Posts

Showing posts with the label கேசட்

தூரக்கிழக்கு கரையோரம் தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்!

Image
கிருபா மோசஸ் வாத்தியார் வீட்டில் தான் அப்போது கிராமபோன் இருக்கும். பித்தளையில் வாய் விரிந்து நிற்கும் கூம்பு பாத்திரத்திற்குள் எப்போது தலையை விடலாம் என்று பார்க்கும் நாயின் படம் போட்ட, வட்டமான ஹெச்.எம்.வி இசைத்தட்டுகளை சதுர அட்டையில் பேக் செய்து வைத்திருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு வந்ததும், மத்தியானத்து கோலா உருண்டையும், கோழிக்கறியும் பொறித்து வேகும் வரைக்கும் வெஸ்டர்ன் இசையில் சிம்பொனிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். கிர்ர்ர்ர் என்று எப்போதாவது இரைந்ததும் மோசஸ் வாத்தியாரின் மகன் சாம் வந்து, முள்கட்டையை விலக்கி, இசைத்தட்டை திருப்பி, துடைத்து... இப்படி  என்னென்னவோ செய்வார். கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பேன். விக்டர் வீட்டில் ரேடியோகிராமுடன் கூட கிராமபோன் இருந்தது. அதன் அளவைச் சரியாகச் சொன்னால் இரண்டு கம்ப்யூட்டர் டேபிள்களை நீளவாக்கில் வைத்தால் எப்படியிருக்கும். அப்படியொரு இசை மேசைக்குள் இடதுபக்கம் கிராமபோன், வலதுபக்கம் ஏதோ பழைய ரஷ்யப் படங்களில் வரும் ரகசியகுறியீடுகளை அனுப்பும் கருவி போல நிறைய திருகல் உருண்டைகளுடன்  ரேடியோகிராம் இருக்கும்.