ஆரஞ்சு முட்டாய் - விமர்சனம் | விஷால்ராஜா


Image may contain: 1 person, eating, sitting and food


இன்று தமிழில் இடைநிலை எழுத்துக்களுக்கு என்று ஒரு தேவை எழுந்துள்ளது. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம்கூட இல்லாத ஒரு தலைமுறையால் நேரடியாக தீவிர இலக்கியத்திற்குள் நுழைய முடியாது.அவர்களுக்கு ஆரம்பக்கட்ட வாசிப்பு பயிற்சி தேவை. அதை இடைநிலை எழுத்துக்களால் அளிக்க முடியும். முன்பு இந்த வேலையை வெகுஜன பத்திரிக்கைகள் பார்த்துக் கொண்டிருந்தன. தொலைக்காட்சி வந்து பத்திரிக்கை வாசிப்பை விழுங்கிச் சென்ற பிற்பாடு அங்கு ஒரு வெற்றிடம் உருவானது. அது நிரப்பப் படவே இல்லை. 

நூலகத்தில் சுபா, சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிக்கத் தொடங்கிதான் நான் இலக்கிய வாசிப்பிற்கு வந்தேன். இப்போது அப்படி ஒரு தளம் அமைத்து தர ஆட்கள் இல்லை. இணையம் ஒரு வலிமையான ஊடகமாக மாறியிருக்கும் நிலையில் தமிழில் வாசக பரப்பு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இணையத்தில் முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சராசரிகளுக்கோ இலக்கிய பரிச்சயம் கிடையாது. எனவே அவர்களாலும் பிரயோஜனம் இல்லை. திரைப்படமோ அரசியலோ வாழ்க்கை பதிவோ நகைச்சுவையோ ஒற்றைப்படையான சராசரி சிந்தனைகளையே பார்த்து சலித்துவிட்டது.

ஆரஞ்சுமிட்டாய் சிறுகதை தொகுதியை படித்தபோது கார்த்திக் புகழேந்தி ஒரு நல்ல இடைநிலை எழுத்தாளராக வர முடியும் என்று எனக்கு தோன்றியது. இடைநிலை எழுத்துக்கள் பற்றி பேசும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்போதுமே தீவிரமான விஷயங்களை எடுத்துக் கொண்டு இடைநிலை படைப்புகளை எழுதக்கூடாது. 

இடைநிலை எழுத்துக்களால் ஒரு அளவுக்கு மேல் ஆழமாக செல்ல முடியாது.மறுபக்கம், தீவிரமான விஷயங்களோ மேலோட்டமான வாசிப்புக்கானவை இல்லை. இரண்டும் எதிர்நிலைகள். எனவே, வெறுமனே வாசக கவனத்தை பெறுவதற்காக முக்கியமான பிரச்சனையை எடுத்துக் கொண்டு மேலோட்டமாக எழுதுவது ஏற்புடையது அல்ல.

கார்த்திக் புகழேந்தி வெகுஜன வாசிப்புக்கேற்ற கதைக் கருக்களையே அதிகம் எடுத்துக் கொள்கிறார். விடலைப் பருவக் காதல், நட்பு போன்றவை உதாரணங்கள். அவரது கதைகளை சுலபமாக யூகித்துவிட முடிகிறது. வாசகனோடு உரையாடும் பகுதிகளிலும் கூட எந்த புதுமையும் இல்லை. ஆனால் அவருக்கு தன் மண் மீது அளப்பரிய வாஞ்சை இருக்கிறது. அது அவரது கதைகளுக்கு பொலிவு அளிக்கிறது. வசனப் பகுதிகளில் வட்டார வழக்கை கச்சிதமாக பயன்படுத்துகிறார். அவருடைய நகைச்சுவையும் கூட மிகைப் படுத்தப் பட்டதுதான். ஆனால் அது இடைநிலை எழுத்துக்களுடைய கூறுகளில் ஒன்று. எனவே அதுவும் துருத்துவதில்லை.

சில கதைகளில், பாதிக்கு மேல் ஆசிரியருக்கு நினைவு தப்பிவிடுகிறது. சிறுகதை எழுதிக் கொண்டிருப்பதை மறந்துவிட்டு கட்டுரை எழுத ஆரம்பித்துவிடுகிறார். இல்லையென்றால் பாடம் நடத்த தொடங்கிவிடுகிறார். அதை மட்டும் குறைத்துக் கொண்டால் தேவலாம்.மற்றபடி அவருடைய நல்ல மனமும் சமூக பொறுப்பும் புரியாமல் இல்லை. அதை படிப்பவர்களின் காது மேல் ஏறி நின்று சொல்ல வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.


இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதை “வெட்டும்பெருமாள்”. நாட்டுப்புறக் கதையாடலை இயல்பாக நவீன சிறுகதை வடிவத்திற்குள் பொருத்தி யிருக்கிறார். அதைத் தாண்டி பிறக் கதைகளும் உண்மைக்கு பக்கமாகவே இருக்கின்றன. நிறைய கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் நன்றாக வந்திருக்கின்றன. கார்த்திக் புகழேந்தி போன்றவர்கள் வெகுஜன பத்திரிக்கைகளிலோ அல்லது இணையத்திலோ தொடர்ச்சியாக இயங்கினால் தமிழில் வாசகர் எண்ணிக்கையை கூட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்.

- விஷால் ராஜா.
August 25, 2016 

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil