ப்ளமிங்கோ




கண்கள் அந்த வரவேற்புக் கூடத்தில் நின்றவர்களின் கைகளிலிருந்த மஞ்சள் நிறமிடப்பட்ட கருப்பு எழுத்துக்கள் பதிந்த  ஒவ்வொரு பெயர் அடையாள அட்டையிலும் ஐ.ராகவன் என்ற பெயரைத்தேடியது.

ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் என்னை விட உயரமாகவும் என்னை விட சிக்கனமாகவும் ஆடையிலிருந்த   அந்த ஜெர்மானிய வாசம் வீசும் ஹைப்ரீட் ஆரஞ்சு நிற யுவதியின் கையில் நான் தேடிய பெயர் இருந்தது.

எண்பத்து இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் காலடி எடுத்து வைத்ததும்  என்னை வரவேற்க ஒரு பெண்ணை அனுப்பி இருப்பார்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை  “ஹலோ..குட் மோர்கன்.” எனக்கு தெரிந்த டொட்ச் அவ்வளவே.! 

”மிஸ்டர்.ராகவ்? ” ஆங்கிலம் முலாம் பூசிய குரலில் எத்தனை இனிமை.

யெஸ்.அயாம் - டொட்ச் தவிர்த்து சரள ஆங்கிலத்தில் கைகுலுக்கிக் கொண்டோம்.. சின்ன ஸ்பரிசம் மனதின் ஓரத்தில் இதமான மகிழ்ச்சியைக்கொடுத்தது. 

வேறு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் விமான நிலையத்தின் வாயிலை இருவரும் ஒரே சீரான வேகத்தில் கடந்தோம். மொழி இருவருக்கும் தடையாக இல்லை. ஆனபோதும் புன்னகைகளாலும் அன்னிச்சையான சைகைகளாலும் பேசிக்கொண்டோம் முதல் சில நிமிடங்கள்! 

“லக்கேஜ் எடுத்து வந்திடவா?” இது நான்.,

யெப்! ஸ்யூர். -இது ஆரஞ்சு பூ. 

“தாமதமாகிவிடவில்லையே?” 

“பத்து நிமிடம் பின்தங்கி விட்டோம், அதனால் பரவாயில்லை சரியான நேரத்தில் சென்றடைந்து விடலாம்” 

பை தி பை அயாம் ஸ்........
....... என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதோ ஒரு பெயரைச்சொன்னாள்,.

 சத்தியமாய் என் ஆசிய நாக்கில் அந்த ஐரோப்பியப் பெயர் சரளமாக  உச்சரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை, அதனால் விட்டுவிட்டேன். 

கிழக்கு ஜெர்மனியில் அது கோடை காலமாம். நம்ம ஊர்பக்கம் மழை அடித்த மறுநாள் கூட இதைவிட உஷ்ணமாகத்தான் இருக்கும் என எனக்குள்ளே எண்ணிக்கொண்டேன். 

சீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளச் சொன்னாள். மாட்டிக்கொள்ளும் முன்னே  கார் சீரான வேகத்தை கடந்து மித, அதி வேகத்தை தொட்டு சாலைக்கோடுகளை  பின்னுக்குத்தள்ளி முன்னேறிக்கொண்டிருந்தது. 

ஆசியநாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றில் பணிபுரியும் ராகவ் என்கிற ராகவேந்திரன்  எனக்கு ஜெர்மனி புதியது. அனைத்திற்கும் மேலாக அலுவல் காரணங்களுக்காக நான் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதும் இது தான் முதல் முறை. 

விமானப் பயணத்தினூடே ஜெர்மனியின் பயணிகள் கையேடு ஒன்றை கையில் புரட்டியபடியே வந்தேன். அநேகமாக அதுவே நான் ஜெர்மனிக்கு புதிது என்பதை ஹோஸ்டர்ஸ்க்கு தெள்ளத்தெளிவாய் விளக்கி இருக்கும்.

மேலும் விமானத்தில் நம் இந்திய முகங்கள் யாருமே இல்லாதது கூட நான் அந்த புத்தகத்தை மட்டும் புரட்டிக்கொண்டிருக்க காரணமாய் இருக்கலாம். எனக்கு பேசுவது மிகவும் பிடிக்கும்.நம் இந்தியர்கள் பல நேரங்களில் அதிகம் பேசுபவர்களை கொண்டாடுவார்கள்., அதிலும் மிக அதிகமாய் நாம் வருவதைக்கண்டாலே.. ஒதுங்கி நான்கு தெரு சுற்றியும் போவார்கள். சந்தேகமென்றால் அரசியல் மேடையில் கூட்டம் வராத நகைச்சுவை துணுக்குகள் இன்னாள் வரைக்கும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

பேச்சாற்றலின் ஆளுமை மற்றவர்களிடையே நம் கருத்தை முன்வைப்பதில்  ரொம்பவே தீரமான வழி என எண்ணிக்கொள்பவன் நான். ஆனால்  அப்படி ஒருவரும் அன்று சிக்காமல் போனது அவர்கள் பிறவிபலனாக கூட இருக்கலாம்.

ஆப்ரஹாம் லிங்கனின் மேடைப்பேச்சு கட்டுரை ஒன்றை வாசித்து விட்டு அயர்ந்து தூங்கினவனை அந்த ஆயிரம் முறைக்குமேல் ஒலிக்கப்பட்டிருந்த வழக்கமான விமானத்தின் தரையிறங்கும் அறிவிப்பு குரல் கண்விழிக்கச் செய்ய.. ஜெர்மனி சமீபமாகியிருந்தது.

 இதோ..!

 புலம் பெயர்வுகளில் அதிகமான மக்களைக்கொண்ட  மூன்றாவது நாடான  ஜெர்மனிய தேசத்தில் காலடி எடுத்து வைத்து........சம்பிரதாயமான பிரயாணிகளின் சோதனைகள் மற்றும் கடமைகளை முடித்து...  இந்த ஜெர்மன் பூவை பார்த்து பிரமித்து, புன்னகைத்து கண்களால் பேசி இதோ அவளோடே பயணிக்கிறேன். இடையிடையில் அவளது பர்ஃப்யூம் வாசனை என்ன மலரென்று கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போகிறது என் நாசி.. 

“ஆர் யூ மேரிட் மிஸ்டர் ராகவ்”

தேனாய் ஆங்கிலம் கடந்த சில மணித்துளிகளின் சிந்தனையைக்  கலைத்தது
ஆக்ஸிலேட்டர் இன்னும் சீறிக்கொண்டே இருந்தது.,

அவளின் வேகத்தில் பயணிததது என் வார்த்தைகள்... கவனமாய்...

“நோ. இன்னும் பண்ணிக்கலை”

“கேர்ள் ஃப்ரெண்ட்?” மிகச்சாதாரணமாகக் கேட்டாள்.,

நான் பிறந்து வளர்ந்த தென்தேசம் என்னை அந்த அளவு நவ நாகரீகவாதியாகி விட அனுமதிக்கவில்லை என்பதை இவளுக்கு எப்படி புரிய வைப்பேன் எனத் தெரியாததினால். நமுட்டுச் சிரிப்பை பதிலாய் வைத்தேன். 

 “ஐ லவ் மை ஜாப் ஃபர்ஸ்ட்”

“ஓஹ் .குட்!”

 கணிதமேதை ராமானுஜம் ஏதோ பெரிய ஈக்வேஷனைக் கண்டறிந்துவிட்ட திருப்தியைப் போல அவளது குட் எனக்குக் கேட்டது! அவள் என்ன நினைத்துச் சொன்னாளோ. இந்திய வாடை ஆங்கிலமும், டேனிஷ் ஹாங்கிலமும் கலந்துரையாடிக்கொண்டது. 

“வேர் வி கோ? நௌ?” 

“மை காட்டேஜ் -இன் சுவ்வேரீன்.”

மெக்லன்பேர்க் நகரத்தின் சாலைகள் மீது பட்டு ... காரின் ஃப்ரெண்ட் விவர் க்ளாஸில் பால்டிக் கடல் காற்று ஜில்லிப்பாய் வீசியது.

“உங்களின் வருகையை இரு வார காலங்களுக்கு முன்னதாகவே எங்கள் நிறுவனம் எங்களுக்கு தெரிவித்து விட்டது.”

“அத்தனை முன்னெச்சரிக்கை வேகமா!” 

“சரியாகச்சொன்னால் உங்களின் பயணம் ஒவ்வொரு நிமிடமும் அப்போதே வடிவமைக்கப்பட்டுவிட்டது -ஆனால்”

“ஆனால்”

“இன்று உங்கள் இந்திய நிறுவனத்தின் தகவலமைப்பு சீர் செய்யும்  கட்டமைப்புகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாலும்எங்கள் பணியின் பாதிப்பு தேங்கி விட்டபடியினாலும் இன்றைய தினம் நீங்கள்  ஓய்வாக இருக்க வேண்டியது நிர்பந்திக்கப் பட்டுவிட்டது.”

நன்கு தின்று ஜெர்மன் முழுக்க ஊர்சுற்றிப்புராணம் எழுதலாம் உட்கார்ந்து மனதிற்குள் ஓய்வு டாலடித்தாலும் பணிச்சுமை இலகுவாய் மிரட்டியது. 
கார் இன்னும் சீறிக்கொண்டே இருந்தது அது எத்தனை மைல் வேகத்தில் செல்கிறது என என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவள் அதனை சைக்கிள் ஓட்டுவது போல ஓட்டிக்கொண்டிருந்தாள்..

காரின் இண்டீரியர் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதன் குஷன்களில் இப்போது அழுத்தமாய் என் முதுகுப்பக்கத்தை சுதந்திரத்தோடு விடுவித்தேன்

ஆல்ப்ஸ் மலை உச்சியில் நிற்பது போலான பனிக்குளிரை காரின் குளிர்பதனச் சன்னல் என் மீது விசிறியடித்தது. 

“உங்களுக்கு பிரச்சனையில்லையே”

 “முன்பே! ... ஆமோதித்திருந்தது தான் இந்த தாமதம்”

“எப்படி சொல்கிறீர்கள்”

“சில அரசியல் காரணங்களால் எங்களுடைய வர்த்தகக் கட்டிடத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பணிகள் பாதிக்கப்பட்டது. விரைவில் சரிசெய்துவிடுவோம். ”

ப்ளைட்டில் ஏதேனும் சாப்பிட்டீர்களா மிஸ்டர். ராகவ் - அவள் மிஸ்டரை விடுவதாய் இல்லை

 “இல்லை ஆனாலும் பசி இல்லை?”

“ஓஹ்... நீங்கள் நான்வெஜ் தானே! உங்கள் .சி.வி படித்தேன்,  ”

“எஸ். எனி ப்ராப்ளம்”

“நோ. அதனால் ஒன்றுமில்லை ”

என் கணிப்பில் அவள் உருளைக்கிழங்குக்கும் சீஸுக்கும் உருவான காம்பினேஷன் உடற்கட்டோடு இருந்தாள் என நினைக்கிறேன்.

உருளைக்கிழங்கை பொறித்து , வதக்கி வெதுப்பி, அவித்து என விதம் விதமாக ஜெர்மனியர்கள் உண்ணுகிறார்கள் என டிக்ஸன் சொன்னது இப்போது ஊர்ஜிதமாகப்பட்டது.டிக்ஸன்  எங்கள் நிறுவனத்தின் சீனியர் மெண்டர்.  டிக்ஸனுக்குப் பதிலாகத்தான் நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். 

 “உங்கள் ஹாபியில்  கார் பந்தய விசிறி எனக் குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா?”-மீண்டும் அவளே கவித்தாள் .அல்லது பேசினாள்.

அவளின் கேள்விகளை திசை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு..
“யா! மைக்கேல் ஷூ மேக்கர்ஸ் பிக் ஃபேன் அயாம் ” என்ற போது அவளுக்கு கன்னம் சிவந்திருந்தது சிரிக்க முயற்சித்திருப்பாள் போல.,  நிச்சயமாய் அப்படி ஏதும் கிடையாது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கார் ரேஸ் பார்ப்பதை விட ஏ.எக்ஸ்.என்-னில் க்ராஷ் கார்ஸ் பார்ப்பவன் நான்

மைக்கேல் ஷூ மேக்கரை கவனத்தில் கொண்டு கார்பந்தயம் பிடிக்கும் அதும் ஒரு ஜெர்மனிக்காரரை பிடிக்கும் எனச் சொல்லலாமென்று அப்படி சி.வியில் கொடுத்திருந்தேன்.  சில பொய்கள் சந்தோஷிக்க வைக்கும் என்பதை அக்கணம் அனுபவித்தேன். 

“வாட் அபௌட் யூ மிஸ்.....ஆர் மிஸ.......” என்றதும். 
அவளே முந்திக்கொண்டு பேசினாள்.

“நான் உங்கள் ஏசியா நிறுவனத்தின் வர்த்தகத்தில் கைகோர்த்திருக்கும்  ஜெர்மனியில் இயங்கும் பன்னாட்டு நிறுவனத்தின் பப்ளிக் ரிலேஷன்ஷிப்  டிப்பார்ட்மெண்ட் ஆள்! உங்களை கெய்ட் செய்ய என்னை நியமித்திருக்கிறார்கள்.”

 “அப்படியானால் நீங்கள் நாளை ஓய்வில் தானா?”

“யூ மீன்?”

 “இல்லை எனக்கு பால்டிக் கடலை ரசிக்க ஆவல். உங்களுக்கு ஏதாவது வேறு ப்ரோக்ராம்?”

இல்லை அடுத்த நான்கு நாட்களுக்கு உங்களுடன் தான் என் ப்ரோக்ராம்
அதனால் டாமை நான் ஐந்து நாட்கள் நாள் வரச் சொல்லப்போவதில்லை என்றாள்,

“டாம்?”

“என் பாய் ஃப்ரெண்ட்!”

பதில் ஏதும் நான் சொல்லவில்லை. என்னால் அவள் சொல்ல வருவதை யூகிக்க முடிந்தது. அந்த அழகுப் பெண்ணுக்கு தகுதியான ஆடவனாகவே டாம் இருக்கவேண்டும் என்று மட்டும்  நினைத்துக்கொண்டது. கொஞ்சம் பொறாமையும் தான்.

காரின் வேகம் இன்னும் குறைந்த பாடில்லை... அது ஒன்று மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது இவள் வேகத்தை எப்போது குறைப்பாள்?
வலம்,இடம் முன், பின் என எல்லா பக்கமும் கார்கள்.

 எல்லாமுமே வேகம், வேகம், வேகம்....யாராவது ப்ரேக் அடித்தால் மொத்தமாய்      கேரம் ஸ்ட்ரைக்கர் சிதைத்து போட்டது போல கலைந்து க்ரஷ்ஷ்.... முடிந்தது கதை... மைக்கேல் சூ மேக்கரால் கூட காப்பாற்றமுடியாது.

“உங்களுக்கு இங்கு யாரையும் தெரியுமா மிஸ்டர். ராகவ்”

“மிஸ்டர் எல்லாம் வேண்டாம்...கால் மீ ராகவ்..  ஹ்ம்ம்ம் ஐ ஹாவ் சம் ஃப்ரெண்ட்ஸ் இன் ஜெர்மன், அவர்களை எனக்குத்தெரிந்திருந்தாலும் தொந்தரவு செய்ய முடியாதவர்கள்., தே ஆல்  ஜஸ்ட்  ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் ” என்றேன்.,

 “ஜஸ்ட் ஃபேஸ்புக்” என்ற வர்த்தையைச் சொல்லும் போது மனதுக்குள் ஏதோ சில நெருடல்கள். அதை நட்பின் அளவுகோலாய் அவள் எடுத்துக்கொள்ளக்கூடாது என மனது பிரார்த்தித்தது.

“யூ மீன்?”

“அவர்களை தொடர்பு கொள்ள நினைக்கவில்லை ” என்பதை மட்டும் விளங்க வைத்தேன்! அவள் இதழ் திறவாமல் புன்னகைத்தாள்.

சில நிமிடங்களில் காரின் வேகம் குறைந்தது,.

“என்னாச்சு?”

“ஏதோ விபத்து போல” என்றவாரே ஜி.பி.எஸ்-ஐ  ரீஃப்ரெஷ் செய்தாள்!

டேனிஷ் குரல் ஒன்று கரகரத்தது.

“முதல் மைல் தள்ளி ஒரு விபத்து இன்னும் 7 நிமிடங்களில் சரி செய்யப்படும்” என்றாள். அநேகமாக அவள் எனக்கு மொழிப்பெயர்த்தாள் எனச் சொல்ல வேண்டும்.

ஹெலிஹாப்டர் சப்தம் கேட்டது. தூரமாய் ஒரு சின்ன இரைச்சல். அடுத்து எல்லாம் முடிந்ததாக கிளம்பத் தயார் என்று அறிவிப்பை கரகர குரல் மீண்டும் டேனிஷித்தது...

“விஞ்ஞானம் வியப்படைய வைக்கிறது. ” என்றேன்!

மீண்டும் புன்னகை! சாதாரணமாக ஒரு விபத்தை புன்னகைத்தவாறே கடந்து போயிருக்கிறோம் என அப்போது நினைவுக்குள் கொண்டு வர விரும்பவில்லை. ஒரு வேளை அது என் தேசமில்லை என்பதாலோ... ஆனால் அவள் வருத்தப்பட்டாளென்று கொஞ்சமும் அடையாளப்படுத்தவில்லை சலனமில்லாத அவள் முகம்!

ஐந்தாவது நிமிடக்கடைசியில் சீராக ஊர்ந்தன ஏனைய கார்கள்! அதனோடு என்னருகே இருந்த  இந்த ஜெர்மன் நாட்டின் இந்தப்  பிளமிங்கோ பறவையும் ஆக்ஸிலேட்டரை தன் ஹீல்ஸில்... அழுந்த அது தானாய் அவளிடம் சரணடைந்து  மெல்ல வேகம்பிடிக்கத்தொடங்கியது. ... இன்னும் எத்தனை தூரம் தான்... இருக்கட்டும் இவளோடு இந்த அருகாமையைக் கொண்டாட இன்னும் கால் நிதியாண்டுகள் ஆகும்.

ப்ளமிங்கோ !
நம் ஊராக இருந்திருந்தால் மயில் குயில் என்றிருப்பேன். ஆனால் எனக்குத்தெரிந்த ஒரே ஜெர்மன் பறவை ப்ளமிங்கோ தான்! கூந்தகுளத்தில் வருடா வருடம் சீசனுக்கு வரும்..!

வேறு பறவைகள் சட்டெனத் தோணவில்லை ட்ராவல் கைடைப் புரட்டினால் பார்ஹெட்டட் கூஸ், சோவல்லார், பின்டெய்ல், காமன் டீல், பிளெமிங்கோ, கூட்  இது தவிர பெலிகான் பெயிண்ட், ஓயிட் ஐபிஸ், கிரே ஐபிஸ், கிரே ஹெரன், பர்பிள் ஹெரன், ஸ்பூன்பில், காட்டன் டீல், இந்தியன் மூர்கென், கிங் பிஷர் எல்லாம் வாசிக்கலாம் ஆனால் இவளுக்கு பிளமிங்கோ பொருந்துகிறதே கச்சிதமாய்.. 

காருக்கு வெளியே கனமான இரைச்சல் வெளியில் கேட்டிருக்க வேண்டும் ஆனால் எனக்கோ குளிரில் காதடைத்து இருந்தது.
சுவ்வேரீனை நெருங்கி விட்டோம் என்றாள். சில நிமிடங்களே மீதமிருந்தபோது அது நிகழ்ந்தது.

வயர்லஸ் டாக்கியில் சப்தமாக பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். ஜெர்மன் நகர காவல்துறையைச்சேர்ந்தவராக அவர் இருக்க வேண்டுமென ஊகித்திருந்தேன்.

அவர் சப்தமாக பேசக்காரணம்! ஹெலிஹாப்டர் ஒன்று மிகச்சாதாரணமாய் என் தலைக்கு மேலே சுமார் 25 அடியில் பறந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு விபத்து நடந்திருப்பதை உணர்ந்திருந்தேன். நம்மூர் சுஜாதாவாக இருந்தால் அது என்ன ரக ஹெலிஹாப்டர் என்பது வரைக்கும் போகிறபோக்கில் எழுதி இருப்பார்.

அடுத்தடுத்து இரண்டு ஹெலிஹாப்டர்களை மிகச்சர்வசாதாரணமாக பார்க்கிறேன்., நம் ஊரில் முதல்வர்கள் மாநாடு நடத்தினால் ஊரைச்சுற்றி வட்டம் போடுவார்கள் அப்போது கைகாட்டிய மகிழ்ச்சி லேசாய் புன்னகைக்க முயற்சித்தது. கையெடுத்துக் கும்பிடும் கலாச்சாரமெல்லாம் இப்போதுதானே சமீபமாய்... தூரத்தில் புள்ளியாய் ஹெலிஹாப்டர் தெரிகிறதா.. இல்லை நான் ஆழத்தில் விழுந்துகொண்டிருக்கின்றேனா... கண்கள் மெல்ல இருட்டியது எனக்கு!

*

மீண்டும் மயக்கம் தெளிந்த போது நான் அந்தரத்தில் இரட்டைக்கயிற்று ஸ்ட்ரெச்சரில் மேலேழுப்பப்பட்டுக்கிடந்தேன். கீழே உற்றுப்பார்க்க முடியாத வண்ணம் என் கழுத்தில் ப்ளாஸ்டிக் வஸ்து ஒன்று அழுத்தி மாட்டப்பட்டிருந்தது! கழுத்தை திருப்பவே முடியாத படியாக அது இருந்தது.

மேலே இருந்து டேனிஷ் குரல் ஒன்று துரிதகனமாய் என்னை தூக்க ஒத்துழைத்தது. இப்போது நான் ஹெலிகாப்டரில் சாய்தளமாக படுக்க வைக்கப்பட்டபோது கீழே... நான் இண்டீரியர் அழகாக இருக்கிறதென வர்ணித்த அந்த வோல்க்ஸ்வேகன் கால்ஃப் ரக கார்.. சுக்குநூறாய் அப்பளமாகக்கிடக்க.. அப்போது தான் எனக்கு விபத்து நேர்ந்திருப்பதை உணர்ந்தேன்.

அய்யோ அந்த ப்ளமிங்கோ பறவைக்கு என்னாயிற்று!?
 கொஞ்சம் முன்னால் சில அடிகள் தூரத்தில் எங்கள் முன்னால் சென்ற ஏதோ ஒரு கம்பேனியின் கருப்பு நிறகார் கரப்பான்பூச்சி போல கவிழ்ந்து கிடந்தது. திடீரென்று நிகழ்ந்த அந்த விபத்துக்குக் காரணம் கருப்பு நிறக்காரின் ஓட்டுனருக்கு ஏற்பட்ட தசைகள் செயலிழப்பு காரணத்தினால் என்று பின்னாளில் சொன்னார்கள்..

