தூரக்கிழக்கு கரையோரம் தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்!
கிருபா மோசஸ் வாத்தியார் வீட்டில் தான் அப்போது கிராமபோன்
இருக்கும். பித்தளையில் வாய் விரிந்து நிற்கும் கூம்பு பாத்திரத்திற்குள் எப்போது தலையை
விடலாம் என்று பார்க்கும் நாயின் படம் போட்ட, வட்டமான ஹெச்.எம்.வி இசைத்தட்டுகளை சதுர
அட்டையில் பேக் செய்து வைத்திருப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு வந்ததும், மத்தியானத்து
கோலா உருண்டையும், கோழிக்கறியும் பொறித்து வேகும் வரைக்கும் வெஸ்டர்ன் இசையில் சிம்பொனிகள்
ஒலித்துக் கொண்டேயிருக்கும். கிர்ர்ர்ர் என்று எப்போதாவது இரைந்ததும் மோசஸ் வாத்தியாரின்
மகன் சாம் வந்து, முள்கட்டையை விலக்கி, இசைத்தட்டை திருப்பி, துடைத்து... இப்படி என்னென்னவோ செய்வார். கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பேன்.
விக்டர் வீட்டில் ரேடியோகிராமுடன் கூட கிராமபோன் இருந்தது.
அதன் அளவைச் சரியாகச் சொன்னால் இரண்டு கம்ப்யூட்டர் டேபிள்களை
நீளவாக்கில் வைத்தால் எப்படியிருக்கும். அப்படியொரு இசை மேசைக்குள் இடதுபக்கம் கிராமபோன்,
வலதுபக்கம் ஏதோ பழைய ரஷ்யப் படங்களில் வரும் ரகசியகுறியீடுகளை அனுப்பும் கருவி போல
நிறைய திருகல் உருண்டைகளுடன் ரேடியோகிராம்
இருக்கும்.
முன்னாள் மிலிட்டரிக்காரரான சங்கரலிங்கம் தாத்தா வீட்டில்
“மர்பி முஸாபிர் 400” மாடல் டிரான்சிஸ்டர் இருந்தது. எக்ஸைல் தீர்வை, விற்பனை வரி எல்லாம்
கட்டி 293/- ரூபார் ரேடியோவை முன்னூறு சொச்சத்திற்கு வாங்கியிருந்தார். நான் சொல்லுவது
1950களில்.
டிரை பேட்டரி கட்டைகள் போட்டு, சுவிட்ச்சைத் தட்டி உருளையைத்
அங்குமிங்குமாகத் திருக்கினால் முள் எப்போதாவது இறக்கப்பட்டு ஆகாசவானி, சிலோன்
ரேடியோ, சிற்றலை ரேடியோ ஏதாவது எடுக்கும். புத்தம் புதிய பாடல்கள் எல்லாம் ரேடியோவில்
கேட்க ஒலியும் ஒளியும் தான் அப்போதெல்லாம். எண்பதுகள் வரைக்கும் கூட ரேடியோவில் கேட்க
வேண்டுமென்றால் மூன்று வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
கிர்ர்ர்...ஒய்ய்ய்ய்யுங்....க்யூங்ங்ங்ங் கிர்ர்ர்.....
என்ற ஒலிகளுக்கு நடுவே ஆகாசவானியின் இரவு நேரச் செய்தி அறிக்கை எட்டிப் பார்க்கும். செய்தி கேட்கும் தாத்தன்கள்
தான் அப்போது ஆலமரத்தடி இண்டலெக்சுவல் பேர்வழிகள். ஒன்னுமண்ணாகக் கூடி உட்கார்ந்து
சிலோனில் விழும் குண்டுகளின் எண்ணிக்கையை மறுநாள் கணக்குத்
தப்புதப்பாமல் விளக்கிக் கொண்டிருப்பார்கள்.
தியேட்டர்களில் மழை பெய்யும் கோடுகள்
விழுந்து பார்த்திருப்பீர்கள். ரேடியோவிலே மழை பெய்யும் பாடல்களை அப்போது கேட்க முடியும்.
தாத்தாக்களின் காலம் முடிந்து அம்மாவின் காலம் தொடங்கிய போது
ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அது டேப் ரிக்கார்டர்.
பம்பாய்க்கு பருத்தி விற்பனைக்குப் போய்விட்டு வந்தபோது பெரியமாமா கரோக்கி கம்பெனியில்
இரட்டை ஸ்பீக்கர் வைத்த டேப் ரிக்கார்டர் வாங்கி
வந்திருந்தார். கூடவே பங்கஜ் உதாஸின் கஜல் பாடகள் அடங்கிய கேசட் ஒன்றிரண்டை வாங்கி
வந்திருந்தார். அர்த்தமே புரியாத இந்திப் பாடல்கள் ஊரைக் கூட்டி ஒலித்துக் கொண்டிருந்தன.
தமிழ்ப் பாடல்கள் எல்லாம் கேசட்டுகளில் வெளிவந்த காலம் தான்
பொற்காலம். ள் கருப்பு, மஞ்சள், ரோஸ் என விதவித வண்ணங்களில் பாடல்கேசட்டுகள் விற்பனையாகிக்
கொண்டிருந்தது. பாளையங்கோட்டை அன்னபூர்ணா சந்திப்புக்கு எதிரே இன்றைக்கும் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் கேசட் கடை
அப்போது ஊருக்கே இசைச் சுரங்கம்.
வீட்டுக்குப் பின்பக்கம் கலைவாணித் தியேட்டர் சுவர் இருந்தது. படம் போடுவதற்கு முன், இடைவேளையின் போது என நேரங்காலமில்லாமல்
புதிய பறவை படத்தில் வரும் பார்த்த நியாபகம் இல்லையோ பாடலை ஒலிக்க விடுவார்கள். அந்த
இசை அப்படியே மனப்பாடம். வீட்டில் இரண்டு தங்கச்சிகள்.
ஒன்று பெரிய மாமன் போலவே இசைப் பையித்தியம். பாட்டுக் கேட்பதற்காகவே பக்கத்துவீட்டுக்குப்
போய்வந்து கொண்டிருந்த பழக்கத்தை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டதும், “அப்போ எனக்கு
பாட்டு கேசட் வாங்கி வந்து தா” என்று அதிகாரம் பண்ண அன்றைக்கு முதல் பாட்டுக் கேசட்டுகள்
வீட்டை நிறைக்கத் துவங்கியது.
அந்த மூத்த தங்கை வேறு யாருமில்லை அம்மாதான்.
சின்ன தாயி படத்தில் வரும்,
“நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆனபின்பும்
ஊரடங்கி போனபின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல” பாடலை எத்தனை முறை கேட்டிருக்கும்
என்று தெரியாது.. பீடி சுற்றும் போது, மாட்டுக்கு தண்ணிகாட்டும் போது என்று எப்போது
பார்த்தாலும் இந்த பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருக்கும்.
“தூரக்கிழக்கு கரையோரம்
தான்
தாழப்பறந்து வரும் மேகம் தான்
உன்கிட்ட சேராதோ என்பாட்ட கூறாதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாறதோ” என்று ஆண்குரலில்
வரும் வரிகளை ஏற்ற இரக்கங்களோடு பாடுகிற யாரோ ஒருத்தன் அவளை நேசித்திருக்கக் கூடும்.
பருவங்களில் வரும் இந்த இசைக்காதல் கதைகள் மிகச் சுவாரஸ்யமானது. ஆனால் அதை பெரிய திரைபோட்டு
மூடி மறைக்கப்பட்டு விடப்படும். நான் பிறகொருநாள் தோண்டித் துருவி கேட்டுக் கொண்டேன்.
கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் போது அந்த கரோக்கி
டேப் ரிக்கார்டரை தங்கைக்கே சீதனமாகக் கொடுத்து வழியணுப்பிவிட்டார் பெரிய மாமா. போன
இடத்தில் கேசட்டை மாற்றாதவள் பாடலை மாற்றிக் கொண்டுவிட்டாள் போல..
“கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலமாட சாமி
சுடல மாட சாமியும் நாந்தான் பூசாரி நீதான் சூடம் ஏத்திக் காமி….”
தனக்குப் பிடித்த பாடல்களை எல்லாம் பேப்பரில் எழுதிக் குடுத்துவிட,
தன் பொண்டாட்டி மனம் கோணாமல் நடக்கும் கணவன் அதை அப்படியே கேசட்டுக் கடைக்காரனிடம்
கேட்டுப் பதிந்து வாங்கி வரும் கதையெல்லாம் சிலாகித்து எழுதலாம்.
திரைப்படங்களின் கதை-வசனங்கள் அப்போது ஏகத்துக்கும் பிரபலம். கேசட்டுகளில் கமல், ரஜினி படங்கள் மட்டுமில்லாமல் கரகாட்டக்காரன் போன்ற செந்தில் கவுண்டமணி ஜோடிபோட்ட படங்களும் டேப்ரிக்கார்டரில் தன் பங்குக்கு ஊரை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது. ரேடியோவிலும் திரைச் சித்திரங்கள் அப்போது பிரபலம். திரைப்பட கதாசிரியர், இயக்குனர்களை எல்லாம் மிஞ்சிவிடும் அளவுக்கு வசனங்களை ஞாபகார்த்தம் கொண்ட இளசுகள் பல வீடுகளில் இருந்தார்கள்.
திரைப்படங்களின் கதை-வசனங்கள் அப்போது ஏகத்துக்கும் பிரபலம். கேசட்டுகளில் கமல், ரஜினி படங்கள் மட்டுமில்லாமல் கரகாட்டக்காரன் போன்ற செந்தில் கவுண்டமணி ஜோடிபோட்ட படங்களும் டேப்ரிக்கார்டரில் தன் பங்குக்கு ஊரை கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது. ரேடியோவிலும் திரைச் சித்திரங்கள் அப்போது பிரபலம். திரைப்பட கதாசிரியர், இயக்குனர்களை எல்லாம் மிஞ்சிவிடும் அளவுக்கு வசனங்களை ஞாபகார்த்தம் கொண்ட இளசுகள் பல வீடுகளில் இருந்தார்கள்.
அக்காள் தலையெடுத்த போது வீட்டிற்குள் டிவி பெட்டி நுழைந்திருந்தது.
ஒலியும் ஒளியும் எல்லாம் பழையதாகிவிட்டதென்றே சொல்லலாம். சனிக்கிழமை மட்டும் சக்திமானுக்காக
நாங்கள் ஒரு கூட்டம் பயல்களாகத் திரள்வோம் டிவிப்பெட்டி முன்னால், உட்கார ஒருவனுக்கும்
இடமில்லாமல் நெல்லு மூட்டை, பரணுக்குச் செல்லும் ஏணி, முக்காலி, கட்டில் முனை என்று
பத்து இருபது பேர் அந்த சின்ன அறைக்குள் விசிறிக்குச் சண்டை பிடித்துக் கிடப்போம்.
ராஜு அண்ணன் ப்ளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்குத் தான் டெக், படக்கேசட் வாடகைக்கு விடும் கடைக்காரனில் இருந்து ஆண்டனா காரன்
வரைக்கும் அத்தனைபேரையும் தெரியும். “ஜமீன்
கோட்டை” படத்தை ஊரே இரவுப் பொழுதில் விழித்துக் கிடந்து பார்த்தது. மறுநாளைக்கெல்லாம்
எனக்கு தங்கையா தாத்தா விபூதி அடித்துக் கொண்டிருந்தார். கிழத்துக்குத் தன் பேரில்
ஒரு பெருமை. “கும்பக்கரை தங்கையா” படத்தின்
பேப்பர் கட்டிங்கை த வீட்டுக் கதவில் ஒட்டியிருக்கும்.
வாடகைக் கேசட்டு காலம் முடிந்து கேபிள் வயர் வீட்டுக்குள்
எட்டிப் பார்த்த போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், குதிரை றெக்கை முக்கோணத் துடன் விஜய் டிவி
எல்லாம் பொழுதன்னைக்கும் ஓடிக் கொண்டிருந்தது.
அக்காளைக் கட்டிக் கொடுக்கும் வரைக்கு சுமங்கலி கேபிள் விசனில்
ஓடும் ஒரு பாட்டையும் விடமாட்டாள். டி.வி மீது
அவள் தம்பிக்கு பெரிய ஈடுபாடு இல்லாமல் போனது அவளுக்கு அப்படி ஒரு வசதி.
எண்ணேய் தேய்த்து இரட்டைச் சடை பின்னிக்கொண்டிருக்கும் போதே
ஹஸ்கியாகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள். உஷா டெய்லர் மெஷின் சத்தத்தையும், கத்திரிக்கோலின் “கீரிச்சிக்” என வெட்டும் சத்தத்தையும் மீறி பாட்டு
ஒலித்துக் கொண்டிருக்கும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சீலை.
பெப்சி உமாவுக்கு போன் போட்டு பிடித்த பாடலைக் கேட்ட அன்றைக்கு
தெருவுக்கே ஆசை சாக்லேட் வாங்கிக் கொடுத்து அதை பெரிய இமாலய சாதனையாக ஜெரோமி வீட்டில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வீட்டில் ரொம்பகாலமாகவே டெலிபோன் இருந்தது. தெருவில் எல்லோருக்கும் அவர்கள்
வீடுதான் செய்திப் பெட்டி.
சன் மியூசிக் வந்தபிறகு கேபிள் டிவிக்காரர்களுக்கெல்லாம்
கொம்பு முளைத்துவிட்டது. அதற்கு முன்பு வரை ஒனிடா டி.விக்கு மட்டும் தான் கொம்பு இருந்தது.
காசு தரலையின்னா கேபிள் வராது என்று மிரட்டவே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது தான்
தெற்குபஜார் லூர்து நாதன் சிலைக்கு பக்கவாட்டில் உள்ளச் சுவரில் இப்படி ஒரு விளம்பரம்
இருந்தது “கேளுங்க கேளுங்க”
என்ன எளவு இது என்று எல்லாரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது
உதயமானது “சூரியன் எஃப்.எம்”. இரண்டாம், மூன்றாம்
தலைமுறை ஆட்களைப் பைத்தியமாக அடித்தது.
பெப்சி உமாவுக்குப் போனடிக்க முடியாத வருத்தத்தில் இருந்தவனெல்லாம்,
வண்ணாரப்பேட்டை சூரியன் எஃப். எம்முக்கு போன் செய்து தங்கள் ஆற்றாமையை தீர்த்துக் கொண்டார்கள்.
ஏர்செல் மாதிர்யான நிறுவனங்கள் அப்போதுதான் 300 நகரங்கள், 555 , 700 என்று தங்கள் சேவையை
தெற்குப் பகுதிகளில் பரப்பிக் கொண்டிருந்தது. செல் போன் வாங்காதவன் கூட நூறு ரூபாய்க்கு
பெப்ஸி ஐஸ் பேட்டரி சைசிலிருந்த எஃப்.எம்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு
நடந்தார்கள்.
பூதக்கண்ணாடி தவிர்த்து பாக்கெட் கண்ணாடி வைத்திருக்கும்
அகஸ்டின் வாத்தியாரின் கண்ணாடி டப்பா போல கோல்டு, சில்வர் கலர்களில் கூவிக் கூவி விற்றுக்
கொண்டிருந்தார்கள் பாக்கெட் எஃப்.எம்மை. கொக்கிரகுளம் தனலட்சுமி ரேடியோக் கடைக்காரர்கள்
கூட தங்கள் அனுபவத்தில் அத்தனை ரேடியோக்கள் விற்றிருக்க முடியாது. என் பங்குக்கு நானும் ஒன்று வாங்கி பேட்டரி தீரும்
வரை பாட்டு கேட்டு பிறகு பேட்டரி வாங்க காசில்லாத ஓர்நாள் அதை உடைத்து உள்ளே என்ன இருக்கிறது
என்று திறந்து பார்த்தேன். உள்ளே இளையராஜாவுமில்லை.. எம்.எஸ்.வியுமில்லை...
பிறகுதான் செல்போனிலே ரேடியோ வந்தது. எம்.பி.த்ரி ப்ளேயர், வீடியோ, ஐபாட் என்று இன்றைக்குத் தொழில்நுட்பம்
வரை எத்தனையோ மாற்றங்கள் தொடர்ந்தாலும் அம்மா மட்டும் ஏனோ, தனக்குப் பிடித்த சின்ன
தாயி படப் பாடலை எப்போதும் முணுமுணுப்பதே இல்லை...
"என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தென்க்காத்து ஓடி வந்து
தூதாகபோக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள
உள்ளார பூட்டி வச்சு
திண்டாடி நிக்குறனே இக்கரையிலே...”
-கார்த்திக். புகழேந்தி.
26-07-2015.
கார்த்திக் பொளந்து கட்டுறீங்கப்பா....
ReplyDeleteபதிவுகளை உங்கள் மெயிலில் பெற என்ற காட்கெட்டை உங்க தளத்துல போடுங்கப்பா.....நாங்க எங்க மெயில் ஐடி அதுல போட்டா ஃபீட்பர்னர் வழி எங்கள் அகத்து ஐடிக்கே உங்கள் அஞ்சல்/பதிவுகள் வந்துரும்ல...இல்லைனா மிஸ் ஆகிடுது ....அதான்...