செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து

ங்கள் நண்பர் குழுவில் உள்ளவர்களில் தரகர் காண்பிக்கிற பெண்ணுடைய போட்டோ பார்த்து, பெண்ணைப் பிடித்துப்போய், அட்ரஸ் விசாரித்து, நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தங்கள் பார்த்து, கும்பலாகப் போய் காபி குடித்து, பேசிப்பேசி திருமணம் முடித்தவர்கள் அதிகம்.

 என்றாலும் மனசுக்குப் பிடித்த பெண்ணைக் காதலித்து, பெற்றோர், சாதி,சமூக எதிர்ப்புகளை மீறி, நண்பர்கள் சூழ்ந்து பதிவுத் திருமணம் பண்ணிக் கொண்டவர்கள் எண்ணிக்கை கணிசமானது. மிச்ச சொச்சமான என்போன்ற சிலர் இன்னும் கிணற்றடி கல்லில் உட்கார்ந்துகொண்டு எப்படா தள்ளிவிடுவார்கள் என்று காத்திருக்கிறோம் என்பது வேறு விஷயம்.

   இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துவைத்த பரபர அனுபவங்கள் பற்றி வெளியே இதுவரைக்கும் வாய் திறந்ததில்லை. காரணம் இதிலெல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்று தெரிந்தாலே எங்கள் வீட்டில் என்னைக் கட்டிவைத்து தொலியை உரித்துவிடுவார்கள் என்ற பயம் தான். அப்படியும் அண்ணன் ஒருத்தர் ஆணவக்கொலைகள் பற்றின டாக்குமெண்ட்ரி ஒன்றிற்காக பெற்றோர்களின் மனநிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர்கிட்டே பகிர்ந்துகொண்ட விஷயங்களின் மூலம் பழைய நியாபகங்கள் கொப்பளித்தன.
   2009ல் ஊரில் இருந்து தான் விரும்பின பெண்ணைக் கூட்டிக்கொண்டு நட்ட நடுராத்திரியில் கோவை வந்து நின்றான் செல்வசிங் என்கிற நண்பன். “என்னடா சொல்லாம கொல்லாம இப்படி வந்து நிக்குற” என்று, பெண் வீட்டைத் தொடர்புகொண்டு விபரத்தைச் சொன்னோம். கொஞ்சம் ஸாஃப்டான குடும்பம் போல. “அவ இனி எங்க பொண்ணே இல்லை” என்று எங்களை உக்கிரமாகத் திட்டிவிட்டு போனை வைத்தார்கள்.
நண்பனிடமும் அந்தப் பெண்ணிடமும் அடுத்து என்ன செய்யலாம் என்றோம். “எங்க வீட்ல அப்படித்தான். கொஞ்ச நாள் போனா தானா சரியாகிடுவார்” என்றது அந்தப் பெண். இரண்டே நாளில் மருதமலை முருகன் சன்னிதியில் இருவர் திருமணமும் நட்புகள் சூழ நடைபெற்றது. நண்பனுக்குக் கோவையிலே வீடுபார்த்து, வேலையும் ஏற்பாடு செய்து வைத்தோம். பின்னாளில் அவர்கள் சொன்னதன் படியேதான் நடந்தது. பெற்றோர்கள் மனமிறங்கி ஒன்றுகூடிக்கொண்டார்கள்.
    பைக் விபத்தில் லேசாகத் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்குச் சென்ற பிஜூ என்கிற நாகர்கோயில் உறவுக்காரப் பையன், அந்த மருத்துவமனையில் வேலைபார்க்கிற செவிலியர் பெண்ணை சிகிச்சை பார்க்கப் போகிற சாக்கில் அடிக்கடி முகத்தைக் காண்பித்து விரும்ப ஆரம்பித்துவிட்டான். இரண்டுபேருக்குமிடையே காதல் மலர்ந்துவிட இந்து - கிறிஸ்தவ வேறுபாடு கிளம்பிவிட்டது. ‘வா பிள்ள போலாம்’ என்று ஒரு சனிக்கிழமை மாலையில் பக்கத்து ஊருக்கு பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய்விட்டான் பிஜூ.
    மறுநாளில் ஞாயிற்றுக்கிழமையில் பூதபாண்டி ஸ்டேஷனில் நாலைந்து போலீசார் முன்னிலையில் இரண்டுபேருக்கும் திருமணம் நடந்தது. சொன்னால் நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். அவர்கள் திருமணத்துக்காக தோவாளை மார்க்கெட்டில் மாலை வாங்கிக் கொண்டு வந்ததில் இருந்து, லெட்ஜரில் கையெழுத்துப் போட்டு, தாலி எடுத்துக் கொடுக்கிறவரை எல்லா வேலையும் நானும் அக்காள் கணவரும் முன்நின்று கவனித்தோம். அடுத்தவாரத்திலே அம்மாவும் பெண்ணும் ஜோடிபோட்டுக்கொண்டு தெருவில் நடந்துபோனார்கள். பிஜூ மாமனார் வீட்டு மொட்டைமாடியில் அத்தானை சரக்கடிக்கக் கூப்பிட்டிருந்தான்.
      இங்கே பேஸ்புக்கிலேயே இருக்கிறான் பங்காளி ஒருத்தன். பேரைச் சொன்னால் அடிக்க வருவான். அவன் காதல் திருமணம் பண்ணிக்கொண்ட கதை படு சுவாரஸ்யமானது. கோவை, மேட்டுப்பாளையத்தில் நாங்கள் ரெண்டுபேரும் கணக்காளர்களாக பணிபுரிந்த அதே நிறுவனத்தில் காய்கனி செக்‌ஷனில் வேலைக்குச் சேர்ந்திருந்த பெண்ணை விரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அந்தப் பிள்ளையும் மாமா மாமா என்று அவனை உறவு சொல்லி அழைத்து உருகிக் கொண்டிருந்தது.
அவர்கள் இரண்டு பேருக்குமிடையே பரிமாறப்பட்ட கவிதைகள் அனைத்தும் அவன் என்கிட்டே இருந்து சுட்டவை. திடீரென்று ஒருநாள் பெண்வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்திருக்கிறது. இரண்டுபேருமாகக் கிளம்பிப் போய் பெண் வீட்டில் பேசினோம். ஒருத்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
   அத்தனை காலமும் சம்பாதித்த காசை வீட்டுக்கு அனுப்பி நல்ல பிள்ளையாக இருந்தவன், நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று நின்றதும் பொல்லாதவனாகப் பார்த்தார்கள் நண்பன் வீட்டாரும். இது ஆகிற கதை இல்லை. நீங்களா வந்தா உங்க ஆசீர்வாதத்தோடு நடக்கும் இல்லைன்னா நாங்களே பார்த்துக்குறோம்” என்றான். மொத்தக் குடும்பமும் வண்டிகட்டிக்கொண்டு திருச்செந்தூரில் வந்து நின்றது.
   பெண்வீட்டில் இருந்து ஒரு ஈ காக்கா இல்லை. கோயில் வளாகத்தில் கண்ணைக் ககசக்கிக்கொண்டிருந்த பிள்ளையிடம் “உன் அண்ணன் வந்திருக்கேன்னு நினைச்சுக்க’ என்றேன். விஷயம் செண்டிமெண்டாகப் போய்க்கொண்டிருக்க, மாப்பிள்ளைக்கு ஆச்சி “எம்பேரனுக்கு கல்யாணத்துக்கு முந்தி இன்னொரு மொட்டை அடிக்க நேந்திருக்கேன். மொட்டைய போட்டுட்டு நீங்க என்னத்தையும் பண்ணிக்கங்க” என்று நிலையாய் நின்றது. வேறு வழி. மண்டை நிறைக்க சந்தனம் தடவிக்கொண்டு ஒரு கல்யாண மாப்பிள்ளையை நான் முதல்முதலாகப் பார்த்தேன்.
   இப்போது ராமநாதபுரம் HDFC வங்கியில் பைக் ட்யூ வசூலிக்கும் வேலையில் இருக்கிறான். திருமணம் முடிந்து சரியாய் ஐந்து வருடம் முடிந்திருக்கும். பங்காளிக்கு மூணு வயசில் ஓர் ஆண் குழந்தை. அனு என்கிற மனைவி பெயரையும் சந்திரா என்கிற அம்மாவின் பெயரையும் இணைந்து அனுசந்த் பையனுக்குப் பேர் விட்டிருக்கிறானாம். என்னடா ராஜஸ்தான் சேட்டு மாதிரி பேர் வைச்சிருக்க என்றேன். அடியோ புடியோ இரண்டுபேரும் நன்றாக இருக்கிறார்கள்.
    மேலே சொன்ன மருதமலை கல்யாண ஜோடிகளுக்கு முதல் பிள்ளை பிறந்ததுமே மாமனார் மாமியார் என்று படையெடுத்துவந்து ராசியாகி, பேர் விடுகிற வைபவத்தில் சீர்வரிசைகளை அள்ளி அடுக்கி அசத்தி விட்டார்கள். ரெண்டாவது ஜோடி கதைதான் முன்னமே சொன்னேனே. நாகர்கோயில் மருமக்கள் 100பவுனுக்குக் குறைவில்லாமல் மகளுக்குப் பூட்டி, மாப்பிள்ளைக்கு புது வண்டியும் திருமணத்திற்குப் பிறகு வாங்கிக் கொடுத்தார்கள். பிஜூ இப்போது பார்த்தாலும் அவ்வளவு அன்பாய் இருப்பான். நாங்கள் கூட்டணி சேர்ந்தால் கட்டாயம் ஒரு மலைக்கோழி காவு கொடுக்கப்படும்.
     இந்த திருச்செந்தூரில் மணம் முடித்தானே ராம்நாட்டுக்கார பங்காளி. அவன் மானஸ்தன். ஒரு பொட்டு நகையோ பணமோ உன் வீட்டில் இருந்து வாங்கக்கூடாது என்று இன்னைக்கு வரைக்கும் தன் பெஞ்சாதியிடம் பிடிவாதமாகவே இருக்கிறானாம். உனக்காகத்தான்டா பங்கே நேற்றைக்கு நீயா நானா டாபிக்கே என்றேன். சிரிக்கிறான்.
    “எங்க வீட்டில் நகைநட்டுன்னு எதையும் எதிர்பார்க்கமாட்டாங்க” என்று நானும் என்பங்குக்குச் சொல்லிப் பார்த்தேன். “உங்களுக்கு வேணாம்னா போங்க, அதுக்குன்னு நான் என்ன கழுத்தில் காதில் ஒண்ணுமில்லாம வந்து நிப்பேனோ. அதெல்லாம் எங்கவீட்ல இருபத்தஞ்சு பவுன் ஏற்கனவே சேர்த்து வச்சிருக்காங்க. அதுபோக எங்க வீட்டையும் என் பேருக்கு எழுதித் தரச் சொல்லி கேட்டுட்டு இருக்கேன்” என்றது அம்மணி. ‘தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்’ அதற்கு அர்த்தம் இதுதான்.
-கார்த்திக் புகழேந்தி

20-03-2017



Comments

  1. என்னது கல்யாணதிற்கு அப்புறம் பெண்வீட்டார்கள் சீர்வரிசையை செய்தார்காளா? அட என் மாமனார் சைடில் அப்படி செய்யாமல் ஏமாற்றிவிட்டார்களே பாவிகள் இந்தியா வரும் போது வசூல் செய்துவிட வேண்டியதுதான்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil