Wednesday, 13 January 2016

ஆரஞ்சு முட்டாய் - நூல்வெளியீடு அழைப்பிதழ்
படபடன்னு எழுதுகிறவன்தான். அதென்னம்மோ இப்ப கை ஓட மாட்டேங்குது. எப்படித் தொடங்கட்டும். எப்படியானாலும் எழுதித்தான் ஆகணுமில்லையா.. 

உள்ளபடியே சொல்லவேணுமென்றால் இது இன்னும் கொஞ்சம் உற்சாகமான ஆண்டுதான். ரொம்ப வேகமானதும் கூட. தூரத்தில் நின்னபடி பார்த்து, வாசித்து, நேசித்தவங்க பலபேரையும் கிட்டத்தில் நெருங்கிப் பேசுவதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் அமைந்த நாட்கள் இவை. 

ரொம்பப் பக்கத்தில் நிற்கிறேன். புகைப்படங்களில் அவர்கள் கை என் தோள்மீது விழுகிறது. அவர்கள் பார்வைகள் நான் எழுதுகிற எழுத்துகளின் மீது ஊர்கிறது. என் வார்த்தைகளைக் கவனிக்கிறார்கள். பலசமயம் தட்டிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் வீம்புபிடிக்கிறபோது பொறுமைகாக்கச் சொல்லி அனுபவம் பகிர்கிறார்கள்.  இன்னுமதிகமாய் நிறைய அன்பு செய்கிறார்கள். அட உங்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களை என்றால் நீங்கள் எல்லோரும்தான். 

இது அடுத்தத் தொகுப்புக்கான அழைப்பிதழ்.  எல்லாரையும் அழைக்க வேண்டும். அன்புக்கு அன்பு செய்கிறவர்கள் அத்தனைபேரையும். ஒரு தைரியம் தான்.

தாயார் சன்னதியிலிருந்து சொந்த ஊரின் நேசத்தோடு சுகா அண்ணன், உனக்காக வரேண்டா தம்பி. உன் கதைக்காக வர்ரேன் என்று உற்சாகமாக இயங்க வைக்கும் ஆத்மார்த்தி அண்ணன். 

 இன்னொரு தடத்துக்கு என் எழுத்துகளை எடுத்துச் செல்ல உதவியாகவும், வாசித்தவுடனே “பிடித்தது”, “பிடிக்கவில்லை”  என்று உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டு என்னை மெருகேற்றும் ஆசிரியராக ஜோ டி குரூஸ் அவர்கள்.

 “நீபாட்டுக்கு செய் நான் இருக்கேன்” அவ்வளவுதான் ஒற்றை வார்த்தையில் மொத்தமும் முடித்துக் கொண்டு எங்களின் பெரிய பலமாக உடன் நிற்கும் பாக்கியராஜ் அண்ணன்...  இன்னும் எத்தனை பேர் செங்கல் செங்கலாக என்னை வளர்த்தெடுக்கிறார்களோ அத்தனை பேரையும்... அழைக்கவேண்டும். அதற்கான அழைப்புதான் இது.

23-01-2016 சனிக்கிழமை மாலை நூல்வெளியீடு என்பது விழாவின் ஒரு அங்கம். மற்றபடி நட்புடன் வருகிறவர்களுக்கான வேடிக்கைகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சியொன்றாகத்தான் இந்த ஏற்பாடுகள் அமையும். 

பொங்கலுக்கு ஊரில் இருக்கும் இளந்தாரிகள் எல்லாம் கைக்காசு போட்டு, விளையாட்டுப் போட்டிகளெல்லாம் வைத்து, பரிசுகளெல்லாம் வழங்கி அதகளப்படுத்துவோம். சொந்த ஊர் நினைப்புகளை நெஞ்சோடு நிரப்பி வைத்திருக்கிற நமக்கான ஒரு நாளாகத்தான் இந்த நூல்வெளியீடு நிகழ்ச்சி இருக்கும். 

என்னென்னவெல்லாம் பண்ணப் போகிறோமென்று சுரேஷுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். அதற்கு ரிலேட்டடாக ஒரு அழைப்பிதழ் வடிவமைத்துக் கொடு என்றேன். எதைவிட எதைத் தொட என்று தயங்கும் அளவுக்கு வடிவமைத்துத் தள்ளிவிட்டான். 

முடிந்தவரைக்கும் நேரில் சந்தித்து அழைக்கவேண்டும் தான். வாட்ஸப்பிலும், முகநூலிலும், மின்னஞ்சலிலும், வலைதளங்களிலும் தொடர்பிலிருக்கிறவர்களுக்கு செய்தியில் அழைப்பை அனுப்பி வைக்கிறோம். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து அழைப்பை ஏற்றுக் கொண்டு நாளது தேதியில் அரங்கத்திற்கு வந்துவிடுங்கள். 

சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் என்றெல்லாம் நினைக்காமல் ஆர அமர வந்து கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு விழாக் கமிட்டியார் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். 

-கார்த்திக். புகழேந்தி 
13-01-2016
There was an error in this gadget