நெருப்பு ருசி குடித்த மனிதர்கள்

வாடைக் காத்தும் கடல் காத்தும் தங்களுக்குள்ள வினோதமா ஒரு கூட்டணி வச்சுகிட்டு தென்னை மரங்க கூட சத்தமாய் ஏதோ பேசிக் கிட்டிருக்கும் போல.

இசக்கியம்மன் கோயில் கொடையன்னைக்கு இப்படித்தான் தூறலும் காத்தும் கலந்து அடிச்சு கீத்துப் பந்தலை வாய்க்கா கரை வரைக்கும் கொண்டு போயிடுச்சு.

காத்து இப்படி பொரட்டி எடுக்கும் போது பன மட்டைகளை கொழுத்துறத நீங்க பாக்கணும். கருக்கு மட்டை இங்க இருக்க நெருப்பு ஏழடிக்குத் தள்ளி சாய்ஞ்சி மேலமேல ஏறி , கீழ விழுந்து திரும்ப எழும்பும்.



மெட்ராஸுக்கு வந்த புதுச சோளக் குருத்தை கரியடுப்பில் வாட்டினதை உத்து உத்து பாத்துகிட்டிருந்தாங்க சனமெல்லாம். வெங்கல பானை அடிக்கும் ஆசாரியண்ணன் வீட்டு நடூ கூடத்துல மாட்டுவண்டி பைதாவைச் சுத்துனா கங்கு பறக்க தீ புடிக்கும்.அப்போல்லாம் அது பெரிய நெருப்பு வித்தை.




பாளையங்கோட்டை வீட்டுக்குப் பின்னாடி அப்படியே குளம் தான். வேலிக்காத்தான் தாண்டி எந்த ஜந்தும் தோட்டத்துக்குள்ளாற நுழைச்சுடாம  தட்டி மறிக்குதது தான் ஆச்சிக்கி முக்கியமான வேலை. கிணத்தில் தண்ணி இறைக்கிறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.

அந்த குளந்தான் எங்க பயலுவளுக்கு ஆடுகளம். குளத்து வரப்பில நிக்கும் பனைங்க ஒசரத்துக்கு கிட்டிப்புல் எழுப்புவான் சக்திவேலு. பொங்கலுக்கு முந்தி கிழங்குக்கு பொதைக்குறதும் அங்கேதான். மார்கழிக்கு பிந்துற நாளில் ஈரப்புல்லில் வெறுங்கால் நனைய உலாத்துறதும் அங்கே தான்.

ஒருதரம் குளத்து வெட்டையில் காத்து நேரம் குளிர்காய மட்டை, கம்பு தும்பெல்லாம் போட்டு எரிச்சுகிட்டிருக்கும் போது இப்படித்தான் தடித் தடியா பேய் மழையடிச்சது.நெருப்பும் மழையும் சோடி போட்டு ஆடும் ஆட்டத்தை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதே ஒரு சுகவாசம் தான். 

தெருவில் ஒருமாதிரிப் பட்ட பெண்டு பிள்ளைகள் படிப்புக்கு வரும் போது ஈயம் பூசின மண்ணெண்ணெய் விளக்கில் ஆடி அசையும் நெருப்பை அப்படியே மூக்கில் வாங்கி ரசிக்கும்ங்கள். நமக்கு என்னவோ போல இருக்கும். வீரம் காட்டுதேன் பேர்வழின்னு காட்டுற விரலால் எரியுத திரியை தொட்டு சுட்டுக்கிடுதது.


கார்த்திகை தீபத்துக்கு சொக்கப் பனை எரிக்கவும், வாடிப்பட்டி கொட்டுக் காரர்கள் தோலை சூடு பரத்தி அடிக்கவும் நெருப்போடு உலத்தின மழை நாளைல்லாம் அத்தனை லேசில் மறந்துற முடியாது.

ஆச்சி இறந்தப்போ சின்னவன் நீன்னு கங்குச் சட்டியை அண்ணம்மார்கிட்ட கொடுத்தப்போ அடம்பிடிச்சி அழுது வாங்கினவனாச்சே.. கூத்தைப் பாருங்கள் அன்னைக்கும் மழையடிச்சது. கிளவி தனலில் வெந்தகதை பெருங்கதை தாம்.

நெருப்புக்கும் மழைக்கும் ஒரே நேரத்தில் ஏங்குத மனுசனுக்கு கோட்டி கீட்டி ஏதும் பிடிச்சிருக்குமோ... சமயத்துல மழநேரம் கரண்டு போனுச்சின்னா மெழுகுவர்த்தி ஏத்துதாக அதுமட்டும் தான் இப்பத்திக்கி ஆறுதல்.

மத்தபடி சிகரெட்டு பத்தவைச்சிக்கிடுவத தவுத்து நெருப்பை யெல்லாம் யார் ரசிக்கா...




- கார்த்திக் புகழேந்தி.
10-07-2015. 


Comments

  1. அருமை! நெருப்பு ஆபத்து என்றாலும் அது பற்றி எரிகையில் ஓர் அழகு இருக்கிறது அல்லவா?

    ReplyDelete
  2. சரி தான்... இன்றைக்கு சரி தான்...

    ReplyDelete
  3. அக்னியைப் பார்க்கும்போதே ஒரு பிரம்பிப்பு - அதன் சக்தியை நினைத்து.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil