருந்த வரிசையில் நானும் எதிரே ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தோம்.

கருமமே கண்ணாக அடுத்த புத்தகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

 இடையில் ஈரோடு, சேலம் எல்லாம் கடந்துவிட்டிருந்தது.

அவ்வப்போது அனிச்சையான திரும்பலில் கவனித்தேன். அவர் அணிந்திருந்த இதய வடிவ சிமிக்கியும், நெழிற் வளைந்த மோதிரமும் பார்வையை ஈர்த்தது.
:P

இதனால் என்னை நீங்கள் திருட்டுப் பயல் என நினைச்சுக்கப்டாது. அழகா இருந்தா ரசிப்போம். அவ்வ்வ்வ் ;)

நிறைய ஸ்டேசன்கள் கடந்து,
தண்ணீர் பாட்டில் தீர்ந்து,
அவர் தோசையும்,
நான் சப்பாத்தியும் கொரித்து,
நான் காபியும்
அவர் டீயுமாக குடித்து...

ரயில் போய்க் கொண்டே இருந்தது இருவரும் எதுவும் பேசவில்லை..

புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு கொஞ்சம் மாலை வெயிலை ஜன்னலோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது..

எனக்கு வீட்டிலிருந்து போன் வந்தது.. (நம்புக வீட்டிலிருந்துதான் :P ) ...

வழக்கம் போலே "அவளிடம் "எதிர் இருக்கை பெண்ணைப் பற்றி கொஞ்சம் சொல்லி வைத்து... செல்லச் சண்டைகளாக சிணுங்க வைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர்காற்று முகத்திலறைய இரயில் தண்டவாளத்தை விழுங்கி முன்னோறிக் கொண்டிருந்தது.

சரியாக நான்கு மணி நேரம் பின்
 ஜனனி வெங்கட்ராமன். வைத்திருந்த போன் சினுங்கியது.

 அது தான் எதிர் இருக்கைப் பெண்ணின் பெயர். நன்றி சீட்டிங்  சார்ட் .

காற்றுக்கும் கேட்காத சப்தத்தில் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே கீரிச்...சிணுங்கல்.
புரிந்தது. அவரும் ரிசர்வேஷன்.

மீண்டும் புத்தகத்தைக் கையிலெடுத்தேன். பெரிய புத்தகப் புழுவாக இருப்பான் போல என்று நினைத்தாரோ என்னவோ....
"யார் அது "மக்சிம் கார்கி" என்றார். "

"புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர். உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியாமல் தான் யாரென்றே கேட்டேன்"

கையிலிருந்த புத்தகத்தைக் கவனித்திருக்கிறார்போல...

"இவ்ளோ பெரிய புக் முடிச்சிடுவீங்களா...?"

"பிடிச்சிருக்கே... படிச்சுடுவேன்."

"இப்படிக் கொடுங்க"

"ம்ம்"

இடையில் சில பக்கங்களை வாசித்துவிட்டு...

 "பெயரே வாய்க்குள் நுழையலே... நீலவ்னா பெலகேயா-வா என்ன பெயர் இதெல்லாம்... "

"இது ரஷ்யப் புரட்சி காலத்தில் எழுதப்பட்ட புத்தகம். தமிழில் மொழி மாற்றம் .. உலக அளவில் 120க்கும் மேலான மொழிகளில் மொழிமாற்றம் செய்திருக்காங்க.."

"ஓஹ்...இதெல்லாம் எப்டி படிக்கிறீங்களோ"

"ஹஹ..சென்னையா"

"ம்ம் ... you too aah?"

"ஆமாம்"

"சென்னையில் எங்கே?"

"நுங்கம் பாக்கம்" நீங்க என்று கேட்கத்தயக்கம். கேட்கவில்லை அவளே சொன்னாள்.

"வேளச்சேரி. "

"ட்ரெய்ன் ஒன் ஹவர் லேட். எப்படிப் போவீங்க .. கால்டாக்சியா"

"அப்பா வந்திடுவார்"

"ஓஹ்... தனியா எங்கே கோவை?"

"எக்ஸாம் எழுத வந்தேன். சென்னைல ப்ளாட்ல இருக்கோம்."

"ஓஹ்.. "

கொஞ்சம் மௌனங்கள் பின்.. காற்றை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டேன்.

சென்னை நெருங்க நெருங்க... ரிஷர்வேசன் இல்லாத மக்கள் அதிகரித்து வர...

இடுப்பின் உள்ளாடை வெளியில் தெரிய அணிந்த கூட்டம் ஒன்று.. கதவுகளுக்கருகே நின்று சீட்டியடித்துக் கொண்டிருக்க... இருக்கை மாற்றக் கேட்டாள்.

எழுந்து மாறிக் கொண்டேன். பக்கத்து வரிசை நிரப்பப்பட... இங்கே இரண்டு பேர் மட்டும்.

அடுத்து எதுவும் பேசவில்லை. எனக்கும் துணிவில்லை... நிறைய பேசுபவன் தான். ஆனாலும் தயக்கமாக இருந்தது.

தூக்கம் கண்களைத் தழுவ காலை நீட்டி எதைஎதையோ எழுதத்துவங்கினேன்.

தேவதைத் தனத்தோடு அவளை கவிதை எழுதவெல்லாம் தோன்றவில்லை..

நான் நிச்சயம் எழுதியிருக்கக் கூடியவன் தான். ஆனாலும் எழுதத் தோன்றவில்லை..
ஏன்..?
தெரியாது.

இரயில் சிநேகம் என்ற வார்த்தை கூட முளைவிட்டிருக்காது இருவருக்குள்.

அத்தனை அடக்கமான உரையாடல். அது அவளுக்கொரு பாதுகாப்பு வளையம். இனி அவளின் நன்மதிப்புக்காகவேணும் நான் மிகுந்த கவனத்துடன் , பலம் கொண்ட கண்ணியத்துடன் பயணிக்க வேண்டும்.

தோழமையின் பெயரால் அவளுக்கு பாதுகாப்பளிக்கும் கடமை!
கேள்விகளில்லாமல் எனக்குள் தொற்றிக் கொள்ளும்.

ஆக, அவள் என்னை பயன்படுத்திக் கொள்கிறாளா? என்னை என்றால் இச்சமூகத்தை?

 கோளாறு பிடித்த சமூகம். எந்த வினாடியிலும் தன் அஸ்திரத்தை மாற்றி விடும்.

அதைத் தெரிந்து கொண்டவள். எந்த சமூகத்திடமிருந்து தன்னை காக்க வேண்டியிருக்கின்றதோ... அதே சமூகத்தையே தனக்கு கேடயமாக அறிவிக்கின்றாள்.

சிந்தனைகளில் ஒரு கம்பீரம் வருகிறது...
நான் என்பது இந்த இடத்தில் ஒழுங்குமிக்க ஒரு சமூகமாக காட்டப் படவேண்டும்.
தயார் பட்டுக் கொள்கிறேன்.
பயணம் முடியும் வரையிலும் வேறு சம்பாசணைகள் தேவைப் படாது.. அவள் தன்னை தேவைப்படும் அளவு அறிவித்துவிட்டாள் (வேளச்சேரி.
 அப்பா வருவார்) .

கனம் பொருந்திய ரயில்.. எனை புதிதாய் என்னென்னவோ சிந்திக்கவைத்துவிட்டது.

புத்தகங்களுக்குப் பதில் நான் என்னையே புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

சென்னை இருள் சூழ்ந்த ஒளியுடன்.. இரைச்சலாய் நெருங்குகிறது..

-கார்த்திக்.புகழேந்தி

குற்றாலமும் கனவுப் பிரியனும்

கனவுப் பிரியன்

இந்த மனுஷர் சும்மா இருந்திருக்கலாம்ல… யாரோ கிளப்பி விட்டாங்கன்னு.. இவரும் குற்றாலத்தைப் பற்றி எழுத.. நம்ம முகத்திலும் சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு..

குற்றாலத்திற்கு எத்தனை முறை போயிருக்கேன்னு என்னைக் கேட்டா ஒரு முப்பது நாற்பது..இல்ல ஒரு ஐம்பது முறை… ஆவ்வ்வ் கணக்கில்லீங்க…
திருநெல்வேலில இருந்தது ஐம்பத்தி ஆறு கிலோமீட்டர் சராசரியில் உள்ள பேரூராட்சிதான் தென்காசி,

 சொந்தபந்தங்கள் நிறைந்த ஊர்.
அங்கிருந்து நான்கு இல்ல ஐந்து கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்தால் குற்றாலம்.

லீவு விட்டா கிளம்பு குற்றாலத்துக்குன்னு தூக்குச்சட்டியில் லெமன் சாதத்தோடு மேக்ஸி கேப் வேன் பிடித்துப் போகும் அக்கம் பக்கத்து உறவுகள் சூழ்ந்த புண்ணிய பூமியில் இரண்டு தலைமுறைக்கும் மேல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது.

பக்கத்துவீட்டுப் பெண்களை அத்தை  சித்தி, மாமா, சித்தப்பான்னு உறவு முறை சொல்லி அழைக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளாகவே வளர்ந்தோம்.

***
பேரருவி (Main Falls), பழைய குற்றால அருவி, ஐந்தறுவி, செண்பகாதேவி அருவி, புளியருவி, பழத்தோட்ட அருவி..இப்படி ஒன்பது அருவிகள் பாயும்  குற்றாலத்திற்கு மீசை அரும்பும் வயதில் நண்பர்களோடு நனைந்த பொழுதுகள் அலாதியானது,

பைக்குக்கு..ரெண்டு பேர். திலி. பழைய பேட்டையைத் தாண்டினதும் ரேஸ்தான்… பாவூர்ச் சத்திரத்தில் சேகர், பழநிச்செல்வம், வெற்றி, ராசு என நண்பர்கள் படை சேரும்..

அப்படியே தென்காசி ரயில் நிலையம் வாயில் சாலையில் நடந்து போனீங்கன்னா ஒரு  நீலநிற மச்சிவீட்டில் பசுவும் தொழுவமும் இருக்கும் பாருங்க அது வேறு யாருதும் இல்லை..  எங்க சித்திவீடுதான். எம்மேல செம பாசம். அவங்க பையனுக்கும் கார்த்தின்னு பெயர் வைக்கும் அளவுக்கு..

சின்ன வயதிலே ஹாஸ்டல்ல வளர்ந்ததினாலே சொந்தக்காரங்க பத்தின விபரமெல்லாம் தெரியாது.

முதல்முறை குற்றாலம் போனப்போ அவங்க வீட்டில் சாப்பிட்டுட்டு.. அத்தை முறைதான்னு நினைச்சு அவங்க பொண்ணை சைட் அடிச்சு தொலைச்சுட்டோம். நானும் சதீசும்.

வீட்டுக்கு வந்ததும் தான் தெரிஞ்சது அது அத்தை இல்லை சித்தின்னு.. (தென்காசியில் முதல் காதல் தோல்வி அது தான் :p )
இப்போ அந்த பொண்ணு வீட்டுக்காரர் மிலிட்ரியில் இருக்கார்.

***

பாவூர்ச்சத்திரம் தாண்டி தென்காசி பாலம் இறங்கினதும். அந்த வயல் முனையில டீக்கடை ஒன்னு இருக்கும் பாருங்க அது தென்காசி ஃபேவரிட். அங்கே ஒரு டீயைப் போட்டுட்டு சித்தி வீட்டில் போய் தலையைக் காட்டிட்டு கேமிரா தவிர்த்த மற்ற உடைமைகளை அங்கேயே வைச்சுட்டு..
 குற்றாலத்துக்கு மாலை மங்கும் நேரத்தில் கிளம்பிபோனா சாரல் அப்படியே முகத்தில் இறங்கும் பாருங்க… ஆஹ் என்ன வாழ்க்கடா அது!

உள்ளூர் பிள்ளைகளை சைட் அடிப்பது. உடல்நலத்திற்கு கேடு. ஆக வெளியூர் புத்ரி ஹெ! கேரளநாட்டிளம் பெண்களென கண்ணுக்கு குளிச்சியாய், மெடிமிக்ஸ் சோப்பு வாசனையில் நுகர்ந்துவிட்டு,  உச்சந்தலை நனைய எண்ணை ஊற்றி ஊர் சுற்றனும்..

நெல்லிக்காய், நாவல், மீன் இறைச்சி, லீச்சி பழம், மிளகாய் பஜ்ஜி, கிழங்கு சிப்ஸ்ன்னு நொறுவல்களா தின்று தீர்த்துவிட்டு… சீசன் துண்டு கட்டி சீறிவரும் அருவியில் குமுற குமுற அடிவாங்கி  குளித்தால் வாழ்க்கை மோட்சம் அடையும். தேகம் பொலிவு பெறும்..

சில நேரம் பேரருவியில் எல்லைதாண்டி தண்னீர் விழும் போது நம்மை குளிக்கவிடமாட்டார்கள். கொடும்பாவி தொந்திக்காவலர்கள். அந்த நேரம் தண்ணீர் எப்போ குறையும்ன்னு வரிசையில் காத்திருப்பது தான் சொர்க்க நரகம்... யா! புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்கி தியேட்டர்க்குப் போனதும் முதல் சீன்ல கரண்ட் இல்லை வீட்டுக்குப் போ-ன்னா எப்படி இருக்கும் அப்படி ஒரு தண்டனை அது. அருவியோட வேகத்தில் நீர்த்துகள் சிதறி சாரலா வந்து நனைத்துவிட்டுப் போகும்...

மலைமேல் ஏறி செண்பகாதேவியில் குளிப்பது இன்னொரு வரம்.
குடும்பத்தோடு வருபவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பது அரிது.
மற்றபடி பழைய குற்றாலம் , ஐந்தருவின்னு ஒரு நாள் முழுக்க குளித்து முடித்து நேரே செங்கோட்டை பார்டர் பொரோட்டாவை வெளுத்துக்கட்ட ரஹ்மத் ஹோட்டலுக்கு பைக் பறக்கும்போது மணி 12 தாண்டி இருக்கும்…

முழு பொரித்த கோழி, பதினான்கு பரோட்டா, ஆனியன் ஜாஸ்தி ஆம்லேட்,  சிக்கன் க்ரேவின்னு வெளுத்துக்கட்டிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்கவென்றே எங்களுக்கு வாய்த்த அடிமை எங்கண்ணன் சுரேஷ்   :p
 இப்போ கல்யாணம் ஆகி குழந்தைன்னு செட்டில் ஆகிட்டான். தப்பிச்சுட்டான்!

அன்றைக்கு நண்பர்கள் கிளம்பிப் போக நேரே சித்தி வீட்டு மொட்டை மாடி போய் படுத்தால்,  அருவித் தண்ணீர் விழுந்த வேகத்தில் புறமுதுகில் வாங்கின அடியில் மறுநாள்  சுள்ளுன்னு வெயிலடிக்கும் வரைக்கும் தூக்கம் வரும். பதினோரு மணி வாக்கில்  எழுந்தால் வீட்டில் கறந்த பாலில் இளஞ்சூடாய் காபியோடு தூக்குச் சட்டி முறுக்கும் வரும். நேரங்கெட்ட நேரத்தில் கிடைக்கும் காபிக்குச் சுவை அதிகம்.

மதியச் சாப்பாட்டுக்கு வகைவகையாய் பண்டங்கள் சுட்டு வைத்திருப்பாள் தாயம்மா சித்தி. நொறுக்கித் தள்ளிவிட்டால்,  தென்காசி ஊர்சுற்றும் படலம். பெட்ரோலை நிரப்பிக்கொண்டு தென்காசி வீதிகளில் வளையவருவோம், இலஞ்சி , காசி விஸ்வநாதபுரம் சுற்றி, தாய்பாலா தியேட்டரில் படம்பார்த்து, தென்காசி கோயிலை சைட் அடித்து...  [ வெள்ளிக்கிழமையாய் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி அக்க…அக்க..]  பிரகாரத்தில் எந்த பெண் பின்னாலாவது பக்தியோடு சுற்றிவருவோம்...  தூத்துக்குடிகாரங்கட்ட கேட்டீங்கன்னா திருநெல்வேலிக்காரப் பொண்ணுங்க அழகுன்னு சொல்லுவாங்க.. அதே திருநெல்வேலிக்காரங்ககிட்ட கேட்டா தென்காசி பொண்ணுங்க அழகுன்னு சொல்லுவோம்...

கண்ணுக்குக் குளிர்ச்சியா நகர்வலம் முடிச்சு சிக்னல் பரோட்டாக்கடையில் அடுத்த சுற்று தின்றுவிட்டு  வீட்டுக்குத் திரும்பும் போது கேமிரா முழுக்க புகைப்படங்களும் மனசு முழுக்க ஈரமும் துளிர்த்திருக்கும்..

இன்னும் நிறைய சொல்லலாம்.. சொன்னா  " வீட்டம்மா " திட்டுவாங்க..

அந்த தென்காசி தேவதைகளான ஸ்வேதா, அபி, பிருந்தா , பிரியதர்ஷிணி எல்லாம் சந்தோசமாய் இருக்கட்டும்.ஒவ்வொரு முறையும்  வரிசையாக  காதல் தோல்வியைச் சந்தித்த தென்காசி முறைப் பெண்கள் இவர்கள். திருவண்ணாமலையில் கட்டிக்கொடுத்த அபி பையன் பிறந்திருக்கிறானாம். திருவில்லிப்புத்தூரில் மணம்முடித்துப் போன பிரியதர்ஷிக்கு பெண் குழந்தை.

 நான் பச்சக்குதிரை விளையாடும் வயதில் இதுங்க எல்லாம் பச்சமண்ணை வாயில் அள்ளித் தின்றுகொண்டிருந்தது. பேசாம பொண்ணாப் பொறந்திருக்கலாமோ...காலாகாலத்தில் பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்ன்னு...  நம்ம வீட்டில் யாருக்கும் பொறுப்பில்லை.  ஹூம்.. அதுசரி பொண்ணா பிறந்திருந்தா குற்றாலத்தை இப்படி அனுபவித்திருக்க முடியாதோ என்னவோ...

ஓ…குற்றாலமே… உன் ஈரங்களை பத்திரமாய் வைத்திரு.. வெகு சீக்கிரமாய் வந்து நனைந்து கொள்கிறேன்.

நீங்கள் வயித்தெரிச்சல் படட்டுமென்று சில குற்றாலப்புகைப்படங்கள்...
                                                                         

                                                      .  -கார்த்திக். புகழேந்தி.
There was an error in this gadget