வாசிக்கும் பிம்பங்கள்
ஏழை
எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை
அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார்.
அப்படி
கி.ரா குறிப்பிட்ட வரிசையில் தேயிலைத் தோட்டங்களின் வாழ்வைச் சொல்லும் செல்வராஜ் எழுதிய
‘தேனீர்’, கோகிலம் சுப்பையா எழுதின ‘தூரத்துப் பச்சை’, கொங்கு நாட்டு கிராமங்களை நிலைக்களமாகக்
கொண்டு ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய ‘அறுவடை’, ‘பூவும் பிஞ்சும்’ மற்றும் ‘மாயத்தாகம்’
கைத்தறி
நெசவாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும்
எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வேள்வித்
தீ’, தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’ தென்மாவட்டங்களில் பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின்
வாழ்க்கையை மையச் சரடாகக் கொண்டு ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, ஆற்றுமணலை
அள்ளிக்குவித்து வயிறுவளர்த்த கொள்ளையர்களைப் பற்றி ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’,
வெற்றிலைக் கொடிக்கால் வாழ்வை எழுதின ஆ. பழநியப்பனுடைய ‘காவிரிக் கரையினிலே’,
தஞ்சை
விவசாயிகள் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’,
வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, செ.கணேச லிங்கனின் ‘செவ்வானம்’, ஜோசப் எழுதிய ‘காலங்கள்
சாவதில்லை’, கே.டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ மற்றும் ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’,
செங்கை ஆழியான் எழுதிய ‘வாடைக்காற்று’ என்று தான் வாசித்தவற்றில் சில நாவல்களை எழுதி
வைத்திருக்கிறார்.
இந்த
வரிசைகளில் முன்னணியாக ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் அசோகமித்ரன் ஆகியோரது படைப்புகளைக்
குறிப்பிட்டு, ரொம்ப நேசமாக பொன்னீலன் எழுதிய ‘கரிசல்’ நாவலைக் கொண்டாடி இருக்கிறார்.
அவற்றில் இருந்து நான் கொஞ்சம் அறியாத புத்தகங்களை வரிசைக்கிரமமாக வாசிக்க வேண்டியதென்று
கல்பிறக்கிக் கொண்டேன்.
முதலாவதாக,
1950களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் கைத்தறி நெசவாளர்கள் சந்தித்த பெருந்துயரையும்,
கூட்டம் கூட்டமாக அவர்கள் பஞ்சம் பிழைக்கப் போனதையும், மானம் காக்க ஆடை நெய்தவர்கள்
மானம் துறந்து கைநீட்டி பிச்சை கேட்ட காட்சிகளையும் கொண்டு எழுதப்பட்ட ‘பஞ்சும் பசியும்’
நாவலை வாசிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
தொ.மு.சி.ரகுநாதனின்
‘பஞ்சும் பசியும்’ பற்றிக் குறிப்பிடும்போது, எம்.வி.வெங்கட்ராம் எழுதின ‘வேள்வித்
தீ’ நாவலை இன்னும் நெருக்கமாக மக்களின் வாழ்வியலோடு அவர்கள் பிரச்சனைகளையும் பேசியிருக்கிறது
என்று எழுதியிருக்கிறார் கி.ரா.
ரகுநாதனின்
இலக்கிய வாழ்க்கையை எழுத்தாளர் பொன்னீலன் எழுதின சரிதை வழியாக அறிந்துக்கொண்ட பிறகு
ரகுநாதனை இன்னுங்கொஞ்சம் இனங்கண்டு வாசிக்க ஆர்வமாக இருந்தேன். காரணம் புதுமைப் பித்தனும்,
ரகுநாதனும் அவர்களுடைய காலக்கட்டத்தில் சோடிபோட்டுக் கொண்டு அடித்து வெளுத்துக் கட்டிய
இலக்கிய சமாச்சாரங்கள் அவ்வளவு ருசியானவை.
மேற்படி
விஷயத்தை பொன்வாசுதேவன் சாரிடம் மேலோட்டமாகச் சொன்னபோது, ‘பஞ்சும் பசியும்’ பிரதி உங்களிடம்
இருக்கிறதா என்று ஒரு கொக்கியை வீசியிருக்கிறேன். ‘இருக்கிறது’ என்று நல்ல சகுமான பதில்
வந்திருக்கிறது அவரிடமிருந்து. சொன்னதோடு மட்டுமில்லாமல் முதலாவதாக ரகுநாதன் எழுதின
‘பாரதியும் ஷெல்லியும்’ என்கிற ஒப்பீட்டு நூலைக் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.
1789ல்
நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தையான ஷெல்லியிடமிருந்து, 1905ல் தோன்றிய ரஷ்யப்
புரட்சியின் குழந்தையான பாரதி எங்கெங்கிருந்தெல்லாம் தன் கவிதைகளுக்கான கருவினை எடுத்துக்
கையாண்டிருக்கிறார். எவ்வளவு வார்த்தைகள் ஒன்றுக்கொன்று இணையாக தந்திருக்கிறார், அவற்றை
எங்கெங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்று பிச்சு எறிந்திருக்கிறார் ரகுநாதன்
அந் நூலில்.
உதாரணத்திற்கு,
ஷெல்லியின் ‘வானம்பாடி’ பாரதிக்கு ‘சிட்டுக்குருவி’யாகிறது. ஷெல்லியின் ‘மேல்காற்று
(west wind)’ பாரதியின் ‘நல்லதோர் வீணை’, ஷெல்லியின் சுதந்திரப் பனுவல், பாரதியின்
சுதந்திர தேவி துதி. ஷெல்லியில் நேப்பிள்ஸ், ராணி மாப், வரிகள் பாரதியின் வந்தே மாதரம்,
பாரத சமுதாயம், புதிய ரஷ்யா, பாஞ்சாலி சபதம் பாடல்களில் அப்படியே தமிழாகிறது.
ஷெல்லி
எழுதின, ‘இஸ்லாமின் புரட்சி’யில் வரும் சித்னா, பாரதியின் புதுமைப் பெண்ணாகிறாள். ஷெல்லியின்
‘சென்சி’ கவிதை நாடகத்தில் வருகிற பீட்ரைஸின் வார்த்தைகள், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்
பாஞ்சாலியின் குரலாக அப்படியே ஒலிக்கிறது.இப்படி இன்னும் நிறைய...
பாரதியின்
கவிதைகளைக் களங்கட்டி அடித்தாடினாலும் ஒரு இடத்திலும் பாரதி காப்பியடித்தார் என்று
நேராகச் சாடாமல் இருவரும் ஒரேமாதிரி யோசித்திருக்கிறார்கள்; ஷெல்லியின் தாக்கத்தால்
எழுதினார்; ஷெல்லியிடம் பாரதி சுவீகரித்துக்கொண்டார், என்று மிதமான நக்கலிலே முழு நூலையும்
எழுதியிருக்கிறார் ரகுநாதன்.
சமீபத்தில்
தான் சலபதியின் ‘அந்த காலத்தில் காபி இல்லை’ நூலில் பாரதி குறித்து வேறு கோணங்களைக்கொண்ட
மூன்று ஆதாரங்களோடான கட்டுரைகளைப் படித்திருந்தேன். தன் வாழ்வில் எவ்வெப்போதெல்லாம்
தான் பேசின அறத்துக்குப் புறம்பாக பாரதி செயல்பட்டார் என்று சலபதி கூறுகட்டிக் குவித்து
வைத்திருக்கிறார்.
கூர்ந்து
கவனித்தால் மகாகவி பாரதிக்கு நாம் எக்கச்சக்கமாக புரட்சித் தோல் போர்த்திவிட்டோமோ என்று
கூட மனத்துக்குப் பட்டது. அதெல்லாம் இல்லை அவன் தமிழில் இப்படிக் கொட்டிக் குவித்திருக்கா
விட்டால் நாம் எங்கிருந்து ஷெல்லியை எல்லாம் வாசிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் மேலெழுந்தது.
எது
எப்படியோ நான் ரகுநாதனை இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. எக்கச்சக்க
புத்தகங்களோடு வாழ்ந்த இந்த மனுஷனைப் பத்தி உங்கள்கிட்டே பகிர்ந்துகொள்ள, எழுத்தாளர்
பொன்னீலன் சொன்ன ஒரு விஷயம் உண்டு.
தோழர்
ஜீவானந்தத்திற்கு ரகுநாதனின் நூல்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டாம். அவர் தன் வீட்டுக்கு
வருகிறார் என்றாலே தொ.மு.சி.,க்கு கைகால் நடுங்க ஆரம்பித்து விடுமாம். சத்தம் கேட்டதும்,
வீட்டின் கீழ் அறையிலே வைத்து பேசி அனுப்பிவிட வேண்டும் என்று கருத்தாய் இருப்பாராம்.
ஆனால் தோழர் ஜீவா ‘எனக்கு ஒரு நல்ல காபி வேணும் ரகுநாதா’ என்று அவரை கடைக்கு அனுப்பிவிட்டு
அவர் புத்தகங்களை மேய்ந்துவிடுவாராம்.
ஜீவாவுக்குக்
கொஞ்சம் கொடைப் பண்பு அதிகம். ஜீவா வீட்டுக்கு வந்த டி.செல்வராஜ் ஜீவாவின் அலமாரியிலிருந்த
‘தென்னிந்தியாவில் சாதிகளும் குலங்களும்’ புத்தகங்களை ஆசையாகத் தடவிப் பார்க்க, அதன்
ஏழு தொகுதிகளையும் அவருக்கே அன்பளிப்பாய் கொடுத்து விட்டிருக்கிறார் ஜீவானந்தம். இதை
நேரில் கண்ட தொ.மு.சிக்கு அடங்காத அச்சமும் கோபமும். எங்கே இவரை விட்டால் நம் சேமிப்புக்கும்
அல்லவா பங்கம் வந்துவிடும் என்று தவித்திருக்கிறார்.
ரெண்டுபேருமே
புத்தகங்களை வாசிக்கிறதில் கொம்பாதி கொம்பன்கள். பின்னே நிலைமை இப்படித்தானே இருக்கும்.
என்னதான் நான் ஜீவா அபிமானி என்றாலும் இந்த புத்தகம் சேகரிக்கிற விஷயத்தில் நான் ரகுநாதன்
வழி. அது என்னம்மோ அப்படித்தான். இந்த புத்தகத்தில் இந்தப் பக்கத்தில், இந்த இடத்தில்
இப்படி எழுதி இருக்கும் என்று குறித்து வைக்காமலே தேடி எடுத்துக் காட்டிவிடுவேன். பிறகு
எப்படி இரவல் கொடுக்க.
ஆனால்,
வாங்குவதற்கு கூச்சமே படமாட்டேன். வள்ளுவனே சொல்கிறானய்யா ‘பிச்சைப் புகினும்’ என்று.
ஆக, இந்த பிட்டெல்லாம் மேற்படி குறிப்பிட்ட நாவல் வரிசையைக் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கான
விதை என்பதை மேலோட்டமாகச் சுட்டிக்காட்டிக்கொள்கிறேன். நன்றி!
இறுதியாக,
பத்திரிகை ஒன்றிற்காக ரகுநாதனின் நினைவு தினத்தில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன்.
அதில் குறிப்பிட்ட பத்தி ஒன்றை இங்கே சொல்ல நினைக்கிறேன்.
“
தான் வாசித்த புத்தகங்களை எல்லாம் சேர்த்து தனக்கென்று ஓர் நூலகத்தையே உருவாக்கிக்
கொண்டார். இரவலோ, இலவசமோ யாருக்கும் புத்தகங்கள் கொடுத்ததில்லை. பல லட்சங்கள் தருகிறேன்
என்று அந்தப் புத்தகங்களை விலைபேச வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பியவர், தன் முதுமையில்
தன் சேகரிப்பு நூல்கள் அத்தனையையும் எட்டையபுரம் பாரதி நூலகத்துக்குக் கொடையளித்தார்
தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன் ” என்கிற பத்திதான் அது.
யாருடைய
எழுத்தை அக்குவேறாக ஆணிவேறாக விமர்சித்து ஒப்பிட்டு எழுதினாரோ அவர் பேரிலான நூலகத்திற்கு
தன் அத்தனைப் புத்தகத்தையும் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எமன்யா நீர்!
-கார்த்திக்.புகழேந்தி
30-03-2017
நல்ல பகிர்வு.
ReplyDelete