காற்றில் வரும் ஒரு சிறு இசை





“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்று மூதுரையில் அவ்வை அவள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். திடீரென்று நண்பன் கேட்டான் அதெப்படி சங்கு சுட்டாலும் வெள்ளையாக இருக்கும் என்று. கொஞ்சம் புரிகிறமாதிரி பேசித்தீர்த்துக்கொண்டோம் என்று வையுங்களேன். சங்கு சுடுகிற அனுபவம் ஒன்று எனக்கு இருந்தது அதைத்தான் இங்கே எழுதுகிறேன்.

நல்ல பளபளாவென்று வெள்ளையாக இருக்கும் சங்கை ஏறக்குறைய நம்மில் நிறையபேருக்குத் தெரிந்திருக்கும். அதில்லாமல் முக்குவர்கள் ஆழியில் குளித்தெடுத்த சங்கின் பூர்வாங்க நிலை எப்படி இருக்கும் என்பதை நிறையபேர் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. நல்ல பாசிபிடித்து அழுகி இறுகிப்போன பெரிய தேங்காய் கனத்தில் ஒரு பருங்கல்லை தூக்கிக்கொண்டுவந்து, இதுதான் சங்கு என்றான் செந்திலதிபன் என்கிற என் பள்ளிக்கூடக் கூட்டுக்காரன்.

எனக்கு நம்பிக்கையே இல்லை. சங்கின் வடிவம் கொஞ்சம்கூட அந்தக் கல்லுக்குப் பொருந்தவில்லை. “இதுக்குள்ள தாம்ல சங்கு இருக்கும்” என்று அடித்துச் சொன்னான். பாசி வாடையில் சொரசொரவென்று பார்க்கவே அருவெறுப்பாக இருந்ததைக் கையில் வாங்கிப் பார்த்தேன். அவன் வீட்டின் உள்ளறையில் அப்படி நிறைய சுடாத சங்குகளைக் காண்பித்து, “இன்னும் நிறைய சேர்ந்ததும் சுடுவோம் அப்ப தெரியும் உனக்கு” என்றான். அந்த நாளுக்காகக் காத்திருந்தேன்.

அவன் காண்பித்த அதே தேங்காய் கல் இப்போது கல்லாக இல்லை. மேலே ஒட்டியிருந்த படிம அழுக்குகளைச் சுரண்டி, கிட்டத்தட்ட சங்கின் தோற்றத்துக்கு சற்று முன்பான வடிவத்திற்கு மாற்றியிருந்தான்.

“இதுதாம்ல ராக்கை, இதவச்சித்தான் சங்க அளக்கணும்; தீல வாட்டி எடுத்ததும் பாரு அப்ப தெரியும் உனக்கு” என்றான். அதுவரைக்கும் சேர்த்து வைத்திருந்த சங்குகளை எல்லாம் குழிநெருப்பில் போட்டு சுட ஆரம்பித்தான். வாடை குடலைப் புரட்டியது. பாசி கரிந்த மேற்பரப்பைச் சுரண்டி, பளபளப்பேற்றி, தேய்த்து தேய்த்து மெருகுபண்ணி கையில் கொடுத்தபோது, என்ன வளவளப்பு என்கிறீர்கள் அதற்கு.

“இதை என்ன பண்ணுவீங்க”

“வெள்ளக்காரனுங்க வாங்கிட்டுப் போவான். பெருசுன்னா ஆயர்ரூவா ஐநூர்ரூவா கிடைக்கும் இது சின்னதுதான முந்நூறு தேறும்”

“நீ பார்த்ததுலே பெரிய சங்கு எவ்ளோ பெருசு இருக்கும்?”

“உன் தல தண்டிக்கு இருக்கும்”

“அடேயப்பா..” எனக்கு எனக்கு சங்கை ஊதவேண்டும்போல ஆசையாக இருந்தது.

”அதுக்கு மூக்கை அறுக்கணுமே” என்றான். சங்கின் மூக்கைத்தான்.

திருச்செந்தூரில் நமக்கு வேண்டப்பட்ட பண்டாரம் ஒருத்தர் இருக்கிறார். அவரைப் பற்றி வலசையில் எழுதியிருக்கிறேன். “அந்த முருகன் மட்டும் கோயில விட்டு வெளியே வரட்டும், அவன் செவுட்டுலே அடிக்கனா இல்லையா பாரு” என்று திரிந்துக்கொண்டிருப்பவர். கப்பல் வியாபாரத்தில் நடுத்தெருவுக்கு வந்து பண்டாரம் ஆனவர். ரெண்டு சங்குகளை ஒரே நேரத்தில் தம் கட்டி ஊதுவார். அப்படியே கை மயிர் எல்லாம் மிரண்டு சிலிர்த்துவிடும்.

மூக்கு அறுத்து, பித்தளை வாய் பொருத்தி, முனையில் நாகலிங்கம் வைத்த பெரிய சங்கு ஒன்று அவர்கிட்டே உண்டு. ஒட்டு உதடு வைத்து அழுத்தி, மெதுவாக ஊதுகிறபோது ஒலிக்கிற “சங்கநாதம்’ கடைசி வரைக்கும் என் வாயில் இருந்து வரவேயில்லை.

சமீபத்தில் குமரிக்குப் போயிருந்தபோது , அகரமுதல்வன் சங்கநாதம் முழங்கிக் காண்பித்தார். போர் மறம் விளைந்த நிலத்துக்காரர் இல்லையா. அவர்கிட்டே பேசினால் பல விஷயங்கள் என் திருநெல்வேலி வாழ்வுக்கும், அவரது கிளிநொச்சி வாழ்க்கைக்கும் ரொம்பவும் நெருக்கமாய் இருக்கும். வித்யாசமே தென்படாது. 

அவ்வை மேன்மக்களுக்கு அடையாளமாகச் சொன்ன இந்த சங்கொலியை, எங்கள் ஊர்களில் நான் முதன்முதலாக சாவொலியாகத்தான் கேட்டேன் என்றால் நம்புவீர்களா! மணியடித்துக்கொண்டே சாவு அறிவிக்க சங்கு முழங்கின குடிக்காரர்தான் நான் என் வாழ்க்கையில் முதன்முதலில் நேரில் கண்டு ஆட்டோகிராப் வாங்காத மியூசிஸியன்.

பிறகு இந்த வீர வைணவம் வெற்றிநடைபோடுகிற கோயிலில் சங்கு முழங்குவார்கள். வீரசைவர்களின் சங்கநாத முழக்கம் வைணவத்திலிருந்து வேறுபட்டு அது ஒரு தனி கம்பீரத் தொனியாக ஒலிப்பதாக நம்புகிறேன். ஆயனுக்கு முதல் இசைக்கருவியே காற்றுக்கருவி தானே. எங்கள் ஊரிலும் ஒரு ஆயக் கொம்பூதி இருந்தார். இளங்கன்று கிடாரிப் பருவம் தாண்டிய போது அரையடிக்கு முளைவிட்டு நிற்குமில்லையா கொம்பு. அதில் ஒன்றை மெழுகாய் தீட்டி, காற்றூதுவார்.

அதற்கு திமிரிக்கொம்பு என்று பேரும் சொல்லுவார். இன்னும் கொஞ்சம் பெருசுக்கு பாரிக்கொம்பு என்று பேர். கொம்பை விட இன்னும் பெரிது தாரை. நல்ல மேல் வளைவும், கீழ் வளைவுமாக வாய் பிளந்து கனமாக இருக்கும். தூக்கி வாயில் முட்டுக்கொடுத்து, தூக்கி ஊதுவதற்கு தனி வலுவேண்டும்.

திருநெல்வேலியில் தாரை ஊதுகிறவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்கிறார்கள். தேரோட்டத்திற்கு திருமறைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறபோது பெரியாள் முதல் சின்னவன் வரைக்குமாக தாரை ஊதுகிறார்கள் இன்றைக்கும். அவர்களின் மூதாதைகளுக்கு பதிமூன்றாம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைக்கு நாலரை அச்சு சம்பளம் வழங்கி இருக்கிறான் என்கிற சேதியை கல்வெட்டு ஒன்றில் வாசித்திருக்கிறேன்.

அது நெல்லையப்பன் கோயிலின் கிழக்குச் சுவரில் 1230ல் எழுதப்பட்டிருக்கிறது. “ஸ்ரீ கோமாற பன்மரான திரி புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு பதினைஞ் சா வது … என்று இடையிலே ஆரம்பித்து, “கை ஒன்றும்.. தாரை ஊதிகள் பேர் இரண்டுக்கும் சின்னமூதி பேர் ஒன்றுக்கும் …” என்று குறிப்பிட்டு அவர்கள் பத்துபேருக்கு தலைக்கு நாலரையாக நாற்பத்தைந்து அச்சு சம்பளம் அளித்ததை அப்போதே ரெக்கார்டாக தமிழில் எழுதிவைத்திருக்கிறார் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

எனக்கு அந்தக் கல்வெட்டு ஏன் நினைவில் இருக்கிறதென்றால் அந்தக் காலத்தில் தாரை ஊதுகிறவர்களில் ஒரு சாரருக்கு ‘சின்னமூதிகள்’என்று பேர்வைத்து அழைத்திருக்கிறார்கள். அந்த விஷயம் கல்வெட்டிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக, “ஏ… மூதி” என்பது திருநெல்வேலியில் ஆளைத் திட்டுகிற சொல். அது இங்கே ஓர் இசைக்குடும்பத்துக்கு வழங்கப் பட்டிருக்கிற பேராக நிலைத்திருக்கிறது இன்றைக்கும்.

வசைச் சொற்கள் பின்னாலே போ உனக்கு ஒரு வரலாறு கிடைக்கும் என்று கி.ரா சொன்னபோது இந்தத் தரவு எனக்குப் பெரிய கண்டடைதலாக அமைந்தது. மூதி கதையை நான் அவருக்குச் சொன்னதும், சீதேவிக்கு அக்கா ஒருத்தி இருக்கா அவ பேர் மூதேவி. திட்டுலே மூத்தவனே, மூதி, மூதேவி எல்லாம் அவளுக்கு பேர்தான். அவளைத்தான் வடக்கே ஜேஷ்டை அம்மன்னு கும்புடுதான். அவளுக்கு வாகனம் என்ன தெரியுமா! கழுதைதான் என்கிு இன்னுமொரு அக்கன்னாவை சேர்த்து எழுதி வைத்தார் கி,ரா.,

புல்லாங்குழல் பற்றி நமக்கு பேச பெரிதாய் ஒன்றுமே இல்லை. காரணம் நம் இசை ஆர்வத்தால் அதிகம் அசிங்கப்பட்டது பீச்சில் விற்கும் புல்லாங்குழல்காரரிடம் தான். ஒருதடவையாவது ராகமாக இசைத்து விடவேண்டும் என்கிற பகீரதப் பிரயர்த்தனத்தில் ஒரு எள்ளைக் கூட இன்னும் கிள்ளிப் போடவில்லை. கார்னி என்கிற நம் சக தொழில்காரன் எழுதுகிறான். ப “ர்மியர்களில் சில புத்த அனுஷ்டானிகள் சாவை வரவேற்க மனிதனின் கல்லறைகளில் இருந்து திருடி எடுக்கப்பட்ட தொடை கீழ் எலும்பை புல்லாங்குழலாகப் பயன்படுத்தி இடுகாடுகளில் அமர்ந்து தியானம் பண்ணுவார்கள் என்று. கொல்காரனுங்களா!

யோசித்துப் பார்த்தால் காற்று இசைக் கருவிகள் மேல் எனக்கு ஒரு தீராப் பிரியம் இருந்திருக்கவேண்டும். கோயில் கொடைக்கு கொட்டு வாசிக்கிறவரோடு என்சோட்டுப் பயல்கள் எல்லாரும் ஒட்டிக்கொண்டு ஆட, நான் மட்டும் நாதஸ்வரக்காரரின் தொண்டையைக் கவனித்துக் கொண்டிருந்தேன் என்றால் சும்மாவா! அவருடைய பட்டுநூல் சுற்றின சீவாளியை எடுத்து சத்தமாக ஒரு ஊது ஊதிவிட்டு ஓடின ஓட்டம் நெஞ்சுக்குழிக்குள்ளே இருக்கிறது.

மழையில் நனையாமல் பிளந்துபோட்ட விறகு எரிய அடம்பிடிக்கிறபோது ஊதாங்குழல் வைத்து அடுப்பு ஊதுகிற வயசில் ஆரம்பித்தது நம்முடைய இசை முயற்சி. இன்றைக்குவரைக்கும் ஒழுங்காக ஒரு விசில் கூட அடித்ததில்லை. அந்த விஷயத்தில் டிஸ்கவரி வேடியப்பன் அண்ணன் ஒரு தசாவதானி. முழு திரையிசைப் பாடலையும் விசில் சத்தத்தாலே பின்னியெடுக்கிறார். முட்டம் கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு அவர் ஊதலைக் கேட்டுக் கொண்டிருந்தோம் நானும் அகரனும் பாக்கியம் சங்கர் அண்ணனும்.

சங்கு, கொம்பு, தாரை, சீவாளி, புல்லாங்குழல், விசில் மிச்சம் விட்டது பாம்புக்கு வாசிக்கிற மகுடியை மட்டும்தான் போல. அது நமக்குக் கொஞ்சம் பயம் தரும் ஆர்கன். தனித்தனியாக எடுத்து வைத்துக் கவனிக்கிறபோதுதான் இந்தமாதிரி நிறைய விஷயங்கள் வரிசையாக வந்து குதிக்கிறது. எடுத்து ஊதலாம்ன்னு போனா வெறும் காத்துதான் வருகிறது. என்செய்வேன் சொல் அம்மையே!


-கார்த்திக் புகழேந்தி
24-03-2017


Comments

  1. இசை எல்லாரையும் இழுக்கும் ஒரு வஸ்து...
    ஊரில் திருவிழாவின் போது கொம்பு ஊதுவதும். தப்பு இசைப்பதும் உண்டு...
    அந்த பறை இசைக்கு கால்கள் ஆடாது நிற்பவர்கள் எவரும் இருக்க முடியாது....
    ஆட வைக்கும்...
    நல்ல பாடல்களைக் கேட்கும் போது என்னில் இருந்து விசிலாய் வரிகள் எப்போதும் வருவதுண்டு... சில வேளைகளில் அலுவலகத்திலும் ஆரம்பித்து ஆஹா ஆபீசாச்சே என நிறுத்துவதும் உண்டு.

    எங்கள் பக்கம் எல்லா சுப நிகழ்ச்சியிலும் சங்கு இருக்கும். எங்கள் திருமணங்களில் மேளம் வைத்தாலும் தாலி கட்டும் போது சங்கு ஊத வேண்டும் என்பது சம்பிரதாயம்...

    வாசிப்பவரை ஈர்க்கும் எழுத்து...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கர்நாடகத்தில் மங்களூர் பகுதியில் கொங்கணி, துளு பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். (உடுப்பி ஓட்டல்காரகள் - bhat, shenoy, பை.., ஐஸ்வர்யா றை,அனுஷ்கா ஷெட்டி -இவர்களின் சமூகம்). இவர்கள் வீடுகளில் அன்றாடம் பூசையின்போது சங்கு ஊதுவது வழக்கம். நம்மூரில் கையால் மணியடிக்கிறோம் அல்லவா அதற்குப் பதிலாக... தமிழ்நாட்டில் பெரும்பாலும் இறந்துபோனால் மட்டுமே சங்கு ஊதுவது வழக்கமாக இருக்கிறது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Vanakkam - Are there any pics/videos of the Tharai players of Thirunelveli Sir?

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil