ஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும்...நேசமணி வாத்தியார் ஒத்தைக் காதைப் புடிச்சு திருக்கினார்னா அரைமணி நேரம் கழிச்சு அதுமட்டும் செவந்து ஒரு தினுசா வீங்கி இருக்கும். காதை வச்சே ‘என்னடா போன பீரியர்டு சைன்ஸா’ என்று பக்கத்துக் க்ளாஸ் பசங்களே கேப்பானுங்க... அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே செக்‌ஷன் மாறின பயல்களே உண்டு. ஆனா நான் இன்னுமொரு படி மேலே போய் ஸ்கூலே மாற முடிவெடுத்தேன்.


எட்டாவது வரைக்கும் கதீட்ரல்ல படிச்சவன் ஒன்பதாவது படிக்க வேற பள்ளிக்கூடம் பாருங்கன்னு அடம்புடிக்க, ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா அங்கேயே கிடந்து நல்லா படிப்பான். சேட்டையும் குறையும். ஸ்காலர்ஷிப் அது இதுன்னு எதும் கிடைக்கும் மேல்படிப்புக்கு ஆகும்ன்னு பாணாங்குளத்துக்குப் பக்கம் ஒரு சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.


முதல் நாள் சாயங்காலம் ‘எல்லா பசங்களும் ஹாஸ்டலுக்குப் பின்னாடி இருக்கும் கிரவுண்டுக்கு புல் பிடிங்கப் போங்க’ன்னு வேலை சொன்னாங்க. நல்ல பொழப்புதான் போன்னு நானும் போயிருந்தேன். இப்படி ஏழெட்டு நாள் வேலைக்கப்புறம் ரோடு ரோலர்லாம் வந்து மண்ணைச் சமன் படுத்திட்டு இருந்தது. அப்போதான் தெரியும் பள்ளிக் கூடத்துக்குன்னு தனியா ஹாக்கி கிரவுண்ட் உருவாகுதுன்னு.


ஹாக்கி மேல சின்னதான் ஒரு பொறி உருண்டை அளவுக்கு தாகம் இருந்தது. கௌசானல் நகர் பள்ளிக்கூட மைதானம் வாளி வாளியா தண்ணி சுமக்கச் சொல்லி தாகத்தை தூண்டி விட்டுச்சு. அடுத்த மாதமே, புது கோச்; புது ஹாக்கி மட்டைகள்; உபகரணங்கள் டீம் செலக்‌ஷன்னு ஹாஸ்டல் முழுக்க ஹாக்கி தான் பேச்சு!


ஜூனியர் அணிக்கு ஆளெடுக்க ஓட்டப்பந்தயம் வைத்தார் கோச் சூர்யா சார். பாளையங்கோட்டைக் காரர் தான். தவிர எங்கள் வளவில் குடியிருக்கும் ஜெபா மிஸ்ஸுக்கு மருமகனும் வேறே. முதல் சுற்றில் ஆறாவதாக வந்தேன். மூன்று சுற்றாக 18பேர் தேர்வானோம். அந்த பதினெட்டுல கழட்டிவிட்டது போக மீதம்பேரில் எப்படியோ பயிற்சி ஜூனியர் அணிக்குள் சேர்ந்துவிட்டேன்.


*
செம்மண் புழுதி பறக்க வெறுங்காலில் பொழுதுக்கும் பயிற்சி! “ஓடு ஓடு ஓடிக்கொண்டேயிரு! ஓடி முடிச்சுட்டியா.. கால்ல எவ்ளோ கல்லு குத்துது பார்த்தியா, போ அதையெல்லாம் பிறக்கு”. “யோவ் ஹாக்கி ஸ்டிக்கை எப்பய்யா கையில் கொடுப்பீங்க.. கண்ணுலயாவது காட்டுங்கைய்யா” என்று ஏங்கிக்கொண்டோம்.


ஒருவழியாக நீண்ட ஓடுதலுக்குப் பிறகு காலணிகள் வழங்கப்பட்டது. அதுவரை அணிந்தே யிராத ஸ்போர்ட்ஸ் சாக்ஸ்களை வித்யாசமாகப் பார்த்தோம். சாக்ஸுக்குள் தடிப்பான கவசம் வைத்துக்கொண்டு ஓடுவது என்னம்மோ மாதிரி இருந்தது.


கருப்பும் பளீர் பச்சையுமாக இருந்த ஹாக்கி மட்டை எனக்குக் கிடைத்தது. இரண்டு கால்களின் முன்முனைக்கு நேரே ஸ்டிக்கைப் பிடித்துக்கொண்டு வெறும் காற்றில் மட்டையைத் திருப்பும் பயிற்சி. கை மணிக்கட்டு வளைந்துகொடுக்க பயிற்சி. பிறகு பந்தை திருப்ப... இப்படியே நின்ற இடத்தில் கினிந்தே கிடந்தோம்.


அடுத்தடுத்த நாளிலெல்லாம் மட்டையை திருப்பிக்கொண்டே பந்தை கால்களுக்குள்ளே இடம் வலம் நகர்த்து! நகர்த்திக் கொண்டேயிரு! இப்போது இரண்டும். இப்போது ஓடு, பந்தை வசப்படுத்தி வைத்திருப்பவனை நெருங்கு, அபகரி, கால்கள் கவனம். பந்து படும் என்று பயமில்லாமல் ஓடு. எதிரியின் திசைக்குள் நுழை... முன்னேறு..


பிடுங்கியவனிடமிருந்து பந்தைப் பறி! சக அணிக்காரனுக்குக் கடத்து! உன் பக்கம் வருகிறதா பந்தைத் தடு! மட்டையால் இழுத்துக்கொண்டு ஓடு இலக்கு நோக்கி! கடத்து; பறிக்கிறவனை ஏமாற்றி சுற்றியடி. கோல் போஸ்டை நெருங்குகிறாயா... கீப்பரை அசைவுகளால் ஏமாற்று... அடி கோல்!

*
வியர்வையில் குளித்துக் களைத்தோம். ஹாக்கி பயித்தியங்கள் ஆனோம். ஜூனியர் இறுதி அணிக்கான பட்டியல் தயாரானது! லிஸ்டில் பெயர் இல்லை. இருந்துமென்ன பொழுதுக்கும் கிரவுண்டிலே கிடந்தோம். பயிற்சி பயி்ற்சி பயிற்சி...


எங்கள் களத்தில் அது முதல் போட்டி கிறிஸ்து ராஜா vs கிறிஸ்து ஜோதி பள்ளிகளின் முதன்மை அணிகளுக்கு இடையேயான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் எதிர் அணியினர் 12-1 என்ற கணக்கில் எங்களை பள்ளி முதன்மை அணியைத் துவைத்தெடுத்துவிட்டுப் போனார்கள்.


*
சி.எஸ்.ஐ பள்ளிகளுக்கு இடையேயான முதல் டோர்னமெண்ட். ஜூனியர் அணியின் சப்ஜூட் ப்ளேயர் என்ற பெயரில் எங்களையும் டோர்னமெண்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். காட்டுக் கத்தலாக எங்கள் அணியை உற்சாகமேற்றிக் கொண்டிருந்தோம். ஓடி ஓடி குளுக்கோஸ் கொடுத்தோம்.


பெனால்டி வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி அணியின் முதல்கோல் விழுந்தது. 0-1. இரண்டாம் பாதியில் மட்டும் 11கோல்களை மளமளவென்று அடித்துத் தள்ளினார்கள் இரண்டு அணியினரும். 3-9 என்று எங்கள் அணிக்கு முதல் வெற்றி. எல்லோர் முகத்திலும் வெற்றிக் களிப்பு! முதல் வெற்றியின் ருசியில் அன்றைக்கு ஹாஸ்டல் சாப்பாடுகூட நன்றாக இருந்தது.


*
பயிற்சி அணியிலிருந்து சப்ஜூட் ப்ளேயராக முன்னேறியிருந்தேன். கிரவுண்டுக்கு லேட்டாக வந்ததற்கு கோச் திட்டித் தீர்த்துக்கட்டினார். காரணம் ஒண்ணுமில்லை, ஹாஸ்டல் வாழ்க்கையில் நிறைய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் விதிகள் எல்லாம் இருந்தன. அதில் முக்கியமானது சூசையப்பர் மாதிரி ஒன்று தலைமுடியை வட்டம் போட்டு வெட்டிவிடுவது. அல்லது மிகச் சிக்கனமாகக் கருமி விட்டுவிடுவது. இதெல்லாம் பண்ணினால் மகிழ்வார்கள்.


நான் இரண்டுக்கும் அடங்காமல் நீளமாகத் தலைமுடி வளர்த்துக்கொண்டு திரிந்தேன். அதற்காக அடிக்கடி தண்டனைகளும் கொடுக்கப்பட்டன. அப்படி ஒரு காரணத்திற்காகத் தான் கிரவுண்டுக்கு லேட்டாக வந்திருந்தேன்.கதையைச் சொன்னதும் கோச் கேட்டார், “முடி வெட்றதுக்கு உனக்கு ஏண்டா வீம்பு?”


“ எனக்கு தன்ராஜ் பிள்ளை மாதிரி முடி வளக்கணும்னு ஆசை சார். அவர் தான் எனக்கு ஹாக்கி ரோல்மாடல் என்றேன். அடர்ந்துகிடந்த என் தலைமுடியைப் பற்றி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு சிரித்தார்.

-கார்த்திக்.புகழேந்தி
16-7-2014

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

வேட்டையன்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா