கடிதம் 03 - இந்திரா கிறுக்கல்கள்

                                                                                                                        இடம் : சென்னை,
                                                                                                                        நாள் : 15-12-2017


அன்புள்ள இந்திரா கிறுக்கல்கள் அவர்களுக்கு,

வணக்கம்,

இந்த வாரத்தின் இரண்டாம் நாளில் சென்னை சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த ‘அருவி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நண்பர்கள் கவிமணி, யமுனைச் செல்வன் ஆகிய இருவரோடும் சென்றிருந்தேன். முன்பாகவே இதுபோலான இரண்டு திரையிடல்களிலும் கலந்துகொள்ள முடியாமலிருந்ததால் படம் பார்த்த பலரும் ‘அட்டகாசம்’ என்ற வார்த்தைக்கு மேல் எதையும் சொல்லாமல் விட்டது மேலும் ஒரு எந்துசியஸத்தை வளர்த்தெடுத்திருந்தது.


ஒரு சமூகத்தின் பண்பாடு எத்தகையது என்பதை அறிந்துகொள்ளுவதற்கான உபாயம், பெண்பால் ஒருத்திக்கு அந்தச் சமூகம் எத்தகைய இடம் அளிக்கிறதோ அதுவே, அச் சமூகத்தின் பண்புக்கு அறிகுறி என்று சித்பவானந்தா எழுதிய மஹாபாரத நூலின் முன்னுரையில் எழுதியிருந்ததை நேற்றைக்கு இரவு வாசித்திருந்தேன். அருவி திரைப்படம் நேர்மாறாக எதிர்பாரா விதமாக நோய்மையினால் தாக்குண்டு, குடும்பச் சூழலை விட்டு வெளியேற்றப்படும் ஒரு பெண் அவளினினும் நோய்மைகளும், கீழ்மைகளும் கொண்ட இச்சமூகத்தை எப்படி எதிர்கொண்டு அன்பால் சாத்துகிறாள் என்பதை அருவி திரைப்படம் பேசுவதாக நான் உணர்ந்துகொள்கிறேன்.

ஆரம்பக் காட்சியில் கதைநாயகியின் குழந்தைப் பருவத்திலிருந்து துளித்துளியான கவிதைகள்போல அழகியலோடு அவரைக் காட்சிப் படுத்தியபோதே அவரைப் பிடிக்கச் செய்யும்படியான உத்தியை நான் மகிழ்ந்து ரசித்தேன். ஒரு பெண்ணின் பூர்வம் தொடங்கி பருவம் வரைக்கும் அவளது ஆர்வம், இயல்புகள், சேட்டைகள், விளையாட்டுத்தனம், குணாதிசயம், தன் தந்தை மீதான அளப்பரிய பிரியம் என்பதையெல்லாம் வரிசைக்கிரமமாகக் காட்சிப் படுத்தி, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவள் ஒரு இக்கட்டைச் சந்திக்கிறபோது அவளைச் சூழ்ந்திருந்த எல்லா நன்மைகளும் விட்டுவிலகிச் செல்ல நிர்கதியாவது வரைக்கும் திரைப்படம் ஒரு கவிதையின் அடுக்குகளாக விரிவடைகிறது. பிறகுதான் கதை என்பது என்ன என்ற கேள்வியே இல்லாமல் முதல் இருபது நிமிடம் கடந்து போனதை உணர்ந்திருப்போம்.

அதன்பிறகான காட்சிகள் எல்லாம் அதளகளம். டி.வி நிகழ்ச்சிகளை ஸ்பூஃப் செய்வது போலோ, அல்லது தேவைக்குத் தகுந்தபடி பயன்படுத்தும்போதோ, ஒருவித செயற்கைத்தன்மை சினிமாவின் காட்சியமைப்புகளில் ஒட்டிக்கொள்ளும். அதில் கொஞ்சம் முன்னகர்ந்த நுணுக்கம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வந்த கவண் திரைப்படத்தின் சில காட்சிகள். அதுவும் மிகையுணர்ச்சித் தன்மையினால் வீணடிக்கப்பட்டிருந்தது.

‘அருவி’யின் பலமே அப்படியொரு டி.வி நிகழ்ச்சியும், அதன் அலுவலகத்தில் நிகழும் அசம்பாவிதங்களும் தான் என்னும்போது, அத்தனை நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் காட்சிப்படுத்தியிருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தும், எழுந்து எழுந்து கைத்தட்டியும் கொண்டாட்டமாக ஒரு சினிமாவின் முன்னோட்டத் திரையிடலைக் காணும் அனுபவம் புதியதாக இருந்தது எனக்கு. இடைவேளை வரைக்குமான காட்சிகளிலே படம் முடிந்துபோய் விட்டதாக நம்பும் அளவுக்கு அவ்வளவு பரபரப்பும். சரி இரண்டாம் பாதியில் இனி என்ன கதைசொல்லிவிடப் போகிறார்கள் என்ற சந்தேகத்தோடு வந்தமர்ந்தால் படம் நகர்ந்த திசையும் காட்சிகளும் வேறு ரகம்.

அருவி நிறைய விசயங்கள் பேசுகிறாள். அவ்வளவு அர்த்தத் தெளிவும், சமூகப் புரிதலும், வாழ்க்கை குறித்தான கண்ணோட்டமும் அவளது வசனங்களில் இருக்கிறது. போலியான முகமூடிகளைக் கழற்றி எரியும்படி அவளுடைய வார்த்தைகள் சுடுகின்றன. குடும்ப அமைப்பு தன் இயலாமையின் போதும், வறுமையின்போதும், மான உணர்வுக்காகவும், போலியான கவுரவத்திற்காகக் கைவிடப்பட்டு, வாழ்க்கையே துண்டாடப்படும் பெண்களின், திருநங்கை, நம்பிகளின் பிரஜையாக அருவி என்கிற மனுஷியை கதைநாயகிகாகப் படைத்த இயக்குநர் நம் மனங்களை அள்ளுகிறவராக இருக்கிறார். அவருக்கு நன்றாகப் பாடவும் வருகிறது.

மானுடம் என்பதன் அடிப்படையான அன்பை, அதன் ஆதார சக்தியாக விளங்குகிற பெண்ணை, அவளைச் சூழ்ந்திகிடக்கும் சமூக வக்கிரங்களின் தளைகளை எல்லாம் மேம்போக்காகப் பெண்ணியம் பேசவைத்து ஒரு வட்டத்துக்குள் அடைக்காமல், உலகலாவிய பார்வையும், அரசியல் தெளிவும் கொண்டவளாக அருவி 'பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் நலியும் நகரமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்றுமில்லை' என்று வாழ்ந்து போகிறாள்.


மற்றவர்களுமே கூட நடித்திருக்கிறார்களா என்று தெரியாத அளவுக்கு, அத்தனைபேரும் தத்தமது பாத்திரங்களில் உயிரும் ஆன்மாவுமாகப் பிணைந்திருக்கிறார்கள். சிறு உதாரணமாக, பாட்டில் சுழற்றும் சுபாஷ் தொடங்கி, ‘ரோல்ல்ல்லிங் சார்’ சொல்லும் கேமிரா மேன் வரைக்கும். தொலைக்காட்சி இயக்குநராக வரும் அண்ணன் கவிதாபாரதி வெளுக்கவும் வெலவெலக்கவும் செய்யும் கதாப்பாத்திரத்தில் பின்னியிருக்கிறார். இன்னும் தோழி கதாப்பாத்திரத்தில் வரும் எமிலி, கதைசொல்லியாக மாறும் தையல் நிறுவன அதிபர், காவல்துறை அதிகாரி, அப்பா, உதவி இயக்குநர் கதாப்பாத்திரம் என எல்லாருமே அர்த்தப்பூர்வமாய்த் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள் படத்தில்.

“கடைசியாக எப்போ அழுதீங்க?” என்று அருவி கேட்கிற காட்சியில், தன் அழுகைக்கான காரணத்தை விவரிக்கும் தையல் நிறுவன அதிபரின் ‘பணியாரக் கிழவியின் கதை’ மனசை உருக்கிவிடுகிறது. திரைக்கதையும் அதன் பின்னே இருந்த சூட்சமமான கதைசொல்லலும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. சொல்லப்போனால் “என்னதான் ஆச்சு நம்ம ஊருக்கு. வரிசையாக நல்ல நல்ல படங்களாவே வந்துக்கிட்டு இருக்கு?” என்று யோசிக்கத் தோன்றும் அளவுக்குப் படம் நம்முள் இலகுவாக நிறைந்துவிடுகிறது.

நீங்களும் தங்கள் அன்புக்குரியவர்களை அழைத்துக்கொண்டு அருவியைப் பார்த்துவிட்டு வந்தீர்கள் என்றால் நான் உங்களுக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் எவ்வளவு சுருக்கமாக அருவியைக் குறித்துச் சொல்வதற்குச் சிரமப் பட்டிருக்கிறேன் என்பது புரியும்.
தோழமையுடன், 
கார்த்திக் புகழேந்தி. 
15-12-2017 

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil