Thursday, 17 September 2015

Coffee To Copy

கோவை மண்டலம் முழுக்க கவனித்ததில் அங்காங்கு ஆவின் சார்பில் நேரடி தேனீர் விடுதிகள் எழுப்பி இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு டீ, ஐந்து ரூபாய்க்கு வடை வகைகள், பஜ்ஜி மாதிரியான மேற்படி ‘கடிகளுக்கு’ ஏழு ரூபாய் என சிக்கன விலை.  கூட்டம் பரபரவென்று நிற்கிறது.  நிறைய பழம்பெரும் பாய்லர் டீக்கடைக்காரர்களுக்கு அடிபிடித்திருக்கும் வியாபாரத்தில்.

கண்ணாடிக்கூண்டுக்குள் பலகாரங்கள், கைகழுவ வாஸ் பேஷின், முழுக்க கேமிரா கண்காணிப்பு. இளவயது பையன்கள் கல்லா நிர்வாகம் என்று தூள்கிளப்புகிறது ஆவின் தேனீர்விடுதி.  இந்த விடுதியில் என்போன்ற காபி விரும்பிகளுக்கும் சிக்கன விலையில் சிக்கிரி காபி கிடைக்கச் செய்தால் புண்ணியமாகப் போகும்.

காபி என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த அரசு தேனீர் விடுதிபோல அல்லது மதுமானக்கடைகள் போலாவது (!) வீதிக்கு ஒரு குறைச்சலான விலையில் நகலகம்  (XEROX) தொடங்குங்களேன்.

[ டி.என்.பி.எல் காப்பியர் பேப்பர்களுக்கான வர்த்தக கமிசனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் பெரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளலாம்]

 காப்பிக்கடைக்காரர்களான நகலகர்கள்  அடிக்கும் கொள்ளையை மேலோட்டமாகப் பார்த்தாலே அத்தனை எரிச்சல் வரும்.  விபரமும் தெரிந்திருந்தால் கொலைவெறியே மிஞ்சும்.

ஒரு பக்கம் நகல் எடுக்க ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை அதிகபட்சமாக (மின்சாரம் இல்லாத நேரத்தில் 3ரூபாய் வரைக்கும் கூட ) தற்போது வாங்குகிறார்கள். பேப்பர் விலை அதிகம் என்று காரணம் சொல்கிறவர்கள் இரண்டு பக்கத்துமாக  நகல் எடுத்தால் அதே இரண்டு நகலுக்கான தொகை கேட்பது நகைமுரணான வேடிக்கை. இவர்களில் பக்கத்துக்கு ஒரு ரூபாய் வாங்குகிறவர்கள் ஓரளவு மனசாட்சி உள்ள வாழும் தெய்வங்கள்.

ப்ரிண்ட் அவுட் என்று நீங்கள் போய் நின்றால் சிக்கினான் சேகர் கதைதான். ஒரு பிரதிக்கு ஐந்து ரூபாய் கூட கேட்கும் நல்லுள்ளங்கள் நாட்டில் உண்டு. எனக்கு ஒன்று புரியவில்லை. ஒரு நகல் எடுக்க மனித உழைப்பும் இயந்திரத் தேய்மானமும் (Scan) நிச்சயம்  தேவைப்படும்.

ப்ரிண்ட் அவுட்கள் எடுக்க அதிகபட்சமாக ஜெராக்ஸ் மெஷின்களே பயன்படுத்தப்படுகின்றன. லேசர்ஜெட் ப்ரிண்டர் பயன்படுத்துபவர்கள் நூற்றுக்கு பத்துபேர் கணக்கில் தான்.  தற்போது கேனான் உள்ளிட்ட
அனைத்து பழைய இத்துப்போன ஜெராக்ஸ் மெஷின்களில் கூட  எக்ஸ்டர்னல் போர்டு வைத்துக்கொள்ள முடியும்.

புதிய மெஷின்களில் இன்பில்டாகவே கணினியுடன் இணைக்கப்பட்டு நேரடியாக ப்ரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் இந்த அறியாமையினை பயன்படுத்தி ஜெராக்ஸுக்கு ஒரு விலை. ப்ரிண்ட் அவுட்டுக்கு ஒரு விலை...

 ஸ்கேன் செய்து நூறு நகல் எடுப்பதற்கும், ஒரு க்ளிக்கில் நூறு ப்ரிண்டுகளைச் சொடுக்குவதற்கும் இடையே மனித உழைப்பும், மெஷின் தேய்மானமும், மின்சார செலவும் கூட குறைகிறது. அப்படி இருக்க நகலுக்கு ரெண்டு ரூபாயும், ப்ரிண்ட் அவுட்டுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் வசூலிப்பது என்னமாதிரியான ஃப்ராடுத்தனம்.

இந்த விஷயத்தில் ஒவ்வொருத்தருமே சின்னச்சின்ன அளவில் ஏமாற்றப்பட்டாலும் அது ஒரு பெருந்தொகை இல்லை என்பதால் விட்டுவிடுகிறோம். அஞ்சுபைசா ஏமாத்தினா தப்பா... தப்பில்லீங்க.. அஞ்சு பேர்கிட்ட அஞ்சு அஞ்சு பைசா ஏமாத்தினா? தப்பு மாதிரிதாங்க தெரியுது.....

-கார்த்திக் புகழேந்தி
17-09-2015.

Wednesday, 16 September 2015

விநாயகர் ஊர்வலமும் அதன் பின்னேயுள்ள கால்நூற்றாண்டு அரசியலும்.ங்கள் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. அறுவடைக்குப்பிறகு களத்துமேட்டில் நெல்லடிக்கும்போது காற்றின் வீச்சம் குறைவாக இருந்தால் வேலை நடக்காது. அப்போது அங்கே கிடக்கும் மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பொம்மைபிடித்து, நெல் அளக்கும் ஆழாக்கு படியைக் கொண்டு கவிழ்த்து உள்ளே இருக்கும் பிள்ளையாருக்கு மூச்சுமுட்டட்டும் என்று வைத்துவிடுவார்கள். சற்று நேரத்தில் காற்றும் வந்துவிடும்.  
இப்படி எளியமக்களால் நெருக்கமாகவும், பல தண்டனைக்கும் உள்ளான விக்னேஸ்வரனின் கதை ஏகக்கணக்கில் புனையப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பிள்ளையார் சதூர்த்தி பிரம்மாண்ட விநாயகர் சிலைகளோடு கொண்டாடப்படும் கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் மத துவேஷம் மிக நுணுக்கமானது. அதைப்பற்றிப் பேசும் முன் விக்னேஷ்வரன் எப்படியெல்லாம் மத, சமூக, அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்று பார்க்கவேண்டியது முக்கியம். 

பிள்ளையார் கதை

சிவனின் மனைவி பார்வதியின் உடல் அழுக்கில் பிறந்து, பார்வதிக்கு காவல் இருந்தபோது, சிவனை மாளிகையின் உள்நுழையத் தடுத்ததால் ஆத்திரமடைந்து அவர் விநாயகரின் தலையை வெட்டி எறிந்ததாகவும், பின் பார்வதி தன் மகனுக்குப் புத்துயிர் தராவிட்டால் பிரபஞ்சத்தை அளித்துவிடுவதாகப் புறப்படவும் வடதிசை தலைவைத்துப் படுத்துக்கிடக்கும் ஒரு யானையின் தலையைக் கொணர்ந்து கணபதிக்கு உயிர்தந்ததாகவும் புராணக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிமைத்தனத்தின் அடையாளம்

தொன்மையான சில உண்மைகளை உற்றுநோக்கினால் ஒவ்வொரு இனக்குழுவினருக்கும் குலக்குறி அடையாளம் இருந்துள்ளது தெரியவரும். ஒவ்வொரு குலங்களும் ஒரு மித் (Myth) அடையாளமாக தங்கள் மூதாதைகளிடமிருந்து அது பின்பற்றப்படும். எளிமையாகச் சொன்னால் அரசியல்கட்சிக்கு இன்றைக்கிருக்கும் சின்னங்கள் போல.  
இந்த இனக்குழுக்குள் போர்கள் நடைபெறும்போது தங்களின் குல அடையாளத்தைத் தூக்கிப்பிடித்தும், எதிரி குலத்தின் அடையாளத்தை அழித்தும், அடிமைப்படுத்தியும் ஆவணப்படுத்தும் வழக்கம் வரலாற்றைப் புரட்டினால் நமக்கு ஆங்காங்கே தென்படுகிறது. அப்படிக்காணும் போது மதங்கர் என்னும் வட இந்தியப்பழங்குடியினரின் குலச்சின்னம் யானை. மாதங்கி என்ற சொல்லும் யானையையே குறிப்பிடுகின்றது. 
தென்னிந்தியாவில் மூசிகம் என்ற பெயரில் வாழ்ந்த இனக்குழுவினருக்கும் எலி குலச்சின்னமாக இருந்துள்ளது. மூசிகர் என்றால் காட்டுவாசிகள் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. (இன்றைக்கும் கொங்கு வேளாளர்களில் குண்டெலிக்கூட்டம் என்ற பிரிவு உள்ளது கவனிக்கத்தக்கது) யானையினைத் தங்கள் குலக்குறிச் சின்னமாக அடையாளம் கொண்ட கூட்டம் எலிச்சின்னத்தைக் கொண்டவர்களை போரிட்டு வெற்றிகண்டு அந்த இனக்குழு பரவலாக விரிவடைந்தபோது யானைச்சின்னம் கடவுளாக மாற்றம் அடைந்தது.  
யானைத்தலையும் மனித உடலும் கொண்ட கணேசருக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட வடிவங்கள் கணக்கில் அடங்காதது. ஆனாலும் பிராமணிய இந்துசமயங்கள் பிள்ளையாரைத் தங்கள் கடவுளாக ஏறுக்கொள்ளவில்லை. அவர் எளியமக்களின் கடவுளாகவே அடையாளங்கொள்ளப்பட்டார். உதாரணத்திற்கு பரசுராமன் தன் மழுவை பிள்ளையார் மீது ஏவிய புராணக்கதை.       

எளியமக்களின் கடவுள்

கொல்லிமலை ஆதிவாசி மக்கள் மழைவேண்டி குப்பையில் குழுதோண்டி சாணத்தில் பிள்ளையாரைப் புதைத்துவிட்டு, மழைவந்தபிறகே வெளியே எடுத்து வழிபாடு செய்வார்கள். தென் மாவட்டங்களில் கிணற்றுக்குள் தூக்கிப்போடுவது, மிளாகாய் அரைத்துப் பூசுவது, சாணிக்கரைசலை ஊற்றுவது என மழைவரவேண்டி பிள்ளையார் படுத்தப்படும் பாடு பெரும்பாடு.சைவ, வைணவ தெய்வங்களைப்போல் அல்லாமல் நாட்டார் தெய்வங்களைப்போல் எளியமக்களின் கடவுளான விநாயகர் மேலே சொன்னபடி பல்வேறான தண்டைகளுக்கும் ஆளாக்கப்படுபவர்.  
பிறகு எப்படி இன்றைக்கு இந்து முன்னணி, இந்துமகாசபை, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார்கள் விநாயகர் சதூர்த்தியை இத்தனை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுகிறார்கள். விஷயம் இங்கிருந்து தொடங்குகிறது.  

          திலகரின் திட்டம்

1893ம் ஆண்டு மும்பையில் முதன்முதலாக பிள்ளையார் ஒரு அரசியல் கடவுளாக அங்கீகரிக்கப்பட்டார். “கோபாலன் உபதேச மண்டலி” என்ற பெயரில் பசுவதையை எதிர்த்து வெள்ளையர்களுக்கு எதிராகவும், அதேசமயம் இசுலாமியர்களுக்கு எதிராகவும் மதக்கலவரம் தொடங்கியது. அதே ஆண்டில் முதன்முதலாக “கணபதி உற்சவ நிகழ்வை” பாலகங்காதர திலகர் மாற்றி அமைக்கிறார்.  
விநாயகர் சதூர்த்தி என்ற அவதாரநாள் மராட்டிய மாநிலத்தில் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்படும். அதுவரை பக்தியின் அடிப்படையில் நடைபெற்றுவந்த பழக்கத்தை தன் அரசியல், மற்று மத துவேச காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் பழக்கத்தை 1893ல் திலகர் உருவாக்கினார்.இதில் பக்தியுடன் இந்துக்களையும் இசுலாமியர்களையும் பிளவுபடுத்தும் கருத்துகள் பரப்பப்பட்டன. 
வெள்ளையர்களுக்கெதிரான அரசியல் போராட்டத்தில் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்குள் நிலவிய இடைவெளியைப் போக்க விநாயகர்வழிபாடு ஒரு முக்கிய கருவியாக அறிவிக்கப்பட்டது.
1896ல் செம்டம்பர் 8ல் கேசரி இதழில், “பொதுமக்களுக்குப் பொழுதுபோக்காகவும், கல்வி புகட்டுவதற்காகவும் பிள்ளையார் ஊர்வலம் படன்படும் என்று திலகர் எழுதினார். இதே திலகர் தான் “எண்ணெய் எடுக்கும் செட்டியார்களும், புகையிலைக்கடைக்காரர்களும், சலவையாளர்களும் ஏனைய இவர்போன்றோருகளும் சட்டமன்றத்துக்குச் செல்லவேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். சட்டத்துக்குக் கீழ்படிந்து நடப்பதுதான் அவர்கள் கடமையே தவிர சட்டத்தை இயற்றும் அதிகாரங்களைப் பெறுவதற்கு அவர்கள் விழையக்கூடாது ”என்று குறிப்பிடுகிறார்.          

மதமாற்றத்தின் எதிரொலி


1981ம் ஆண்டு பிப்பிரவரி 19ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் 180 தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்கள் இசுலாமிய சமயத்தைத் தழுவின. பிறகு மே-23ல் தொடர்ச்சியாக 27 குடும்பங்கள் இசுலாமியத்தைத் தழுவின. மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் சிறுசிறுகுழுக்களாக மக்கள் இசுலாமியத்தைத் தழுவவும் மதமாற்றம், தாய்மதம் திரும்புதல் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது. வட இந்தியாவிலிருந்து துறவியர்கள் மீனாட்சிபுரம் வந்து குவிந்தனர். இதனையொட்டி “இந்து முன்னணி” என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. 
01-03-1982 முதல் அடுத்த பதினான்குநாட்கள் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கடற்கரை கிராமத்தில் மதக்கலவரம் பற்றி எரிந்தது. இந்தகலவரத்தில் பிள்ளையாரை முன்னிருத்திக்கொண்டனர். திங்கள் சந்தை என்ற ஊரில் போக்குவரத்துப் பாதையில் திடீரென்று ஒரு பிள்ளையார் சிலையை நிறுவப்பட அது காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ தலைவர்களில் தூண்டுதலால்தான் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டது என்று விசமமாக வதந்தி பரப்பப்பட்டே அந்த மதக்கலவரத்திற்கு பிள்ளையார்சுழி போடப்பட்டது.  
அதன்பிறகு 1983-84 ரத யாத்திரைகள், 1984-ல் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்தியா முழுவதும் இருந்து செங்கல் எடுத்துச் செல்லும் செங்கல் ஊர்வலம், 1989 பாபர் மசூதி இடிப்பு என்று இந்தியா முழுமைக்குமான மதக்கலவரங்களுக்கான இயக்கங்களுக்கு திலகரின் “கணபதி பாபா பிராஜக்ட்” பக்காவாக உதவியது. 

ஊர்வல அரசியல்

தமிழ்நாட்டில் இன்றைக்கு பட்டிதொட்டியெல்லாம் பாப்புலராகி இருக்கும் பிள்ளையார் பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலத்தின் வரலாறு 1990ல் உருவாக்கப்பட்டதே. மிக உன்னிப்பாக கவனித்தால் தமிழ்நாட்டில் கத்தோலிக்கர்களும், இசுலாமியர்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் கடற்கரைப்பகுதிகளுக்கே இந்த ஊர்வலங்கள் திருப்பி விடப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் மண்டைக்காடு, நெல்லைமாவட்டத்தின் இடிந்தகரை, தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பாறு, காயல்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழகரை, நாகை மாவட்டத்தில் முத்துப்பேட்டை, இவையனைத்தும் இசுலாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும்பகுதி என்பது தென்படும். 
இந்துக்களின் புனிததலமாகக் கருதப்படும் இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்க கீழக்கரைக்கு எடுத்துச் செல்லப்படும் விநாயகர் ஊர்வலம் இங்கே கவனக்கத் தகுந்தது. சென்னை திருவல்லிக்கேணி இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் நிறைந்தபகுதி என்பதை கொஞ்சம் யூகித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும். இந்த மத துவேசத்தை வைத்து காலாகாலத்துக்கும் அரசியல் செய்ய விநாயகர் பலியிடப்பட்டு சரியாக கால்நூற்றாண்டு தான் ஆகிறது.  

 எதிரிக்கு எதிரி நண்பன்

ஒரு பிரம்மாண்ட சிலையும் செலவுக்குப் பணமும் கொடுத்து எளியமக்களின் கடவுளை கொலைகார ஆயுதங்களுடன் சித்தரிக்கும் மதஅமைப்புகள் மட்டுமல்ல, தங்களுக்கு வியாபாரப் போட்டியாக இருக்கும் இசுலாமியர்களுக்கு எதிராகவும் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது என்பதால் ஜெயின் சமயத்தவர்களும் இந்த ஊர்வலத்திற்கு தாராளமாக நிதி அள்ளிக்கொடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. எதிரிக்கு எதிரி நண்பன்.
1991ம் ஆண்டு கிருஷ்ணாம்பேட்டை அருகில் உள்ள ராஜாஜிநகர், முனுசாமி நகர், அனுமந்தபுரம் ஆகியபகுதிகள் மட்டும் 600விநாயகர் சிலைகள் மாட்டுவண்டிகளிலும், ரிக்‌ஷாக்களிலும் எடுத்துச் செல்லப்பட்டது. மதமாற்றம், நாத்திக அமைப்புகளை தடை செய்யவும், இந்துக்கள் இந்துக்களின் கடைகளிலே பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது விநாயகர் ஊர்வலத்தின் மீது அமில பல்புகளையும், செருப்புகளையும் வீசியதாக ஆர்.எஸ்.எஸ் கிளப்பிவிட, மசூதிகளின் மீது கற்கள் எறியப்பட்டது. இசுலாமியர்களின் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  

வளர்த்தெடுத்தவர்கள்  

தங்கள் சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் இந்த பிள்ளையார் ஊர்வலங்களை வளர்த்தெடுத்தவர்கள் யார்யார் என்றுபார்த்தால் அரசியல்கட்சிகள், ஜாதிக்கட்சித்தலைவர்கள், சினிமாபுள்ளிகள் ஆகியோர்களின் பங்கு மதப்பிரச்சாரவாதிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் காணப்படுகிறது. திராவிட முன்னேற்ற கழகம், சரத்குமார் தலைமை மன்றம், விஜயகாந்த் தலைமை மன்றம், தமிழ் மாநில காங்கிரசு, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் எனப் பாரபட்சமில்லாமல் எல்லா அரசியல் கட்சி பிரதிநிதிகளும் நிதிவழங்கி ஊக்குவித்திருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத்து தொழிற்சங்கங்களின் இடதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கையாக சிரியன் கிறிஸ்தவ முதலாளிகளே நிதிகளை வழங்கியுள்ளார்கள். மார்க்ஸிய கொள்கைகளுக்கு முரணான ஆர்.எஸ்.எஸ் உடன் கத்தோலிக முதலாளிகள் கூட்டுவைத்துக் கொள்வது எத்தனை ஒற்றுமை பாருங்கள்.

 வஞ்சிக்கப்பட்ட கிராமத்து தேவதை  

ஆற்றுப்படுகைகள், குளங்கள், ஏரிகள் ஆகிய நீர்நிலைகளில் களிமண்ணால் செய்யப்பட்டு காய்ந்த சிலைகளைக் கரைக்கும்போது அந்தக்களிமண் ஈரத்தை தக்கவைத்துக்கொள்ளும் இதனால் மழைநீர் வேகமாக நிலத்தடிநீராக உறிஞ்சப்படாமல் தேக்கிவைக்கப்படும் என்ற விஞ்ஞானத்தின் அடிப்படையில் முன்னோர்களால் ஊட்டபட்ட இறைவழிபாட்டுப் (மறை) பழக்கம். மெல்ல மெல்ல அரசியல் காரணங்களால் மக்களிடமிருந்து விளக்கப்பட்டு, இன்றைக்கு சுற்றுச்சூழலை சீர்கேடாக்கும் ஒரு சமூக அவலமாக மாறிவிட்டது. வேதிப்பொருட்கள் கலந்த பொம்மைகளால் நீர்நிலைகளை பாழாவதுடன் பக்தி, நம்பிக்கை என்ற அடிப்படைகளே பிய்த்து எறியப்படுகின்றன. 
 
பக்தியின் பெயரில் முன்னெடுக்கப்படும் மதச்சாயத்தை வைத்து வலுவாகக் காலூன்றத் துடித்தது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். அதன்பொருட்டு பீரங்கிகளோடும், துப்பாக்கிகளோடும், பல்வேறான ஆயுதங்களோடும் விநாயகர் உருவாகிக் கொண்டே போகிறார். வீரவிக்னேஸ்வரன் என்ற பெயரில் கலகங்களை உருவாக்கும் செயல் திட்டத்தை சப்தமில்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் ஊட்டுகிறார்கள்.
ஆம் அவர்கள் நம்மிடமிருந்த ஒரு எளிய கிராமத்து தேவதையை, நாட்டார் தெய்வத்தை நம்மிடமிருந்து உருவி எடுத்து, அதற்கு புரிநூல் அணிவித்து, கைகளில் ஆயுதங்கள் வழங்கி, தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார்கள். உச்சரித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் என்ற மொழியை இன்றைக்கு நம்மிடமே திணிக்கத் துடிப்பதுபோல திணித்து வஞ்சிக்கப்பட்டவர் தான் விக்னேஸ்வரன்.

-கார்த்திக்.புகழேந்தி  

16-09-2015

 கட்டுரை உதவி நூல்கள் | “பிள்ளையார் அரசியல்” - பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியன். | பாரதி புத்தகாலயம். | விலை - 20.Friday, 11 September 2015

சுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்

பாரதி கொஞ்சம் நினைவுகள்.
*** *** ***
வேதாந்தி,
நித்திய தீரர்,
உத்தம
தேசாபிமானி,
ஷெல்லிதாஸ்,
ராமதாஸன்,
காளிதாசன்,
சக்தி தாசன்,
சாவித்திரி...
மேற்கண்ட புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரன்.

