Thursday, 23 February 2017

கம்பிவடம்

            ப்பாவோடு வயலுக்குப் போகிறோம் என்றாலே தனீ உற்சாகம் வந்துவிடும். நாள் முழுக்க சோறுதண்ணியே வேண்டாம். சிவப்பு கைப்பிடி போட்ட பார் சைக்கிளில் முன்னும் பின்னுமாக, தம்பியையும் என்னையும் உட்கார வைத்துக்கொண்டு, சங்கரங்கோயிலில் இருந்து சைக்கிளை மிதித்தால் பூலித்தேவன் அரண்மனை இருக்கும் நெற்கட்டான் செவல் வரைக்கும்கூட சலிக்காமல் அழுத்துவார். அவரோடு சைக்கிளில் போவதே என்னம்மோ ராசா குதிரையில் சவாரி போகிற மாதிரி இருக்கும்.

 அப்பாவுக்குச் சொந்தமாக தாத்தா காலத்தைய புஞ்சைகள் தலைவன் கோட்டைக்கு கீழ்த்திசையில் கொஞ்சம்போல மிச்சமிருந்தது. காற்றடி மழையடிக்கும் தப்பின ஆவுடையாறு கோடைக்கு வற்றிப்போனபிறகு, ‘இந்த நிலத்தில கிடந்து நான் பாடுபார்த்தது போச்தும் நீ படிக்கப்போ’ என்றுசொல்லி அப்பாவைப் படிக்க அனுப்பிவிட்டார் தாத்தா. அவரது மறைவுக்குப் பிறகு வயல் என்பது வேலிபோட்ட தோட்டமானது. தரிசு விட்டதுபோக மிச்சத்தை ஆட்கள் வைத்து பராமரித்தார் அப்பா. சின்னவயசில் எப்பவாவது பூஞ்சைத் தோட்டத்துக்கு போகும்போது, எங்களையும் இப்படி கூடேக் கூட்டிக்கொண்டு போவார்.   இன்றைக்கும் ஊருக்குள் “நாயனா பூஞ்சை இங்க எங்கன இருக்கு? என்று யாரைக்கேட்டாலும் சரியான திக்கில் கைகாட்டுவார்கள்.

 ஆவுடையாற்றுக்கு கீழ்ப்புரத்திலுள்ள நிலமெல்லாம் கந்தகமும் கரிச்சாம்பலுமாய் வெடித்துக் கிடக்கும். அதேநேர ஆற்றுக்கு மேல்கரையில் உள்ள நிலத்தில் உப்பு பூத்த வெள்ளை வண்டலில் சோளமும் கம்பும் நெல்லும் கெலித்து கிடக்கும். “பக்கத்துப் பக்கத்து மண்ணுக்கு எவ்வளவு மாறுபாடு பாத்தியா? இந்த நெலத்திலே வெளைஞ்ச நெல்லுக்குத்தான் வெள்ளைக்காரன் வரிகேட்டான்னு சண்டைக்கு நின்னிருக்காங்க. அவன் கான்சாகிபு தோத்து ஓடுனது இங்க ஒரு எடத்திலதானே. தோக்கடிச்சது பூலித்தேவன், அங்க நிக்கது அவனோட கோட்ட” என்று அப்பா பூலி கதை சொல்லும்போது, நான் அந்த நிறம் மாறிக்கிடக்கும் மண்ணில் விளைந்த நெல்மணிகளையே வெறித்துக்கொண்டிருப்பேன்.

 பூலித்தேவன் பாளையத்திலிருந்து மேற்கே போகும் பாதையில் அப்பாவுக்குப் பழக்கப்பட்ட சாமியார் ஒருத்தர் குறி சொல்லிக் கொண்டிருப்பார். 'ரொம்ப சக்திவாய்ந்த சாமி' என்று சுற்றுவட்டாரங்கள் எல்லாம் அவரை பணிந்து தொழுது கொண்டிருந்தது. அவரைப் பற்றிக் விவரம் அறியாதவர்கள் வந்து அப்பாகிட்டே புகழ்ந்து பேசும்போது அப்பா ஒரு குறுநகையோடு அவர்களைப் பார்த்துச் சிரிப்பதைக் கவனித்திருக்கிறேன்.

 அறுங்கோண வடிவத்திலிருக்கும் அந்தக் குறிசொல்லி சாமியாரின் கோயிலுக்கு மெட்ராஸிலிருந்து பெரிய கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் பரோபகாரர்கள் என்று நிறையபேர் இன்றைக்கும் வந்து பூஜை செய்வித்து, தேர்தலில் ஜெயிப்போமா, தோற்போமா எதிரிகளின் பிடி எப்படி இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் கேட்டுத்  திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். செவ்வாயும் வெள்ளி ஆனால் போதும்‘குறி சொல்லுத சாமியாருக்க கோயில் எங்க இருக்கு?’ என்று  நெற்கட்டானுக்கு குடும்பம் குடும்பம் வந்து இறங்கும் வெளியூர் சனங்கள்.

  ஒருதடவை பெரியாம்பளைகளோடு நானும் பூஜைக்குச் சென்றிருந்தேன். குறிகேட்க வருகிறவர்கள் எல்லாரும் கட்டாயம் ஆளுக்கொரு முட்டை கொண்டுவந்திருக்க வேண்டுமாம் அத்தனை முட்டைகளை அவர் என்னதான் செய்வார் என்றுதான் தெரியவில்லை. சந்தனமும் ஜவ்வாதும் மணக்க ருத்ராட்ச மாலைகளோடு சன்னதியிலிருந்து நடைவாசலில் வந்து நிற்கும் சாமியார், திடீரென்று கூட்டத்தில் கைகூப்பி நின்று கொண்டிருக்கும் சனங்களிலிருந்து ஒரு வெள்ளை சீலை ஆச்சியைப் பார்த்து, ‘உம் பொண்ணுக்கு வாழ்க்கயில பெரிய பிரச்சனை, அதுக்காகத்தான வந்திருக்க. இந்த வாசல் மண்ணை எடுத்துட்டு மூணு சுத்து சுத்திட்டு கிளம்பு. எல்லாத் தும்பமும் தீர்ந்து அவ நல்லா இருப்பா. மத்தத நாம் பாத்துக்குறேன்” என்று கேள்வியே கேட்காமல் குறி சொல்ல ஆரம்பித்துவிட்டார். மனசில் உள்ளதெல்லாம் சொல்லுறாரே என்று உழுந்து புரண்டுவிட்டாள் ஆச்சி.

 ஒருதடவை பூட்சுக் காலோடு கோயிலுக்குள் வந்துவிட்ட போலீஸ்காரரை பார்த்து, “அரசாங்க உத்யோக்தாரின்னு மமதையிலயா பூட்சு காலோட இங்க வந்த, அடுத்த வாரமே நீ வெறுஞ்ச் செருப்போட தெருவில் நிப்ப பாரு” என்று சாபம் விட்டுவிட்டார் குறிசொல்லும் சாமி. யார் பார்த்த பார்வையோ போலீஸ்காரருக்கு நிஜமாகவே வேலை போய்விட்டதாம். அப்போதிருந்து இன்னும் அதிகம் பிரபலம் அடைந்துவிட்டார் குறிச்சாமி. அவருடைய ஆறுங்கோணக் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஓடைக்குப் பக்கம்தான் ஈ.பி ட்ரான்ஸ்பார்மர் ஜங்ஷன் இருந்ததால் அப்பா நெற்கட்டான் வரும்போதெல்லாம் கோயிலில் அவருக்கு தடபுடலான கவனிப்பு இருக்கும். இத்தனைக்கும் அப்பா சாமி கும்பிடாதவர்.

 நான் விபரம் தெரிந்து கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் குறிச்சாமியின் உண்மைக் கதையை அப்பா முதல்முதலாக எனக்குச் சொல்லியிருந்தார். “அவன் நம்ம கோயில்பட்டிக் காரந்தாம். மலையாளத்துக்குப் போய் அங்கன நாலு வார்த்த கத்துக்கிட்டு தென்மலை கணவாய் வழியா சங்கரன்கோயிலுக்கு வந்திருக்கிறான். தாத்தா உயிரோடு இருந்தப்போ ஒருநாள் வண்டிமையை மை வச்சுக்கிட்டு வாசலை வழிமறிச்சு நின்னு, இந்தவீட்டுத் தலைப்பிள்ளைக்கு நேரம் நல்லால்லன்னு நின்னானாம். தாத்தாவுக்கு ச்சீன்னு வந்தாலும் இவனை ஆளைப்பார்த்து இவன் மலையாளத்தானும் இல்லை மந்திரவாதியும் இல்லை. என்னமோ திருவளத்தான் சோளி  பாக்க வந்திருக்கானோன்னு கணித்திருக்கிறார்.

 “கொஞ்சம் உள்ள வந்துட்டுப்போ” என்று அழைத்து, கட்டிவச்சு உரிக்கவும், உண்மையெல்லாம் துப்பிப்போட்டு, “என்ன விட்ருங்க சாமி!” என்று காலில் விழுந்துவிட்டானாம். அப்படி ஓடிப்போனவனுக்கு இன்றைக்கு நெற்கட்டானில் நீரென்ன நிலமென்ன வளமென்ன வாழ்வென்ன. பக்த கூட்டமென்ன. இந்த வட்டாரத்தில் குறிசொல்லும் சாமியாராகி ஊருக்கே அருள் பாலிக்கிறான். இந்த மடையங்களும் போய் கால்ல விழுறாங்களே” என்று தாடையைச் சொரிந்துகொள்வார்.

 படித்து முடித்த கொஞ்ச நாளிலே அப்பாவுக்கு சங்கரன்கோவில் எலக்ட்ரிசிட்டி போர்டில் போர்மேன் வேலை கிடைத்திருந்தது. குருக்கள்பட்டி சப்-டிவிஷனில் போர்மேனாக பணியில் அமர்ந்தவர், கலிங்கப்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, காவல்கிணறு என்று நிறைய ஊர்களுக்குச் சுற்றியலைந்தார். அந்தப்பகுதி என்றில்லாமல் பொதுவாகவே நிலவியல் அறிவு அப்பாவுக்கு அத்துபடி. “இந்த நேருக்குப் போகுதே வயர் லைன் இதைப் புடிச்சுட்டே போனா, நேரா பம்பைல கொண்டுபோய் விட்டுரும். ஆற்றுப்பாதை, வண்டிப்பாதை மாதிரி இது ஒரு மின்சாரப் பாதை. அது வானத்தையும், நிலத்தையும், திசையையும் மலை முகட்டையும் கணியம் பார்த்து புள்ளி புள்ளியாய் கோர்க்கத்  தெரிஞ்சவனால் கட்டி எழுப்பப்பட்ட பெரிய தொடர்புச் சங்கிலி” என்பார்.

 சங்கரன்கோவில் தொடங்கி ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் வரைக்குமான பகுதிகளில் முதல்முதலாக மின்சார வயர்கள் போடப்பட்ட காலத்துக் கதைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்பது அத்தனை ருசியாக இருக்கும். வெள்ளைக்காரன் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் நீரேற்று மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்ட பிறகுதான் எங்கள் பகுதிகளில் மின்சாரம் வந்து குண்டு விளக்குகளை ஒளிரச் செய்ததைச் சொல்வார். புளியங்குடி அடிவாரத்தில் ஆரம்பிப்புது தெக்கே பணகுடி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் வரைக்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டபோது அப்பா உதவி பொறியாளராக பதவி உயர்வு வாங்கியிருந்தார்.

 பள்ளத்தில் காற்றடி கம்மியாதான் இருக்கும். நம்ம பகுதி நிலங்கள் மேடு பார்த்துக்க. கரிசல் எப்பவும் பொட்டலா நிக்கும். இங்கல்லாம் வேகமா அடிக்குற காத்தை தடுத்து, காற்றாடிய சுத்தவிட்டா கரண்டு கிடைக்கும்ன்னு கண்டுபுடிச்சான் வெள்ளைக்காரன். அது வந்தப்போ யானைப் பசிக்குச் சோளப் பொறிதான்னாலும் அன்னைக்கு காலத்தையில் அதுதான் நம்ம ஊர்களுக்கு பெரிய வரமா இருந்துச்சு. மின்சார வெளிச்சமே பாக்காத எத்தனையோ ஊர் ஜனங்க விளக்கு எரியுறதையே சுத்திச் சுத்திவந்து வேடிக்கை பார்த்த காலம் அது” என்பார்.

 காற்றாலைகள் எப்படி கரண்டைத் தயாரிக்குது என்று கேள்வியை அப்பாகிட்டே கேட்டபோது எனக்கு எட்டு இல்லை பத்து வயதுக்குள் தான் இருக்கும். தம்பி அப்போ பொடிசாக இருப்பான். ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு, பின் டயரில் இடித்துக்கொண்டு இருந்த டைனமோவைக் காட்டி, துரை இங்க பாரு, அப்பா வீல சுத்தும்போது இந்த டைனமோவும் சுத்துதா? அது சுத்தும்போது உள்ளுக்குள்ள கரண்டு உருவாகும். அதுக்குள்ள இருக்குற விஞ்ஞானம் அந்த வேலையச் செய்யும். இந்தா, டைனமோல இருந்து வயர் இழுத்து லைட்டுக்குக் கொண்டு போயிருக்கு பாரு. அதுவழியாத்தான் கரண்டுபோய் லைட்ட எரிய வைக்குது. இப்படித்தான் காத்தாடிக்குள்ளயும் ஒரு டைனமோ இருக்கும் அது கரண்டை புடிச்சு வச்சிக்கும். அப்பா மாதிரி ஆளுங்க அதை சேமிச்சு எந்தெந்த ஊர்க்கெல்லாம் வேணுமோ அங்கெல்லாம் வயர் வழியா கொண்டுபோய் கொடுப்போம்” என்று பாடமெடுத்தார்.

 அப்பாவை ஊருக்குள் எல்லாரும் நைனா என்று தான் கூப்பிடுவார்கள். தொழிற்சங்கங்களில் ஆரம்பித்து கழகங்கள் வரைக்குமாக  அப்பாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. ரூரல் டிவிஷன்களையும் சேர்த்துக் கவனிக்கும் பொறுப்புகளை ஏற்றிருந்தபோது மலைக் கிராமங்களில் போய் மாதக் கணக்கில் தங்கியிருப்பார். அங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களோடும் அவருக்கு நல்ல மரியாதையும் பழக்கமும் இருந்தது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதெல்லாம் அரசின் ஊழியராக இருந்தாலும் விவசாயிக்கு ஆதரவாக போராட்டங்களில் அஞ்சாமல் கலந்துகொண்டார். வேலை போகுமே என்று எத்தனையோ பேர் சொன்னபோதும் அதையெல்லாம் அவர் காதில் ஏற்றிக்கொள்ளவேயில்லை. 

 எழுபதுகளில் தொடங்கி கிட்டத்தட்ட கரிசல் விவசாயிகள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் கேட்டு போராடியபோது, அரசு ஊழியராக, ஜே.இ., பொறுப்பிலிருந்த அப்பா அன்றைக்கு நடந்த துப்பாக்குச் சூடு சம்பவங்களின் நேரடி சாட்சியாக இருந்தவர்.  கரிசலில் விவசாயத்துக்கு கிணற்றுப் பாசானம் தான் என்றாகிவிட்ட சூழலில் மின்சாரக் கட்டணம் ஏழையின் வாழ்வில் சுருக்குக் கயிறுமாதிரி அப்பப்போது மெல்ல இறுக்கும். காமராசர் மாதிரி ஆட்களெல்லாம் கூட மின்சாரக் கட்டணம் கூட்டினதை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். எண்பதுகளிலும் அப்படித்தான் சாலைகள் முழுக்க ட்ராக்டரை நிப்பாட்டி வைத்து சம்சாரிகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். தட்டிபோர்டு கலைஞர்கள் வீதியெங்கும் எழுதித் தள்ளினார்கள்.  ஆனால் என்ன பெரிய சோகம் என்றால் அன்றைக்கு போராட்டத்தில் இறங்கினவர்களில் எட்டு பேர் வீடு திரும்பவே இல்லை. அவர்கள் அனைவரின் நெஞ்சிலும் அரசத் துப்பாக்கிகளின் தோட்டாக்கள் இறங்கியிருந்தன.

 அப்போதுதான் அப்பாவுக்குக் கல்யாணம் முடிந்து சில மாதங்கள் ஓடியிருந்தது. ஊரே பற்றி எரிய அம்மை பதறிக் கொண்டிருந்திருக்கிறாள். அதன் பின்னான நாட்களில் சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி, குருவிகுளம் கழுகுமலை வரையுள்ள கிராமங்களில் எல்லாம் எக்கச்சக்கம் கெடுபிடிகள் நீடித்ததாம். குறிஞ்சாக்குளத்தில் துப்பாக்கிச் சூடுபட்டு இறந்தவர் சடலங்களுக்கு எரியூட்டி, புதைத்தபிறகு அவர்களை யாரும் சுடவில்லை. நோய் வந்து இறந்தார்கள் என்று சாட்சி சொன்ன அரசியலை எல்லாம் அவர் சொல்லும்போது அம்மைக்கு நெஞ்சே பதறும்.

 இந்த ஊரே இப்படியா அடியும் தடியும் வெட்டும் குத்தும் துப்பாகிச் சண்டையும்ன்னு. என்ன வாழ்க்கையோ என்று ஒரு நாள் அம்மை சடைத்துப் பேச, அவரைத் தடுத்துவிட்ட அப்பா சொன்னார். “இந்த மண்ணை மனுஷன் ஆள நினைக்கத் துடிக்கும்போது தான் அவனுக்குள்ள இப்படி மிருகங்கள்  கிளம்புது. நீ இந்த இனம், நான் இந்த சனம்ன்னு வாழ்றதுல இருந்து சாகுறது வரைக்கும் சாக்கேடா இந்தச் சாதி இருந்து இந்த மனுஷங்களை மீள விடலை. அதை கட்சி பதவின்னு வந்தவனுங்களும் தங்களுக்குச் சாதகமா பயன் படுத்திக்கிட்டானுங்க. தன்னைக் காப்பாத்த இனி கெதியே இல்லைன்னு கலங்கும்போதுதான் இந்தச் சனங்க தெய்வத்துகிட்டப் போய் முறையிடுதுங்க. அங்கயும் அயோக்கியப் பய தான் நிக்கான். நீ நாயக்கன் நான் கள்ளன் அவன் பறையன்னு பேதம் பிரிச்சு பேதம் பிரிச்சு அழிஞ்சுத்தாம் போனம். துப்பாக்கி எடுத்துச் சுட்டாலும் வெட்டிப் போட்டாலும் சிந்துற ரத்தம் என்னம்மோ ஒண்ணுத்தாம். இதைப் புரிஞ்சுக்கிடவும், புரிய வைக்கவும் தான் இந்த ஜனங்களுக்கு ஒரு நல்ல தலைவன் இல்ல. அப்படி ஒருத்தன் வந்தாலும் அவனையும் அழிச்சிடுவாங்க. அதுக்குத்தான் சொல்லுதேன் புள்ளைங்களை நாலு வெபரம் தெரியவிட்டு வளக்கணும். படிக்க வைக்கணும். அவங்க மணி மணியா வாழ்வானுங்க”

அப்பா மறைந்து பத்து வருடங்கள் காத்துக்குக் கற்பூரமாகக் கரைந்துவிட்டது. வாழ்க்கையை மின்சாரக் கம்பிவடம் மாதிரி வேறொரு தளத்தில் இருந்து பார்த்த மனிதன். என் பிள்ளைகளைக் காரில் ஏற்றி தாத்தாவின் பூஞ்சைத் தோட்டத்துக்கு அழைத்துப் போய் அவர் வாழ்ந்த கதையை அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் நாளைக்கு என் கதையை அவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்களாயிருக்கும். எது எப்படியோ அப்பா எங்களை மின் வடங்கள் வழியாகத் தொடர்ந்து வந்தபடி ஆசீர்வதித்துக் கொண்டிருப்பார்.

-          கார்த்திக் புகழேந்தி
23-02-0017அன்பு நண்பர் துரை மோகன் ராஜுவுக்குச் சமர்ப்பணம்

Monday, 20 February 2017

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

Image may contain: 6 people, people standing


 
                   ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 

அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக் கண்டாலே கொள்ளைப் பிரியம். கள்ளும், சுட்ட கருவாடுமாய் உண்டு களிகூறுவான். அதிலும் புளுத்த ஊறைக் கருவாட்டைக் கண்டால் நாக்க ஏழு மொழத்துக்கு தொங்கப் போட்டுகிட்டு அலைவான்வ. கொழும்பு கொச்சிக் கடையில் இவ்வாறான பேச்சை என் காதறிய நானே கேட்டிருக்கிறேன்.  
“மைதீன் முதலாளிக்கு கொடுக்கிற கை, அது அன்பானாலும் சரி, அடியானாலும் சரி – கடற்கரை வாழ்வின் யதார்த்தம். எடங்கேறு, கெதி, மய்யம் போன்ற பழம்பெரும் வார்த்தையாடல்கள் மகிழ வைக்கிறது.  அந்தக் காலத்தில் சம்பை வியாபாரத்தில் கொடிபோட்டு வாழ்ந்தவர்கள் எல்லோரும் இன்று விலாசமற்றுப் போய்விட்டார்கள். காரணம், நம்பிக்கைத் துரோகம். தத்துவார்த்தங்களை பேசுகிறதோ இல்லையோ, எளிய மனிதர்களையும், அவர்தம் வாழ்வையும், அதன் பாடுகளையும் கண்முன்னே கொண்டுவந்து கண்ணீர் விட வைத்துவிடுகிறது   ‘வள்ளம்’. 
 இது அன்றி வேறென்ன இலக்கியம்”


 என்று கதையை வாசித்துவிட்டு பதில் எழுதியிருந்தார். மைதீன் முதலாளிக்கு மட்டுமல்ல, ஜோ சாருக்கும் (தட்டிக்) கொடுக்கிற கை என்பதை அறிந்தவனாகினேன். விடிந்தபோது பத்தாவது கதை கொடுத்த தைரியத்தில் அடுத்தத் தொகுப்புக்கான அட்டைப் படத்துக்கு நண்பன் சிவகாசி சுரேஷுக்குப் போனைப் போட்டதும்.. மறுநாளே வடிவமைப்பு வேலைகள் முடிந்தது.  

உண்ட மயக்கம் கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில் தலைப்புடனான அட்டைப்படத்தை முகநூலில் தட்டிவிட “அவளும் நானும் அலையும் கடலும்” என்கிற வார்த்தை அல்லோலகல்லோலப் பட்டுவிட்டது. நிறைய விசாரணைகள். “புத்தகம் எப்போ சார் வருது?’ என்று. குத்துமதிப்பாக பிப்ரவரி 14ம் தேதியைச்  சொன்னதும் அது நிறையவே தொகுப்பின் ஒருபாதிக் கதைகளுக்கேற்ப பொறுத்தமான நாளாகிவிட்டது.

அண்ணன் ஜே.கே ஜீவகரிகாலன் யாவரும்.டாட் காமிற்காக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார். அகரமுதல்வன் விமர்சன உரை நிகழ்த்துவகாத முடிவானது. நாச்சியாள் சுகந்தி அக்கா வாழ்த்துரையும், இயக்குநர் கவிதா பாரதி அண்ணன் அறிமுக உரையும். எழுத்தாளர் பாக்கியம் சங்கர் அண்ணன் சிறப்புரையும் பேசுவதாகக் குறித்துவைத்தோம். நூலினை, நீயா நானா இயக்குநர் ஆண்டனி அவர்கள் வெளியிடுவதாகவும், எழுத்தாளர் அண்ணன் சரவணன் சந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்வதாகவும் அனுமதி கேட்டு அரங்கத்தைத் தெரிவு செய்துக்கொண்டோம். 

அடுத்தடுத்து ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும், தியாகச் சின்னத்தாயும் பிரேக்கிங் நியூஸ்களால் ஊரையே அதிரச் செய்துகொண்டிருந்த பொழுதுகளில் சத்தமே இல்லாமல் நிகழ்வு நடந்தேறியது.  லதா அருணாச்சலம் அக்காள், தோழமை சக்தி பிரகாஷ், தடகளம் தியாகு, கவிஞர். நண்பர் கு.விநாயகமூர்த்தி, கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு கவுதமன், அண்ணன் தம்பிச் சோழன் தம்பதியர், ரமேஷ் ரக்‌ஷன், அக்காள் தேகா கஸ்தூரி, மனோ ரெட், நண்பர் அரசன், கோவை ஆவி., அண்ணன் சூரியதாஸ், தம்பி சந்தோஷ் சிவகாசி சுரேஷ், இன்னும் நண்பர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தார்கள்.

பல இலக்கிய நிகழ்வுகளை நினைவுகளாக்கித் தந்து, தொடர்ந்து என்போன்றவர்களை ஆதரித்துச் செல்லும் ஸ்ருதி டிவி.அண்ணன் (அவர் பேரை நான் அப்படித்தான் சொல்லிக்கொண்டு திரிகிறேன்) இந்த நிகழ்ச்சியையும் ஊராரிடம் காட்டிப் பெருமையடித்துக் கொள்வதுபோல அழகாக்கித் தந்திருக்கும் அவரின் அன்புக்கு நன்றி.


கவிஞர் அகரமுதல்வன்  :-
நீயா? நானா? இயக்குநர் ஆண்டனி :- 
 எழுத்தாளர் பாக்கியம் சங்கர் :- கவிஞர் நாச்சியாள் சுகந்தி  :- 
இயக்குநர் கவிதா பாரதி  :- 
எழுத்தாளர் ஜீவகரிகாலன் தொகுப்புரை
மற்றும் என்னுடைய ஏற்புரை :-
நன்றி.. 

-கார்த்திக் புகழேந்தி
20-02-2017
“அவளும் நானும் அலையும் கடலும்” 
விலை : 130/-
@கார்த்திக் புகழேந்தி
ஜீவா படைப்பகம், MIG-1544, த.நா.வீ.வா காலனி,
வேளச்சேரி, சென்னை -42
போன் +91 9994220250 

Buy books Online :   
Wednesday, 8 February 2017

புக் டைம் | ஆரஞ்சு முட்டாய் கதைகள் | கார்த்திக் புகழேந்தி

இந்தப் புத்தகத்தின் வாழ்த்துரையில் ஜோ டி குரூஸ் “எளிமையான கதைகள், அதுமட்டும் தான் சொல்லத் தோன்றுகிறது” என்று சொல்லியிருப்பார். புத்தகத்தைப் படித்து முடித்ததும் மிகச் சரியாக என் மனசிலும் அதே தான் தோன்றியது.

Image may contain: 1 person, standingதிருநெல்வேலி மண் வாசம் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கிறது.நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், நாம் சந்தித்த மனிதர்கள், நம் பால்யங்கள், எல்லாம் புத்தகம் முழுவதிலும் உலவியபடி இருக்கின்றன. சிந்துபூந்துறை, அம்பா சமுத்திரம் போன்ற கதைகள் , துவக்கத்தில் நம் உதட்டில் அரும்பும் புன்னகையைக் கதை முடியும் வரை தக்க வைக்கின்றன.

நான் ஏற்கனவே பல இடங்களில் இதே விஷயத்தைப் பேத்தியிருக்கிறேன் என்றாலும் இங்கேயும் அதையே பேத்துகிறேன். கதை என்பது ஒரு அனுபவம், அதில் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லியோ ஏதேனும் ஒரு திருகலுடனோ தான் முடிக்க வேண்டும் என்றில்லை.

இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளும் அப்படியே தான். இயல்பாய் எளிமையாய் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன படிக்கும் போது, பிரச்னை என்னவெனில் அதே மிகை இயல்புத் தன்மையுடன் நம்மைக் கடந்தும் விடுகின்றன. இயல்பும் எளிமையும் வாய்க்கப் பெற்ற அளவு அழுத்தம் வாய்க்கப் பெறவில்லை என்பது இத்தொகுப்பின் ஒரு பலவீனம்.

முதல் பத்தியில் சொன்னதைப் போல் வாழ்த்துரையில் சொல்லியிருக்கும் ஜோ டி குரூஸ் இன்னொரு விஷயமும் சொல்லியிருப்பார். ஒவ்வொரு படைப்பும் முதல் புத்தகத்திற்கானது போல் அமைய வேண்டும் என நினைக்கிறேன்” என்று. இவரது முதல் புத்தகமான வற்றாநதியை இன்னும் வாசிக்கவில்லை. அது இதைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமென்று எண்ணுகிறேன். பார்ப்போம்.

-Harish Ganapathi
June 18, 2016 · 

Image may contain: 1 person, eating, sitting and food
#recommended
தலைப்பு - ஆரஞ்சு முட்டாய் கதைகள்
வகை - சிறுகதைகள்
எழுத்தாளர் - கார்த்திக் புகழேந்தி
வெளியீடு - ஜீவா படைப்பகம்
விலை - ரூ.150


ஆரஞ்சு முட்டாய் - விமர்சனம் | விஷால்ராஜா


Image may contain: 1 person, eating, sitting and food


இன்று தமிழில் இடைநிலை எழுத்துக்களுக்கு என்று ஒரு தேவை எழுந்துள்ளது. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம்கூட இல்லாத ஒரு தலைமுறையால் நேரடியாக தீவிர இலக்கியத்திற்குள் நுழைய முடியாது.அவர்களுக்கு ஆரம்பக்கட்ட வாசிப்பு பயிற்சி தேவை. அதை இடைநிலை எழுத்துக்களால் அளிக்க முடியும். முன்பு இந்த வேலையை வெகுஜன பத்திரிக்கைகள் பார்த்துக் கொண்டிருந்தன. தொலைக்காட்சி வந்து பத்திரிக்கை வாசிப்பை விழுங்கிச் சென்ற பிற்பாடு அங்கு ஒரு வெற்றிடம் உருவானது. அது நிரப்பப் படவே இல்லை. 

நூலகத்தில் சுபா, சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிக்கத் தொடங்கிதான் நான் இலக்கிய வாசிப்பிற்கு வந்தேன். இப்போது அப்படி ஒரு தளம் அமைத்து தர ஆட்கள் இல்லை. இணையம் ஒரு வலிமையான ஊடகமாக மாறியிருக்கும் நிலையில் தமிழில் வாசக பரப்பு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இணையத்தில் முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சராசரிகளுக்கோ இலக்கிய பரிச்சயம் கிடையாது. எனவே அவர்களாலும் பிரயோஜனம் இல்லை. திரைப்படமோ அரசியலோ வாழ்க்கை பதிவோ நகைச்சுவையோ ஒற்றைப்படையான சராசரி சிந்தனைகளையே பார்த்து சலித்துவிட்டது.

ஆரஞ்சுமிட்டாய் சிறுகதை தொகுதியை படித்தபோது கார்த்திக் புகழேந்தி ஒரு நல்ல இடைநிலை எழுத்தாளராக வர முடியும் என்று எனக்கு தோன்றியது. இடைநிலை எழுத்துக்கள் பற்றி பேசும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்போதுமே தீவிரமான விஷயங்களை எடுத்துக் கொண்டு இடைநிலை படைப்புகளை எழுதக்கூடாது. 

இடைநிலை எழுத்துக்களால் ஒரு அளவுக்கு மேல் ஆழமாக செல்ல முடியாது.மறுபக்கம், தீவிரமான விஷயங்களோ மேலோட்டமான வாசிப்புக்கானவை இல்லை. இரண்டும் எதிர்நிலைகள். எனவே, வெறுமனே வாசக கவனத்தை பெறுவதற்காக முக்கியமான பிரச்சனையை எடுத்துக் கொண்டு மேலோட்டமாக எழுதுவது ஏற்புடையது அல்ல.

கார்த்திக் புகழேந்தி வெகுஜன வாசிப்புக்கேற்ற கதைக் கருக்களையே அதிகம் எடுத்துக் கொள்கிறார். விடலைப் பருவக் காதல், நட்பு போன்றவை உதாரணங்கள். அவரது கதைகளை சுலபமாக யூகித்துவிட முடிகிறது. வாசகனோடு உரையாடும் பகுதிகளிலும் கூட எந்த புதுமையும் இல்லை. ஆனால் அவருக்கு தன் மண் மீது அளப்பரிய வாஞ்சை இருக்கிறது. அது அவரது கதைகளுக்கு பொலிவு அளிக்கிறது. வசனப் பகுதிகளில் வட்டார வழக்கை கச்சிதமாக பயன்படுத்துகிறார். அவருடைய நகைச்சுவையும் கூட மிகைப் படுத்தப் பட்டதுதான். ஆனால் அது இடைநிலை எழுத்துக்களுடைய கூறுகளில் ஒன்று. எனவே அதுவும் துருத்துவதில்லை.

சில கதைகளில், பாதிக்கு மேல் ஆசிரியருக்கு நினைவு தப்பிவிடுகிறது. சிறுகதை எழுதிக் கொண்டிருப்பதை மறந்துவிட்டு கட்டுரை எழுத ஆரம்பித்துவிடுகிறார். இல்லையென்றால் பாடம் நடத்த தொடங்கிவிடுகிறார். அதை மட்டும் குறைத்துக் கொண்டால் தேவலாம்.மற்றபடி அவருடைய நல்ல மனமும் சமூக பொறுப்பும் புரியாமல் இல்லை. அதை படிப்பவர்களின் காது மேல் ஏறி நின்று சொல்ல வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.


இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதை “வெட்டும்பெருமாள்”. நாட்டுப்புறக் கதையாடலை இயல்பாக நவீன சிறுகதை வடிவத்திற்குள் பொருத்தி யிருக்கிறார். அதைத் தாண்டி பிறக் கதைகளும் உண்மைக்கு பக்கமாகவே இருக்கின்றன. நிறைய கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் நன்றாக வந்திருக்கின்றன. கார்த்திக் புகழேந்தி போன்றவர்கள் வெகுஜன பத்திரிக்கைகளிலோ அல்லது இணையத்திலோ தொடர்ச்சியாக இயங்கினால் தமிழில் வாசகர் எண்ணிக்கையை கூட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்.

- விஷால் ராஜா.
August 25, 2016 

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

Image may contain: 1 person
  

  தமிழ் சிறுகதையின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இளந்தலைமுறை படைப்பாளிகள் புதிய களன்களில் புதிய கதைமொழியில் சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்கள்.

