இட்டிலி



உடம்பு சரியில்லாத அப்போதுதான் மனசு இட்டிலியை ஏற்றுக்கொள்ளத் துணிகிறது. அதென்னவோ இட்டிலி, தோசை என்றால் நம் வீட்டில் சுட்டது மட்டும்தான் மனசுக்குப் பிடித்து சாப்பிடத் தோணும். சில நேரம் தோசை விதிவிலக்கு. ஊர்ப்பக்கங்களிலெல்லாம் ரொம்பச் சின்ன வயசில் பண்டிகைக்கு மட்டும்தான் இந்த மாவுப் பதார்த்தம் கிடைக்கும். பெரியம்மையின் மூத்த மகளைப் பெண் பார்க்க வரும்போது, நான் கையில் நிற்காத பிள்ளையாக திரிந்துகொண்டிருந்தேன். விடிந்தால் சொந்தமெல்லாம் வந்துவிடுமென்று வட்டம் போட்டு ஆட்டுரலில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள் அத்தை சித்தி அம்மைகள்.
கைவலி எடுத்தால் சித்தியிடமிருந்து பெரியம்மை, அவளிடமிருந்து சின்ன அத்தை என்று நான்கு ஐந்து ஆள் மாறும் அரவை. அவ்வளவு பெரிய ஆட்டுரல் அது. எட்டு பத்து கிலோ குழவியைத் தூக்கி கல்லைக் கழுவும் வலு கொண்ட பெண்கள் இருந்த வீடு அது. உப்பு, சோடாப்பு கூட குறைய அல்லது மாவு பதத்தில் ஏதும் குறை இருக்கா இல்லையா என்பதற்கு ஒரு சொலவடை உண்டு. "ஆறு கைபோட்டு அரைச்ச மாவுல கூறு கொறை சொல்ல முடியாது கேட்டியளா" என்று. இதற்கு நான் ரெண்டு அர்த்தம் பண்ணிக்கொண்டேன்.
ஆறு பெண்கள் கைவைத்து அரைத்த மாவில் இட்டிலி பதமில்லை என்றால் நீயென்ன குறை விட்டாய் நானென்ன குறைவிட்டேன் என்று சொல்ல முடியாதில்லையா... இப்படி ஒன்று.
இன்னொன்று ஆறுபேரில் யாராச்சும் 'அது சரிபாரு இது சரிபாரு' என்று சொல்லிச் சொல்லியே பக்குவத்தை விட்டுவிடாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் குறையே இருக்காது என்றும் பொருளாக்கிக் கொண்டேன்.

காலையிலே மாப்பிள்ளை வீட்டாள்கள் முதல் பஸ்ஸுக்கே வர ஆரம்பித்துவிட்டார்கள். 'இட்லி இப்பத்தான் வேவுது' என்று ஆச்சி சொல்ல, வந்தவர்களுக்குச் சுக்குக் காபி படிபடியாய் அளப்பு இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பொடி உள்ளி உரித்து, பொட்டுக்கடலை இடித்து, ராத்திரியே துருவிவைத்த தேங்காய், சட்டினியாகிக் கொண்டிருந்தது. கிரைண்டரும் மிக்ஸியும் எட்டியே பார்க்காத காலம். ஆவிபறக்க இலைபோட்டு, விரல் குழிவிழுந்த முதல் இட்லியை பரிமாறும் போது, இட்லி சூட்டுக்கு வாழையிலை நெகிழ்ந்து ஒரு வாசனை அடிக்கும் பாருங்கள். அது தனியாய் ஒரு ருசியை மூக்குக்குக் கொடுக்கும்.
இந்த காலைத் தீனி முடிந்து மதியத்துக்கு இன்னுங்கொஞ்சமாக வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு தனிக் காபி, அடுத்து மதியச் சோறு, பிள்ளைவளுக்கு பசிக்குப் பாலூட்டவிட்டு, நடுவீட்டில் தொட்டில் கட்டி, இன்னின்ன கதைபேசி, அரும்பு வாங்கி பூ கட்டி, பெண்களுக்கு மிச்ச மருதாணி வைத்து, மூஞ்சி கழுவி, கோவிப்பொட்டு வைத்து மல்லிப்பூ அலங்காரமெல்லாம் பண்ணி சாயந்திரம் பஸ்ஸுக்குக் கிளம்பிப் போகும் போது உறவு ஒண்ணுமண்ணு ஆகிவிடும். பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துப் பேசத்தான் இடமிருக்காது. கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் நண்டு சிண்டுகள் அலைந்து கெடுத்திருக்கும்.
போகும்போது, அந்த வூட்டுப் பொண்ணு ஒண்ணு அழகாய் இருப்பதும், அவங்க பயல் ஒருத்தன் நம்வீட்டுப்பிள்ளையை நகத்தால் கீறி காயம் பட்டதுமாக, ஏக நினைப்புகளோடு ஒரு வைபவம் முடிந்திருக்கும்.

அத்தோடு திரும்ப கல்யாணத்து அப்போதான் ஆட்டுரலுக்கு வேலை. இந்த வீட்டுக் கல்யாண வைபவ வழக்கமெல்லாம் அப்பா காலத்தோடு சரி. தவசுப்பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கூட விடுதியில் ரவை கிண்டுகிறார்களே பிறகெப்படி. சுந்தரம் தெங்காசியில் வீடு கட்டினதுக்கே மதியச்சாப்பாடு முதக்கொண்டு எல்லாம் கேட்டரிங் ஆர்டர் தானாம். பொறந்த நாள் காதுகுத்துக்கெல்லாம் மண்டபம் பார்த்துவிடுகிறார்கள்.

இட்டிலியில் ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டோம் பாருங்கள். புதுமைப் பித்தன் ஒருதரம் என்னைமாதிரியே ஐயர்வாள் கடையில் இட்டிலி சாப்பிடப் போனாராம். ஆறிப்போனதை வைத்திவிட்டு சுடச்சுட சாம்பாரை ஊத்தி இருக்கிறார் ஐயர்வாள். "என்னைய்யா ஆவி சுடுகிறது; ஆன்மா குளிர்ந்திருக்கிறது" என்று நயமாக கம்மெண்ட் அடித்துவிட்டாராம் விருத்தாசலம் என்கிற பு.பி., நெல்லைக் கண்ணன் ஐயா சொல்லிக் கேட்டது இது. நமக்கு இட்டலி என்றாலே மல்லிப்பூவுக்குப் பிறகு குஷ்பூ நியாபகம் வந்துவிடுகிறதே. எல்லாம் இந்த பத்திரிகைகளின் மொக்கை ஜோக்குகள் பண்ணின வேலை. இன்னும் ராஜாக்கள் புறமுதுகு காட்டின ஜோக்குத்தான் குவிகிறது. உருப்படுமா தலைமுறைகள். 

மோகனபுரி தீபம் ஹோட்டல் அருமையான ரெண்டு இட்லியும், ஒரு ஆப்பமும், ஏலக்காய் போட்ட தேங்காய் பாலும், நாலு குழிப்பணியாரமும், தக்காளி பச்சடியும் சாப்பிட்டு வந்தேன். அதுதான் இவ்வளவு பேச வைத்திருக்கிறது என்னை. 
தின்னப் பொறந்தவனில்லையா திருநெல்வேலிக்காரன். இப்ப ஊர்பெருமை பீத்திட்டான்னு நாலுவேர் திட்டுவாங்க பாருங்க. வோய் நீங்க திட்டுனாலும் நாங்க தின்னுக்கிட்டே எழுதுவோம். எழுதிக்கிட்டே திம்போம்.

-கார்த்திக்.புகழேந்தி
09-08-2016


Comments

  1. oor iravil, naanum, soodana aavium, kulirtha aanmavaium, uandu vitu, kaaliyel, vilkum muna vanthathu, vaanthi.

    ReplyDelete
  2. ஆவிபறக்க இலைபோட்டு, விரல் குழிவிழுந்த முதல் இட்லியை பரிமாறும் போது, இட்லி சூட்டுக்கு வாழையிலை நெகிழ்ந்து ஒரு வாசனை அடிக்கும் பாருங்கள். அது தனியாய் ஒரு ருசியை மூக்குக்குக் கொடுக்கும்.// அப்படிப் போடுங்க புகழ்! இட்லியின் புகழை!

    //நமக்கு இட்டலி என்றாலே மல்லிப்பூவுக்குப் பிறகு குஷ்பூ நியாபகம் வந்துவிடுகிறதே. எல்லாம் இந்த பத்திரிகைகளின் மொக்கை ஜோக்குகள் பண்ணின வேலை. இன்னும் ராஜாக்கள் புறமுதுகு காட்டின ஜோக்குத்தான் குவிகிறது. உருப்படுமா தலைமுறைகள். // புலமைப் பித்தனின் வரிகளுடன் உங்களது இந்த வரிகளையும் ரசித்தோம்...

    கடைசிப் பத்தி புன்சிரிப்பை வரவழைத்த பத்தி...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil