ஆரஞ்சு முட்டாய் | இரா.முருகவேள்
கார்த்திக் புகழேந்தியின் சிறுகதைத் தொகுப்பான "ஆரஞ்சு மிட்டாய்" -ன் முதல் கதை வெட்டும்பெருமாள். சென்ற நூற்றாண்டின் உக்கிரம் மிகுந்த கிராமப்புற வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது. தோலுரிக்கப் பட்ட மாடுகள் . . . பசி தூக்கமின்றி காட்டில் அலைந்து இந்தப் பாவத்தைச் செய்தவனை வேட்டையாடி கிராம தெய்வமாக உயரும் அநாதைச் சிறுவன் . . . நான் ஒருவிநாடி அதிர்ந்து போனதென்னவோ உண்மைதான். கேலியும் கிண்டலுமான கார்த்திக் புகழேந்தியின் முகநூல் பதிவுகளைப் பார்த்து, அந்த மாதிரி கதைகளை எதிர்பார்த்திருந்தேன். அடுத்தடுத்த கதைகளில் ஒரே கலாட்டா. காதல், வெற்றி தோல்வி, கேலி கிண்டல் என்று ரகளையாக இருக்கின்றன கதைகள். பெரும்பாலான கதைகள் காதலைப் பேசுகின்றன. பெரும்பாலும் தோல்விதான். ஆனால் மனிதர் தோல்வியைக் கொண்டாடும் விதமிருக்கிறதே அங்கே நிற்கிறார் கார்த்திக். ...