Saturday, 22 August 2015

சென்னை -376

            ஜெண்டூஸ் என்பார்கள் அந்த மக்களை. அவர்கள் தெலுங்கு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களே மதராஸ் நிலத்தில் பூர்வீகமாய் வசித்து வந்தவர்கள். வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற சின்னச் சின்ன கிராமங்கள் கொண்டடங்கிய நிலப்பரப்பு அது.  

      பரந்து விரிந்த கடற்கரை, இரண்டு ஆறுகள் கடலைச்சேரும் ஆற்றுக்கழிமுகம். (கூவம் , அடையாறு) பார்த்ததுமே இந்த இடத்தில் வியாபாரத்தைத் தொடங்கலாம் என்று ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்த ஆர்மகாம் கவுன்சில் உறுப்பினர் “பிரான்சிஸ் டே” முடிவு செய்தார். அடையார் கரை டச்சுக்காரர்களுக்கு, கூவக்கரை பிரிட்டிஷ் காரர்களுக்கு.

            எந்த ஒரு நாடும் பிறநாடுகளை வென்று ஆட்சிக்கு ட்படுத்திய பிறகு தங்கள் வணிகக் கடை விரிக்கும் வழக்கத்திலிருந்து மாறாக இந்தியாவை வணிகத்திற்காக உள்நுழைந்து பிறகு ஆட்சிக்கு உட்படுத்தினார்கள் மேலைநாட்டுக்காரர்கள். அப்படி வணிகம் செழித்த முக்கிய நகரம் சென்னை. சுருக்கமாய்ச் சொன்னால் உலகப்போரில் குண்டுவீசித் தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் சென்னை தான். அந்த அளவுக்கு வியாபாரம் இங்கே கொழுத்தது.

            முதலில் இங்கிருந்த பொருட்களை தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி வணிகம் செய்தார்கள். அடிப்படையாக பருத்தி. பிறகு அங்கிருந்து இங்கே இறக்குமதி செய்து கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள்.  

            ஆந்திர மசூலிப்பட்டிணத்தில் விளைந்த ஒரு பருத்தி ரகத்தில் செய்த ஆடைகளுக்கு இங்கிலாந்தில் ஏக கிராக்கி. அந்த பருத்தித்துணிக்கு “மஸ்லின்” (மசூலிப்பட்டிணம்?) என்று பெயர். ஒரு முழு சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைத்துவிடலாம். அத்தனை மெலிதானது. முதலில் மஸ்லின் ஏற்றுமதி செய்தார்கள். பிறகு தங்கள் துணி வகைகளுக்குப் போட்டி என்றது மஸ்லின் நெசவாளர்களின் விரல்களையும், நகங்களையும் ஆதாரமே இல்லாமல் வெட்டி எடுத்தார்கள். 
 
(காளிமார்க் பாட்டில்களை கோக்ககோலா கம்பெனிக்காரர்கள் வாங்கிப் போய் உடைத்த அதே வித்தை தான். மஸ்லின் கதையையே ஒரு தனி கட்டுரையாக எழுதலாம்)

            வெள்ளையர்கள் தங்களுக்காகவும், தங்கள் வணிகப் பொருட்களைப் பாதுகாப்புக்கவும் சென்னையில் கட்டிய ஜார்ஜ் கோட்டையில் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆட்சி பரிபாலனம் நடக்கிறது. ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி முதலில் குடியிருப்புகள் உருவானது. குடிமக்களின் தேவைக்கான முகவர்கள், கூலிகள், வேலை, ஏவல், எடுபிடி ஆட்களும் சூழத் தொடங்கினார்கள். இப்படியாகச் சென்னை
நகரமாக உருவாகத் தொடங்கியது. தங்களை வேறுபடுத்திக்காட்ட நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கறுப்பர் நகரம், வெள்ளையர் நகரம்.

            வெள்ளையர் நகரத்தில் பிரிட்டிஷ்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், இந்திய கிறிஸ்தவர்கள் வசித்ததால் அது கிறிஸ்த்தவர்கள் நகரம் என்றும் அழைக்கப்பட்டது. இன்றைக்கும் ராயப்பேட்டையில் உள்ள சாலைைக்கு வொயிட்ஸ் ரோடு (Whites Road ) என்றும், மவுண்ட் ரோடு கேஸினோ தியேட்டருக்கு முன்பு உள்ள சாலைக்கு ப்ளாக்கர்ஸ் ரோடு (Blackers Road) என்றும் பெயர் உள்ளது. கறுப்பர் நகரத்தில் வசித்தமக்கள் தங்கள் இனக்குழுக்களோடு வசித்த இடங்களை பேட்டைகளாக அழைத்தார்கள். (இராயப்பேட்டை, கொசப்பேட்டை) . கடல்பகுதிகளோடு தொடர்புடைய மக்கள் வசித்த பகுதிகளுக்கு வாக்கம் (புரசைவாக்கம், பாலவாக்கம்) என்று பெயர் அமைந்தது.

சில ஊர்களுக்கும் மட்டும் பழைய பெயரே நிலைத்தது. (மாம்பலம் - மா அம்பலம், திருவல்லிக்கேணி, மையிலாப்பூர்) இன்னும் சில இடங்கள் பிரசித்தி பெற்றவர்களின் பெயராலும், அங்கு நடைபெற்ற தொழில்களின் அடிப்படையிலும் பெயர் வழங்கப்பட்டது.   உதாரணமாக கோடம்பாக்கம் (கோடா பாக் (Parking?) - நிஜாம் மன்னர் குதிரைகள் நிறுத்தும் இடம்), வெள்ளையர்களின் உடைகளை வெளுத்துக் கொடுக்கும் வேலையாட்களை குடியமர்த்திய இடம் வண்ணாரப் பேட்டையானது. நெசவுக்காக தோற்றுவிக்கப்பட்ட இடம் சிந்தாதிரிப்பேட்டையானது. (சின்னத் தறிப்பேட்டை ).

         சென்னை நகரம், காஞ்சி, தஞ்சை, மதுரை, நெல்லை போன்ற பிற மாவட்டங்கள் போன்று தனித்த புராதன நகரம் இல்லை. அது பழைமையான கிராமங்களுக்கு மேலே போடப்பட்ட ஒரு காங்க்ரீட் சாலை தான் சென்னை.

            சென்னைஇன்றைக்கு நாம் பார்க்கும் ஐ.ஐ.டி வளாகம் போன்ற இயற்கை சூழ்ந்த கடற்கரை வனம். வசிப்பிடங்களுக்காக வளங்கள் அழிக்கப்பட்ட நகரம். அதன் பழமைக்கு ஒரே சான்று, “கூவம் குளிக்கும் நதியாக இருந்தது” என்ற வாக்கியம் தான்.

      16ம் நூற்றாண்டில் கட்டிய கோயில் மயிலாப்பூர் கோவிலுக்குப் பின்னே பல கதைகள் சொல்லப்படுகின்றன. அந்த கோயிலே தூய.தோமாவுக்காக (St.Thomas ) கட்டப்பட்டது என்றும், சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் தான் முதலில் அக்கோயில் கட்டப் பட்டு பின் அகற்றப்பட்டதென்றும், டச்சுக்காரர்கள் மாற்றிக் கட்டினார்கள் என்றும் பல கதைகள். 1893ல் இடித்துத்தள்ளப்பட்டு இப்போதுள்ள சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

  ஐரோப்பாவில் பிரிட்டிஷ், பிரெஞ்சுக்காரர்கள் இடையே நடந்த சண்டைகளால் அதன் தாக்கம் சென்னையிலும் அவ்வப்போது வந்து விழுந்தது. 1746ல் பிரெஞ்சுக்காரர்க்ளால் கறுப்பர் நகரமே அழிக்கப்பட்டது. அது சென்னையின் துயர்மிகுந்த நாள்.
            பிரெஞ்சு படைகள் பின்வாங்கிய பிறகு, கறுப்பர் நகர மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. சுவர் எழுப்புவதற்கான செலவை கறுப்பர் நகர மக்களிடமே வரியாக வசூலிக்க முடிவெடுத்தது. அந்த சுவற்றின் அடையாளம் தான் இன்றைய “வால் டாக்ஸ் ரோடு” (wall Tax Road).

            தங்கள் பாதுகாப்பான குடியிருப்புக்காக வெள்ளையர்கள் ஔரங்கசீப் மகனின் ஆட்சிகாலத்தில் நான்கு கிராமங்களை விலைக்கு வாங்கினார்கள். அந்த இடம் இன்ன்றைய நுங்கம்பாக்கம் மற்றும் அதையொட்டிய நான்கு இடங்கள். அதற்குப் பெறப்பட்டவிலை 1500பகோடாக்கள். அதாவது, சுமார் 5250ரூபாய்.
     சென்னையின் பல இடங்களில் ஆங்கிலேய ஆட்சியின் மிச்சங்கள் இன்றும் தென்படுகின்றன. மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தின் பழைய பெயர் ஐஸ் ஹவுஸ். இன்றைக்கும் பலர் அந்தப் பெயர் சொல்லியே அழைக்கின்றார்கள்.

    “ஐஸ் ஹவுஸ்” என்ற பெயருக்குக் காரணம். 1840களில் அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் சென்னைக்கு பனிக்கட்டி இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளையர்கள் பனிக்கட்டிகளை காசுகொடுத்து வாங்கிச் சேமித்து பயன்படுத்தினார்கள். இங்குள்ள தட்பவெட்ப நிலையில் மக்கள் பார்த்தே இராத ஒரு பொருள் பனிக்கட்டி. அவர்களுக்கும் ஒரு பவுண்டு நான்கு அணாவுக்கு விற்கப்பட்டது. இறக்குமதி செய்தவர் அதைச் சேமித்துவைக்க கட்டிய வட்டவடிவமான கட்டிடமே இன்றைய விவேகானந்தர் இல்லம்.

        ஆங்கிலேயர்கள் ஆட்சியைக் கைப்பற்றும் காலகட்டத்தின் தொடக்கத்தில், இந்த இடங்கள் எல்லாம் ஹைதராபாத் நிஜாமின் ஆளுகையின் கீழ் இருந்தன. அவர்களிடம் நிலங்களை விலைக்கு வாங்கி, பின் அவர்களையே விலைக்கு வாங்கி தங்கள் ஆளுமைகளை நிறுவிக்கொண்டார்கள் மேலை நாட்டினர். காரணம் இங்கே அத்தனை செல்வ வளம்.

            வரலாற்றை சரியாக கவனித்தால், 1800ம்ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் முக்கியமான ஆண்டு. மாவீரன் திப்பு சுல்தான், தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் போரிலும், தூக்கிலிட்டும் கொல்லப்பட்ட ஆண்டு இது.  அதுவரையிலும் போர்கள், போராட்டங்கள் என்று வணிகத்தின் நடுவே தங்களை நிலைநிறுத்த உள்நாட்டில் பல எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் மிருக பலத்துடன் ஆட்சியைத் தொடங்கியது அப்போதுதான். கவனித்துப் பார்த்தால் 1800க்குப் பிறகு நேர் எதிராக நின்று வெள்ளையர்களை உள்நாட்டில் எதிர்த்தவர்கள் யாரும் இல்லை . அங்கிருந்து நேரே வ.உ.சி அறிவித்த 1908ம் ஆண்டு கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தான். (விவசாயப் போராட்டங்கள் அல்லாமல் ) 

           1834ஜூன் 10ம் நாள் “மெக்காலே” இந்த மண்ணில் நுழைந்த அன்றைக்கே இந்திய மக்கள் தங்கள் அடிப்படையான பாரம்பரியங்களை இழக்கத் தொடங்கினார்கள். (அதனால் தான் பள்ளிகளில் 210 ஆண்டுகள் அடிமையாக இருந்தோம் என்று குறிப்பிட்டார்கள் போல 1834-1947)

பிரிட்டிஷ் அரசுக்கு மெக்காலே தன் கடிதத்தில் இப்படி எழுதினான்.

           இந்தியாவின் நீள அகலங்கள் முழுவதும் நான் பிரயாணித்து விட்டேன். முழு இந்தியாவிலும் நான் ஒரு பிச்சைக்காரனையும் பார்க்கவில்லை. முழு இந்தியாவிலும் நான் ஒரு திருடனையும் பார்க்கவில்லை. அப்படி ஒரு வளமான நாடாக இந்நாடு இருக்கிறது. மதிப்பு மிக்க பண்பாட்டையும், உயர்ந்த தன்மைகளையும் இந்நாட்டிற்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களின் கலாச்சார பாரம்பரியத்தை உடைக்காவிட்டால், இந்நாட்டை வெல்ல முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எனவே, நான் இநாட்டின் பழமையான கல்விமுறையையும், அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் முற்றிலும் வேறாக மாற்றி அமைக்க வழிமொழிகிறேன். அதன் மூலம் இந்தியர்களை ஆங்கிலமும் மேலைநாட்டுகாரர்களின் வழி முறைகளுமே நம்மைவிட உயர்ந்ததவை என்று அவர்களை எண்ண வைக்க முடியும். இவ்வாறு அவர்களை நினைக்க வைத்துவிடுவதால் அவர்கள் தங்கள் சுயமதிப்பையும் ,சொந்த நாட்டுக் கலாச்சாரத்தையும் இழந்து அதன் மூலம் அந்நாட்டு மக்களும் அந்நாடும் நாம் விரும்பியபடி நமது ஆளுமைக்குட்பட்ட நாடாகும். -1834.

            மெக்காலே எழுதிய கல்வி முறையைத்தான் இன்றைக்குவரை இந்தியா தன் முதுகில் சுமந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் சுதந்திரம் பெற்ற பிறகும் நம் பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு வெள்ளையன் பெயருக்குப்பின்னும் பிரபு, பிரபு என்று சேர்த்து கூளைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்கிறது. மெக்காலே உருவாக்கிய குற்றவியல் தண்டனைச் சட்டத்தைத்தான் இன்றும் நாம் வழங்கி வருகிறோம். ஒரு நாட்டின் கல்வியையும், தண்டனையையும் எழுதிய ஒரே நபர் மெக்காலே. இப்படி இந்திய வரலாற்றில் மிகமுக்கிய தாக்கத்தை விதைத்த மெக்காலே வந்து இறங்கிய இடம் சென்னை!

             தொழில் வாய்ப்புகள், நவீன வசதிகள் என சென்னையை வியப்பதற்கு இன்றைக்கு என்னென்னவோ காரணங்கள் இருக்கலாம். இங்கே இடம்பெயர்ந்து தங்களின் வாழ்க்கையில் முன்னேறினேன் என்று கூறுபவர்களின் வாக்கு உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அவையத்தனையும் சென்னையின் பூர்வகுடிமக்கள் நமக்கு விட்டுக் கொடுத்தவை.

   சென்னை என்ற நகரத்தை நோக்கித்தான் பிறமாநிலங்களின் அத்தனை ரயில்களும், பேரூந்துகளும் நகர்கின்றன என்ற ஒற்றை உண்மையை யார்தான் மறுத்துவிட முடியும். எந்த ஊரில் பிறந்திருந்தாலும் இங்கே வந்து கால்வைத்தது முதல் நாங்கள் “சென்னைக்காரர்கள்” தான். இந்த இரைச்சலில் தானே எங்கள் வண்டியும் ஓடுகிறது.

பிற நகரங்களுக்கு இருக்கும் தொன்மையான அடையாளம் சென்னைக்கு இல்லை என்று வரலாறு எழுதினாலும், சென்னை நேசிக்கும் ஒவ்வொருவராலும் அந்த வரலாறு திருத்தி எழுதப்படுகிறது.
 
  376 ஆண்டில் சென்னைக்கும் அதன் மக்களுக்கும் ஒரு வணக்கம்.


-கார்த்திக்.புகழேந்தி (writterpugal@gmail.com)
22-08-2015.

Wednesday, 12 August 2015

குளத்தில் வைத்து எரித்தோம்.சாலைகள் மீது ஒரு விருப்பு உண்டு. வெயிலடிக்கும் போது தார்வாசனையும், மழையடிக்கும் போது ஈரவாசனையும் கிளம்பும் சாலைகளில் வண்டிகட்டிக்கொண்டு கிளம்புவது ஒரு வயசுச்சேட்டை.

சைக்கிள் ஓட்டப் பழகிய திருநெல்வேலி ரெட்டியார்பட்டி சாலையில் மூட்டைப் பெயர்த்து ரத்தம் வழிந்ததும் குட்டி சொன்னான்.  “ரத்தம் வந்துருச்சில்ல இனி சைக்கிள் ஓட்டப் பழகிக்கிடுவ” என்று. ரத்தம் வந்ததற்கும் சைக்கிள் கத்துக்கொள்ளவும் இடையே இருக்கும் பூர்வாங்க உறவை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்னால்.

விளையாடப் போனால் வீடு திரும்பும் போது வெளுத்துக் கட்டும் வழக்கம்  பல்லவர், சோழர் பாண்டியர் காலம் முதல் இப்போது வரைக்கும் பல வீடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் பொழுதுக்கும் வண்டிச்சாலைகளின் ஓரங்களில் அமர்ந்துகொண்டு போகும் வரும் வண்டிகளை வேடிக்கை பார்ப்பதுண்டு.

ஒவ்வொரு ஊருக்கும் இடையே உள்ள சாலைகளின் தொலைவை குறுக்கே கடக்க மண்பாதைகள் இருக்கும். சில சமயம் குளத்துக்குள் இறங்கி ஒத்தையடிப்பாதைகள் பயணிக்கும். முயல்வேட்டைக்கு அந்த குளத்துக்குள் தான் இரவில் பதுங்குவோம்.

அங்குள்ள பாதைக்கு குளத்துச் சாலை என்ற பெயர் மட்டும் தான் இருந்தது. சாலை என்று அங்கொன்று இருந்ததற்கான அறிகுறிகள் கடந்த ஐந்தாண்டுகள் முன்பு வரை இருக்கவில்லை. குளமும் எப்போதோ தூர்ந்த பெரிய செம்மண் பள்ளமாக மாறிவிட்டது.

நினைவு தெரிந்து பெல்லடித்ததும் காலில் மாட்டியிருக்கும் கருப்பு சூவைக் கழட்டி டிபன் கூடையில் வைத்துவிட்டு, வெறுங்காலுடன் தரையில் விளையாடப் போகும் என்னுடைய கிண்டர்கார்டன் பருவத்தில் அந்தக்குளம் வெள்ள மழை கண்டு நிரம்பி இருந்ததாகச் சொல்வார்கள்.

குளம் வற்றி ஊரே மீன் பிடித்தபிறகு நாங்கள் முயல் பிடித்துக் கொண்டிருந்தோம். அந்தக் கதையை பிறகு எழுதலாம். கவுன்சிலர், வார்டு மெம்பர் என்று ஆளுக்கு ஆள் மெல்ல மெல்ல குளத்தின் கரைகளை நான்கு பக்கங்களும் சுருக்கி, கிடைத்த இடத்தில் ப்ளாட் போட்டு வீடு கட்டிக் கொண்டார்கள்.

பேருக்கு மழை பெய்தால் கொஞ்சம் தண்ணீர் தேங்கிக் கொண்டு குளம் தன் அடையாளத்தை உணர்த்தப் பார்க்கும். அந்தத் தண்ணீரையும் புறத்தூய்மைக்கு சனங்கள் பயன்படுத்திக் கொள்வதுண்டு. பிறகொரு நாள் எங்கள் குடியிருப்புகளுக்கு வரும் தண்ணீர் குழாய் எங்கோ உடைப்பெடுத்த போது, மக்களெல்லாம் தண்ணீருக்குத் தவியாய் தவித்தனர். பம்புத் தண்ணீரை குளிக்க மட்டுமே பயன்படுத்தி வந்தவர்கள் ஊருக்குள்ளே இருந்த குளத்தில் குளித்து வளர்ந்த கதையை சிலாகித்துச் சொன்னார்கள்.

