ப்ளமிங்கோ
கண்கள் அந்த வரவேற்புக் கூடத்தில் நின்றவர்களின் கைகளிலிருந்த மஞ்சள் நிறமிடப்பட்ட கருப்பு எழுத்துக்கள் பதிந்த ஒவ்வொரு பெயர் அடையாள அட்டையிலும் ஐ.ராகவன் என்ற பெயரைத்தேடியது. ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் என்னை விட உயரமாகவும் என்னை விட சிக்கனமாகவும் ஆடையிலிருந்த அந்த ஜெர்மானிய வாசம் வீசும் ஹைப்ரீட் ஆரஞ்சு நிற யுவதியின் கையில் நான் தேடிய பெயர் இருந்தது. எண்பத்து இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் காலடி எடுத்து வைத்ததும் என்னை வரவேற்க ஒரு பெண்ணை அனுப்பி இருப்பார்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை “ஹலோ..குட் மோர்கன்.” எனக்கு தெரிந்த டொட்ச் அவ்வளவே.! ”மிஸ்டர்.ராகவ்? ” ஆங்கிலம் முலாம் பூசிய குரலில் எத்தனை இனிமை. யெஸ்.அயாம் - டொட்ச் தவிர்த்து சரள ஆங்கிலத்தில் கைகுலுக்கிக் கொண்டோம்.. சின்ன ஸ்பரிசம் மனதின் ஓரத்தில் இதமான மகிழ்ச்சியைக்கொடுத்தது. வேறு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் விமான நிலையத்தின் வாயிலை இருவரும் ஒரே சீரான வேகத்தில் கடந்தோம். மொழி இருவருக்கும் தடையாக இல்லை. ஆனபோதும் புன்னகைகளாலும் அன்னிச்சையான சைகைகளாலும் பேசிக்கொண்டோ...