Thursday, 18 February 2016

அகம் புறம் மரம் | குகை.மா.புகழேந்தி            குகை.மா.புகழேந்தியின் “அகம் புறம் மரம்” கவிதைத் தொகுப்பை அலுவலக நண்பரின் மேசையிலிருந்து எதேச்சையாக எடுத்து வாசிக்கத் துவங்கினேன். கட்டிடங்களுக்குள் உட்கார்ந்து ஒரு காட்டை வாசிக்கிற அனுபவத்தை தந்துபோனது அந்தக் கவிதைகள்.

            புதுவீடு கட்டுவதென்று முடிவானபிறகு, புறவாச இரண்டு தென்னம்பிள்ளைகளை நடுவதென்று முடிவானது. பருத்த கன்னுக்கு அண்ணன் பேரும், இளசுக்கு என் பேரும் வைத்து வளர்த்தோம். அத்திவாரம் கல்நிரப்பி, கட்டிடம் எழுந்தபோது அரை ஆள் உயரத்துக்கு மரங்கள் ரெண்டும் கீற்றுவிட்டிருந்தது.  கட்டிட வேலைக்காக கட்டின தொட்டியை அப்படியே பரமாரிக்க ஆரம்பித்ததால் புழங்குகிற தண்ணீரெல்லாம் மடைவழியாக தென்னம்பிள்ளையின் பாத்திக்குப் போய்விடும்.

            இந்தப்பக்கம் ரெண்டு மூணு வாழைகள், ஒரு மாங்கன்னு, கீரைச்செடி, பூசணி, முருங்கை என்று வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனைக் காயும் தோட்டத்திலே விளையத் தொடங்கியது. எல்லாம் இருந்தும் நமக்கு அந்தத் தென்னையின் மேலுள்ள அக்கரை கிறுக்குத்தனமானது. மோட்டரைப் போட்டுவிட்டால் அப்படியே வானம் பார்த்து எழும் தண்ணீர் கீழ்நோக்கி வழிகிற இடத்தில் நின்று கொண்டு குளிக்கிற போது குழாயைத் தென்னங்கன்னுக்கும் திருப்பி விட்டுக்கொள்வேன். ஆள் பாதி மரம் பாதியாகக் குளிப்போம். சோப்பு போட்டு விடவில்லை அதுமட்டும்தான் குறை.

            நிறைய வருசங்கள் போய்விட்ட பிறகு, சொந்தக்காரரொருத்தர் கல்யாணப் புகைப்படத்தில் தான் நாங்கள் இருந்த வீட்டின்  அந்த மரத்தைப் பார்த்தேன். வீடு உயரத்துக்கு வளர்ந்து நெடு நெடுவென்று நிற்கிறது. நாட்டுக்காய் பூக்கள் தள்ளி பார்க்கவே அப்படி ஒரு அம்சம். பக்கத்து மொட்டைமாடியை எட்டித்தழுவுகிறது கீத்துகள். மூக்குப் பூவுக்கு எப்படியும் அணில் வந்திருக்கும். தோட்டமெல்லாம் மிச்சமிருக்குமா தெரியவில்லை. என்னத்தையாவது காரணத்தைச் சொல்லி அந்த மரத்தைப்

போய் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கவேண்டுமென்ற நினைப்பு வந்துவிட்டுப் போகிறது. இப்படி நினைப்புகளைக் கிளறிவிட்ட புத்தகத்தை கண்ணில்ப்படும்படி விட்டுப் போன சகாவுக்கு அனுமதி இல்லாத நன்றி. எழுதின தோழருக்கு ரொம்பவும் ப்ரியங்கள்.


“மரம் சரிகிற ஓசையை
நாம் எழுப்பிய பிறகுதான்
யானைகள் ஊருக்குள்
வரத்துவங்கின”
 

இந்த வரிகள் உங்களை ஒன்றும் செய்யாமல் போனாலும், வாசித்த என்னை என்னென்னவோ செய்யத்தான் செய்கிறது. அப்புறம் அந்தப் பதிப்பகத்தின் பேர். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்னமாய் இருக்கிறது
பாருங்கள்.

-கார்த்திக்.புகழேந்தி
18-02-2015.


Tuesday, 16 February 2016

கண்ணாத்தி
ன்னைக்கு கருக்கலில் சொன்ன வார்த்தையில
இன்னவரைக்கும் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்ல பார்த்துக்க...
பழுது கிழுதுன்னு எதுவும் இல்லாத உங்கன்னத்துக்கு மேல
ரெண்டு கண்ணு இருக்குதுபார் அதத்தான் சொல்லுறேன்.
என்ன கண்ணுட்டீ அது. கூழாங்கல்ல முழுங்கிட்டு, 
தொண்டைக்குள்ள தண்ணீய புடிச்சு வச்சுக்கிட்டமாதிரி
ஈர கண்ணு. கன்னுக்குட்டிக்கு இருக்கும் பாத்தியா அப்புடி.
ஓம் பார்வையில விழாதவரைக்கும் நா பத்திரமாத்தான்டீ இருந்தேன்.
எப்ப முள்ளுக்காட்டுல சுள்ளி பெறக்க நின்னவள்ட்ட,
கொதவள வறண்டுபோச்சி, ஏ புள்ள கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிண்ணி கெடைக்குமான்னு கேட்டனோ அப்ப இருந்து
மழ பொத்துக்கிட்டு ஊத்துன கததாம்போ...
அடைமழ அன்னைக்கி சாயம் மக்கிப்போன சன்னல் கம்பில
வரிசைகட்டி நிக்கும் பாத்தியா நீர்க்குண்டு.
அந்தமாதிரி ஒரு பார்வை பார்த்தியே. செத்தேம்....போ

ஒரு நெத்திய ஏத்தி, இந்தக் கன்னத்த எக்கி வக்கனமா
நீ வீசிவிட்டுப் போற கொளுக்கட்ட
பார்வைய ஏஞ்சேக்காளிக்குப் புரிய வைக்கணும்ன்னா
ஊருக்கு நடுவாப்புல இருக்கும்  வட்டக்குளத்தில
போட்டு வெளாண்ட பரூம் சீனிக் கல்லைத்தான் நான் முங்கித் தேடணும்.
அதே குளத்துல அரப்பும் மஞ்சளும் தேய்ச்சி குளிச்சிட்டு ஈரவாடை வீசியடிக்க மண்ணுப்பாதையில விளார் விளார்ன்னு நீ நடந்து போனப்ப... உங்கால்ல இருந்து உதுந்த ஈரமண்ண காயுறதுக்கு முன்னால அள்ளிக்கிட்டுப் போய் மோந்து பார்த்திருக்கேன் தெரியுமா...
எல்லாம் ஒரு கிறுக்குத்தனம்.
தோட்டுன துண்ட தலைல சுத்திக்கிட்டு, ரசம்போன பொட்டுக் கண்ணாடியில மொகம்பார்த்துக்கிட்டே,
இரண்டு கண்ணுக்கும் நடூசா நீ
கோவிப் பொட்டு வைக்கிற அழகு இருக்கே
அத என்னத்தன்னு நா எழுதட்டும்.
ஆராம்புளில இருந்து அம்மிக்குளவி கொத்த வந்தவன்
இரண்டு கொத்துக்கு ஒருதரம் ஊர்ப்பேச்சு பேச்சு பேசுனாலும்
கைவுடாம அம்மியக் கொத்துறது மாதிரி நம்மூரு சந்தையில
எந்த கூட்டத்துக்கிடையில  நீ இருந்தாலும் யாவாரத்தப் பார்த்துகிட்டே
ஒரு இணுக்கு விலகாம விட்டு விட்டு  ஒன்னையே வேடிக்க பாப்பேன்.. பாத்தது உன்னையா ஒங்கண்ணையான்னு சந்தேகங் கிந்தேகங் கெளப்பிறாத அப்புறம் நா ஆம்புட்டுக்குவேன்.

ஒருவாட்டி பீடியெல ஆபீசுக்குப் போறப்ப டவுனு பஸ்சுலவச்சி
உங்க அத்தைக்காரி முனியடிக்கிற கதசொல்லிட்டு வரும்போது
எதுவும் நம்புறமாதிரியே யில்லன்னு அவாளுக்குத் தெரியாம
வாபொத்தி சிரிச்ச தான.. அந்தமாரிதான் ஒனக்கே தெரியாம உன் கதையெல்லாம் கேட்டுக்கிட்டே உன் கண்ணையும் கன்னத்தையும் வெறிச்சு வெறிச்சு பாத்துட்டுப் போய் ஆத்தங்கரை மண்டபத்துல கல்லு கல்லாச் செதுக்கிட்டு திரியுறேன்.
ஆனாலுங் கோவம் வந்தா என்னா மொற மொறைக்கட்டீ நீ.
கண்ணக் கண்ண உருட்டிக்கிட்டு நீ பாக்கும்போது,
சலங்க குதிக்க பந்தங்கொளுத்திட்டு வர்ர
கருப்பனுக்குக் கூட நா அத்தன பதறல.

மஞ்ச தாவணிக்கு பச்ச உடுப்பு போட்டு,
வெள்ளிக்கொலுசுல குளிச்ச ஈரம் வடிய,
ஈரத்தலைய தொவட்டி நுனி கொண்ட போட்டு,
டிங்கு டிங்குன்னு நீ திரியும் போதெல்லாம்
இந்த கண்ணாத்திய கொத்திக்கிட்டுப் போக
சந்தச்சேரில இருந்து ஒருத்தன் வருவான்னு ஒரு தெனமும் நெனைக்கல.

கல்யாணம்லாம் முடிச்சு உம்புருசம் பின்னால குனிஞ்சமேனிக்கு  கடத்தெருவத்  தாண்டித்தாண்டி உங்கம்ம வீட்டுக்கு நீ வாரப்பல்லாம் புளியமரத்துக்கு பேய் புடிச்சாப்லதான் ஆயிடுது மனசு.
மொதல்ல எளவு இந்த கண்ண கண்ண உருட்டுறத நிப்பாட்டு... 
போட்டு சாவடிக்காத...மனுசன...

-கார்த்திக்.புகழேந்தி

26-01-2016

ரோலக்ஸ் வாட்ச் | சரவணன் சந்திரன் | 2ன்ட் இன்னிங்ஸ்

           மீபத்தில் ஒரு இரண்டரை அடி உயரக் குதிரைக்குட்டியோடு சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருக்கிற காணொளியினைப் பார்த்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக அவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சந்தோஷித்துக் கொள்கிற காணொளி அது. அதே மாதிரியான உணர்வை ஒரு புத்தகம் வாசிக்கும்போதுகூடப் பெறமுடியும் என்பதை கடைசியாக நேற்றைக்கு மாலையில் வாசித்த “ரோலக்ஸ் வாட்ச்” நாவலின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன்.

             “வெள்ளி முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது”  போஸ்டர் ஒட்டின திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக ப்ரிவ்யூ தியேட்டரில் அமர்ந்து ஒரு ரசிகனாக கைத்தட்டி, விசிலடித்து, ரசித்துப் பார்ப்பதுபோல ஒவ்வொரு படிநிலையாக இந்நாவலை இதுவரைக்கும் இரண்டு முறைப் படித்திருக்கிறேன். “ஐந்து முதலைகளின் கதை” நாவல் வழியாக ரொம்ப சாதாரணமான வாசிக அறிமுகம்தான் சரவணன் சந்திரன் அண்ணனுடன். அவரது முதல் நாவலின் தாக்கத்தில் நண்பர்களிடமெல்லாம் ஐ.மு.கதையினை வாசித்துப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தேன். இந்த இரண்டாம் நாவலான “ரோலக்ஸ் வாட்ச்”-சை கையில் கொடுக்கும்போது, “பழசெல்லாம் மறந்துவிட்டு ஒரு விமர்சகப் பார்வையோடு வாசித்து எப்படி இருக்கிறதென்றுச் சொல்” என்றார். 

(இனி நாவலுக்குள்)

            ப்ளேஷர் அணிந்துகொண்டு வளையவரும் மேட்டுகுடி மனிதர்களின் களம் வாசிப்புச் சூழலுக்குப் புதியது. வலிக்க வலிக்க எளியமனிதர்களின் கதைகளைப் படமாக எடுப்பவர்கள் மாலைப் பொழுதுகளில் ஒன்றுகூடும் பார்ட்டி ஹாலின் கசியும் இருளுக்குள் நாம் நுழைந்தால் என்ன மனநிலையில் இருப்போம். முழுக்கப் பணத்தால் கட்டியெழுப்பப்பட்ட, இந்தியாவில் கோக் தடைசெய்தால் ப்ளைட் பிடித்து மலேசியா சென்று கோக் குடிப்போம் என்று திமிர்கொண்டிருக்கிற, பிறக்கும் போதே கோல்டன் ஸ்பூனுடன் வந்துகுதித்த, தாங்கள் அமர்ந்திருக்கிற பீடத்தின் நிழலைக்   கூட குனிந்து பார்க்க நேரம் செலவிடாத ஆடம்பர மனிதர்களின் உலகத்திற்குள் தன் நண்பனது அங்கீகாரத்தினால் நுழைகிற கதாநாயகனின் வார்த்தைகளிலே நாவல் முழுக்க முழுக்கப் பயணிக்கிறது.

பெரும் பணம் படைத்த மனிதர்களின் மூலம் அவனுக்குக் கிடைக்கும் அதிகார மையத் தொடர்புகள். அதிகார மையத்தின் சில்லரைத்தனமான போட்டிகளையும், பொறாமைகளையும் பொளேர் என்று ஒரு அடியாலோ, சூசகமான புன்னகையாலோ தவிர்த்துவிட்டு அவர்களுக்குத் தேவைப்படுகிறவனாகவே தன் பிம்பத்தை எப்போது கட்டிக்காக்கிற கம்பீரம். தன் தொடர்புகளைப் பயன்படுத்தி முன்னேறத் துடிக்கும் உத்வேகம். சமூகநல விடுதியில் இளங்கலை படிக்கும்போது கேண்டீன் பீஸ் கட்டக்கூட வழியில்லாத நாயகன் சர்வதேச நாடுகளுக்கும் சென்று மது, மாது மாயங்களென உங்கள் ஆடம்பரங்களை எல்லாம் நாங்களும் அனுபவிக்கப் பிறந்தவர்கள்தான் என்று காட்டும் உணர்ச்சி நிலை எல்லாமும் நாயகனை நல்லவனா கெட்டவனா என்று முடிவெடுக்கச் செய்யாமல்  அதிவிரைவு ரயில்போல நம்மை நாவலுக்கு இயங்க வைக்கிறது.

            கேண்டர்பெர்ரிக்கு இளந்தைப் பழம் மேல் மோகம் பிடித்தால் எப்படி இருக்கும். அப்படியாக மேல்தட்டு நண்பர்கள் குழுவில் இருக்கும் தன் நண்பனது கல்லூரித்தோழிக்கு நாயகன் மீது காதலும் காமமும் பீறிடுகிறது. உணர்ச்சிகரமாகத் தழுவிக் கொள்கிறார்கள். அன்பு செய்கிறார்கள். இன்னும் மிச்சமுள்ள எல்லாமும். ஆனபடியே அவள் கணவனுக்குத் தெரியாமல் இவையத்தனையும் நிகழ்கிறது. இந்தத் தொடர்பு வெளிப்பட்டுவிட்டால் நாயகனுக்குண்டான இடம் சிதிலப்படும். ச்ச்சீ... என்று தூக்கி எறிந்துவிடுவார்கள். தன் மதுக்கோப்பைகளை சியர்ஸ் சொல்லிக் கொள்கிறவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நுகர விடுவார்களா என்ன? அதை நாயகன் உணர்ந்துமிருக்கிறான். ஆனாலும் தன் இருப்பைத் தக்கவைக்கவும், தன்னாலும் இவர்களை வெல்ல முடியும் என்ற போதையை நீட்டிக்கவும் கூட கேண்டர்பெர்ரியின் கூடல் அவனுக்குத் தேவையாய் தொடர்கிறது. கேண்டர் பெர்ரிக்கு திவ்யா என்றும் மாருதி ஸ்விஃப்ட் என்றும் பேர்.

             மேல்த்தட்டு வளையத்திற்குள் நாயகனை அறிமுகப்படுத்தி, தொடர்புகளை வளர்க்க உறுதுணையாய் இருந்த நண்பன் சந்திரன் நாயகனுக்கு ஒரு கடிவாளம் போல் அமைகிறான். அவனது காதலி மாதங்கி இன்னும் நெருக்கமான அன்பைச் சிந்தும் தாயாகவும் தெரிகிறாள். நாளடைவில் சந்திரனின் அனுசரணை நகைக்கடையில் இருக்கும் சிசிடிவி போல  நாயகன் பொருளாதார வளர்ச்சியின் மூலம் உயரங்களை அடையும் போதும் தொடர்வது அவனை உறுத்துகிறது. இந்தக் கடிவாளத்தைப் பிய்த்து எறிய முடியாது. அதேகனத்தில் பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. மேல்த்தட்டுக் குழுவினர்களிடையே சந்திரனுக்குக் கிடைக்கும் அதியுன்னத வழிபாடு நாயகனுக்குக் கிட்டுவதில்லை. ஆனாலும் அவன் மரியாதைக்குரிய இடத்தில் தான் இப்போதுவரை இருக்கிறான். அந்த மரியாதை சந்திரன் அளவுக்கானதில்லை. இந்த இடத்தில் நிச்சயம்  ‘யார் கதையின் நாயகன்?’ என்ற வேறுபாட்டை நாம் உணர முடியாது. தன் வேட்டை எல்லையைப் பாதுகாக்க வேண்டிய வேங்கை எதிர்க்காட்டின் மானோடு கள்ளமாய் ஒரு தொடர்பு வைத்திருக்கும் காரணத்திற்காக  “லயன்ஷேர்” சிங்கங்கங்களிடம் உதைபடவும் வேண்டுமா?

            முழுக்க முழுக்க பழுப்புக் கறைகள் கொண்ட ஒருவனது கதை இது. ஒருவனது கதையெல்லாம் இல்லை. இது ஒரு சமூகத்தின் கதை. அடிமட்டத்திலிருது மண்ணைக் கிளர்ந்துகொண்டு முளைவிடுகிற விதையின் கதை. போட்டிச் சமூகத்தில் அதிகார மட்டங்களுக்குள் அனாயாசமாக நுழைந்து, பிறகு தன் எல்லைகளை நிர்ணயிக்க நீங்கள் யார் என்று அவர்களுக்கே சவால் விடுகிற கதை. வேங்கையின் நியாயங்களை யாரும் புரிந்துகொள்ளப் போவதில்லை, ஆனாலும் வேங்கை எவரையும் பந்தாடும் வலுபடைத்ததென்று நிரூபிக்கத் துடிக்கின்ற கதை. இதையெல்லாம் கடந்த அரை நூற்றாண்டாக செல்லுலாய்டு திரைகளில் அப்பழுக்கற்ற நாயகன்களே தொடைதட்டி, சவால்விட்டு சாதனையாளனாவதாகக் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இங்கே ஆடுகளமே வேறு. ஆடுவது வெள்ளாடு அல்ல வேங்கை.

            ஏன் இந்த நாவலுக்கு ரோலக்ஸ் வாட்ச் என்று பெயர் வைத்திருக்கிறார் என்பதற்கு கதைப் போக்கிலே விளக்கமும் வருகிறது. அந்த விளக்கம் ஒன்றே முழுமொத்தமாய் நான் இவ்வளவு எழுதினதற்குப் போதுமானதாக இருக்கிறது. முதல் பத்திகளில் சொன்னதுபோல ஒரு குதிரைக்குட்டி கண்முன்னே வளர்கிற நேரத்தில் நானும் அதன்கூடேவே வளர்ந்தது போல இருந்தது. பசியும் தன்மானமும் அடிவயிற்றைக் கிள்ளுகிற மேன்சன் காலத்தினை வாசித்துக்கடக்கும் போது எனக்கும் பசி துருத்தியது. அரசு எந்திரங்களின் ஊடுதுளைகளுக்குள் நுழைந்து, அதிகார மையங்களின் பெருந்துணையோடு கொத்தாக வெற்றிக்கனியைப் பறிக்கிறபோது நானும் காலர்களை உயர்த்திக் கொள்கிறேன். அதற்காக மோகங்கொண்டு காமம் மீறுகிற காட்சிகளை எப்படி ரசித்தாய் என்று கேட்காதீர்கள். அந்தப் பெயர் எழுதி முத்தமிடுகிற காட்சிக்குக் கொடுக்கும் விளக்கம் ஒன்று போதும். அள்ளுகிறது.

            இந்த நாவலில் நான் மிக முக்கியமாகச்  சொல்ல நினைப்பது அதன் வேகம் தான். ஒரு நாவல் எல்லா தளங்களையும், எல்லா வாசகனையும் எப்போதும் திருப்திப் படுத்த வேண்டியதில்லை. அது இலக்கியத்தின் வேலையும் இல்லை. ஆனால் இந்நாவல் நிறைய விசயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிச் செல்கிறது. அதையெல்லாம் பட்டியல் போட்டுக்கொண்டு நான் உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

           நினைத்த மாத்திரத்தில் ஸ்விட்சைத் தட்டினதும் பொறிகள் இயங்க, கம்பி வடங்களில் உயரெழுந்து, வளைந்தும், நிமிர்ந்தும், கீழிறங்கிச் சாடியும்  நம்மை மிரட்டுகிற  “ரோலர் கோஸ்டர்” அனுபவத்தை  “ரோலக்ஸ் வாட்ச்” நாவலை வாசிக்கும் போது பெறமுடியும். இரண்டாவது இன்னிங்க்ஸிலும் ட்ராவிட் அடிக்கும் சதம் எத்தனை நுணுக்கமானதோ அத்தனை நுணுக்கம் இந்நாவலில் உண்டு என்ன ஒன்று பேட்டிங் ஸ்டைல்தான் ஆரம்பகால ஷேவாக்கை நினைவுபடுத்துகிறது.  அதைச் சரியாக பிரதிபலிக்க ஒரேயொரு சொல்தான் என்னிடத்தில் உள்ளது

 “அடிபொளி”

-கார்த்திக்.புகழேந்தி.
16-02-2016
             


விருது வாங்கிய பொழுது...

            கடந்த ஞாயிற்றுக்கிழமை நேமத்திற்குச் சென்றிருந்ததாக எழுதி இருந்தேனில்லையா. விசயம் வேறொன்றுமில்லை. வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நிறைய தரப்புகளில் இருந்து உதவிகள் பெற்றுக் கொண்டிருந்தோம். அப்படியாக லதா அருணாச்சலம் அக்கா கைகாட்டியதின் பேரில் அவரது தோழியார் ஒருவரது வீட்டில் போர்வைகளும் கொஞ்சம் துணிமணிகளும் வாங்க நானும் கவிமணியும் நேரில் சென்றிருந்தோம்.

            கூடவே, சாப்பாடு பொட்டலம் வாங்க அவகாசமில்லை யாருக்காவது சமைத்துக் கொடுக்க முடியுமென்றால் உதவட்டும் என்று பக்கத்து மளிகையில் ஒரு மூட்டை அரிசியும் வாங்கிக் கொடுத்தார். அவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அறிமுகமான நண்பர் மனோகர் என்பவரது உதவியுடன் 250பேருக்கு மதிய உணவாகச் சமைத்து வழங்கப்பட்டது. இதெல்லாம் பழங்கதைதான்.

            அன்றைக்கு அரிசி உள்பட உதவிகளை வழங்கினவரின் சிநேகிதர் நேமத்தில் மெம்பராக இயங்குபவர் போல. கல்கி மாணவ சேவா சமிதி சார்பில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 100பேருக்கு விருது வழங்கும் திட்டத்திற்கு என் பெயரையும் பரிந்துரைத்திருக்கிறார். லதா அக்கா எடுத்ததுமே அவன் இதுக்கெல்லாம் வரமாட்டான் இருந்தாலும் கேட்டுப் பார்க்கிறேன் என்றிருக்கிறார்.

            இதைச் சொல்லியே போனில் உன் நம்பர் கேட்கிறாங்க குடுக்கட்டுமா என்றதற்கு ககக போங்கள் என்றேன். ஆனாலும் நேமம் ஆசிரம நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று காயத்ரியிடம் சொன்னதுமே, “மக்கா நல்லா இருப்ப இப்படித்தான் நீயா நானாவுக்குப் போன வில்லங்கத்தை வீதியில் இழுத்துவிட்ட, இங்க போ ஆனா எதையும் எழுதமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று சூடத்தை பற்றவைத்தாள். டோட்டல் டேமேஜ்.

            சரி சத்தமில்லாமல் போய்த்தான் பார்ப்பொம் என்று காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பிப்போனேன். அரங்கம் நிறைந்த திருவிழாவில் பிரசங்கங்கள் முடிந்ததும் விருதுகளை வழங்கினார்கள். டிராபிக்.ராமசாமி தொடங்கி, முன்னாள் நீதிபதி, கமிசனர், கவுன்சிலர், வார்டு மெம்பர், சீரியல் நடிகை, திரைப்பட இயக்குனர், தன்னார்வலர்கள் என்று கலவையான மக்கள் நிறைந்திருந்தார்கள். ஆனால் ஒரு விசயம் பிடித்திருந்தது. எல்லோரையும் ஒரே மாதிரி அணுகினார்கள். யாரையும் தலையில் தூக்கி வைத்து ஆடாமல் ஒரே மாதிரியான விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

            சனி ஞாயிற்றுக்கிழமை இங்கே மனக் கஷ்டங்களிலிருந்து விடுபட ஒரு க்ளாஸ் நடைபெறுகிறது. நீங்களும் கலந்துகொள்ளுங்கள் பீஸ் 1050/- என்று ஒருத்தர் மட்டும் வகுப்பெடுத்தார். மனக்கஷ்டம் உள்ள யாரையாவது பார்த்தால் நிச்சயம் அனுப்பி வைக்கிறேன் என்றுமட்டும் சொல்லிவிட்டு விடைபெற்றேன். சூரிய வெளிச்சம் போல் படமிருந்த அட்டை ஒன்றை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தார். அதற்கு காசு ஏதும் கேட்கவில்லை என்பதால் வாங்கிக்கொண்டேன். அந்த “கோல்டன் பால்” தான் கடவுள்களின் கடவுளாம். கடவுள்களுக்கெல்லாம் சக்தி கொடுப்பதன் முன்னால் நீங்கள் அமர்ந்திருக்க புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்றார். என்ன ஒன்று கடைசி வரைக்கும் பகவானை வீடியோவில் சைடு வ்யூவில் மட்டும் தான் காட்டினார்கள் என்ற துயரம் தான் என்னால் தாளவே முடியவில்லை.

-கார்த்திக்.புகழேந்தி
16-02-2015.
உறுமீன் வரும் வரை...
            வேளச்சேரியில் மூன்றாவது மாடியில் தன்னந்தனியாக ஒருதனி வீடு வாடகைக்கு எடுத்து, ரொம்ப சந்தோசமாகக் குடிபுகுந்து பத்து நாட்கள் ஆகிறது. சமையல் உபகரணங்கள் வாங்கவேண்டிய அவசியத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்ததால் சாப்பாடெல்லாம் ஹோட்டல் வசம்தான்.

            நேற்றைக்கு திருமழிசை தாண்டி நேமத்தில் நடந்த ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது போரூர் ஏரிக்கரையில் மீன் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. சரி இன்னைக்கு வீட்டுச் சாப்பாட்டுக்கு வழிபண்ணுவோம் என்று ஸ்ரீ அக்காவுக்குப் போன் அடித்தேன். வருவதற்கு சாயங்காலம் ஆகிவிடும் பிரச்சனை இல்லையா என்றார். ஒரு சந்தேகத்தோடு மீன் வாங்கும் ஆசையைக் கைவிட்டுவிட்டு. நண்பனது அலுவலகத்துக்குப் போய் கொஞ்சம் அரட்டைகளைப் போட்டுவிட்டு இரண்டு பேருமாக மாலையில் வேளச்சேரிக்குத் திரும்பினோம்.

            காதலர் தினக் கொண்டாட்டத்தில் கடற்கரைச் சாலை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. சரி பட்டினப்பாக்கத்துக்குல் வண்டியைத் திருப்புவோம் என்று உள்ளே நுழைந்தால், மறுபடியும் மீன்கள். இது ஆகிறதில்லை. ஹோட்டல் சாப்பாட்டுக்குச் செத்த நாக்குக்கு கொஞ்சம் உயிர்ப்பு கொடுப்போம் என்று களமிறங்கிவிட்டோம். அடிச்சு பேசின பேரத்தில் நல்ல முழங்கை நீளத்துக்கு இரண்டு வரி சூரை மீனை வாங்கிக் கொண்டு மறுபடியும் அக்காளுக்குப் போன் அடித்தால் நாங்கள் வர ராத்திரிக்கு மேலே ஆகிடும் என்று விட்டார்.

            பார்த்தோம் விடு வண்டியை என்று சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தோம். ஒரு இண்டக்ஸன் ஸ்டவ், தட்டுமுட்டுச் சாமான்கள், எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தோம். உலகத்திலேயே மீனை வாங்கி வச்சுட்டு அடுப்பும், அரிசிபருப்பும் வாங்கப்போனவன் நீதாண்டான்னு யாரோ முணங்குவதுபோலக் கேட்டது.

            பக்கத்துக்கடையில் அரிசி, மசாலாப்பொடிகள், வெங்காயம், தக்காளி எல்லாம் வாங்கியாச்சு, குடிக்கத் தண்ணீர் ஒருசொட்டு இல்லை. பிறகு தண்ணீர் கேனுக்கு ஒரு ஓட்டம் ஓடி, மூன்றுமாடிக்குத் தூக்கிவந்து சமையலைத் துவங்கினேன். இந்த அலைச்சல்களுக்குள்ளாகவே மணி பத்தரை தாண்டிவிட்டது.

            வீடு முழுக்க மணக்க மணக்க மீன் குழம்பு வாசனை அடித்தபோது மணி பதினொன்று சொச்சம். நல்ல பசியோடு உட்கார்ந்து சுடச்சுட சோறும் மீன்குழம்பும் வைத்துச் சாப்பிட்டோம் நானும் நண்பனும். மீன் குழம்பு அட்டகாசம். என்ன ஒரு உருண்டைத் தேங்காய் அரைச்சு ஊத்தியிருந்தால் இன்னும் அடி பின்னி இருக்கும்.

            இனி நா நிறைக்க கைச்சமையலில் சமைத்துத் தின்கலாம் ஏதாவது ஒரு இக்கட்டில்தான் இந்தமாதிரியெல்லாம் அரக்க பரக்க முடிவெடுத்து காரியமும் கச்சிதமாக முடிகிறது. அதிலேயும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது. சமாளிப்போம்.

-கார்த்திக்.புகழேந்தி
15-02-2016


Saturday, 6 February 2016

வேர்மண்டிய கதைகளைத் துரத்துகிறேன்....

நாட்டார் வழக்காற்றியல் மீதும், தொன்மங்களின் மீதும் ஒரு பெரிய ஈடுபாடும், அதன் கதைகளைக் கேட்டு சிலிர்ப்பதில் நிறையவே பேராசைகளும் இயல்பிலே எனக்குள் இருந்திருக்கிறது.
ரெண்டு வாரம் முன்னே புத்தக வெளியீடு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நானும் அம்மையும் நண்பனும் அவனது மனைவியும் சூழ்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கையிலிருந்த மண் கலயத்தை இடது தொடையில் பிடித்துக்கொண்டு எட்டு வயசில்கேட்டுப் பழகின பெரும்புலையன் கதைப்பாடலை வில்லுப்பாட்டு மெட்டாகவே பாடி, தாளம் போடுக் கொண்டிருந்தேன். அம்மை அப்படியே அதிசயித்துப் போனாள். "இதெல்லாம் எப்படிமா நியாபவம் வச்சிருக்க" என்றாள்.
எனக்கே தெரியவில்லை. அறுவடைக்குப் பிறகு, காய்ந்த அடி வைக்கல் பிட்டத்தில் குத்த, சாக்குப்பை விரித்து, ராத்திரி கொடையில் கொட்டக் கொட்ட விழித்திருந்து வில்லுப்பாட்டு கேட்டபோதே அது அடியாழ மனசில் ஊறித் ததும்பியிதுக்க வேண்டும்.
கேமிராவைத் தூக்கிக் கொண்டு காடுமேடாகச் சுற்றி அலையும் போது எங்காவது ஒரு நாட்டார் தெய்வத்தின் சிலையைக் கண்டுவிட்டால் போதும் சுற்றிச்சுற்றி வந்து அதன் பேரென்ன ஊரென்ன கதையென்ன என்றெல்லாம் விசாரிக்காமல் உறக்கம் பிடிக்காமலிருந்தேன்.  சிறுதெய்வ மரபுகளோடு ஒரு சங்கிலித்தொடர்பு வளர்த்துக் கொண்டே போனேன். போகிறேன்.
[அப்பேர்பட்ட மனம் தான் வெட்டும்பெருமாளாக வெளிப்பட்டிருந்தது. அந்தக் கதையைத் தான் ஆரஞ்சுமுட்டாயில் முதலாவதாக வைத்துக் கொண்டேன்]
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாஞ்சில் நாடு என்றெல்லாம் அலைந்து திரியும்போது சின்ன கல் ஒன்று செதுக்கிக் கிடந்தாலும் 'என்னமாயும்' இருக்குமோ என்று பித்துக் கொண்டிருந்தேன். கூடே வருபவரை வதைக்கிறோமே என்றெல்லாம் எண்ணமே கிடையாது.
"வெட்டும் பெருமாள்" எழுதுகிறபோது, அங்கங்கு நிறைய இடங்களில், இன்னார் இவரென்று சாதிப்பேர்போட்டு எழுதுகிறேன் என்று நண்பன் ஒருத்தன் வருத்தத்தோடு சொன்னான். விதையில்லாத பருத்தியை விளைச்சலெடுக்க எனக்கு இன்னும் பழக்கம் போதவில்லை. எது எப்படி கேட்டுப் பழகினேனோ அதை அப்படியே எழுதுகிறேன் மற்றபடி ஒன்றுமில்லை.
இப்போது வேலைவெட்டிக்கு ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கிறேனென்று பெரியம்மைக்கு ஒரே களிப்பாக இருக்கிறதாம். "கால்காசானாலும் கவர்மெண்டு காசு" என்ற மனநிலை அவருக்கு உண்டு.
"சின்னதா ஒரு கடை கண்ணியைப் போட்டு கண்ணுக்கு முன்னேயே வந்து உக்காந்துக்கோயேன். இந்த வீட்டை உம்பேருக்கு எழுதி வச்சுட்டு என் சீவனை மூட்டைக் கட்டிக்கிறேன்" என்று கூட இறங்கி வந்துபார்த்தார். நான் கொஞ்சம் சொல்பேச்சுக் கேக்காதவனாகவே உருப்பட்டுவிட்டேன். இப்பவும், ஊர்சுற்ற கொஞ்சம் காசு சேர்க்கணுமே என்றும், கொஞ்சம் எழுதக் கிடைக்குமே என்றும்தான் ஆசையாசையாய் வேலைக்குப் போகிறேன்.
எழுத நினைத்ததே வேறு. இங்கே சுயப்புராணம் போய்க் கொண்டிருக்கிறது. இப்படி ஊரூராகச் சுத்தினபோது மனசுக்கு ரொம்ப பிடித்துப் போன ஊரென்றால் அது நாஞ்சில் நாடுதான்.
பார்மாசூட்டிகலில் ஒரு அஃகன்னா கூடத் தெரியாதவன் நாகர்கோயிலில் முழம்போட்டுக் கொண்டிருந்தேன். உயிருக்கு உபாத்தியம் பண்ணுகிற வேலை. சாகக்கிடக்கிறவனுக்கு கோல்ட் செய்ன் (cold chain) மருந்துகளை அதன் குளிர் வாடும் முன் கொண்டுபோய் டெலிவரி கொடுக்கிற வேலை. வடசேரியில் வண்டியை உதைத்தால் இருபது நிமிசத்துக்கெல்லாம் தக்கலை ஆசுபத்திரிக்குள் நுழைந்திருக்க வேண்டும். இப்படி பத்மனாபுரம், திங்கள் சந்தை, மார்த்தாண்டம், குலசேகரம்,கருங்கல் திருவட்டார், நித்திரவிளை வரைக்குமாக வள்ளியூர் தொடங்கி திருவனந்தபுரம் ரோடுகளை சுற்றித் திரிகிறவேலை. திருநெல்வேலிக்காரனுக்கு இருட்டுக்கடையில் அல்வா கிண்டுகிற வேலை கிடைத்த மாதிரி.
நாகர்கோயிலின் சந்து பொந்து எல்லாம் பழக்கமாகி இருந்ததும் போன வேகத்தில் திரும்ப ஆபீசுக்கு வருகிற பழக்கம் மட்டும் பழகவே இல்லை. சுசீந்திரம் தாணுமாலயன் இடது பிரகாரத்தில் வலது வரிசை பதினாறாவது கல்த்தூணில் இப்படி ஒரு நிர்வாண புடைசிற்பம் இருக்கிறது என்று துல்லியமாய்ச் சொல்லுகிற அளவுக்கு அங்குள்ள கோயில் குளங்களைச் சுற்றுவேன். அப்படி நான் அசந்த ஊர் குமாரகோயில். தக்கலைக்குப் போகும் வழியில் மேலே பாலத்தில் ஆறு ஓட கீழே சாலை போகுமே அதே ஊர்தான்.
குமார கோயிலுக்கு வேளிமலை முருகன் கோயில் என்று பேருண்டு. வேளிமலை என்பது வேளிர் மலை. [ஆய்குல வேளிர் அண்டிரன் கல்வெட்டு கிடைத்த ஊர்] சங்க காலத்தில் ஆய் குலத்தின் ஆட்சிக்கும், பிறகு சேரர் கைக்கும், பாண்டியர்களின் கப்பத்திற்குட்பட்டும், திரும்ப திருவிதாங்கூர் மன்னர் கைக்கும் வந்த ஊர்.
நாஞ்சில் நாட்டில் இன்றைக்கு அழைக்கப்படும் ஒவ்வொரு ஊர்ப்பெயருக்கும் பின்னாலே ஒரு பெரிய சரித்திரத்தின் கிளைக்கதைகள் வேர்பிடித்திருக்கும். அந்த பழமையைக் காக்கும் நாஞ்சிலின் புராதனத் தனம் தான் மனத்தில் ஒட்டிக் கொண்டது.
நன்றாக நினைவில் இருக்கிறது. எட்டுவீட்டுப் பிள்ளைமாரிடமிருந்து தன் உயிரைக்காக்க தானே மன்னர் வேசம் கட்டிப்போய் உயிர்நீத்த கோயில் பூசாரியின் மகளான பார்வதிக்கு மன்னன் மார்த்தாண்ட வர்மன் கொடையளித்த ஊர்தான் இன்றைய "பார்வதிபுரம்" என்பதுதான் நான் முதன்முதலில் கேட்ட நாஞ்சில்நாட்டுக் கதை.
அதன் பிறகே மார்த்தாண்டனையும், எட்டுவீட்டுப் பிள்ளமாரையும், தாய் வழி அரச மரபுகொண்ட வழக்கத்தையும், உதயகிரி கோட்டையையும், டச்சுத் தளபதியையும், முப்பந்தல் இசக்கியையும், பி.எச் டேனியல் பிறந்த அகஸ்தீஸ்வரத்தையும், தோப்பிலின் தேங்காய்ப் பட்டணத்தையும், மண்டைக்காடு கலவரத்தையும், தோல்சீலைக் கழகப் போராட்டத்தையும், அய்யாவழி வைகுண்டரையும், மூக்காண்டியாகப் பிறந்து ஜீவானந்தமாகிய தோழர் ஜீவாவையும் படித்தேன். பழசுகளின் பின்னால் பின்னப்பட்ட கதைகளையும் தேடியலைந்தேன்.
குமாரகோயிலுக்குப் பக்கத்தில் மேலாங்கோட்டு அம்மன் கோயிலின் மேலே ஒரு யட்சி இருக்கிறாள் என்று சக ஊழியர் ஆறுமுகம் சொல்லக் கேட்டதும் அங்கே ஒரு பௌர்ணமி நாளில் போயிருந்தோம். வாயில் ரத்தம் ஒழுக, வெண் கண்களுடன் நின்ற அவள் கதையை சங்கரலிங்கக் கோனார் சொல்லிமுடித்தபோது, அது அவ்வளவு இறுக்கத்தைத் தந்தது எனக்குள்.


தென் சேரநாடாக அழைக்கப்பட்ட இப்பகுதியில் இன்றைய இரணியலைத் தலைநகராகக் கொண்டவன் பாஸ்கர ரவிவர்மன். அவனைத்தான் ராஜராஜ சோழன் வெற்றிகொள்கிறான். பிறகு சோழர்குல வீழ்ச்சியினால் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் வருகிறது இம்மண்டலம். ராம வர்மன் என்ற மன்னன் இரணியலில் இருந்த தலைநகரை முதன்முதலாக பத்மநாபுரத்துக்கு மாற்றுகிறான்.
அவன் காலத்தில் சுசீந்திரன் கோயில் திருவிழாவில் கண்ட நடன மங்கையை மணந்து பட்டத்து அரசியாக்குகிறான். சேர மரபில் அரசனுக்கு உடன்பிறந்த தமையாளின் மகனே அடுத்து ஆட்சிக்கு வர வேண்டியவன். மற்றபடி ராணி என்றாள் அது மன்னனின் தாய் மட்டும் தான். (பத்மனாபுரம் அரண்மனையில் மன்னர் அறை அருகிலே அம்மா மகராணி அறை இருக்கும்).
நாட்டியக்காரியாக வந்த அபிராமியின் வாழ்நிலம் திருநெல்வேலியாக இருந்தபோதும் பூர்வீகம் குமாரகோயில். பழைய ஆய்குல வேளிர் வழி வந்தவள் அவள். ராம வர்மனுக்கும் அவளுக்கும் மூன்று பிள்ளைகள் பிறக்கிறார்கள். இரண்டு மகன் ஒரு மகள்.
ராம வர்மனின் மகள் அழகுக்கும், நெல்லை மண்ணின் பூர்வீகத்தில் ஒரு இளவரசி பிறந்திருக்கிறாள் என்ற களிப்பிலும் பொன்னும் சீரும் கொடுத்து பெருமைபட்டுக் கொள்கிறார்கள் ஆய்குல வழி வந்த திருநெல்வேலிக் காரர்கள். அதாவது எனக்கு ஏதோ ஒருவழியில் தொடர்புடைய முப்பாட்டன்கள்.
ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டிய தன் மகன் மார்த்தாண்ட வர்மனை புறந்தள்ளிய கோபத்தில் பொறுமுகிறாள் ராம வர்மனின் சகோதரி கார்த்திகை அம்மையார். அவள் கோபம் பூவாரியாகி (அம்மை) ராம வர்மனை நோயில் தள்ளிச் சாகடிக்கிறது.  மன்னர் மறைவுக்குப் பின், பட்டத்தரசியையும் அவள் பிள்ளைகளையும் தூரத்தள்ளிவிட்டு மார்த்தாண்ட வர்மன் ஆட்சியேற்கிறான்.
மதுரை ராணி மீனாட்சி தயவில் ஆய்குல வாரிசுகளான மகன்கள் இருவரும் மார்த்தாண்ட வர்மனிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறார்கள். இதற்கு பூர்வீக குடிகளும் நாடார் இன மக்களும் உறுதுணை புரிகிறார்கள்.
ராம வர்மனின் இளைய மகளோடு ரகசிய உறவு வளர்த்துக் கொண்ட மார்த்தாண்டன் அவளது அண்ணன்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு பாதி தேசம் மட்டும் தந்தால் போதும், அதற்கு நமக்குப் பிறக்கும் பிள்ளையே உதவும் என்று மனசைக் கரைக்கிறான்.

அதே நேரம் மதுரை ராணி மீனாட்சி சந்தாசாகிப்பின் கயமையில் சிக்கி மீனாட்சி விஷம் குடித்து மாய்கிறாள். இந்த குழப்பத்தையும், சந்தா சாகிப் ஆதரவையும் பயன்படுத்தி கூட்டாளிகளோடு இணைந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றுகிறார் மார்த்தாண்டன்.  அதே வேகத்தில் ராமவர்மனின் புதல்வர்கள் இருவரையும் சமரசம்பேச அவைக்கு அழைத்துவந்து கொல்கிறான்.
விசயமறிந்த தங்கையானவள் மார்த்தாண்டனை நேரே கண்டு, தன்னை நேசித்து ஏமாற்றியதோடு, அனாதையாக்கிய கோபத்தோடும் அவன் கண்முன்னே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு வாய் வழிந்த ரத்தத்தை அவன் முகத்தில் உமிழ்ந்துகொண்டே சாகிறாள். இவள்தான் குமாரகோயில் மேலங்கோட்டில் நாங்கள் கண்ட யட்சி.
சங்க ஆய் வேளிர் குலத்தில் பிறந்து தாய் தகப்பன் உடன்பிறந்தவர் எல்லோரையும் இழந்த அவள் எரியூட்டும் பொட்டல்காட்டில் உறைந்து, மார்த்தாண்டனுக்குப் பிறந்த பிள்ளைகளை பலிகொள்கிறாள். நேசித்த பாவத்துக்கு மார்த்தாண்டனை மட்டும் ஒன்றும் செய்யாமல் உக்கிரம் தீராது யட்சியாக பரிணாமங் கொள்கிறாள்.
இன்றைக்கும் அண்ணன் தம்பியர் இருவரையும் நாடார்குல மக்கள் வழிபடுகிறார்கள். இடையர்குலத்தினர் கார்பிடித்து வந்து யட்சியைக் கும்பிட்டுப் போகிறார்கள். பெருமூச்சோடு கதையை முடித்த கோனார் அண்ணாச்சிக்கு நாக்கு வறண்டிருந்தது. செம்புக் கலயத்தில் மோரைக் குடிக்கக் கொடுத்தார். மூன்று வருசம் உதிர்ந்து போய்விட்டது.
நான் வழக்கப்படி கதை மாந்தர்களின் பெயர்களைத் தாங்கிய ஊர்களுக்கு வலசை போய்க்கொண்டே இருக்கிறேன்.  இந்த வீதிக்கு என்ன காரணப் பெயர் இருந்திருக்கும் என்று அறிகிறதில் என்னத்தான் அப்படி ஒரு பேராசையோ எனக்கு....
-கார்த்திக். புகழேந்தி
06-02-2016


Tuesday, 2 February 2016

அரவம் | நாகம்| சர்ப்பம்| பாம்புகள்

               சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம். அது வழக்கம்தான் என்றாலும், இன்றைக்கு சர்ப்பங்கள் குறித்து அவள்தான் தொடங்கினாள். பாலா அண்ணனின் பதிவில் என் பின்னூட்டம் பார்த்துவிட்டு, நாகங்கள் பற்றி என்ன நினைக்கிறாய் என்றாள். தூங்கப் போகிற நேரத்தில் இவளொருத்தி என்று திட்டிவிட்டு போனை வைத்தேன்.

            கண்மூடின திசையெல்லாம் அரவ அசைவு தான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. சார்ஜர் ஒயர், ஹேல்டரில் தொங்கும் இடுப்பு பெல்ட், கொடிக்கயிற்றின் மிச்சம், புது ட்யூப் லைட்டின் உறை என எல்லாம் பாம்புபோல நெளிகின்றன.  திட்டிக்கொண்டேன்.கேட்டிருக்காது அவளுக்கு. பாம்புக் காதில்லை. கண்தான் கொஞ்ச(சு)ம் கழுகு.

இந்தக் காலையில், நாகங்கள் பற்றி, நாக நெடுந்தீவு பற்றி, நாகர்கள் பற்றி ஏன் நாகர்கோயில் பற்றிகூட வாசித்தது, கதைகேட்டதெல்லாம் நினைவுக்குள் ஓடினது.


            பாண்டவ சகோக்கள், நாகர்களின் காட்டை அழிக்க, அங்கே மயனால் கட்டப்பட்ட  “இந்திரப்பிரஸ்த மாளிகை”.  நாகர் உலகம் புகுந்து நஞ்சு குடித்து வீராதிவீரனான பீமன் இப்படி இதிகாசங்கள் ஒருபக்கம்.

            ஊர்க்காட்டில் பாம்பின் வால் பிடித்து, தலைசுற்றி அடித்து இன்புற்ற சேக்காளி நினைப்புகள் இன்னொரு பக்கம். இப்படி பல கிளர்ச்சிகள். ஒருதடவை பனிவாடாத நுனி கருக்கலில் வயலுக்குப் போன தங்கையா ஆசாரியைப் பாம்பு கொத்திவிட, வெள்ளக்கோயில் மருத்துவச்சி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். இப்போதுதானே அச்சும்ன்னு தும்மினாலே ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள்.

            மருத்துவச்சி வீடு வருகிற வரைக்கும்,"அந்தப் பாம்பைக் கொன்னுடாதீங்கய்யா, நாந்தான் தெரியாம வால் மிதிச்சுட்டேன்" என்று அனத்திக்கொண்டே போனாராம் ஆசாரி. சம்சாரிகளை வயல் எலிகள் படுத்தும் பாட்டுக்கு பாம்புகள்தான் நிவாரணம். "நல்லது போகுது கொஞ்சம் நின்னுப் போப்பா" என்பார்கள்.
இங்கே "நல்லது" என்பது நல்லப்பாம்பு. சக்கர வளைவு தலை அடையாளம்.

            ராசி, நட்சத்திரம், பெயர்க்காரணங்கள் வைத்தெல்லாம் பாம்பை அடிக்காதவர்கள் உண்டு. ஆயில்யக் காரர்கள் பாம்பை அடிக்காதார். நானும் ஆயில்யமாம். முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஏழெட்டு பாம்புகள் உயிர் பிழைத்திருக்கும்.  நாகராஜா, நாகலிங்கம், நாகலெட்சுமி பெயர்கொண்ட ஆட்களை  பாம்பு தீண்டிக் கேள்விப் பட்டதில்லை. அவர்களும் பாம்புகளை அடித்தும் பார்த்ததில்லை.

            சின்ன வயசில் பாம்புன்னு சொல்லாதே "பூச்சி"ன்னு சொல்லு என்று எங்கள் வாயில் அடித்த விஜயா அக்காளை நினைத்துக் கொள்கிறேன். என்னமாதிரி ஒரு ஏமாத்துத்தனம். அவசரத்துக்கு பூச்சி பூச்சி என்று கத்தி ஆளைக் கூப்பிடுவதற்குள் ஒரு காட்டு காட்டிவிட்டுப் போய்விடாதா. அரவத்தை ஒரு துண்டுமாதிரி சுழற்றி விளையாடுகிற பிள்ளைகளை திட்டுவிளையில் வசித்த நாட்களில் பார்த்திருக்கிறேன். திட்டுவிளை அமரர் ஜீவானந்தம் பிறந்த ஊர். அங்கே ஓடைப் பாம்புகள் ஏகப்பட்டது பார்த்திருக்கிறேன்.

            இத்தனை காலத்தில் நான் பார்த்ததிலே 'பெரிய்ய்ய்ய்ய" சர்ப்பத்துக்குச் சொந்த ஊர். கோழிக்கோடு. அப்போது லாரி ஓட்ட வேணும் என்று ஒரு பேராசை. ஓட்டியும்விட்டேன். சென்னை, சேலம், கோவை வழியாக வாளையார் நுழைந்து, கோழிக்கோட்டில் சரக்குகள் இறங்கின பிறகு, (சரக்கு என்ன என்பது இங்கே ரகசியமாகவே விடப்படுகிறது) ஊர்திரும்பும் வழியில் "மலையாளக்கராவில்" ஒரு குளியல் போடலாம் என்றார் மாமன். லாரியை ஒதுக்கிவிட்டு நதிக்கரையில் ஊறுகிற தமிழகத்து ஓட்டுநர்களை அங்கே யாரும் சட்டை செய்வதே இல்லை.

             நாற்பதடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த நதிக்குள் இறங்குகிறபோது அது எங்களைக் கடந்து போனது. சுமார் ஒரு முப்பது வினாடி வரைக்கும் அது வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனை நீளம். தொடை அகல வயிறு. சரள் மண்ணில் வெயில் அடித்த மாதிரி ஒரு மினுமினுப்பு. மிரண்டுவிட்டேன். இனி எங்கே குளிப்பது. படங்களில் பார்த்த பைத்தான், அனகோண்டா எல்லாம் நினைப்பில் வந்துமிரட்ட, தீர்த்தம்போல் தண்ணீரைத் தலையிலள்ளித் தெளித்துக் கொண்டு வண்டியில் ஏறினவன் தான்.

            நாகங்களில் ரொம்ப சிநேகமானது தண்ணீர் சாரை. பாவப்பட்டது பச்சைப் பாம்பு, கொடூரமானது கருநாகம், தொடை நடுங்க வைப்பது ராஜநாகம். நல்லது "ஆள்ப்பார்த்து" செய்யும் போல.  "நீங்கள் கேட்டவை" படத்தில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் சின்ன வயதில் செய்த தவறுக்காக ஆற்றிலே கழுத்தளவு தண்ணீரில் நிற்கவைத்து தண்டிப்பார் அவரது மாமன். அப்போது பாம்பு ஒன்று அவன் தோள்மீது ஊர்ந்து போகுமே அப்படி பலதடவை வாய்க்கால் கரை அனுபவங்கள்  “எங்கள்வளுக்கு” உண்டு.

            துணிக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்த வசந்தி அக்கா ஒருதடவை காலைச் சுத்தின சாரையை கரகரன்னு பிடித்து தூக்கி வீசிவிட்டு, "நான் ஆரல்ன்னு நினைச்சேன். கடசீல பார்த்தா தண்ணிச்சாரை" என்று அசால்ட்டாகச் சொன்னது.