சிறுகதை எழுவதுதை பெரும் சவாலாகக் கருதுகிறவன் என்ற முறையில் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியாகிற சிறுகதைகளைத் தேடிப் படித்து விடுவேன். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளையும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன்.

சிறுகதைகள் தேங்கிவிட்டது, முடிந்துவிட்டது என்பது பொய்யான அபிப்ராயம். சிறுகதையில் புதிய கதைக்கருவை, மொழியை, கதைசொல்லும் முறையைக் கையாளும் பலர் உருவாகி இருக்கிறார்கள். என் வாசிப்பிற்குள் வராத பல சிறுகதைகள், எழுத்தாளர்கள் இருக்ககூடும். என் வாசிப்பில் முக்கியமாகக் கருதும் இளம்தலைமுறையைச் சார்ந்த பத்து சிறுகதையாசிரியர்களை அடையாளப்படுத்த விரும்புகிறேன்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

துரதிருஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற இவரது சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். கால்வினோ, போர்ஹே, சரமாகோ எனப் பரந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்பதன் சான்றாக இவரது கதைகள் பின்நவீனத்துவ எழுத்துமுறையாக இருக்கின்றன. தாவித்தாவி செல்லும் மொழியில் சிதறுண்ட கதைகளை எழுதுகிறார்.

கார்த்திகை பாண்டியன்

இவரது சிறுகதைகளைச் சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான மர நிறப் பட்டாம்பூச்சி சிறந்த சிறுகதை தொகுப்பாகும். தேர்ந்த மொழி நடையுடன் கட்டுக்குள் வைத்து கதை சொல்வது இவரது தனிச்சிறப்பு .

தூயன்

கணையாழியில் இவரது கதையை வாசித்தேன். தற்போது இருமுனை என்ற சிறுகதைத்தொகுப்பு வெளியாகவுள்ளது. முகம், இருமுனை இரண்டு சிறுகதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒவியங்கள், சிற்பங்கள் என நுண்கலைகளைச் சார்ந்து கதைகளை எழுதுவது இவரது தனிச்சிறப்பு

கே.ஜே.அசோக்குமார்

சொல்வனம், மலைகள் இணைய இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். வித்தியாசமான கதைக்களன்களை நுணுக்கமாகக் கையாளுகிறார். இவரது சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பு தற்போது வாசக சாலை விருது பெற்றுள்ளது

கிருஷ்ணமூர்த்தி

நகுலன், கோணங்கி, ஜெயமோகன், பாதசாரி, லா.ச.ரா, அசோகமித்ரன் என ஒரு பக்கமும் போர்ஹே, நபகோவ், மார்க்வெஸ், கால்வினோ என மறுபக்கமுமாக நிறைய வாசித்துத் தள்ளுபவர். பரிசோதனை எழுத்தில் அதிக நாட்டம் கொண்டவர். புதிய கதைமொழியைக் கையாளுகிறார். இவரது சாத்தானின் சதைத்துணுக்கு சிறுகதை தொகுப்புத் தற்போது வெளியாகவுள்ளது

அகரமுதல்வன்

இரண்டாம் லெப்ரினன்ட் இவரது சிறுகதைத்தொகுதி. ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். . பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதையைச் சொல்லும் இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார் , துயரத்தின் பெருவலியை பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்கு புதியவை.

கார்த்திக் புகழேந்தி

வற்றா நதி சிறுகதைத் தொகுப்பின் வழியே இவரை அறிந்து கொண்டேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர். யதார்த்த கதைகளை அதிகம் எழுதுகிறார். நேரடியான கதைகூறுதலின் வழியே உணர்வுகளை அழுத்தமாகக் கூறுகிறார்.

குமாரநந்தன்

மலைகள் இணைய தளத்தில் இவரது கதைகளை வாசித்திருக்கிறேன். இவரது பூமியெங்கும் பூரணியின் நிழல் சிறுகதை தொகுப்பையும் படித்திருக்கிறேன் பாலுறவு சிக்கல்கள், பிறழ்வுகள், உளவியல் பாதிப்புகள் பற்றியே இவரது கதைகள் அதிகம் பேசுகின்றன. வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுகிறார்

ஹரன்பிரசன்னா

பலமுறை ஹரன் பிரச்சன்னாவை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவர் சிறுகதைகள் எழுதுவார் என்று தெரியாது. அண்மையில் சொல்வனத்தில் அவரது இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். நன்றாக இருந்தன. சாதேவி என்ற சிறுகதை தொகுப்பையும் அண்மையில் படித்தேன். வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு.

காலத்துகள்


பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

-எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர்.

வாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி

Image may contain: people sitting

      சிறுகதை என்பது...சட்டென்று ஜில்லென்று தொட்டு விலகும் காலைப் பனிக்காற்றினைப் போல... அடுத்தென்ன அடுத்தென்ன எனப் பக்கங்களைப் புரட்டும் தொடர் புதினங்களைப் போலன்றி, சட்டென்று தொற்றிக்கொள்ள வைக்கும் பரவசம் அது. வருடக் குறிப்புகளோ, நாட்குறிப்புகளோ தேவைவில்லை. ஏனெனில் பலசமயம் நாம் கடந்து வந்த விசயங்கள் தான் இங்கே கண்முன் விரிகிறது.

’’வற்றா நதி’’ திரு.கார்த்திக் புகழேந்தி அவர்களின் சிறுகதைத் தொகுப்பு, மண் மணக்கும் திருநெல்வேலி வட்டார மொழிநடையில் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆசிரியரின் முதல் வெளியீடு....

நண்பர்கள், நட்பு, பால்யம், விசேசங்கள், குடும்பப் பின்னணி, கோவில் திருவிழாக்கள், பதின்பருவ ஊர்சுற்றல்கள் எனத் தான் சுற்றியதோடு நம்மையும் உடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார். தாமிரபரணியின் ஜில்லென்ற குளிர்ச்சியும், மனம் முழுதும் அப்பிக் கொண்ட தென்பொதிகைச் சாரலோடு, ஒரு சந்தோச சுற்றுப் பயணம் செய்யாலாம் ‘’வற்றா நதியில்’’.

- வாசிப்போம் வாருங்கள்

February 12, 2015 ·

வற்றா நதி – ஒரு எதிர் நீச்சல்                           மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள். இந்த கதைகளை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு கண்டிப்பாக அருகதையில்லை. ஆனால் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒவ்வொரு கதாப்பாத்திரம் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அந்த கதாபாத்திரங்கள் முழுமையாய் நம்மை ஆட்கொண்டு மோடி மஸ்தான் வித்தை போல நம்மையே அங்கே வாழ வைத்து விடுகின்றன.

பச்சை, பிரிவோம் சிந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி- இந்த நான்கு கதைகளும் நம்மை இளம்பிராயத்திற்கு இழுத்து செல்லும். இளமை துடுக்குகளிலும் காதல் பார்வைகளிலும் கார்த்திக் புகழேந்தி என்ற சிறுவன் அத்தனை சில்மிஷம் செய்கிறான். கோபியர் மத்தியில் இருக்கும் ஒரு கண்ணனை நீங்கள் ரசிக்க வேண்டுமா, இல்லை கோபிகைகளை கண்ணார காண வேண்டுமா, இந்த கதைக்குள் கொஞ்சம் மூழ்கி விட்டு வாருங்கள். கரையேறுவது கடினம்.

அப்பாவும் தென்னை மரங்களும் – நகர வாழ்க்கையில் மூழ்கி போய் விட்ட நாம் இதை படித்து விட்டு ஒரு தடவையாவது மிச்சமிருக்கும் அப்பாவின் வேஷ்டியையாவது முகர்ந்து பார்ப்போம். அவர் கட்டி சென்ற வீடு சிதைக்கப்பட்டிருந்தால் ஒரே ஒரு செங்கலையாவது தொட்டு விட வேண்டுமென்று பதறிப் துடிப்போம். அவர் வாழ்ந்த புலன்களை நீங்கள் கண்டிப்பாக சுவாசித்து விட்டு வரலாம், உத்தரவாதம் நிச்சயம்.

குடுப்பனை, பொங்கலோ பொங்கல், சுற்றியலையும் காலம், பங்குனி உத்திரம், கிராமிய சிறகுகள், சொத்து, தீபாவளி, நிலைகதவு – நகர மனிதர்களுக்குள் ஒரு கிராமத்தானை பதித்து விட்டு போய் விடும் ஆற்றல் வாய்ந்த கதைகள். நாமும் இப்படி தானே, இப்படி ஏங்கினோம் அல்லவா, அடடா, இப்படியே தான் அப்படியான மனத்துள்ளல்கள் நமக்குள் வருவதை தடுத்து விடவே முடியாது.

அரைக்கிலோ புண்ணியம், 169 கொலைகள் – நாம் பார்த்த, பார்க்கும், பார்க்கப்போகும் மனிதர்களை பற்றிய கண்ணோட்டம் இந்த கதையை படித்தப்பின் கண்டிப்பாக மாறிப்போகும். ஒரு வித குற்றவுணர்ச்சியை நமக்குள் தோற்றுவித்த புண்ணியத்தை அடைந்து விட்டு அடுத்த கதைக்கு தாவி விடுகிறார் இந்த தெருவோர நடைபயணி.. மன்னிக்க, சிறுவனாக துடிக்கும் இந்த பைலட்.

சிவந்திபட்டி கொலை வழக்கு, பற்றியெரியும் உலை – ஒரு கணம் அல்ல, அரைமணி நேரம் அசையாமல் உறைய வைக்கும் உயிர்ப்பு கொண்டவை. இவற்றை தப்பி தவறி படித்து விட்டால் மனதில் ஒரு பெரிய பாராங்கல்லை கொண்டு வந்து வைத்து விடுகிறார் இந்த எமகாதகன். யதார்த்தம் புரிபட்டு போகும்போது சமூகம் மீதான கோபம் தன்னிரக்கமாக மாறுவதை தவிர்க்க முடிவதேயில்லை.

காற்றிலிடைத் தூறலாக, வணக்கதிற்குறிய - இருவேறான எண்ணங்கள், எல்லோரையும் ஏதோ சூழ்நிலையில் இப்படி வாழ ஆசைப்பட வைக்கும். தன்னை பற்றிய சுய அலசலாகட்டும், வருங்கால மாமனாரிடத்து அறிமுகப்படுத்திகொள்வதாகட்டும், இப்படி ஒருவனை தான் ஒவ்வொரு பெண்ணும், பெண்ணை பெற்ற தகப்பனும் தேடிக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனிக்க.

உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள், லைட்ஸ் ஆப் – இளமை துள்ளலோடு சுற்றி திரிந்த கதாநாயகன் இங்கு திடீரென முதுமையடைந்து தன் பால்யங்களை கடந்து போகிறார். மனைவியின் பிரிவாகட்டும், மகனின் பிரிவாகட்டும், இரு கதைகளும் இருவேறு நடைகள் என்றாலும் ஒரே மாதிரியான தாக்கத்தில் மனதை உறைய வைத்து விடுகின்றன. இந்த எழுத்தாளர் மிக வேகமாக அறுபதுகளை தொட்டு விட்டு நினைவுகளோடு உறைந்து நம்மையும் உறைய வைத்து விடுகிறார் இங்கே.

இறுதியாக டெசி கதை – அத்தனை விதமான அவதாரங்களும் எடுத்து விட்டு இறுதியாக பத்து வயது சிறுவனாக பேயை பார்த்து உறைந்து நிற்கிறார் கார்த்திக் புகழேந்தி.

- புஷ்பராஜ் கந்தசாமி ( Pushparaj Kandaswamy )
July 21, 2016.  
There was an error in this gadget