***

"யாருங்கானம் இந்த பொடியன். பதினோரு வயசு விரல் எழுதினதா இது. சரஸ்வதி தாண்டவம். பாரும் இவன் எங்கேயோ போகப்போறான்."

"இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இம்மாணவன் சுப்பிரமணியனுக்கு
சரஸ்வதியின் பெயரால் *பாரதி*என பட்டம் சூட்டுகிறேன்."

***

"செல்லம்மா என் பிச்சுவாவை எங்கே!
பொட்டையும் காணோம்."

"இதோ இருக்கிறதே."

"கண்ணன் படத்துக்கு கீழிறிந்து ஏன் மாற்றி வைக்கிறாய். காலையில் வணங்கத் தேடுவேன் தெரியாதா. சரி வருகிறேன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது."

"கிழிந்திருக்கிறதே கோட்டு நெஞ்சுப்பக்கம்"

"நூல் கொண்டா. தைத்துக்கொள்ள"

"வெள்ளைதான் இருக்கிறது"

"தைத்துவிட்டு வண்டிமையினைத் தேய்த்துவிட்டால் ஆகிறது"

***
"செல்லம்மா வா கடலலைகள் கவிழ்ந்துவிழும் அழகு ரசிக்க கடைவீதி கடந்து சென்று வருவோம்."

"ம்ம்ம்"

"ஏன் தள்ளி நடக்கிறாய் அருகே வா! இதோ இப்படி. என் கைகள் உன் தோள்களில் விழும் இடைவெளிக்குள் வா"

"அய்யோ சாலைப் பொதுவிலா மானம் போகும்".

"ஹஹா..
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்
இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ
தில்லையாம்" .

***
"இது இமயமலையிலிருந்து எடுத்துவந்த ஆலிலை. உங்களுக்காக..."

"நன்றி தாயே! விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியாகிய உங்கள் அன்புக்கு பாத்திரமாய் இது எப்போதும் என்னுடனே இருக்கட்டும். அநேக கோடி நமஸ்காரம்."

***
உங்களை விசாரிக்கனும் அதிகாரி கூப்பிட்டார். ஸ்டேசன் வரை வரணும்.

"வாரண்ட்"

"இதோ!"
"அப்போ போகலாம். சைக்கிளை நானே ஓட்டவா!"

%

"விசாரணை முடிஞ்சது போகலாம்"

"என் கோட்டை கசக்கி இருக்க வேண்டாம்".

"இஸ்திரி போட்டுத் தரச் சொல்லட்டுமா".

"சிரமம் வேண்டாம்".

"நீங்கள்

லண்டனில் படித்தவரா?"

"இல்லை"

"ஆங்கில உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே? அதனால் கேட்டேன்"

"வருகிறேன்."

........இந்தாளு பிராமணாள் இல்லையா நெஞ்சுலே நூலைக் காணும். குறிப்பில் அப்படியே எழுதிடுங்க.

***

"என்ன சுப்பைய்யா இப்படி இடைவெளியே இல்லாமல் எழுதினால் மை கசிந்து பக்கத்து எழுத்து அழிகிறதே! வாசிக்கவும் சங்கடமாய் இருக்காதோ"

"ம்ம் சரி பண்ணிடலாம் ஐயரே"

"என்னைய்யா இது பத்தி பத்தியா பிரிச்சுட்டீர். பிரமாதம் கேட்டீரோ வாசிக்ற சங்கடமும் குறைஞ்சது மை கசியாமலும் ஆகுறது. ஒரே கல்லிலே ரெண்டு புறாக்கள். ஜமாய்ச்சுட்டீர் சுப்பு"

பாரதியால், முதன்முறை பத்தி பத்தியாக எழுதும் முறை இதழியல் துறையில் புகுத்தப்பட்டது .

***

"நாளை என் நிகழ்ச்சிக்கு வரவேணும் மிஸ்டர்.காந்தி"

"நாளைக்கு வேறு பணி இருக்கிறது. நிகழ்ச்சியை அடுத்தநாள் மாற்றிக்கொள்ளலாமா?"

"அது முடியாது. நீங்கள் தொடங்கப்போகும் இயக்கத்திற்கு என் வாழ்த்துகள், வருகிறேன்."

காந்தி .... "இவரை பாதுகாக்கவேண்டிய கடமை இந்தநாட்டுக்கு இருக்கிறது. சாதாரணமான மனிதரில்லை இவர்."

***
அன்புடையீர்.
என் எழுத்துக்களை 40 தொகுதிகளாய்ப் பிரித்து புத்தகமாக்கிட விழைகிறேன். தாங்கள் ஆளுக்கு 100உரூபாய் அனுப்பிவைக்கலாம்.
நன்றி
சுப்பிரமணிய பாரதி.

"மணியாடர் ஏதும் வந்திருக்குதா தாபல்காரரே"

"வந்தா குடுத்திடப் போறேன். ஏன் பிராணனை வாங்குறீர்."

-தேடிச் சோறு நிதம் தின்று...வீழ்வேனென்று நினைத்தாயோ!
(இன்றைக்கு பாரதியின் எழுத்துக்கள் நாட்டுடைமைச் சொத்து!)

***
வண்டலூர் உயரியல் பூங்கா

"சார் சார் அங்க ஒருத்தன் சிங்கம் இருக்கும் கூண்டுக்குள்ளே கையைவிட்டு புடிச்சிட்டு இருக்கான் சார்"

என்னைய்யா சொல்ற! ஆள் பார்க்க எப்படி இருக்கான்.

"கிறுக்கன் மாதிரி இருக்கான் சார். "

%

"ஏன்னா விட்டுடுங்கோ கடிச்சுடப் போகுது! அய்யோ யாராச்சும் தடுக்க வாங்கோளேன்"

"ஹாஹா வனராஜனே நான் தான் கவிராஜன் வந்திருக்கிறேன். உன் பிடரியைப் பற்றிப் பிடிக்கும் வல்லமை இங்கு வேறாருக்கு இருக்கிறது"

***
"என்னப்பா நீ உனக்கு ப்ரியமாய் வெல்லம் கொடுக்கவந்தால் என்னையே முட்டிவிட்டாயே சரி போ! ஆனாலும் இந்த பாரதியை வீழ்த்த ஆளில்லை தெரியுமா உனக்கு"

"என்ன சுப்பு உடல்நலமில்லையாமே! இப்போவே புறப்பட்டு வரட்டா!"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இங்கு நலம்".

"முடியாது உடனே வரேன்".

"சொன்னால் கேளுங்கள்."

"சரி அப்போ ஒன்னு பண்ணு. நல்லா இருக்கேன்னு ஒரு படம் புடிச்சு அனுப்பு அப்போதான் நம்புவேன்".
%

-ஏனப்பா போட்டோ புடிக்கனும். எவ்ளோ கேட்பே!

-நீங்க மித்ரன்ல எழுதும் பாரதி தானே.

-பாடக்கூட செய்வேன்.

-உட்காருங்க வெளிச்சமா எடுத்துத் தரேன்.

-இருக்குறதை எடு. கால் ருவா மேல் தரமாட்டேன்.

***

"தாகமாயிருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடேன். நாளைக்கு ஆப்கன் மன்னன் அமானுல்லா கானைப் பத்தி வரைஞ்சு எடுத்துட்டுப் போகனும். " 

விடிந்த போது பாரதி அஸ்தமனமாகியிருந்தான். வங்கக்கடல் மீது கதிரவன் ஒவ்வொரு நாளும் எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறான். இன்றைக்கேனும் பாரதி வருவானா! என்றபடிக்கு...


புனைவு -கார்த்திக்.புகழேந்தி.
11-12-2014.

என் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள்.
         அன்னாரை யானை முட்டியது ஜூன் மாதத்தில்.  பிறகு மூன்று மாதம் கழித்தே அவர் மரணம் சம்பவித்தது. இடையே சுதேச மித்ரனில் வேலைக்கும், வெளியூர் பயணங்களுக்கும் சென்று வந்தபடி தான் இருந்தார். 


  யானை தாக்கிய பிறகு, புதுச்சேரியிலிருந்த பாரதிதாசனுக்கு அனுப்பிய கடிதத்தில், " தான் உடல் நலம் தேறிவிட்டதாக " பாரதி எழுதவும், "நான் நம்ப மாட்டேன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்" என்று பாரதிதாசன் பதில் எழுதியிருக்கிறார். அதற்காக, சென்னை பிராட்வே ரத்னா கம்பெனி ஸ்டூடியோவில் 1921ஜூலையில் எடுத்தபடம் தான் முண்டாசு பாரதி. 

  அதைத்தான் பாரதி தாசனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்தார். 

   1921 செப்டம்பரில் வ.வே.சு ஐயர் ஒரு கட்டுரை எழுதியது தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட, பாரதி உடல்நலமில்லாமல் இருந்த தகவல் அவருக்குக் கிடைத்தது. காவலர்கள் சூழ பாரதி வீட்டுக்கே வந்து  உடல் குணமடைய மருந்து எடுத்துக்கொள்ள அறிவுருத்திச் சென்றார் வ.வே.சு.
   அவர் வந்துபோன அதே தினத்தில் கவிஞன் உயிர் நீர்த்துப் போனது.

   பாரதி மரணத்தின் காரணம் கடுமையான வயிற்றுப் போக்கு (வயிற்றுக் கடுப்பு) செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்தே விடுப்பில் தான் இருந்தார். வேலைக்கு 12ம் தேதி திரும்புவதாகச் சொல்லி அனுப்பின அதே தினத்தில் அவர் உடல் திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைமயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பத்து நாளும் மனிதர் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. 

   பாரதி மறைந்தது சரியாக இரவு 1:30மணிக்கு...  பொழுது விடிந்த பிறகே அவர் மரணச் செய்தி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. மரணத்தின் போது உடல் மெலிந்து ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடையில் இருந்தார். 

  பாரதிக்கு மகன்கள் கிடையாது இரண்டு மகள்கள் மட்டுமே. மூத்தவர் தங்கம்மாள், இளையவர் சகுந்தலா. ஆக தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா என்பவர்  தான் பாரதி உடலுக்கு எரியூட்டினார். 

பாரதி மறைந்ததும் செல்லம்மாள் தன் கணவரின் படைப்புகளை தன் சகோதரர் அப்பாத்துரையின் துணையுடன் சிறுசிறு நூல்களாக வெளியிடத் துவங்கினார். "சுதேச கீதங்கள்" என்ற இரு பாகங்களுக்குமேல் அவரால் வேறொன்றும் இயலவில்லை. 

   பாரதியின் படைப்புகள் அத்தனையும் வெறும் 4000ரூபாய் காப்புரிமைக்குக் கை மாறியது. அதிலும் செல்லம்மாள் வாங்கின கடன் 2,400போக மீதம் 1,600 மாதம் 200என எட்டு தவணையாகக் கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாரதியின் படைப்புகளுக்கான காப்புரிமையை வாங்கியவர் சி.விசுவநாத ஐயர். 

 ( செல்லம்மா பாரதி எனக்  கையொப்பமிட்ட அந்த ஐம்பது பைசா பத்திரத்தின் பிரதிகளைச் சில நாட்கள் முன்பு கையில் பெற்ற போது இனம்புரியாத உணர்வு எனக்குள்) 
 ஆனால், உலக சரித்திரத்திலே நடைபெறாத இலக்கிய பரிமாற்றமாக விசுவநாத ஐயரிடமிருந்து காப்புரிமையை வாங்கி 1949ல் பாரதி மறைந்து 27வது ஆண்டில் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது அரசாங்கம்.

   கடையத்தில் தன் கடைசி  வரை வாழ்ந்தார் செல்லம்மாள். தன் பேரப்பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்று செல்லம்மாள் அளவில்லாத தாகத்தோடு இறைஞ்சினதை அவருடைய மூத்தமகள் தங்கம்மாளின் மகளும், பாரதியின் பேத்தியுமான டாக்டர். எஸ்.விஜயபாரதி தன் நினைவுகளில் இருந்து குறிப்பிடுகின்றார்.

   தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்தி டாக்டர்.எஸ்.விஜயபாரதி காப்புரிமை குறித்த பன்னாட்டு வழக்கறிஞராக கனடாவில் மகள்களோடு வசிக்கின்றார். 

  பாரதியோ நம் எல்லோரிடையேயுமாக பெயர்களிலும், தெருக்களிலும், நகர்களிலும், ஊர்களிலும்,  கவிதையிலும், காட்சியிலும், வார்த்தையிலும், வரிகளிலும்  நெஞ்சுரத்திலும் நீங்காமல் வாழ்கின்றான்.... 
ஆம் எம் கவிஞனுக்கு மரணமில்லை... 

பாரதி

பாரதி குடும்பத்துடன்...

சுதந்திரம் மாத இதழ்தம்பதியாக... 

நண்பர்களுடன்... 

பாரதியின் மகள்கள் தங்கம்மாள்- சகுந்தலா

திருவல்லிக்கேணி இல்லம்


பாரதியின் மரணத்திற்குப் பின் செல்லம்மாள் குடும்பத்துடன்.சகோதரி

டாக்டர் விஜயபாரதி மற்றும் அவரது கணவர் மறைந்த பேராசிரியர் சுந்தர் ராஜனும் பாரதி 125வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்தபடம்.  தொகுப்பு: 
-கார்த்திக்.புகழேந்தி.
11-09-2015.

(கற்றதும் பெற்றதும்  நூல்கள் / இணையம்)

There was an error in this gadget