கல்வெட்டாங்குழி இருக்கும் பக்கத்து ஊர்க்காரர்கள் கூட வேய்ந்தான் குளத்தின் வெட்டுப் பங்காளியான ரெட்டியார் குளத்தில் வந்து குளித்துச் செல்வார்களாம். ஊருணி, கண்மாய், குளம், குட்டை, மடு, வாவி, ஏரி, ஏல்வை, ஏத்தம், மோட்டை, நீர்த்தம்பம் என்று ஏகப்பட்ட பெயர்களில் தண்ணீருக்கான சுழிச் சொற்கள் எங்கள் கிழவிகளிடம் வளைய வந்து கேட்டிருக்கிறேன். இப்போது கிழவிகள் ஒவ்வொன்றாகச் செத்துப் போனது.

கடைசியாக ராக்கம்மாளாச்சி செத்தபோது பாணாங்குளத்தில் கொண்டுபோய் எரித்தோம். துட்டிக்கு வந்து வெயிலில் சுட்டவர்களின்  நாக்குக்கு ஒரு வாய் தண்ணியில்லாத அந்த இடத்தில்கூட குளம் இருந்தது என்பதை கிழவியைத் தவிர இனி யார் வந்து என்ன சொல்லி நம்ப.

-கார்த்திக். புகழேந்தி
12-08-2015. 

காத்திருந்தால் வருவேன்

இந்த டிசம்பர் கச்சேரி, பரதநாட்டிய அரங்கேற்றம், இசை விழா, நாடகம் இந்தமாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் போய்வந்தது பற்றி சுஜாதா மாதிரி ஆட்கள் சிலாகிப்பதை வாசிப்பதுண்டு. குமுத விகடனில் படங்கள் போடுவார்கள். உச்சஸ்தாதியில் தெரிந்த முகங்களாய் இருக்கும் சிரோன்மணிகள் ஆ! என்றபடி போஸ் கொடுத்திருப்பார்கள். இவ்வளவைத் தாண்டி இசைக்கும் நடனக்கலைக்கும் நமக்கு நாலு லாந்தர் விளக்கு தூரம்.

நண்பர் ஒருவர்  “மயிலாப்பூர் பாரதி வித்யாபவனில் யூ.எஸ்ஸிலிருந்து வந்த பொண்ணு ஒருத்தி பரதமும், ஒடிசியும் இங்கே கத்துட்டு ஆடுறா!  என் மகள் க்ளாஸுக்குப் போற குருதான் இவளுக்கும் குரு. நீங்களும்  கட்டாயம் பார்க்க வாங்க”. என்று அழைத்தார். அந்த அழைப்பே வித்யாசமாக இருந்ததால் ஒருவித கூச்சத்தோடு திரையரங்கம் போல இருந்த மயிலாப்பூர் கோயில் தேருக்குப் பக்கத்தில் இருக்கும் பவனுக்குள் நுழைந்தேன்.

எனக்கு இந்தப் பெயரை தமிழில் எழுதவரவில்லை. மட்டுமல்லாமல் தப்பாயிடக்கூடாதே. முன்விளம்பரத்தில் இருந்தபடி, smt. Kaustavi sarkar குருவாகக் கற்றுக் கொடுத்து,  “ஸ்ரேயா மோகன்செல்வன்” என்ற அமெரிக்க இந்தியப் பெண் நடனமாடுகிறார் என்று புரிந்துகொண்டேன்.

பூரண இருட்டில் ராகமாக “காத்திருந்தால் வருவேன் மஹா கணபதி” என்றொருவர் பாட, அபிநயங்கள் பிடித்து, சுழன்று, கண்கள்  சுழற்றி, கால்கள் வீசி, பின்பக்கம் வளைந்து, ஆனைபோல துதிக்கை உயர்த்தி, அடவுகள் பிடித்து அழகழகாய் ஆடிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். வசீகரமாக இருந்தது. கொஞ்சமும் கண் அகலவில்லை.

பரத நாட்டியத்தை இப்படி மூச்சுச் சத்தம் கூட விடாதவர்கள் சூழ்ந்திருக்கும் அரங்கில், அதுவும் மயிலாப்பூரிலே பார்ப்பது இதுதான்  முதல்முறை.
 நான் பாட்டுக்கு ஒடிசி பற்றி எனக்கு டிப்ஸ் ஏதும் கொடுக்க முடியுமா என கேட்டுவிடுவேனோ என்று பயந்து சீக்கிரத்திலே வெளியேறிவிட்டேன்.

சின்ன வயதில் அக்காளின் தாவணியை தோள்களின் குறுக்கே இட்டுக்கொண்டு பரதம் ஆடியது (அல்லது அதனை பரதம் என நம்பிக்கொண்டு) நினைவுக்கு வந்தது. நல்லவேளை பெரிய விபரீதம் ஏதும் நடக்கும் முன்னே அக்காள் வந்து என் தாவணியைக் குடுறா தடிமாடு என்று துரியோதனன் போல என்னிடமிருந்து உருவிக்கொண்டது.

இன்னுமொரு ஆண் திரவுபதி ஆக்கப்பட்டிருந்த நினைவு உங்களுக்கெல்லாம் நினைத்திப் பார்க்கவே சங்கடமாக இருக்கும்.

-கார்த்திக். புகழேந்தி.
12-08.2015. 

Monday, 10 August 2015

சண்டே ரகளைஸ்....நேற்றுமாலை தேனாம்பேட்டை சிக்னலில் மஞ்சள் தொப்பியுடன்  “தோழன்” அமைப்பின் நண்பர்கள் ஹெட் லைட்டுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். சாலையின் இரண்டு பக்கமும் ஹெல்மெட், சீட்பெல்ட் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு யுவதிகள் இரண்டுபேர்.

அங்கிருந்து எல்லீசு சாலைக்குச் சென்று திரும்பும் போது அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில் இன்னும் நிறைய பெண்கள் ரெட் சிக்னல் இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எனக்குப் பக்கத்தில் ஹெல்மெட் அணியாமலிருந்த இரண்டு இளைஞர்களை குறிவைத்து “ஏன் சார் ஹெல்மெட் போடலை?” என்று சீரியஸாகவே முகத்தை வைத்து  வாட்டி எடுக்க, இளைஞர்களுக்கு வெட்கம் தாங்கவில்லை.

விழிப்புணர்வுக்காக விடுமுறை நாட்களில் இப்படி களமிறங்கும் கல்லூரி இளையோர்களைக் காண்மதே மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கிருந்து பெரம்பூர் சென்று கிரியுடன் கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு, ஸ்பெக்ட்ரம் மாலுக்குள் நுழைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். கூட்டமாக மக்கள் இருந்த இடத்தில் எட்டிப் பார்த்தால்! வளர்ப்பு மீன்களைக் தண்ணீர் தொட்டியில் விட்டு, அதில்  கால்களை நனைக்க மீன் வந்து கால்களைக் கடிக்கிறது. ரொம்ப எல்லாம் இல்லை ஐம்பது ரூபாய் தானாம்.

“அடேய் எங்க ஊர்ல நீ சும்மாவே ஆத்துல இறங்கினாப் போதும்” என்று கிரியை நக்கலடித்துவிட்டு நகர்ந்தோம். மேல்மாடியில் வேலை நடக்கிறது போல. அங்கே ஒரு இமிடேஷன் கவுண்டரில் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். காதில் கடுக்கண் அணிந்தால்  “நினைவு சக்தி”  அதிகரிக்கும் என்ற உண்மையை ஒரு பேச்சுக்குச் சொல்லவும். எங்க குத்து செக் பண்ணிடுவோம் என்று, ஒரு மெல்லிய கடுக்கண் (இவங்க பாசையில் ஸ்டட்டாம் ) கண்ணிமைக்கும் நேரத்தில் துளைத்து விட்டார்கள்.  நல்லவேளை அலகு குத்துவதால் என்னென நன்மைகள்ன்னு நான் வாய் திறக்கவில்லை.

அப்படியே பிக் பஜாருக்குள் நுழைந்து, பில்லிங் கவுண்டர் வரைக்கும் போய் “பாஸ் பாஸ் ஒரே ஒரு பிக்கிள் பாட்டில்” என்று  பில் போட்டு,  வெளியே வந்தடைந்தோம்.  க்ரீன் டீ சாப்பிடலாம் என்று ஒரு ஆர்வமாக சாலையோரத்தில் இருந்த ஒரு பழச்சாறு கடைக்குச் சென்று எனக்கு க்ரீன் டீயும் ஆர்டர் செய்தான் கிரி. சுடச்சுட “சாதா டீ” போட்டுக் கொடுத்து கலாய்த்துவிட்டார்கள்.

காசு கொடுக்கும் போது நீங்க எழுத்தாளரான்னு கடையில் இருந்த பெண்மணி கேட்க, “ஆஹா இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே” மூமெண்ட். ஆமான்னு சொல்லவும் முடியாமல் இல்லைன்னும் சொல்ல முடியாமல் எப்படின்னு கேட்டேன். டீசர்ட்டில் வற்றாநதி விளம்பரம் இருந்ததை கைகாட்டினார். அநேகமாக அவர் பேஸ்புக்கில் இருக்கக்கூடும். சிஸ்டர் நான் தான் நான் தான் நேத்து உங்கக் கடையில் ரெண்டு லெமன் ஜூஸ் குடித்தது.

குளக்கரைச் சாலை முனையில் கிரி ஒரு கடைக்கு அழைத்துச் சென்றான். டீக்கடைக்கு, சலூன் கடைக்கு இன்னும் சொல்லப்போனால் பெட்டிக்கடைக்கு ரெகுலர் கஸ்டமர் இருக்கலாம். கண்ணாடிக் கடைக்கு யாராவது ரெகுலர் கஸ்டமர் இருப்பார்களா. இருக்கானே! யாரு? நம்ம கிரிதான்.

பெரம்பூர் மேம்பாலத்துக்குக் கீழே ப்ளாட்பார்மில் கடை போட்டு கண் கண்ணாடி விற்றுக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்றைக்கு சொந்தமாகக் கடை வைத்து, தொழில் வளர்த்தவருக்கு நம்மவர் நீண்டகால கஸ்டமராம்.  நான் கண்ணாடி வாங்கி, வாங்கி அவர் சொந்தமா கடை வச்சுட்டார் நான் இன்னும் கண்ணாடி மட்டும் தான் வாங்கிக்கிட்டு இருக்கேன் என்று ஜாலி கம்மெண்ட் விழுந்தது.

அந்தக் கடையில் எடுத்த புகைப்படம் தான் காயத்ரி தன் சுவற்றில் பதிந்தது. அதை ஏன் திரும்ப மறுபடியும் இங்கேயும் காட்டிக்கொண்டு.
இப்படியாக நன்றாக ஊர் சுற்றி கடந்த  ஞாயிற்றுக்கிழமை இனிதே நிறைவுற்றது.

ஆகவே இதன் மூலம் உலகிற்குச் சொல்லவருவது யாதெனில்...
ஞாயிற்றுக்கிழமை எல்லாம் புரட்சிப் போராட்டத்துக்கானது அல்ல. (குறியீடு)

-கார்த்திக். புகழேந்தி
10-08-2015

Friday, 7 August 2015

கே.எஸ்.ஆர் - K.S.Radhakrishnan.

எனக்கு நன்றியுடன் சொல்லவேண்டிய வார்த்தைகள் நிறைய இருக்கின்றது. எதுவும் எழுதக் கூடாது என்று தடுத்துவிட்டார்.  ஆனாலும் நினைத்தமட்டும் எழுதத் தான் வேண்டும்.

கே.எஸ்.ஆர்  - K.S.Radhakrishnan.
_______________________________ஏதாவது ஒரு புதிய காரியத்தைச் செய்து முடிக்க நினைத்தால், உடனே அவர் முன்னால் போய் நிற்பேன். சாதக பாதகங்களைப் பற்றியெல்லாம் கூட ஒரு வார்த்தை பேசாமல்,  “தாராளமாச் செய்யுங்க நான் என்ன உதவி செய்யனும்” என்பார். ஒரு கடுஞ்சொல் கூட கிடைக்காது.

எந்த காரியமானாலும் தனியே அழைத்து என்னுடைய கருத்து இது; பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று தெளிவுபடுத்துவார். தனிமனித சுதந்திரத்தையும், சுயமரியாதையையும்  மதிக்கின்ற மனிதர்.

ஒரு அரசியல் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரின் வீட்டில் அதற்கான எந்த படோபடமும் இருக்காது. இதுவரையிலும் நானும் பார்த்ததில்லை. அண்ணன் வாழ்க, தலைமை வாழ்க போன்ற கோசங்கள் எதையும் கொஞ்சமும் சட்டை செய்ய மாட்டார். முதலில் எல்லாம் நிறைய ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

எளிமையான குணம், யாரிடம் நெருங்கிப் பேசாத, அதே நேரம் மனதிற்கு நெருக்கமாகிவிட்டால் அவர்களை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிற மனம். இதெல்லாம் தான் அவர்மீதான மதிப்பை உயர்த்திச் சென்றது.

சின்ன மரக்கன்றை நட்டு வைத்திருந்தால் கூட கூப்பிட்டு வைத்து பாராட்டுகின்றவர். கதைகள், கட்டுரைகள் என்று யார் எழுதின சிறு துணுக்குகள் அவர் கண்ணில் பட்டால் கூட சரமாரியாக பாராட்டுவார். இவ்வளவு ஏன் ஒரு புகைப்படத்தை காண்பித்தால் கூட மனத்திலிருந்து அவருடைய பாராட்டு வந்து விழும்.

பல தகவல்களைக் கேள்விப்படும் போது ஆச்சர்யமாக உணர்ந்திருக்கிறேன். கழகங்களுக்குள் இருந்துகொண்டு தனக்கென  ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, தவறுகளுக்கெதிராக குரல் கொடுக்கும் அந்த போராட்ட குணமாகட்டும். விடுதலைப் புலிகள் தொடங்கி ஈழதேசத்து புலம் பெயர்ந்த மக்கள் வரை இவரோடு கொண்டிருந்த நெருக்கமும், 80களில் சந்தித்த நெருக்கடிகளும் கேள்விப் படுகின்றபோது, இதுவே வேறு யாராகவுமிருந்தால் இந்தக் காரணங்களை வைத்துக்கொண்டே தனி அரசியல் கட்சி தொடங்கி விளம்பரம் தேடிக்கொள்வார்களே என்று தோன்றும்.

ஜூனியர் விகடன் என்று நினைக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் சந்தித்துக் கொண்டதுண்டா என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அளித்த பதிலில், “ திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திருமணம் தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்தது. அந்தத் திருமணத்தில் பிரபாகரன் கலந்துகொண்டார். மேடையில் இருந்து இறங்கி வந்தபோது இருவரும் பரஸ்பரம் வணக்கம் வைத்துக் கொண்டதாகத் தகவல்” என்று கூறியிருந்தார்கள்.

 “ஏன் சார் திருமண வீட்டில் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையா நீங்கள்” என்று கேட்டேன். அப்போது, “தம்பி பிரபாகரன் தமிழகத்தில் சில இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தார். அவரை பத்திரிகை வெளிச்சத்தில் காண்பிப்பது சரியானதென்று யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.

ஒரே ஒருபடம் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்டு தமிழர்களின் தலைவர் ஆனவர்களை எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். இப்படி அரசியல் நிகழ்வுகள் தாண்டி, பொதுக்காரியங்கள் என்று பார்த்தால், விவசாயிகள் போராட்டம் தொடங்கி நதி நீர் இணைப்பு, கண்ணகி கோயில், தூக்குதண்டனை ரத்து, என்று அவர் கைவைத்திருக்கும் சமூக நல காரியங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அடுத்த தலைமுறைக்கும் இப்படியான கடமைகள் நிறைய இருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாக, அவருடைய செயல்பாடுகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி தமிழகத்தின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுக்கான தொழில்நுட்ப செயலி ஒன்றை உருவாக்கும் திட்டம் ஒன்றும் மனதிலிருக்கின்றது. விரைவில் அவரே அறிவிப்பார் என்றும் நம்புகிறேன்.

கடந்தவாரம் கூட சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கும் எதிரான மனு ஒன்று தயாரித்து டெல்லி சென்று, பூனைக்கு மணிகட்டிவிட்டு வந்திருக்கிறார். வழக்குமன்றங்களை நாடியதும் அரசு இயந்திரங்கள் பரபரக்கத் துவங்கும் என்று சொல்லும் போது அரை நூற்றாண்டு களைப்பு என்று எதுவுமே இல்லை அவர் வார்த்தையில். தொடர்ந்து ஏதேனும் ஒரு பொதுக்காரியத்தில் இயங்கிக் கொண்டே இருப்பார்.

எல்லாவற்றையும் தாண்டி, கிராமங்களின் மீதான அவருடைய நேசம் அப்படியே ஆளைச் சாய்த்துவிடும். கோவில்பட்டி பருத்தி வியாபாரிகள் முதல், கழுகுமலை எள் செக்கு ஆட்டுகிறவர்கள் வரை பழைய நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் நேரமும் பொழுதும் கரைந்து போவதே தெரியாது.

இம்மாதிரியான அனுபவங்களை அவர் புத்தகமாக்கித் தரவேண்டும் என்ற விருப்பத்தை கேட்காமலே வைத்திருக்கிறேன்.  60-90வரைக்குமான அந்த வாழ்க்கையை உங்கள் சொல்லில் திரையிலோட்டிப் பார்க்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

கரிசல் மண்ணின் மைந்தனாக, அந்த மண்ணையும், மக்களையும், நேசிக்கிறவராகவே கே.எஸ்.ஆர் வாழ்கிறார். கரிசல் மண் கொடையாகத் தந்த படைப்பாளிகளை அவர் கொண்டாடுகின்ற பண்பை வைத்தே அவர் நேசத்தை எடைபோட்டுவிட முடியும்.

நீங்கள் இந்தியா முழுக்க அலைந்து திரிந்து, தேடிக் கிடைக்காத புத்தகங்கள் அவர் வீட்டில் கிடைக்கும். அவர் ஒரு நூலகம். ஞானப்பழத்தை வாங்க பூமியை மூன்று சுற்றெல்லாம் சுற்றத் தேவையில்லை. இவர் வீட்டை நிறைத்திருக்கும் புத்தக அலமாரிகளைச் சுற்றிவந்தால் போதும். அந்த வீட்டுக்குள் தான் மிகச் சுதந்திரமாய் உலாவுகிறேன்.

என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும், ஒவ்வொரு முயற்சியிலும் ஊக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கும் மரியாதைக்குரிய மனிதர்.

தெற்குச் சீமையின் தாமிரபரணி தீராவாசத்து மனிதர்களிடம் தென்படும் அத்தனை ஈரம் மிகுந்த குணாதிசயங்களும் கொண்ட கே.எஸ்.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்றென்பது காலையில் தான் தெரிந்துகொண்டேன்.

மனம் நிறைந்த வாழ்த்துகள் சார். நீங்கள் வெளிக்காட்ட விரும்ப மாட்டீங்கள். ஆனால் உங்கள் அறிவின் நிழலில் கற்றுக் கொண்டிருக்கும் நான் என்னுடைய நன்றிமிகுந்த அன்பை வெளிப்படுத்தியே ஆகவேண்டுமே! இதற்காக என்னைத் திட்டுவீர்கள் என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திரு. Radhakrishnan KS​ அவர்களுக்கு...

- கார்த்திக். புகழேந்தி | 07-08-2015 | சென்னை | 
There was an error in this gadget