            மேலே சொன்னேனில்லையா வெள்ளக்கோயில் மருத்துவச்சி. அது ஒருநாள் அடித்த சாரையை பாளமாக உரித்து, "சாரக் கொழுப்பெல்லாம் மருந்து பார்த்துக்க" என்றபடி தலைகீழாகப் பிடித்து தோலுரித்துக் கொண்டிருந்தது.  சிரட்டையில் வழித்து வைத்திருந்த சாரைக் கொழுப்பை பார்த்து குமட்டிக்கொண்டு ஓடினவன் ஓடினவன் தான்.

            திருநெல்வேலியில் அப்படி பெருசாய் ஒன்றும் சொல்லிவிட முடியாவிட்டாலும். நாஞ்சில் மண்டலம் நாகங்களின் சொர்க்க பூமி. அதைக் கண்ணாரக் கண்டதுண்டு. அங்கே பாம்புகளை வைத்து ஏகக்கணக்கில் கதைகளுண்டு. அதாவது பாம்புகள் எண்ணிக்கை அளவுக்கு பின்னப்பட்டவை.

            நகர்த்தில் பாம்பு பார்ப்பது வருடத்தில் பிப்பிரவரி 29மாதிரிதான். பழசுபோல் இப்போது தமிழ் சினிமாவிலும் பாம்புப் படங்கள் வருவதில்லை. வந்தாலும் ராமநாராயணனும், முமைத்கானுமே கதி.

            மகாபாரதத்தில் யாரைப் பிடிக்கும் என்று நண்பன் ஒருதடவைக் கேட்டான். நான் "அரவான்"என்று சொன்னேன். பிறகுதான் அந்தப் பெயர் பாம்பைக் குறிக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். அரவானுக்கு "அப்பன் அர்ச்சுனன்" தெரியும். அம்மை யாராயிருக்கும்? என்று யோசனை வந்தது. தேடிப்பார்த்தால் அவள் ஒரு  "நாகர் குல இளவரசி" பேர் உலூபி.

            அட! இந்த சங்கதியை விசயம் தெரியாத யாரிடமாவது பேச்சுக்கு ஊடாக பெருமை பீத்திக் கொள்ளவேண்டுமே என்று அடித்துக் கொண்டது மனது.

-கார்த்திக். புகழேந்தி
02-02-2016


சொக்கப்பனை | கடங்கநேரியான்| கவிதைநூல்             சொக்கப்பனை முழுதாய் வாசித்து முடித்துவிட்டேன்.  நிகழ்ச்சிக்குக் கிளம்பும் முன், இன்னுமொருமுறை வாசித்துவிட்டு எழுதலாம் என்று புத்தகத்தைத் தேடினால் கிடைக்கவில்லை. இங்குதானே வைத்தோமென்று அறைமுழுக்க ஒழுங்குபடுத்தியும் கண்ணில்மட்டும் சிக்கவே இல்லை. ஒன்று யாரும் படிக்க எடுத்துச் சென்றிருக்கவேண்டும் அல்லது இன்னும் நன்றாகத் தேடியிருக்க வேண்டும் .

புத்தகத்தைத் எடுத்துச் செல்கிறவர்கள் பற்றி எங்கள் வாத்தியார் ஒன்று சொல்வார்.  “எடுத்துட்டுப் போய் என்ன செய்யமுடியும்?  படிக்கத்தானே முடியும். படிச்சிட்டுப் போறாம் விடு” என்று. வாத்தியார் பேச்சை இப்போதாவது கேட்போமே என்று விட்டுவிட்டேன்.

கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசைய்ல் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக இந்த கவிதைகள் மட்டும் அந்நியமாகியா நின்றுவிடும்? ரொம்ப மெனக்கிடாமல், இந்தத் தொகுப்பில் வாசித்து, மனத்துக்கு நெருங்கின கவிதைகள் பற்றி எழுதத் துணியும் போது வார்த்தைகள் தன்னாலே சுரந்து முண்டுகின்றன. சீவின பனம் பாளை மெல்லக் கசிவது மாதிரி.

வேப்பம் பூ உதிர்ந்து விழும் கிணற்றடியில் வண்டிமாடுகளைக் கழத்தி, அவற்றை நிழலாக்கிவிட்டு, கொத்துக்கல்லில் குறுக்கைச் சாத்திக்கொண்டு, மூசு மூசென்று மூச்சுவாங்குகிற கிழவனுக்கிருக்கும் ஆசுவாசத்தை நீங்கள் இந்த கவிதைகளில் பெறப்போவதில்லை. கோவைக்காய் தேய்த்த சிலேட்டுக் கட்டையில் கடங்கநேரியான் தெளிவாய் எழுதிச் செல்வதெல்லாம் தன் ஆங்காரங்களின் வார்த்தை மிச்சங்களைத் தான். அது கோப்புக்காளைகள் புறத்தில்  விழுகிற சுளீர்ச் சாட்டையின் சத்தமாகக் கேட்கிறது.

வேம்பு, கருவேலம், புளியஞ் சுள்ளிகளுடன் பச்சையமிழந்த புற்களோடு நெருஞ்சிகளும் உண்டு காகக் கூட்டில் என்ற வரிகள் மொத்தமும் பேசிவிடுகிறது.  கெளுத்தி தன் முள்களை ரெட்டையாய் விரித்தபடி, வலையில் சிக்கிக்கொண்டு இருளனை சங்கடத்தில் ஆழ்த்துகிற மாதிரி. எனக்குள் இந்த கவிதைகள் மாட்டிக்கிடக்கின்றன. கெளுத்தியின் கொடுக்குகளைப் பிய்ப்பது கள்ளியில் பழம்பறிப்பதைவிட கடினமாகப்படுகிறது. ஒவ்வொரு முள்ளாய் ஒடித்து, கழுவு கழுவென்று கழுவினாலும்  மீன்வாசனை கையைவிட்டுப்போகாதில்லையா. வாசனையின் மிச்சத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்.

வானத்திலிருந்து பாறாங்கல் விழுந்தால் கூட, “பார்த்தேன்” என்று சொல்ல பக்கத்தில் ஒருத்தன் இல்லாத செவக்காட்டுப் புழுதித் தடத்தில், கம்மாய்க்கரை மேட்டிலேறி, ஆணி ஆணியாய் நிக்கும் பனைமர மூட்டுக்கு சுத்துவட்டாரத்தில் பழமேதும் விழுந்து கிடக்குதான்னு பார்த்து, தென்மேற்குக் காத்துச் சாய்மானத்தில் சரசரக்கும் பனையோலைத் சத்தத்துக் கிடையில், தன்னுடைய குரலையும் சேர்த்து, தறிகெட்டுத் துள்ளும் வெள்ளாட்டுக் குட்டிகளை  “ட்ரேய் ட்ரேய்” என்றபடி பத்திக்கொண்டு போகிற, காட்டுப் பயலின் கதைப்பேச்சாகவும் சில கவிதைகள் எனக்குள் சல்லிவேர்பிடித்துக் கொண்டு நிற்கின்றன.

 “எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனது படைப்புகள் உதவுகின்றன. இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவது அவனது கட்டுரைகள்” என்பார் கரிசல்காட்டுக் கடுதாசிக்காரர் கி.ராஜநாராயணன்.

ஒரு படைப்பாளனின் அல்லது ஒரு கவிஞனின் மன உலகைப் புரிந்துகொள்ள அவனது கவிதைகளை விட்டால் வேறு நல்ல கதியில்லை என்பது என் நினைப்பு. கரிசல் மண்ணில் அவுரிக்கு ஊடாக சூரியகாந்தியைப் பாவி விடுவதுபோல, என்னத்தை எழுதினாலும் இந்தக் கவிஞனின்  “அகம்” அங்கங்கே வெளிப்பட்டு விடுகிறது. அதே சமயம் அவனது அறமும்.

விடியும் திசையில் வெளிச்சத்தைப் பார்த்து சூரியகாந்தியைப் பூ தலை திருப்பிக் கொள்கிறதுமாதிரி இக்கவிதைகளின் ஒவ்வொரு  பரப்பிற்குள்ளும் தனக்கேயுரிய கருத்தியலைப் புகுத்தி அதைநோக்கி நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார். கவிதைகள் நம்மோடு பேசத் தொடங்காத வரைக்கும் நமக்கு கழுத்து வலியில்லை.

சொக்கப்பனையில் நான் கண்டது, கேட்டது, பார்த்தது எல்லாம் ஊர்வாசம் சுமக்கும் மண்ணின் குரலைத்தான்.  மண் பேசுகிற அரசியலின் சுழலில், மூழ்கிக்கொண்டே ஒலிக்கின்ற அந்த குரல் கைகாட்டும் திக்கில் தான் வரிசைவிட்டு நிற்கிறது காலப் பனைகள்.

பனைகளின் உச்சியில் கூடுபின்னித் தொங்கும் தூக்கனாங்குருவியின் பார்வைக்கு ஊர் எப்படித் தெரியுமென்று எனக்கொரு கற்பனை உண்டு. அகண்ட பரப்பில், மோட்டு ஓடுகள் நீங்கலாக, காரைச்சுண்ணாம்புச் சுவர்கள் பாசியேறி, மூணு கை காத்தாடிகள் சுத்திக்கொண்டு காற்றை மிரட்ட, அந்த எதிர்க்காற்றுக்கு காற்றுக்கு ஊர் அலைபாய்ந்ததுபோல.... தூக்கனாங்குருவிக்கு எப்படி யெப்படியெல்லாம் தோன்றுமோ அப்படி யப்படி யெல்லாம் நகரத்தின் மேடான கட்டிடங்களின் உச்சியிலிருந்துகொண்டு வலசை விட்டு வந்த ஊரின் திசைபார்க்கிறேன் நான்.

“பசுமை சூடிய வயல்வெளியில் பருத்திப்பூக்கள் தான் எத்தனை அழகென்று” கடங்கநேரியானின் வரிகள் ஊர்ந்து செல்லும்போதே கொத்தைப்பருத்திக்கும் கேவலமாய்ப் போய்விட்ட சம்சாரி நினைப்புத்தான் வந்தது. காடுமேடாய் நடந்த பாதைத்தடம் பள்ளம் கண்டுகிடக்கிறது. பாதைக்கு இரண்டு பக்கமும் சங்கடமில்லாமல் வளர்ந்துகிடந்த வாடாமல்லியைத் தேடவேண்டிய நினைப்பு வருகிறது.  கெண்டை பிடித்து, குதித்துச் சாடிய குளம் ஈரம் வறண்டிருக்கிறது.  “மோக்கால் கிணற்றில் கல்போட்டால் மொட்டென்று ஒலி எழும்புகிறது. கள்ளியில் பால்வடிந்து பேரெல்லாம் அழிகிறது. கற்றாழை மஞ்சள் பூத்துக்கிடக்கிறது.  காக்காய் முள்ளுக்கு ஆலாய்ப் பறக்கிறேன்.  கெளுத்தியும், அயிரையும் நாக்கைப் போட்டு வதைக்கிறது. கொம்புசீவின எங்கள் மாடுகளைத் தழுவ கோர்ட்டுப் படியெல்லாம் ஏறவிடுகிறார்கள். சரி போகட்டும்.

வயல்காட்டுக்கு மத்தியில் குருவி உட்கார நீண்ட தோரணம் கட்டினமாதிரிப் பாயும் கம்பிவடத்தில் கடத்திச் செல்லப்படும் கரண்டுச் சத்தம் கேட்டிருக்கிறீர்களா? விய்ய்ய்ய்ங் என்று ஒலியெழுப்பும் அதிர்வலைகள் போல புத்திக்குள்ளே ஊர்நினைப்பு வடிகிறது மொத்தத்தையும் வாசித்து முடிக்கிறபோது.

ஊரில் என்னவெல்லாம் இருக்கும் என்ற எண்ணம். எல்லாமும் தான் இருக்கும். பொடனிக்குப் பின்னால் செய்யும் அரசியல், களவாணித்தனம், காவல், கண்ட கசடுகள், நைச்சாட்டியம், நல்லது கெட்டது எல்லாமும் தான். எல்லாம் சேர்ந்ததுதானே நாம். இந்த கவிதைகளும் எல்லாவற்றுமாலும் ஆனவை. அதில் அங்கங்கு துளிர்ப்பது தீயின் மொட்டுக்கள்.

ஊர் மெல்ல நகரச் சாயலைப் மொழுமொழுவெனப் பூசிக்கொண்டிருக்கிறதைப் பார்க்கிறேன். இல்லையென்று மறுத்தாலும்கூட. இந்த முலாம்போடுகிற வேலை ஜரூராகிக் கொண்டே போகிறது. ஆனாலும், பாருங்கள் நினைப்புகளை எழுதி எழுதி,  ஊரைத் திரும்பக் கட்டியெழுப்பி விடுகிறோமில்லையா. மொட்டுப் பென்சிலை மிச்சம் மீதிக்கு வைக்காமல் சீவுகிறமாதிரி.

நெல்லையப்பன் சன்னதிக்கு நேரே குழிபெருக்கி, நெடு நெடுவென வளர்ந்துவிட்டப் உடம் பனையை செங்குத்தாக நட்டுவைத்து, பிளந்த மூங்கிலை பிரித்துக் கட்டி, நாலுபக்கமும் பனையோலை சுற்றிச் சாத்தி, கோபுரம் எழுப்புவார்கள். பூசான்னங்கள் முடித்து பட்டர் கொண்டுவரும் சூடத்து தீவாராதனைக்குக் காத்துக்கிடந்து, ஜூவாலை விட்டு எரிகிற சொக்கப்பானையை கார்த்திகைக்குக் கார்த்திகை கண்ணாறக் காணாமல் அயர்வு இல்லை.

எரிபட்ட தடிமரத்தை வெட்டி முறிக்கிறதுபோல ஆகிப் போகிறது எண்ணங்களால் கட்டியெழுந்த ஊர் நினைப்புகள். கரிபிடித்த சாம்பல் வாசனையில் புகைந்துகொண்டே இருக்கிறது வாழ்வாதாரங்களைப் பொசுக்கினச் சாபம். கோலாக்காரன் கையைக் கடித்துக் குதறும் வரைக்கும் கல்லைக் குறிபார்த்துக் கொண்டிருக்கிறோம். நாய்களை விரட்ட நமக்குத்தான் நேரமேது என்றபடி. உள்ளுக்குள் கோபமிருக்கிறது. ரோசமிருக்கிறது. எல்லாவற்றையும் பிளிந்து கசக்கி எழுத கலை இருக்கிறது. கவிதை இருக்கிறது. இருக்கிறதில் எல்லாவற்றையும் இருப்பு வைத்துக் கொள்கிறோம். அதற்கும் கொஞ்சம் முதுகெலும்பு தேவைப்படுகிறது.

இந்த  உலகமயமாக்கல் பேசுகிறவர்கள் என்ன எளவை எல்லோர் புத்திக்குள் ஏற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் புரிய விழைகிறேன். கவனிக்கவும் புரிய வைக்க அல்ல.

உலகை எப்படி உலகமயமாக்க முடியும். ஊரை எப்படி ஊர்மயமாக்க முடியும் என்று கேள்வி எழுப்புவார் தொ.ப. ஒரு நாள் சாயந்திர நேரத்தில், “திருநெல்வேலியைத் திருநெல்வேலிமயமாக்கிடுவியாடே” என்றார். எனக்கு சுத்தமாய் புரியவில்லை. உலகமயமாக்கல் என்ற சுத்தப் பொய் நம் வளங்களைத் தின்பதற்கானத் திட்டங்களுக்கு இடப் பட்டிருக்கும் நாமகரணம் என்று அன்றைக்கு என் இரவுக்கு வெளிச்சம்பண்ணிக் கொண்டிருந்தார்.

அப்போ எது உண்மை என்றேன். உலகம் முழுக்கவும் “சந்தை மயமாக்கப் படவேண்டும்” என்பத்தான். சந்தையைத் தான் எல்லா நாவுகளும் புசிக்கத் துடிக்கின்றன. எண்மிகுந்த கூட்டத்துக்கிடையில் எளிதாக வளைபவன் யார் என்று பார்த்துப் பார்த்து, சல்லடையால் சலித்து சலித்துப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.   கொந்தளிப்பவர்களைச் சகிப்புத் தன்மை அற்ற மூடர்கள் என்று குற்ற முத்திரை குத்துகிறார்கள். வழக்குகள் வண்ண வண்ணமாய்க் குவிகிறது.  வெடிகுண்டு வீசுகிறவனாக்கினார்கள்.

நாம் வசிக்கும் வீட்டை சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிபடத் துவங்கிற்று. சந்தை வணிகனுக்கும் வாடிக்கையாளனுக்குமான இடம். அது நம் வீடு மாதிரியானதல்ல. சந்தையில் காசில்லாதவனுக்கு மரியாதை இல்லை. சந்தையில் நீங்கள் வாங்கலாம், விற்கலாம். வாழமுடியாது. சந்தைக்குள் உங்களைப் பார்த்து சிரிக்கிறவன் இரண்டொரு முகமுடிகள் அணிந்ததிருக்கிறான். அவன் புன்னகையில் அன்பு, உறவு, பிடிப்பு, பந்தம், வேர்கள் என்று எதுவுமில்லை.  சர்வீஸ் சார்ஜ்ஜுகள் மட்டுமுண்டு.

இந்த சந்தைத் தனத்தை விடுத்து, வாழ்தலுக்கான கூட்டைத் தேடி, அடியும் முடியும் காணத் துடிக்கும் பரவசத்தைத் தனக்கேயுரிய அரசியல் காட்டத்தோடு கவிதைகளாக எழுதிச் சென்றிருக்கிறார் கடங்கநேரியான்.

ஒரு தீக்கங்காணி, தீப்பிடித்து எரியும்  சொக்கப்பனைேயையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல, நான் கடங்கநேரியானின் கவிதைகளைப் பார்க்கிறேன். பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவ்வளவாய்ப் பேசத்தெரியாது.

-கார்த்திக்.புகழேந்தி
27-01-2015.
There was an error in this gadget