காரைப்போல அவள் முகம்  அத்தனைச் சிதிலமடைந்திருந்ததாகச் சொல்லப்பட்டபோது நிச்சயமாய் என்னால் நம்ப முடியவில்லை..
மருத்துவமனை வாசனையையும் மீறி என் நாசிகளில் அவளின் பர்ஃப்யூம் வாசனை  இன்னும் நீக்கமற நிறைந்திருந்தது.

அந்த மெழுகு பொம்மைக்கு என்னென்ன கனவுகள் இருந்ததெனத் தெரியவில்லை காற்றுக்குமிழ் போல அவளோடு இருந்த நினைவுகள் சட்டென உடைந்து விட்டதென்ற போது கண்கள் இருட்டி மயங்கிக்கிடந்தேன்...

நான்கு நாட்கள் கழித்து....

ஜஸ்ட் ஃப்ரென்ட்ஸ்  என சந்திக்கத் தயங்கின  என் நண்பநண்பிகளின்  மிகப்பெரிய உதவியால் ...  இந்தியா வந்தடைந்த போது  விபத்துக்கான காப்பீட்டுத் தொகை யூரோக்களாக கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
டிக்சனே ஜெர்மன் சென்று  அசைன்மெண்டை முடித்துவிட்டிருக்கிறார். ஜெர்மனியில் நினைவு தப்பியவன் சமநிலைக்கு வர எட்டுவாரங்கள் பிடித்ததாம்.

 ப்ளம்மிங்கோ-வை அதற்குப்பிறகு என்னால் பார்க்கவே போவதில்லை என நான் உணர்ந்திருக்கவில்லை அப்போது. ஆம் எனக்கு  பார்வை பறிபோய்விட்டதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். கருப்புக் கண்னாடிக்குள் என் உலகை மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. கடைசியாய்ப் பார்த்தது ஆக்ஸிலேட்டரை உந்தின அவளது ஹீல்ஸ் கால்களாய் இருக்கலாம்..

ஆயிற்று இரண்டு வருடங்கள்... கூந்தகுளத்தில்... சீசன் தொடங்கி விட்டிருக்கலாம்.  ஜெர்மன் நாட்டின் ப்ளமிங்கோ பறவை சீசனுக்காக வந்திருக்கக் கூடும்.. என்னால் பார்க்க முடியாது கேட்க மட்டும் தான் முடியும்

ஆகவே, யாரேனும் எனக்கு டேனிஷ் கற்றுக்கொடுக்கிறீர்களா? கடைசியாக ப்ளமிங்கோ என்னிடம் ஏதோ சொல்ல முயன்றாள் அது என்னவென அவைகளிடம் தெரியவேண்டும் எனக்கு ...

-கார்த்திக். புகழேந்தி.






Comments

  1. மிக அருமையான கதை ஓட்டம். ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் பிரமாதம் !!!

    ReplyDelete
  2. ஜெர்மனிக்கு சென்று வந்த உணர்வு... காரோடு காராக நாங்களும் கூடவே பிரயாணம் செய்து அந்த ப்லெமிங்கோவை இழந்து விட்டு உங்களோடு சேர்ந்து தேடி கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  3. மருத்துவமனை வாசனையையும் மீறி என் நாசிகளில் அவளின் பர்ஃப்யூம் வாசனை இன்னும் நீக்கமற நிறைந்திருந்தது#### கதையும் தான்.....

    ReplyDelete
  4. GERMANS SPEAK DEUTCH...DANISH IS THE NATIVE LANGUAGE OF DANMARK...LITTLE CONFUSION...BUT GREAT STORY! WELL DONE KP!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil