டெசி கதை
பரவலாகவே முருகன் குறிச்சியில் எல்லோருக்கும் டெசியைத்
தெரிந்திருக்கும். சிமெண்டு நிற கால்சட்டைப் போட்ட முருகன்குறிச்சிக்காரப்
பயல்கள் அத்தனை பேரும் கதீட்ரலில் தான் படிப்பான்கள்.
பள்ளிக்குப் பக்கத்திலே வீடு அமைவதில் ஒரு வசதி.. எத்தனை லேட்டாக வேண்டுமானாலும் கிளம்பலாம். ஒரே ஒரு வருத்தம் ”இன்னைக்கு எங்க ஸ்கூலு லீவு”.. எனப் பொய் சொல்லி கிரிக்கெட் ஆட முடியாது.
சரி டெசி கதைக்கு வருவோம். டெசி முருகன் குறிச்சி வடக்குத் தெருவின் முன்னாள்* ஏஞ்சல். டெசியின் அப்பா லாரன்ஸ் அந்த ஊரிலிருந்து இராணுவத்துக்குப் போன முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர். .
பின்னாளில் லாரன்ஸ் பட்டாளத்தாரைக் கண்டாளே நடுங்கும் பொடிப்பயல்களாக நாங்கள் இருந்தோம்... ஆனாலும் அவர் மகள் டெசியை ஒரு நாள் நேரில் பார்த்துவிட ப்ரியப்பட்டவனாகினேன். அதற்குக் காரணமும் இருந்தது.
பரிட்சைக்கு மறுநாள் வைக்கும் கோச்சிங் க்ளாஸைக் கட் அடித்துவிட்டு குளக்கரை கிணற்றடியில் பரணி, க்ளாட்ஸன், ராமச்சந்திரன், ராஜ்குமார் சகிதம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது டெசி..கதையை ராமச்சந்திரன் சொல்லத் தொடங்குவான்,
சேகரித்து வைத்த நாவல்,புளியம் பழங்களை உப்பு மிளகாய்ப்பொடி தொட்டு மென்று கொண்டே டெசி கதை கேட்போம். டெசி கதையினை ராமச்சந்திரன் போல அக்குவேறு ஆணிவேறாக பரபரப்பாய்ச் சொல்ல ஆள் கிடையாது. அவன் டெசி ஊர்க்காரன் என்பதால் அவன் சொல்வதை எல்லாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
திடுக்கிடும் தொனியில் அவன் கதை சொல்லத் துவங்கி கதை முடியும் அத்யாயத்தில் ”போதும்டா வேணாம் பயமா இருக்கு”என்று ராஜ்குமார் நடுங்குவான்.
டெசி ஊரின் பரபரப்புச் செய்தியான நாளில், அதே தெருவைச் சேர்ந்த கிருபாவை அவள் காதலித்துக் கொண்டிருந்திருக்கின்றாள் என்பது லாரன்ஸ் பட்டாளத்தாருக்குத் தெரிந்து விட்டது.
மதம் விட்டு மதம் மாறலாம் சாதிவிட்டு சாதி மாறமுடியாதென்னும் வித்யாசமான கோட்பாட்டின் அடிப்படையில் டெசியின் தந்தைக்கு கோபம் பீறிட்டு வந்தது.. டெசியின் அம்மாவை வெளியே தள்ளிக் கதவை சாத்திவிட்டு தோளில் தூக்கிப் போட்டு வளர்த்த மகளை, மண்ணெண்னெய் ஊற்றிக் கொளுத்தியேவிட்டார்.
உடல் பற்றி எரிய, அனல் தாங்காமல் கதவை உடைத்துக்கொண்டு தீப்பிழம்புகளோடே வயல் ஓடையை நோக்கிப் பாய்ந்து ஓடி பக்கத்திலிருந்த குளக்கரை கிணற்றில் குதித்து இறந்துவிட்டாள். மறு நாள் பட்டாளத்தாரை போலீஸ் கைது செய்ய.. சில வருடங்களில் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டார். இப்போது வரைக்கும் ஊரில் யாருடனும் அவர் பேசிக் கொள்வது இல்லை. ஆனால் ஊர் அவரையும் டெசியையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும்.
சரியாக ஊசிகோபுரத்தில் மணி மதியம் ஒன்று அடித்ததும் குளத்தங்கரையிலிருந்து “ஓ”- என்று ஓலம் கேட்குமாம்.. “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்றபடிகிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வர ஆரம்பித்திருக்கிறது. ஆடு மேய்க்கப் போனவர்கள் எல்லாம் ஊருக்குள் சொல்ல டெசியின் ஆவி அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதாக ஊருக்குள் செய்தி பரவத் தொடங்கி இருக்கின்றது.
கோவில் கொடையில் சாமியாடி ஒருத்தர் ” மதகுமடை வரப்பில் எம்புள்ளைக்கு கல் ஒன்னு நட்டு வைங்கல...அவ இளங்கன்னியா செத்திருக்கா.. இந்த ஊர் பயலுக அந்த கல்லு பக்கம் அண்டக்கூடாது. பகல்ல ஓலம் போடாம நான் பார்த்துக்கிடுதேன்.. அக்கினி தின்ன புள்ளைக்கு தண்ணி தவிக்குது அதான் குளத்தங்கரை கிணத்தை நீங்காம உலாத்திக்கிட்டு இருக்கா.. குளத்தை ஆடுமாடுக தவிர இனி யாரும் பொளங்கக் கூடாது” என்று குறி சொல்லிவிட்டதால் ஊரே கிணற்றை நெருங்காமல் விட்டு விட்டது.
அதன் பின் ஊருக்குள் ஓலமிடும் சப்தம் கேட்கவேயில்லையாம். வரப்பில் நட்டு வைத்த கல்மட்டும் மதியம் ஒரு மணிக்கு கிடுகிடுவென் நடுங்குமாம். வெள்ளை நிற உடையுடுத்திய டெசி மட்டும் அவ்வப்போது பைபிளோடு குளத்துப்பக்கம் திரிந்ததைப் பார்த்து நாவல் பொறுக்க வந்த பொடியன்கள் பயந்து காய்ச்சலாகி இருக்கின்றார்கள்.
பரணி “ கிருபா என்னடா ஆனான்?” .
“அவன் மிலிட்ரிக்குப் போய் போர்ல செத்துப் போய்ட்டானாம்டா”.இராமச்சந்திரன்.
”அந்த கல்லு எங்கடா இருக்கு..” -இது ராஜ் குமார்.
”அங்கல்லாம் நாம போக்கூடாது டா. ஊருக்கு தள்ளி மடை ஒன்னு இருக்கு கருப்பசாமி கோவில்கிட்ட அங்க இருக்கு ” ராமச்சந்திரனே தான்.
நான் “ டெசி பார்க்க எப்படி இருக்கும்டா “ என்றதும் .. “ ம்ம்ம் ...இங்கிட்டுதான் திரியும் நீயே பார்த்துத் தெரிஞ்சுக்கோ” என்று முடித்தான் ராமச்சந்திரன்.
”இங்கேயா?” எனக் கேட்டபோது தான் தெரிந்தது. நாங்கள்
கட் - அடித்துவிட்டுப் படுத்துக் கிடந்தது அதே கிணற்றடியில் தான்.
மணி 12:59.

நான் கூட ஆரம்பத்துல டெசிங்குறது கதைநாயகன் கூட படிக்குற புள்ள போல... இதுவும் ஒரு ஜாலி கதைன்னு தான் நினச்சேன். ஆனா படிச்சி முடிச்சதும் பேய் எல்லாம் வந்து பயமுறுத்தல, ஆனா ஒரு கிராம மக்களோட மனநிலை தான் முன்னால நின்னுச்சு. இங்க பரணி, க்ளாட்ஸன், ராமச்சந்திரன், ராஜ்குமார் எல்லாரும் சகஜமா திரியலாம். ஊர் மக்கள் கூட இன்ன இன்ன மதம்ன்னு பாரபட்சம் பாக்காம ஒண்ணா திரியலாம். ஆனா காதல்ன்னு வந்துட்டா போச்சு. அதுவரைக்கும் ஒண்ணா புளங்கினவங்க மாற்று மதத்தினரா மாறிடுவாங்க. கொலை பண்ற அளவு வெறி பிறக்கும். அது ரெத்த பந்தம்னு எல்லாம் பாக்காது. இந்த மாதிரியான காதல் சாவுகள் இவங்களுக்கு சாதாரணமாவே இருக்கும்... பாத்தீங்களா, இங்க மதத்தின் பெயரால் பறிக்கப்பட்ட ஒரு உயிருக்கு இன்னொரு மதத்தின் பெயரால் சாந்தி கிடைச்சிருக்கு (கோவில் கொடையில் சாமியாடி ஒருத்தர் ” மதகுமடை வரப்பில் எம்புள்ளைக்கு கல் ஒன்னு நட்டு வைங்கல...அவ இளங்கன்னியா செத்திருக்கா.. இந்த ஊர் பயலுக அந்த கல்லு பக்கம் அண்டக்கூடாது. பகல்ல ஓலம் போடாம நான் பார்த்துக்கிடுதேன்.. அக்கினி தின்ன புள்ளைக்கு தண்ணி தவிக்குது அதான் குளத்தங்கரை கிணத்தை நீங்காம உலாத்திக்கிட்டு இருக்கா.. குளத்தை ஆடுமாடுக தவிர இனி யாரும் பொளங்கக் கூடாது” என்று குறி சொல்லிவிட்டதால் ஊரே கிணற்றை நெருங்காமல் விட்டு விட்டது.). அவ்வளவு தான் இவங்க மத வெறி...
ReplyDeleteமதத்தை மதிக்கும் பண்பு, நம்பும் பண்பு ஏனோ காதலை நம்புவதில் இருப்பதே இல்ல...
சூப்பர் ரைட்அப் கார்த்திக். எதை பத்தியும் யோசிக்காம, இதான் மக்கள், இதான் வயசு பசங்கன்னு காட்டிட்டீங்க... அதுவும் அந்த விடலை பையனாவே வாழ்ந்துட்டீங்க