சொற்களைத் தேர்ந்தெடுத்தவர் “பாப் டிலன்”
மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என, ஐந்து நோபல் பரிசுகளும் அறிவித்து முடித்த பின், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கப் போகிறது என்று, ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களும் காத்திருந்தனர். அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தச் செய்தி.
அமெரிக்காவின் கவிதை முகத்தையே மாற்றியமைத்தவரும், கிடார் நரம்புகளின் அதிர்வுகளால், தன் எதிர்ப்புக் குரலை பாடல்களின் வழியாகப் பதிவு செய்து கொண்டிருக்கும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்கள், அந்நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிந்த போது, போராட்ட இயக்கங்களுக்கு, டிலனின் பாடல்கள் தான் தேசிய கீதம். 50 ஆண்டுகளாக, தன் பாடல் வரிகளில் அணையாத தழல் கொண்டிருந்த இசையைத் தந்து கொண்டிருக்கிறார், டிலன். யூதப் படுகொலைகளினால், அமெரிக்காவில் தஞ்சமைடைந்த டிலனின் குடும்பம், துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்டது.
சிறுவனாக இருந்த போது, ராபட் என்றே அறியப்பட்ட டிலன், பள்ளி நாட்களில், இசைக் குழுக்களை உருவாக்கி பாடல்களை அரங்கேற்றிய போது, 'உன்னுடையது இசையல்ல... இரைச்சல். அதன் அதிர்வுகள் எங்கள் காதுகளை அடைக்கிறது. நீ வாசித்தது போதும். கீழே இறங்கு' என்று வெளியேற்றப்பட்டார்.
மின்னசோட்டாவிலிருந்து, நியூயார்க் திசையை நோக்கி, இசைக் கனவுகளோடு புறப்பட்ட போதும், தான் ஒரு அகதி என்ற காரணத்தால், ரயிலில் இருந்து ஆற்றில் துாக்கி வீசப்பட்டார். ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தவரை காப்பாற்றிய பெண், டிலனுக்கு உணவளித்து, அவர் பாடல்களை லயித்துக் கேட்டார்.
கேட்டு முடித்த கணமே, 'உன் பாடல்கள் எளியவர்களுக்கானது. நீ உன் காலத்தைப் பாட வேண்டும்; உன் காலத்தில் நிகழ்வனவற்றைப் பாட வேண்டும்' என்றார். அங்கிருந்து தான் துவங்கியது, டிலனின் பயணம்.
மனித உரிமைப் போராளியும், போர் எதிர்ப்பாளருமான ஜோன் பயேஸ், தன்னுடைய இசை ஆல்பத்தில், முதன்முதலாக, டிலனை அறிமுகம் செய்தார். அவரே, பிறகு டிலனின் காதலியாகவும் ஆனார். ஆரம்ப காலத்தில், மேற்கத்திய இசை மரபுகளில், தன் பாடல்களை இசைத்தவர், மெல்ல அவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தான் வாழும் மண்ணின், மக்களின் இசையை கையிலெடுத்தார்.
இசையைத் தாண்டியும், தன் கூர் ஆயுதமாக டிலன் தேர்ந்தெடுத்தது, தன் சொற்களைத் தான். சுதந்திரம் என்பது என்ன, போர் இந்த உலகத்தை என்ன செய்யும், மனிதனுக்கு, அமைதி எப்பேர்ப்பட்ட தேவை என்பதைத் தீர்க்கமாக எடுத்துரைக்கும் சொற்களாக அவை இருந்தன; இருக்கின்றன.
'தி எட் சலிவான்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பாப் பாட இருந்தார். நிகழ்ச்சிக்கான ஒத்திகையின் போது, அவரது பாடல் வரிகள், தங்கள் ஆதரவு இயக்கத்துக்கு எதிரானதாக இருக்க, சில வரிகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்றார் நிகழ்ச்சி பொறுப்பாளர். 'உங்கள் தணிக்கைக்கு இணங்கிப் போவதைவிட, என் படைப்புக்கு நேர்மையாக இருந்த நிம்மதி போதும். நான், இந்த நிகழ்ச்சியில் பாடப் போவதில்லை' என்று பதிலளித்துவிட்டு, கிடாருடன் வெளியேறினார் டிலன்.
பாப் மற்றும் ராக் இசை ஜாம்பவான்களிலே, அதிக பாடலை தந்தவர் பாப் டிலன். மொத்தம், 460 பாடல்கள். 'நெவர் எண்டிங் டூர்' என, உலகம் முழுக்க தன் செவ்வியல் இசையாலும், எதிர்ப்புச் சொற்களாலும், தன்னுடைய அரசியலைப் பாடியபடியே சொன்னார். எந்த இசைக் கலைஞரையும், தன் நாட்டுக்குள் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்காத சீனாவே, பாப் டிலனை, தன் நாட்டில் பாடச் சொல்லி அழைத்து சிறப்பித்தது.
தன்னுடைய சுயசரிதையை, தானே எழுதிய பாப் டிலனின், 'க்ரானிக்கல்ஸ் வால்யும் ஒன்' புத்தகம், சிறந்த நுாலுக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அவரது வாழ்க்கையைச் சித்தரித்து எடுக்கப்பட்ட, “ஐ ஆம் நாட் தேர்” என்ற திரைப்படத்திலும், அவரே கூட, டிலனாகச் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.
சமரசமில்லாத படைப்பாளனாகத் திகழும் டிலனை, விருதுகள் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. தன்னுடைய பாடல்களுக்காக, 11 கிராமி விருதுகள், ஆஸ்கர், குளோப் விருதுகள், ஹால் ஆப் பேம் என, பல்வேறு விருதுகளை வாரிக் குவித்தவருக்கு, நோபலும் இப்போது மணிமகுடமாகி விட்டது.
எனது அனைத்து தேடல்களும் ஒருபுறமிருக்க
ஆகையால் எனது கிடாரை கையிலெடுத்து
அடுத்த பாடலை இசைக்க துவங்குகிறேன்.
-நன்றி தினமலர்
15-10-2016
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது